அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? முகம் கன்றிவிட, காண்டீபனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றாள்.
அவளை அப்படிப் பார்க்க அவனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், சிலவற்றைப் பேசாமல் விளங்காதே!
“நீ இன்னும் சின்ன பிள்ளைதான். ஆனா, இதையெல்லாம் யோசிக்காம நடக்கிற அளவுக்குச் சின்ன பிள்ளை இல்ல. விளங்குதா?” என்றான்.
அவள் விழிகள் கலங்கிப்போயின. கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி தலையை மேலும் கீழுமாக அசைத்தாள்.
அவளையே பார்த்தான் காண்டீபன். அவள் தன் தவறுகளை உணர்ந்து, திருத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் எடுத்துச் சொன்னான். ஆனால் இப்போது, அடி வாங்கிய குழந்தையாகக் கலங்கி நிற்பவளைக் கண்டு உள்ளம் பிசைந்துவிட, “நீ அழுறதப் பாக்க நல்லாருக்கே. இன்னும் கொஞ்சம் அழு, பிளீஸ்!” என்றான் வேண்டும் என்றே.
“அண்ணா!” அவனை முறைக்க முயன்று முடியாமல் கண்களில் நீருடன் சிரித்தாள் ஆதினி.
அவன் முகமும் மலர்ந்து சிரித்தது. ஆசையோடு அவளின் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான். மீண்டும் திரும்பி வீடு நோக்கி நடந்தனர்.
“இப்ப சரியாகிட்டியா? மனதில இருந்த பாரமெல்லாம் போயிட்டுதா?”
“பாரம் போயிட்டுதா தெரியேல்ல. ஆனா, என்ர பிழைகள் விளங்குது.” உணர்ந்து சொன்னாள் ஆதினி.
“இப்போதைக்கு இதே போதும். இனியும் இங்க இருக்க விருப்பமில்ல, அது இது எண்டு சொல்லுறதை விட்டுட்டு நல்லாப் படி. சந்தோசமா இரு!”
“இல்ல அண்ணா. எனக்கு உண்மையாவே கொஞ்சம் விலகி இருக்கோணும் மாதிரித்தான் இருக்கு. என்னால இப்போதைக்கு அண்ணாவோட சமாதானம் ஆகேலாது. நான் அவரோட கதைக்காட்டி, அந்தக் கோபத்தை அவர் அண்ணில காட்டப் பாப்பார். பிறகு, அவேன்ர வாழ்க்கையும் சந்தோசமா இருக்காது. வேண்டாம் எண்டு சொன்ன கலியாணமும் வேண்டாம்தான். அதால நான் விலகிப் போறதுதான் சரியா இருக்கும். அதுக்கு என்ன செய்றது எண்டுதான் தெரியேல்ல.”
எல்லாளனோடு திருமணம் வேண்டாம் என்பதில் அவள் உறுதியாக இருப்பது கவலையைத் தோற்றுவித்தாலும் நாளடைவில் எல்லாம் மாறும் என்று நம்பினான்.
அதில், அதை விட்டுவிட்டு, “எங்க போறதா இருந்தாலும் இந்த செமஸ்டர் முடியோணும்தானே. அதுவரைக்கும் பொறு. அப்பவும் இதே முடிவுதான் எண்டா கொழும்பில போயிருந்து படி. அது, நீ உன்ர துறைல இன்னுமே கெட்டிக்காரியா வாறதுக்கும் உதவியா இருக்கும்.” என்றான் அவன்.
அவளும் அப்படித்தான் யோசித்துக்கொண்டு இருந்தாள். அதில், சரி என்று தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டாள்.
அவர்கள் காண்டீபனின் வீட்டை நெருங்கியபோது, பயத்தில் கத்திக் கூக்குரலிடும் பெண்ணின் குரல் ஒன்று கேட்டது. திகிலுற்ற ஆதினி குழப்பமும் கேள்வியாகக் காண்டீபனை நோக்கினாள்.
அதுவரையில் மென் சிரிப்பில் மலர்ந்திருந்த அவன் முகம் இறுகிற்று. நடையை எட்டிப் போட்டு வீட்டுக்குள் விரைந்தான். என்னவோ என்று மனத்தினில் கலவரம் சூழத் தானும் ஓடினாள் ஆதினி.
அவர்களின் வீட்டு விறாந்தையில் சற்றே வயதான பெண்மணி ஒருவர் தலை கலைந்து, உடை நலுங்கி இருக்க, “என்னை விடு! நீ என்னைக் கொல்லப் போறாய். விடடி!” என்று ஆக்ரோசத்தோடு மிதிலாவிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தார்.
“அம்மா, ஒண்டும் இல்லை அம்மா. பயப்பிடாதீங்க. நான் மிதிலாம்மா…” கண்ணீருடன் அவரைப் பிடித்து வைக்க முயன்றுகொண்டிருந்தாள் மிதிலா. அவள் கைகளில் நகக் கீறல்கள். அதிலிருந்து இரத்தம் மெதுவாகக் கசிய ஆரம்பித்திருந்தது.
காண்டீபனின் தந்தை சம்மந்தன், எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் பரிதவித்திருந்தார்.
ஓடிச் சென்று அந்தப் பெண்மணியைப் பற்றிச் சமாளிக்க முயன்றபடி, “மாமி! இஞ்ச பாருங்கோ! நான் காண்டீபன். இந்தா வந்திட்டன். எங்க போகப் போறீங்க?” என்றவனின் கனிந்த குரலில் நிமிர்ந்து பார்த்தார் அவர்.
அவனை இனம் கண்டதும்தான் அவரின் போராட்டம் அடங்கியது. “தம்பி!” என்று கதறியபடி அவன் மார்பிலேயே தன்னை மறைத்துக்கொண்டார். அவர் தேகம் மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக நடுங்கியது.
“ஒண்டும் இல்ல மாமி. ஒண்டுமில்ல. என்னத்துக்குப் பயப்படுறீங்க. அதுதான் நான் இருக்கிறன்தானே?” மென் குரலில் அவரின் பயத்தைப் போக்க முயன்றவனின் ஒரு கை, அவர் தலையை வருடிக்கொடுத்தது.
பார்வை, கண்ணீருடன் பரிதவித்து நின்ற மனைவி மீதினில். அவள் முதுகையும் தட்டிக் கொடுத்து, பார்வையால் அவளின் கைகளைக் காட்டிக் கவனி என்றான்.
ஆதினிக்கு அங்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றிருந்தாள். மெல்லிய பயமும் உண்டாயிற்று.
காண்டீபன் மெல்ல அவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான். அவரை அவன் சமாதானம் செய்வதும், எதற்கோ பயந்து நடுங்குபவரைத் தேற்றுவதும் கேட்டது. மிதிலா உணவு எடுத்துச் சென்றாள். சற்று நேரத்தில் வெறும் தட்டும் உணவு அள்ளிக்கொடுத்த கையுமாக வெளியே வந்தான் காண்டீபன்.
இதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
“அவாக்குக் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லையம்மா. சில நேரங்கள்ல இப்பிடித்தான். மற்றும்படி சாதாரணமாத்தான் இருப்பா.” அவளை உணர்ந்து சொன்னார் சம்மந்தன்.
ஆதினிக்கு வாய் திறக்கவே முடியவில்லை. அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பது போலிருந்தது.
காண்டீபன் மீண்டும் அந்த அறைக்குச் சென்றான். சற்று நேரத்தில் அவர் உறங்கிவிட்டார் போலும். மெதுவாகக் கதவைச் சாற்றிவிட்டு வந்தவனின் புருவங்கள் சுளித்திருந்தன.
அவரோடு பட்ட சிரமங்களினால் உண்டான களைப்பு, அவன் முகத்தில் அப்படியே தெரிந்தது. நாற்காலியில் அமர்ந்து, தலையைத் தன் இரு கைகளாலும் பற்றிக்கொண்டான்.
எல்லோரிடமும் கனத்த மௌனம். ஆதினிக்கு அங்கிருப்பது சங்கடத்தைக் கொடுத்தது. “சேர், நான் வெளிக்கிடப் போறன்.” என்றாள் மெல்லிய குரலில்.
நிமிர்ந்து அவளைப் புரியாத பார்வை பார்த்தான் காண்டீபன். அதிலேயே அவன் சிந்தை இங்கில்லை என்று புரிந்தது.
ஆதினி தயக்கத்துடன் எழுந்துகொள்ள, ஒரு பெரிய மூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்து, “அவளுக்குச் சாப்பிட ஏதாவது குடுத்தியா?” என்றான் மிதிலாவிடம்.
அவள் பதில் சொல்வதற்கிடையில், “இல்ல சேர். எனக்குப் பசி இல்ல. அதவிட, இனி நான் வெளிக்கிடோணும். அப்பா வந்திடுவார்.” என்று, தற்சமயம் அவளுக்கு உணவளிக்கும் நிலையில் அந்த வீடு இல்லை என்பதை உணர்ந்து சொன்னாள் ஆதினி.
தன் கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான் காண்டீபன். உண்மையில் நேரமாகித்தான் இருந்தது.
“சரி, இன்னொரு நாளைக்குச் சாப்பிட வா.” என்றுவிட்டு, அவளுடன் கூடவே வந்தான். ஹெல்மெட்டை மாட்டி, ஸ்கூட்டியில் அமர்ந்து, அதனைக் கிளப்பும் வரையிலும் தொடர்ந்த அவனது மௌனம், மீண்டும் அவன் எண்ணங்கள் இங்கில்லை என்று சொல்லிற்று.
“வாறன் சேர்.” மெல்லிய முணுமுணுப்புடன் ஸ்கூட்டியை நகர்த்தினாள்.
அப்போதுதான் அவளைக் கூர்ந்து நோக்கினான் அவன். அவள் முகமே சரியில்லை என்று கண்டு, “டோய்! என்ன?” என்றான் தனக்கே உரித்தான சிரிப்புடன்.
ஆதினியின் முகம் தானாகவே மலர்ந்தது. இருந்தும் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.
“பயந்திட்டியா?”
இல்லை என்று முதலில் ஆட்டியவள் பின் தயக்கத்துடன் ஆம் என்று அசைத்தாள்.
அவனிடத்தில் வருத்தம் மிகுந்த சின்ன முறுவல் ஒன்று உண்டாயிற்று. “அவா என்ர மாமி. மிதிலான்ர அம்மா. திடீர் எண்டு அவாவை அப்பிடிப் பாத்ததால பயந்திட்டாய் போல. எப்பவாவதுதான் இப்பிடி. மற்றும்படி எங்களை மாதிரியே எல்லாரோடயும் நல்லாக் கதைப்பா. நீ இதைப் பற்றி எல்லாம் யோசிக்காத. மனதை எதுலயும் அலைபாய விடாம, படிக்கிறதுல மட்டும் கவனமா இரு!” என்று சொல்லி அனுப்பிவைத்தான்.