நீ தந்த கனவு 14 – 1

அடுத்த நாள் காலை, தன் முன் அமர்ந்திருந்த பிள்ளைகள் இருவரையும் பார்த்தார் இளந்திரையன். அவர்களோடு பேசுவதற்காக அவர்தான் அலுவலக அறைக்கு அழைத்திருந்தார்.

அகரன், வேலைக்காக வவுனியா செல்ல வேண்டும். போனால் அடுத்த வார இறுதியில்தான் வருவான். ஆதினிக்குப் பல்கலைக்கழகம் இருந்தது. அவருக்கும் அலுவல்கள் இருந்தன. ஆக, மூவருக்கும் ஏற்ற வகையில் அந்தக் காலைப் பொழுதுதான் பொருந்தி வந்திருந்தது.

தந்தையின் முகம் பார்க்க முடியாத சங்கடத்தோடு அகரன் அமர்ந்திருக்க, நேற்றைய அழுகையின் தடயங்களைச் சுமந்திருந்தது ஆதினியின் முகம்.

“ரெண்டு பேரும் என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?” இருவரையும் பார்த்துப் பொதுவாக வினவினார் இளந்திரையன்.

“அப்பா, சொறி அப்பா. எல்லாம் என்னாலதான். நான்தான் யோசிக்காம, அவசரப்பட்டு ஆதிக்கு அடிச்சிட்டன். சியாமியும் பிழையா ஒண்டும் சொல்லேல்ல. நான்தான்…” சியாமளாவின் மீது கோபம் இருந்தாலுமே அவரிடம் அவளை விட்டுக்கொடுக்க அவனுக்கு மனமில்லை.

அதை, ஆதினியும் உணர்ந்தாள். எதிர்காலத் துணைக்காக இவ்வளவு யோசிக்கிறவன், நேற்று அவளுக்கு என்ன செய்தான்? அது சரி! அவன்தான் எப்போதோ சியாமளாவின் வருங்காலக் கணவனாக மாறிவிட்டானே!

கூர் ஈட்டியாக இதயத்தை எதுவோ தாக்கியபோதும் காட்டிக் கொள்ளவில்லை. அழுகை பழக்கமில்லாத ஒன்று என்பதாலோ என்னவோ அது நேற்றுடனேயே நின்றுபோயிற்று.

அவளிடமும், “அண்ணா செய்தது பிழைதானம்மா. நீயும் வேணுமெண்டா உன்ர கோபம் போறவரைக்கும் அடி. ஆதிம்மா சொறிடா…” என்று அவளின் கரம் பற்றி மன்னிப்பை யாசித்தான் அகரன்.

ஆதினியின் உதட்டோரம் கசப்புடன் வளையப் பார்த்தது. அடக்கிக்கொண்டு அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டாள்.

“ஆதிம்மா…” என்றவனை இடையிட்டு, “எனக்கு நேரமாகுது அப்பா.” என்றாள் தகப்பனிடம்.

இளந்திரையனுக்குத் தன் இரு பிள்ளைகளின் மனத்தையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. அவர்களுக்குள் தலையிடாமல் தான் பேச எண்ணியதைப் பேச ஆரம்பித்தார்.

“நானே இதுவரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் கை நீட்டி அடிச்சது இல்ல தம்பி. அதை நீங்க செய்திருக்கிறீங்க. எங்க இருந்து இதைப் பழகினீங்க எண்டு எனக்குத் தெரியேல்ல. ஆனா, இதுதான் கடைசியும் முதலுமா இருக்கோணும். ஒரு பிரச்சினையை எப்பிடி அணுகிறது, அதை எப்பிடிக் கையாளுறது எண்டு யோசிச்சு நடக்க, உங்களுக்கு வயசு காணும்!” என்று அவர் சொன்னதும் அவன் முகம் கறுத்துப் போனது.

“நாளைக்கு அந்தப் பிள்ளையும் இந்த வீட்டில வந்து சங்கடம் இல்லாம வாழோணும். எங்கட வீட்டுப் பிள்ளையும் காலத்துக்கும் நிம்மதியா இருக்கோணும். இப்ப நீங்க அவசரப்பட்டு நடந்ததால ஒருத்தர் மற்றவரின்ர முகம் பாக்கச் சங்கடப்படுற நிலை வந்திருக்கு. இத எப்பிடி மாத்தப் போறீங்க? நாளைக்கு நான் இல்லை எண்டுற ஒரு நிலை வந்தா, அப்பான்ர இடத்தில இருந்தும் தங்கச்சிக்கானதச் செய்ய வேண்டியவர் நீங்க. நீங்களே இப்பிடி நடந்தா? உங்களிட்ட இத நான் எதிர்பாக்கேல்லத் தம்பி!” என்றதும் முற்றிலுமாக உடைந்து போனான் அகரன்.

“உண்மையா சொறி அப்பா. இனி இப்பிடி நடக்கமாட்டன். சொறி ஆதி!” என்றான் பரிதவித்த குரலில்.

அவருக்கு மகன் மீது நம்பிக்கை இருந்தது. ஆயினும், சியாமளா சொன்னதைக் கேட்டு, அவளின் முன்னேயே ஆதினியிடம் அவன் நடந்த விதம் தவறு என்றே எண்ணினார்.

சியாமளா, அகரன், ஆதினி இவர்கள் மூவருக்குமான அந்த உறவை, அவர்கள் மூவருமே மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் மீண்டும் இப்படியான பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதற்கு, நடந்த சம்பவம் பாடமாக அமையட்டும் என்று எண்ணியவர், அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முனையவில்லை.

அதில், “கலியாணத்தைப் பற்றி என்ன யோசிச்சு இருக்கிறீங்க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.

“கொஞ்ச நாள் போகட்டும், அப்பா.” ஒற்றை நாளில் தலைகீழாக மாறிப்போன குடும்ப சூழ்நிலைக்கு மத்தியில், திருமணம் என்கிற ஒன்றைப் பற்றி யோசிக்க முடியாமல் சொன்னான் அகரன். சியாமளா மீதான கோபமும் துணைக்கு நின்றது.

“இல்ல அப்பா. கதைச்ச மாதிரியே அவரின்ர கலியாணம் நடக்கட்டும்.” என்று அவனை மறுத்துப் பேசினாள் ஆதினி. “நேற்று நான் சொன்னதில எந்த மாற்றமும் இல்லை. எனக்கு அவரின்ர நண்பர் வேண்டாம். அதே மாதிரி, என்னால ஆரின்ர கலியாணமும் தள்ளிப் போகவும் வேண்டாம். பிறகு, அவேய வாழவிடாம நந்தியா நான் நிக்கிறன் எண்டுற கதையும் வந்திடும்.” என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவரா? அந்தளவு தூரத்திற்குத் தள்ளி வைத்துவிட்டாளா? பேச்செழாமல் தந்தையைப் பார்த்தான் அகரன்.

அவரும், “அவா சொன்னதுதான் சரி. இப்ப உங்கட கலியாணம் நடக்கட்டும். அவாக்குக் கொஞ்ச நாள் போகட்டும். வயசும் இருக்குத்தானே! முதல் படிச்சு முடிக்கட்டும்.” என்று முடித்துக்கொண்டார்.

*****

அகரன் வவுனியாவுக்குப் புறப்பட வேண்டும். இப்போதே புறப்பட்டால்தான் அங்கே சரியான நேரத்திற்கு நிற்க முடியும். ஆனாலும் அதற்கான எந்த ஆயத்தத்தையும் செய்யாமல், தலையைக் கைகளால் தாங்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்தான் அகரன்.

பல்கலைக்குத் தயாரான ஆதினி, அறையை விட்டு வெளியே வரும் அரவம் கேட்டது. வேகமாக ஓடிவந்து, “ஆதிம்மா, அண்ணா செய்தது பிழைதானம்மா. மன்னிக்க மாட்டியா?” என்று கெஞ்சினான்.

அவனை நிமிர்ந்து கூடப் பாராது, அவனைச் சுற்றிக்கொண்டு போக முனைந்தாள் அவள். அதற்கு விடாமல் தடுத்து, “என்ர செல்லம் எல்லா. இதுக்கு முதல் இப்பிடி எப்பயாவது அண்ணா நடந்திருக்கிறனா, சொல்லு? நேற்று எனக்கு என்னவோ விசர் பிடிச்சிட்டுது போல. அது பிழைதான். மன்னிக்க மாட்டியா? உன்ர அண்ணா தானேம்மா.” என்றதும் அவனைப் பார்த்து வெற்றுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள் அவள்.

“சந்தர்ப்பம் அமையாத வரைக்கும்தான் எல்லாரும் நல்ல மனுசராம். நல்ல காலமா எனக்குச் சந்தர்ப்பமும் அமஞ்சிட்டுது. எல்லாரும் எப்பிடி எண்டுறதும் தெரிஞ்சிட்டுது. இனியும் ஆரையும் நம்ப என்னால ஏலாது.” என்றுவிட்டு வேகமாக அவனைக் கடந்து மறைந்தாள் அவள்.

அப்படியே நின்றுவிட்டான் அகரன்.

அவள் கோபப்படவில்லை; ஆத்திரப்படவில்லை; நேற்றுப் போன்று ஆக்ரோசமும் கொள்ளவில்லை. நிதானமாகத்தான் சொன்னாள். அகரனுக்குத்தான் கூர் ஈட்டி ஒன்று நெஞ்சைப் பதம் பார்த்தது போலிருந்தது.

யோசிக்க யோசிக்க அவள் சொன்னதில் தவறில்லை என்றுதான் தோன்றிற்று. அவள் தப்பே செய்திருந்தாலும் திருத்துவதும் நெறிப்படுத்துவதும் அடுத்த கட்டம். அதற்கு முதல் உனக்கு நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கையைக் கூடக் கொடுக்கவில்லை என்றால், அவன் என்ன தமையன்?

அன்று ஒரு நாள், சியாமளாவுக்குப் பிறந்தநாள் என்று புதுக்காதலின் பூரிப்பில் எல்லாளன் இல்லாத வேளையில் அவர்களின் வீட்டுக்கே சென்று சியாமளாவைச் சந்தித்திருந்தான். அதையறிந்த எல்லாளன் கோபப்பட்டபோது, வருங்கால மனைவியைப் போய்ப் பார்த்தால் என்னவாம் என்று, அவனுக்காக எல்லாளனிடம் மல்லுக்கட்டியவள் அவள்.

நடுராத்திரியில், யாருமில்லா வீட்டில், அவளைத் தனிமையில் சந்தித்தது தவறென்று அவனுக்கே தெரியும். ‘நீ செய்தது பிழை அண்ணா. என்னை ஆராவது இப்பிடி வந்து பாத்தா சும்மா விடுவியா?’ என்று தனிமையில் கடிந்து கொண்டவள், கடைசி வரைக்கும் எல்லாளனிடம் அவனை விட்டுக்கொடுக்கவே இல்லை.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock