எல்லாவற்றையும் சற்றே வித்தியாசமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆதினி.
“அப்பாவும் ஒரு காலத்தில் இன்ஸ்பெக்டரா இருந்தவர்தான். ஆக்சிடென்ட் ஒண்டில இடுப்புக்குக் கீழ இயங்காமப் போயிட்டுது.” அவள் கேட்காத கேள்விக்குப் பதில் சொன்னான் அவன்.
“சொறி அங்கிள்.” மனம் கனத்துவிட, என்ன சொல்வது என்று தெரியாது சொன்னாள் ஆதினி.
“அதெல்லாம் எப்பவோ நடந்ததம்மா. அத விடுங்கோ. நல்ல மகன், அருமையான மருமகள், நிம்மதியான வாழ்க்கை. அதால இதெல்லாம் பெரிய குறையாத் தெரியிறேல்ல.” என்றார் அவர்.
சட்டென்று அணிந்திருந்த டீ ஷேர்ட்டின் கொலரை பெருமையாகத் தூக்கிவிட்டான் காண்டீபன்.
ஆதினிக்குச் சிரிப்பு வந்தது. இதனால்தானே பெரிதாகப் பழக்கம் இல்லாத போதும் அவனைத் தேடி வந்தாள்.
என்னவோ அவளின் காயத்துக்கான மருந்து அவனிடம் இருப்பது போல் ஆழ்மனது நம்பிற்று. சிரிப்புடன் மிதிலாவைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் மென் முறுவலுடன் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
அந்தக் குட்டிச் சிரிப்பு அவளின் முகத்துக்கு மிகுந்த பொலிவைக் கொடுத்தது. ஆதினியால் அவளிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.
“என்ன, அப்பிடிப் பாக்கிறாய்?” அவளைக் கவனித்து விசாரித்தான் காண்டீபன்.
“மிதிலாக்கா நல்ல வடிவு.”
“அதாலதான் துரத்திப் பிடிச்சுக் கட்டினான்.” மிதிலாவிடம் கண்களால் சிரித்தபடி சொன்னான் அவன். “சரி சொல்லு, அப்ப நான் வடிவில்லையா?”
“அக்காவோட ஒப்பிடேக்க…” என்று இழுத்துவிட்டு குறுஞ்சிரிப்புடன் இல்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தாள் ஆதினி.
சத்தமாக நகைத்தான் காண்டீபன். “உன்ர அக்காவக் கேட்டுப் பார், நான்தான் வடிவு எண்டு சொல்லுவாள்.”
“அப்பிடியா அக்கா? சேர் வடிவா? இல்லை எல்லா! நீங்க ஏன் போயும் போயும் இவரைக் கட்டினனீங்க?”
“எங்க விட்டாத்தானே. வேற வழியில்லாமக் கட்டினதுதான்.”
மனைவியின் பதிலைக் கேட்டுக் காண்டீபனின் முகத்தில் இருந்த இளநகை மங்கவில்லை. ஆனால், பார்வை ஒரு நொடி அவளில் படிந்து மீண்டது.
மிதிலாவினுள் சட்டென்று ஒரு தடுமாற்றம். அவர்கள் அருந்தி முடித்த கிளாசுகளை பொறுக்கிக்கொண்டு உள்ளே நடந்தாள்.
தந்தையை மீண்டும் கட்டிலில் சரித்து, அவருக்கு ஏற்ற வகையில் படுக்க வைத்துவிட்டு எழுந்த காண்டீபன், “வா! கொஞ்சம் நடந்திட்டு வருவம்.” என்று அவளை அழைத்தான்.
“என்னத்துக்கு?” தான் ஏன் வந்தோம் என்பதையே மறந்து வினவினாள் ஆதினி.
“சும்மாதான். வா!”
“மிதிலாக்கா, நீங்களும் வாறீங்களா?”
அவள் காண்டீபனைப் பார்க்க, “அவள் சாப்பிட ஏதாவது செய்யட்டும். நீ வா!” என்று இவளை மட்டும் கூட்டிக்கொண்டு போனான் அவன்.
“என்ன பிரச்சினை?” வீட்டை விட்டு வெளியே வந்ததும் வினவினான்.
திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் ஆதினி.
அவள்தான் எதையும் காட்டிக் கொள்ளவில்லையே. பிறகும் எப்படிக் கண்டுபிடித்தான்?
“எல்லாளனோட உனக்கு என்ன சண்டை?” என்றான் திரும்பவும்.
அப்போதும் பதில் சொல்லாமல் நடந்தாள் ஆதினி.
“அவன் சீரியஸ் டைப். நீ விளையாட்டுப் பிள்ளை. ரெண்டு பேருக்கும் முட்டிட்டுதா?”
அவனிடம் ஆறுதல் தேடித்தான் வந்தாள். அதற்கென்று வீட்டில் நடந்தவற்றைச் சொல்லவும் தயங்கினாள்.
“ஆதினி, நான் உனக்கு அண்ணா மாதிரி. என்னை நம்பினா நீ தாராளமாச் சொல்லலாம். என்னட்ட இருந்து என்ர மனுசிக்குக் கூடக் கத போகாது. நீ சொல்லாட்டியும் பரவாயில்ல. நான் ஒண்டும் நினைக்க மாட்டன், சரியா? ஆனா, எதையும் மனதுக்க போட்டு அழுத்தாத.” என்றான் ஆறுதல் தரும் வகையில்.
அதற்கே அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. முகத்தை எதிர்ப்புறத்தில் திருப்பித் தன்னைச் சமாளிக்க முயன்றாள்.
அதுவே ஆழமாகக் காயப்பட்டு, உடைந்த மனநிலையில் இருக்கிறாள் என்று காட்டிக்கொடுக்க, ஒன்றும் சொல்லாமல் திரும்பவும் அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான் அவன்.
“சேர்! நீங்க நெடுக(எப்பவும்) என்ர தலையைக் குழப்புறீங்க!” என்று முகத்தைச் சுருக்கினாள் அவள்.
“ஏற்கனவே அது குருவிக்கூடு மாதிரித்தான் இருக்கு. இதுல புதுசா நான் வேற குழப்போணுமா?” என்றான் சிரிப்புடன்.
அதன் பிறகு அதைப் பற்றி அவன் ஒன்றும் கேட்கவில்லை. வேறு பேசிக்கொண்டு வந்தான். ஆதினிக்குத்தான் அவன் பேச்சில் லயிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில், “அவருக்கு என்ன, என்ர குணங்களைப் பிடிக்காது. அப்பா கேட்டதும் விருப்பம் இல்லை எண்டு சொல்லேலாம ஓம் எண்டு சொல்லிட்டார். அப்பிடி விருப்பம் இல்லாம ஒரு கலியாணம் என்னத்துக்கு? அதான் நான் வேணாம் எண்டு சொல்லிட்டன்.” என்றாள் ஒரு வேகத்துடன்.
அதன் பிறகு பேசுவது இலகுவாக இருக்க மேலோட்டமாக நடந்தவற்றைச் சொன்னாள்.
“முதலாவது விசயம், உனக்கு அடிச்சது உன்ர அண்ணா. அதையெல்லாம் பெருசா எடுக்கக் கூடாது. அவரே வந்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார். பிறகு என்ன? ரெண்டாவது, சியாமளா சொன்னத நீ ஏன் பிடிச்சுக்கொண்டு தொங்குறாய்? ஒவ்வொருத்தரும் எங்களைப் பற்றி ஒவ்வொரு மாதிரித்தான் கதைப்பீனம். அதையெல்லாம் காதில விழுத்திறதா?” என்றான் மென் குரலில்.
அவளும் அப்படித்தான் நினைக்கிறாள். என்னைப் பற்றிக் கதைக்க இவர்கள் யார், நானும் அதை நினைத்து வருந்துவதா என்று அதிலிருந்து வெளியில் வரத்தான் விரும்புகிறாள். முடிந்தால் தானே?
அதுவரையில் அவளைப் பற்றிய சுய அலசலை அவள் செய்ததில்லை. ஆனால், அன்றைக்குப் பிறகு அது அடிக்கடி நடக்கிறது. அதும் நேர்மறையாக அல்லாமல் எதிர்மறையாக.
“என்னம்மா?” அவள் சிந்தனையில் இடையிட்டான் காண்டீபன்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவள், அவனிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டு, “நான் அப்பிடித்தானோ எண்டு எனக்கே படுது அண்ணா.” என்றாள் உடைந்த உரலில்.
“அவர்… எல்லாளன்… அவரா எதையும் சொல்லேல்லத்தான். ஆனா, அவரின்ர தங்கச்சி சொன்னதுக்குக் கண்டிச்சவரே தவிர, நான் அப்பிடி இல்லை எண்டு சொல்லேல்ல. அதின்ர அர்த்தம், அவரும் என்னை அப்பிடி நினைக்கிறார் எண்டுறதுதானே?” என்றவளுக்கு மூக்குச் சிவந்து, விழிகள் கரித்துக்கொண்டு வந்தன.
“அவன் கிடந்தான் விசரன்!” என்றான் இவன் உடனேயே.
“என்ன?” திகைத்துத் திரும்பி அவனைப் பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த சிரிப்பைக் கண்டு, தானும் பக்கென்று சிரித்தாள்.
“இதுதான் எங்கட ஆதினிக்கு நல்லாருக்கு. இத விட்டுப்போட்டுக் கண்ணைக் கசக்கிறது எல்லாம் என்ன பழக்கம்?”
முறுவல் மாறாமல் அவனைப் பார்த்தாள் ஆதினி. எப்போதெல்லாம் அவள் உடைகிறாளோ, அப்போதெல்லாம் எதையாவது சொல்லிச் சிரிக்க வைத்துவிடுகிறவனின் மீது, அவள் மனதிலும் ஒரு விதப் பாசம் படர்ந்தது.
“சரி, நான் கேக்கிறதுக்குப் பதில் சொல்லு! எப்பவும் ஒரு போலீஸ் சொல்லுறதைத்தான் சாதாரண மக்கள் கேப்பினம். அது, அந்தப் பதவிக்கான மரியாதை, பயம் இப்பிடி எதுவாவும் இருக்கும். ஆனா, அண்டைக்கு எட்டுச்செலவு வீட்டில நீ சொன்னதத்தான் ஒரு போலீஸ்காரன் கேட்டவன். அது எப்பிடி? உன்னட்ட அப்பிடி ஏதும் அதிகாரம் இருந்ததா? நீ ஏதும் பதவில இருக்கிறியா? இல்ல, உண்மையாவே அவன் உனக்குப் பயந்துதான் நீ சொன்னதைச் செய்தவனா?”
அவன் என்னவோ சாதாரணமாகத்தான் வினவினான். ஆனால், அவன் கேட்ட கேள்விகள் முகத்தில் அறைந்த உண்மையில் ஆதினி நிலைகுலைந்து போனாள். அவள் முகத்திலிருந்த சிரிப்பு, துணிகொண்டு துடைத்தது போன்று மறைந்து போனது.
“உன்ர அப்பா, அண்ணா, எல்லாளன் மூண்டு பேருக்கும் இருக்கிற பதவியும், அதால அவேட்ட இருக்கிற அதிகாரமும்தானே உன்னை அப்பிடி நடக்க வச்சது? அந்தப் போலீஸ்காரனையும் உனக்கு அடங்கிப்போக வச்சது. அது சரி எண்டு நினைக்கிறியா? இதுவே, ஒரு சாதாரண ஆதினி, என்னதான் தைரியசாலியா இருந்தாலும் அப்பிடி நடந்திருப்பாளா? நடந்திருந்தா, அந்தப் போலீஸ் அடங்கித்தான் போயிருப்பானா?”
அவனுடைய எந்தக் கேள்விக்கும் ஆதினியிடம் பதில் இல்லை. இதுவரையில் அவள் இப்படி யோசித்ததும் இல்லை. இப்போது தன் செய்கைகளைக் குறித்தே வெட்கப்பட்டாள்.
கதிரவனை முதன் முதலாகப் பார்த்த நாளில் கூட எவ்வளவு அதிகாரமாக நடந்தாள். பொறுப்பான பதவியில் இருந்த அவனை அடக்கிவிட்டுத்தானே ஓய்ந்தாள். அதில் ஒரு பெருமை வேறு!