எல்லாளனுக்குக் காவல் நிலையத்துக்குப் போகவேண்டும். அந்த மாணவர்களை விசாரிக்க வேண்டும். இந்தத் தனியார் கல்வி நிறுவனத்தையும்(டியூசன் செண்டர்) கண்காணிக்க வேண்டும். அஜய் பற்றிய விசயம் வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே நின்றது. நாட்களோ எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. சாமந்தியின் வழக்கு எந்தத் திருப்பமுமற்று அப்படியே நிற்கிறது. இவ்வளவுக்குமிடையில், இப்படி ஒரு சிக்கல் புதிதாக முளைத்திருக்கிறது.
எல்லாவற்றையும் தீர்த்துத்தான் ஆகவேண்டும். ஒருதடவை ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுவிட்டுக் கதிரவனுக்கு அழைத்தான். “ஸ்டேஷன்லையே ரெண்டு பேரையும் இருத்திவை. வீட்டுக்குச் சொல்லாத. டியூஷன் செண்டர்ல இருந்து நியூஸ் போய், வீட்டில இருந்து ஆக்கள் வந்தா எனக்குச் சொல்லு. மற்றும்படி, நான் வாறவரைக்கும் ரெண்டுபேரும் அங்கேயே கிடந்து காயட்டும்.” என்று சொல்லிவிட்டு வைத்தவன் அடுத்ததாக அகரனுக்கு அழைத்தான்.
முதல் இரண்டு முறை அழைப்பு ஏற்கப்படவில்லை. எல்லாளனுக்குக் கோபம் வந்தது. விளையாடுகிறானா அவனோடு? விடாமல் மீண்டும் அழைத்தான்.
“என்ன, சொல்லு?” என்றான் அகரன்.
“ஓ..! நீங்க கோவமா இருந்தா ஃபோன தூக்க மாட்டீங்க? அவ்வளவு ரோசம்!” எல்லாளனும் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
“நீ செய்ததுக்குக் கோவப்படாமக் கொஞ்ச வேணுமோ? உன்னட்ட இத நான் எதிர்பாக்கவே இல்ல, மச்சி.” மனதளவில் மிகவுமே நொந்து போயிருந்த அகரன் மிகுந்த வருத்தத்தோடு சொன்னான்.
அவனுடைய கோபத்தை எதிர்கொண்ட எல்லாளனால் இந்த வருத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.
“அவள் சின்னப் பிள்ளையடா. விருப்பம் இல்லாட்டி வேண்டாம் எண்டு சொல்லியிருக்கலாம். முதல் எனக்குமே உனக்கு அவளைத் தர விருப்பம் இருக்கேல்ல. நீ வேண்டாம் எண்டு சொல்லியிருந்தா பிழையா நினைச்சிருக்கவே மாட்டன். அப்பாக்கும் விளங்கியிருக்கும். அத விட்டுப்போட்டு இது..” என்றவனுக்கு மேலே பேச வரவில்லை. “உன்னட்ட நான் இத எதிர்பாக்கேல்ல மச்சி.” என்றான் மீண்டும்.
அது எல்லாளனைச் சுட்டது. “அப்பிடி என்னடா செய்திட்டன்? உன்ர தங்கச்சியோட பழகிப்போட்டு ஏமாத்திட்டேனா? இல்ல, கட்டுறன் எண்டு சொல்லிப்போட்டு விட்டுட்டு ஓடிட்டேனா? சொல்லு, அப்பிடி என்ன நீ எதிர்பாக்காததைச் செய்திட்டன்?” என்றான் சூடாகிப்போன குரலில்.
“ஓ..! அப்ப உன்னில எந்தப் பிழையுமே இல்ல. அப்பிடியா?”
“ப்ச்! பிழை இருக்குத்தான். ஆனா, நீ சொல்லுற அளவுக்கு இல்ல.” என்றவன், “இப்ப எங்க அவள்?” என்று, ஆதினியை விசாரித்தான்.
“மேல. அவளின்ர அறைல.”
“அங்கிளும் வீட்டில தானே நிக்கிறார். நான் இப்ப வாறன் கதைக்க.” சூட்டோடு சூடாக அனைத்தையும் பேசி முடித்துவிட நினைத்தான் எல்லாளன்.
“இல்ல மச்சான். இண்டைக்கு வேண்டாம். நாங்க மூண்டு பேருமே ஏதோ ஒரு விதத்தில மனதளவில் உடைஞ்சுபோய் இருக்கிறம். இப்ப என்ன கதைச்சாலும், அது பிழையாத்தான் போகும்.” அவசரமாக அவனைத் தடுத்தான் அகரன்.
எல்லாளனுக்கு எப்போதுமே எதையும் தள்ளிப்போடுவது பிடிக்காது. இப்போது, அகரன் சொல்வதுதான் சரி. சியாமளா அவசரப்பட்டதினால் உண்டானது தான் இத்தனையும். அவனும் அதே தவறைச் செய்யக்கூடாது. ஆனால், நண்பனிடமாவது மனம் விட்டுப் பேச விரும்பினான். யாரில் சரியோ பிழையோ, இன்றைக்கு, அவர்கள் மூவரும் இப்படி உடைந்து போயிருப்பதற்கு, அவன்தான் முக்கியக் காரணம்.
அதில், “அப்ப, நாங்க வழமையா போற டீக்கடைக்கு நீ வா. எனக்கு உன்னோட கதைக்கோணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அகரனுக்குமே மனதில் இருக்கிற பாரத்துக்கு நண்பனோடு சற்றுக்குக் கதைத்தால் நன்றாக இருக்கும் போல்தான் தோன்றிற்று. அதில், புறப்பட்டான். அங்கே தேனீருக்குச் சொல்லிவிட்டு, இவனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் எல்லாளன். “முறைக்க வேண்டியவன் நான். நீ முறைக்கிறியா?” என்றபடி அவன் முன்னே சென்று அமர்ந்தான்.
“முறைப்பியோ? முறை! முறைச்சுப் பாரு!” என்று மல்லுக்கட்டினான் எல்லாளன்.
அவன் நல்ல மனநிலையில் இல்லை என்று அதிலேயே அகரனுக்குப் புரிந்துபோனது. “முதல் தேத்தண்ணியை குடி. பிறகு முறைப்பம்.” என்றபடி அவர்களின் மேசைக்கு வந்த தேநீர்க் கோப்பைகளில் ஒன்றை எடுத்து, அவன் புறமாக நகர்த்தி வைத்தான்.
எல்லாளனால் அப்படி இலகுவாக இருக்க முடியவில்லை. அவனைச் சுற்றிக்கொண்டிருந்த அத்தனை பிரச்சனைகளும் மனதைப்போட்டு அழுத்தியது. அதில், தேநீரை விட்டுவிட்டு நேரடியாகப் பேச்சை ஆரம்பித்தான்.
“இங்க பார் மச்சான். அண்டைக்கு அப்பிடி அங்கிள் கேப்பார் எண்டு நான் எதிர்பாக்கேல்ல. அது அதிர்ச்சியா இருந்தது உண்மை. அதுவரைக்கும், அவளை நான் அப்பிடி யோசிச்சது இல்லை. ஆனா, அவர் கேட்டபிறகு, எப்பிடியோ ஒருத்தியக் கட்டத்தான் போறன், அது ஆதினியா இருந்தா உங்க எல்லாரோடையும் காலத்துக்கும் ஒண்டாவே இருக்கலாம் எண்டு நினைச்சன். இனி எனக்கு அவள்தான் எண்டு முடிவு செய்துதான் சம்மதம் சொன்னனான். அதேநேரம், யோசிக்காம நடக்கிற அவளின்ர குணம் எனக்கு எப்பவுமே பிடிக்காது. அது உனக்கும் தெரியும். முந்தி அதையெல்லாம் சாதாரணமா ஒதுக்கிப்போட்டுப் போகக்கூடிய மாதிரி இருந்தது. அதுக்குக் காரணம், அப்ப அவள் எனக்கு உன்ர தங்கச்சி மட்டும்தான். இனி எதிர்காலத்தில நானும் அவளும் ஒரு வாழ்க்கையை வாழப்போறம் எண்டு முடிவான பிறகு, அவள் செய்ற ஒவ்வொரு செயலும் என்னை யோசிக்க வச்சது. கோவம் வந்தது. பிழையான முடிவு எடுத்திட்டனோ எண்டுற கேள்வியும் வந்ததுதான். இல்லை எண்டு சொல்லேல்ல. அவள் கொஞ்சம் மாறி, பொறுப்பா இருந்தா நல்லாருக்கும் எண்டு நினைச்சதும் உண்மைதான். ஆனா, இதுவரைக்கும் என்ர முடிவை மாத்துவமா எண்டு நான் நினைச்சதே இல்ல. இனியும் நினைக்க மாட்டன்.” என்றவனின் பேச்சைக் கேட்டு, அகரனின் முகத்தில் கருமை படிந்துபோயிற்று.
எந்த இடத்திலும் அவளைப் பிடித்திருப்பதாக அவன் சொல்லவேயில்லை. எப்படியோ ஒருத்தி வரப்போகிறாள். அதற்கு இவள் இருக்கட்டும் என்கிறான். அந்த இடத்திலா அவன் தங்கை இருக்கிறாள். அப்படியானால் அவள் கேட்ட கேள்விகளில் எந்தத் தவறும் இல்லையே. எல்லாளனைப் பாராமல் தேநீர் கோப்பையின் விளிம்பை ஒற்றை விரலினால் வருடிக்கொடுத்தான் அகரன்.


