அந்த வீடு மழையடித்து ஓய்ந்தது போல் ஓய்ந்துபோயிருந்தது. அகரனுக்குத் தந்தையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
இளந்திரையனுக்கு மகன், வருங்கால மருமகள் இருவர் மீதும் மிகுந்த கோபம். அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ வார்த்தைகளை விட அவர் ஒன்றும் அவர்கள் இல்லையே!
அதில், “சியாமளாவக் கூட்டிக்கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வாங்க தம்பி!” என்று அகரனிடம் சொல்லிவிட்டு, ஆதினியைத் தேடி மாடி ஏறினார்.
எப்போதும் அன்பும் பரிவுமாக அரவணைத்துப் போகிறவர் அவளைத் திரும்பியும் பாராமல் சொல்லிவிட்டுப் போனதில் சியாமளாவுக்கு மளுக்கென்று கண்ணீர் இறங்கிற்று. அகரனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் முகம் இன்னுமே கோபத்தில் கடுத்திருந்தது.
இரு சக்கர வாகனத்தின் திறப்பை எடுத்துக்கொண்டு விருட்டென்று வெளியே நடந்தான். அவளை வா என்று அழைக்கவுமில்லை; வருகிறாளா என்று திரும்பிப் பார்க்கவுமில்லை.
திகைத்து நின்றாள் சியாமளா. அவளுக்கு ஆதினியின் மீது அவ்வளவாக நல்லபிப்பிராயம் இல்லை என்பது மெய்யே! இருந்தாலும் கூடத் தவறான எண்ணத்தில் எதையும் செய்யவில்லை.
அவளைத் திருத்தி, அண்ணனுக்கு ஏற்றவளாக மாற்ற வேண்டும் என்றுதான் நினைத்தாள். அது இப்படியாகிப் போனது. இப்போது குணம் கெட்டவள் போன்ற விம்பம் உருவாகியிருப்பது அவளுக்கு. இதில் அவனும் கோபப்பட்டால் என்ன செய்வாள்?
அவனது பைக், அவன் மனத்தைச் சொல்வது போல் உறுமிக் கேட்டது. நெஞ்சு நடுங்க ஓடிப்போய் ஏறிக்கொண்டாள். விருட்டென்று அவன் எடுத்த வேகத்தில் ஒரு முறை பின்னே சென்று வந்தவள் இறுக்கமாக அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.
அகரனின் உள்ளம் தன் பின்னால் இருப்பவள் மீது உக்கிரம் கொண்டிருந்தது. அதை இருசக்கர வாகனத்தைச் செலுத்துவதில் காட்டினான்.
உணவகத்தில் வைத்து ஆதினியின் பொறுப்பற்ற தனங்களையும், தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்கிற குணத்தையும், பக்குவமற்ற செயல்களையும் சியாமளா சொன்னபோது, அவளிடம்தான் கோபப்பட்டிருந்தான்.
ஆனால், திருமணத்தின் பிறகும் அவள் இப்படியே இருந்தால் எல்லாளனின் நிலை என்ன என்று சியாமளா கேட்டபோது, அவனிடம் பதில் இல்லாமல் போயிற்று.
இத்தனை நாள்களும் ஆதினியின் அண்ணாவாக மாத்திரமே அனைத்தையும் யோசித்து நடந்திருக்கிறான். அவளின் செயல்கள் அனைத்தையும், ‘சிறு பிள்ளைத்தனம்’ என்பதன் கீழ் மட்டுமே கொண்டுவந்து, ரசித்தும் இருக்கிறான்.
இன்று, தாய் தந்தையும் இல்லாமல், இருக்கிற ஒரே தங்கையைக் கட்டிக் கொடுத்துவிட்டுத் தனியாக இருக்கப் போகிற நண்பனின் இடத்திலிருந்து யோசித்தபோது, தங்கை அவனுக்குப் பொருத்தம் இல்லையோ என்று அவனுக்கும் தோன்றிவிட்டது.
அது அவனுக்குள் ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. அது அவள் மீதா, இல்லை, அவளை அப்படி வளர்த்த அவர்கள் மீதா என்கிற தெளிவு அவனுக்கு வந்திருக்கவில்லை.
அந்தக் கோபத்தோடுதான் வீட்டுக்கு வந்து அமர்ந்திருந்தான். அதற்குத் தூபம் போடுவது போல் ஆதினியும் அடம் பிடித்து அகங்காரமாகக் கத்த, அவனும் வெடித்திருந்தான்.
*****
ஆதினியின் அறை இருளில் மூழ்கியிருக்க, அவள் கட்டிலில் சுருண்டிருந்தாள். கனத்துப்போன மனத்தோடு அவளருகில் வந்து அமர்ந்த இளந்திரையன், அவள் தலையை மெல்ல வருடிக்கொடுத்தார்.
ஆதினியின் விழிகள் உடைப்பெடுக்க ஆயத்தமாகின. ஆனாலும் அடக்கிக்கொண்டு கிடந்தாள்.
சும்மா இருந்த பெண்ணின் மனத்தில் தேவையில்லாத எண்ணங்களைப் புகுத்தி, இப்படிக் கண்ணீர் வடிக்க விட்டுவிட்டோமே என்று இளந்திரையனுக்கு மிகுந்த கவலையாயிற்று.
“அம்மா இல்லாமப் போயிட்டா எண்டு கவலைப் படுறீங்களாமா?” கனிந்தொலித்த அவர் குரல், அழக் கூடாது என்கிற அவளின் கட்டுப்பாட்டைத் தகர்த்து எறிந்தது. உடைந்து விம்மியபடி, “சொறி அப்பா!” என்றாள்.
அதற்கு ஒன்றும் சொல்லாமல், மெல்ல அவளைத் தேற்றினார். அழுகை நின்றதும் அருந்தத் தண்ணீர் கொடுத்து, நடந்தவற்றை முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
எல்லாளன், சியாமளா இருவரையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்வில் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் தாங்கிப் பிடிக்க யாருமற்ற அநாதரவான நிலை அவர்களது. அதனாலேயே வயதுக்கு மீறிய பக்குவமும் பொறுப்பும் கவனமும் அவர்கள் இருவரிடமும் உண்டு. எப்போதுமே, வாழ்க்கையைத் தீவிரமாக நோக்குபவர்கள்.
ஆனால், ஆதினி அப்படியல்லள். தந்தையும் தமையனும் மட்டும்தான் என்றாலும் பிறந்ததில் இருந்தே செல்வாக்கும் செல்லமுமாக வளர்ந்த பெண். வாழ்க்கையை விளையாட்டாகப் பார்ப்பவள்.
இப்படி, வாழ்க்கை மீதான கண்ணோட்டம் இரு தரப்புக்கும் வேறு வேறு. அப்படியானவர்களை இணைக்க முயன்றது அவர் தவறோ? நெடிய மூச்சு ஒன்று அவரிடமிருந்து வெளியேறியது.
தன் வார்த்தைகளினாலோ என்று தவித்துப்போனாள் ஆதினி.
“சொறி அப்பா!” என்றாள் மீண்டும்.
அவர் முகத்தில் கண்களை எட்டாத மெல்லிய முறுவல்.
“அதெல்லாம் ஒண்டும் இல்ல. என்ன எண்டாலும் அப்பா உங்களுக்காக இருப்பன். உங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யவும் மாட்டன், சரியா? மிச்சத்தை நாளைக்குக் கதைப்பம். எதையும் யோசிக்காமப் படுங்கோ!” என்றுவிட்டு எழுந்து போனார்.
போகிறவரையே பார்த்திருந்தவளுக்குக் கண்கள் கரித்துக்கொண்டு வந்தன. காரணமே இல்லாமல் காண்டீபனின் நினைவு வந்தது. அன்று, அவள் ஏனோ சரியில்லை என்று உணர்ந்தும், தன் கண்ணீரைப் பார்த்தும் எதுவும் விசாரிக்காமல், தலையைப் பிடித்து ஆட்டிவிட்டவனின் அருகண்மை வேண்டும் போலிருந்தது.