நீ தந்த கனவு 15(1)

ஊருக்குள் சற்று உள்ளே அமைந்திருந்தது காண்டீபனின் வீடு. தென்னோலையைக் கொண்டு வேலி போட்டிருந்தார்கள். கேட் மட்டும் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்ப அகலமாக இருந்தது. அதன் கிரில் கம்பிகளுக்குள்ளால் கூர்ந்து பார்த்தாள் ஆதினி. சீரான பராமரிப்பில் ஓடுகள் போட்ட கல்வீடு ஒன்று தெரிந்தது.

“காண்டீபன் சேர்..” மெல்லிய தயக்கத்துடன் அழைத்தபடி கேட்டின் கொழுவியை எட்டித் திறந்தாள். அந்தச் சத்தத்தில், எங்கிருந்தோ வளர்ந்த பெரிய நாய் ஒன்று, குறைத்துக்கொண்டு ஓடி வந்தது. அதன்பின்னே, “ஜிம்மி, பேசாம இரு!” என்கிற குரலோடு வந்தான் காண்டீபன். இவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது. “அது கடிக்காது. நீ வா!” என்று இன்முகமாக வரவேற்றான்.

அத்தனை நேரமாக இல்லாத தயக்கம் ஒன்று, அவனைக் கண்டதும் அவளைக் கவ்விப் பிடித்தது. இத்தனை நாட்களாக, முழுக்கை ஷேர்ட், ஜீன்ஸ் என்று முழுமையான விரிவுரையாளனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை, இன்றைக்கு, சாதாரண ட்ராக் பாண்ட், டீ ஷேர்ட்டில் பார்க்கையில் சற்றே சங்கடமாக உணர்ந்தாள். அப்போதுதான், இங்கே வந்தது சரியா என்கிற கேள்வியும் எழுந்தது.

எதற்காக வந்திருக்கிறாய் என்று அவன் கேட்டால் என்ன சொல்லுவாள்? மனம் உந்தியது, அதனால் என்றா?

“என்ன யோசின? இறங்கி வா!” அவளை நோக்கி வந்தவாறே அழைத்தான் காண்டீபன். அதன்பிறகுதான் ஸ்கூட்டியில் இருந்து இறங்கினாள். அவனைத் தவிர்த்து வேறு யாரையும் காணாததால் தயங்கி அங்கேயே நின்றாள். சும்மாவே, அவளைப் பொறுப்பில்லை, கவனமில்லை, பக்குவமில்லை என்கிறவர்கள், இப்படி, இங்கு வந்ததை அறிந்தால் என்ன சொல்லுவார்கள்? வந்திருக்கக் கூடாதோ?

அறிமுகம் இல்லாதபோது கூடத் தயக்கமற்று வளவளத்தவளின் இன்றைய அமைதிக்கான காரணத்தை உணர்ந்த காண்டீபனின் உதடுகளில், மென்புன்னகை மலர்ந்தது. “என்ன? இந்த வாத்தியப் பற்றி ஒண்டும் தெரியாது. வா எண்டதும் வெளிக்கிட்டு வந்திட்டமே, என்ன நடக்குமோ எண்டு யோசிக்கிறியோ?” குரலில் மெல்லிய கேலி இழையோட வினவினான் அவன்.

அவன் தன்னைக் கண்டுகொண்டதில் அவளுக்கு ஒருமாதிரி ஆகிற்று. “அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல. உங்கட வைஃப் இல்லையா சேர்?” என்று, தன்னைச் சமாளித்துக்கொண்டு விசாரித்தாள்.

“அதென்ன சேர்? அண்ணா எண்டே சொல்லு.” விரிந்த சிரிப்புடன் சொன்னான். “வைஃப் மட்டும் இல்ல. அப்பா இருக்கிறார். மாமி இருக்கிறா. ஜிம்மி இருக்கு. பயப்பிடாம வா!” என்றான் மீண்டும்.

இப்போது அவனை முறைத்தாள் ஆதினி. “உங்களுக்கு எத்தின தரம் சொல்லுறது? நான் ஒண்டும் பயப்பிட இல்ல. அண்டைக்குச் சொன்னீங்கதானே, அதுதான் கேட்டனான்.”

“ஓ…! அப்ப பயமில்லை.” அவன் கண்கள் விடாமல் அவளைச் சீண்டிச் சிரித்தது.

“இல்ல இல்ல இல்ல!” முகம் சிவக்க அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளுக்குள் தைரியம் மீண்டிருந்தது. அப்படி என்ன செய்துவிடுவான் என்றுதான் பார்ப்போமே! நேராக நிமிர்ந்து நின்று அவனையே பார்த்தாள்.

தவறாக நடந்துதான் பாரேன் என்று சவால்விட்ட அந்த விழிகளைக் கண்டு, அதற்குமேல் சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டு நகைத்தபடி, அவளின் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான். அப்படியே, “மிதிலா! உன்னப்பாக்க ஒரு ஆள் வந்திருக்கு. இங்க வந்து பார்.” என்று, வீட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

ஒரு பெண் வந்தாள். அவளைப் பார்த்ததும் பார்த்தபடி நின்றுவிட்டாள் ஆதினி. அழகென்றால் அழகு அத்தனை அழகு. வந்தவளுக்கு இவளை யார் என்று தெரியவில்லை. காண்டீபனைக் கேள்வியோடு பார்த்தாள்.

“இண்டைக்கு முக்கியமான ஒரு ஆள் வருவா எண்டு சொன்னனான் தானே. அவா இவாதான். உள்ளுக்குக் கூப்பிடு. ஆள் என்னைப் பாத்துப் பயப்பிடுது.”

“சேர்! நான் ஒண்டும் பயப்பிடேல்லை!” சிரிப்பும் முறைப்புமாக அதட்டினாள் ஆதினி.

மிதிலாவின் முகத்திலும் மெல்லிய சிரிப்பு. “நீர் வாரும். அவர் அப்பிடித்தான், சும்மா விளையாடுவார்.” என்று அவளை அழைத்துச் சென்றாள்.

அங்கே, அவர்களின் விறாந்தையிலேயே ஒரு கரையாகக் கட்டில் ஒன்று போடப்பட்டிருக்க, அதில் படுத்திருந்தார் ஒரு வயதானவர். இவளைக் கண்டதும், “வாம்மா!” என்றார் கனிந்த முகத்தோடு.

“அவர்தான் என்ர அப்பா.” என்று அறிமுகம் செய்துவிட்டு, “இப்ப பயம் போயிருக்குமே.” என்றான் காண்டீபன்.

உண்மையிலேயே அப்போதுதான் அவளின் இறுக்கம் தளர்ந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனை முறைத்தாள். “ஹல்லோ சேர், நான் என்னத்துக்குப் பயப்பிட? நீங்க சேட்டை விட்டீங்க எண்டா ஒரு ஃபோன்கோல் போதும். அடுத்த நிமிசமே போலீஸ் வந்து நிக்கும், தெரியுமா?” என்று மிரட்டினாள்.

“பாத்தீங்களாப்பா, ஆள் எப்பிடி வெருட்டுது எண்டு? எங்கட வீட்டுக்கு வந்திருக்கிறா எண்டதும் ஆளைச் சாதாரணமா நினைச்சிடாதீங்க. நீதிபதி இளந்திரையன் சேரின்ர ஒரேயொரு மகள்.” என்றதும், அவரின் கண்கள் அவனிடம் உண்மையா என்று வினவிற்று. அவனும் ஆம் என்பதாகத் தலையசைத்தான். “அதுமட்டும் இல்ல. ஏசிபி எல்லாளனின்ர வருங்காலத் திருமதி.” என்று கூடுதல் தகவலும் தந்தான்.

அவர் முகம் விகசித்துப் போயிற்று. “அப்பிடியாம்மா? இங்க வா செல்லம்.” என்று அழைத்து அவளின் கையைப் பற்றிக்கொண்டார். அவர் விழிகள் அவள் முகத்தையே சொல்லிலடங்கா பாசத்தைச் சுமந்து மொய்த்தது. “சந்தோசம் ஆச்சி. நல்ல சந்தோசம்.” என்றவரின் குரல் கரகரத்து ஒலித்தது.

ஆதினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத பாசவலை ஒன்று அவளைச் சுற்றிப் படர்வதை உணர்ந்து, நெகிழ்ந்து நின்றாள்.

“அப்பா சுகமா இருக்கிறாராமா? எல்லாளன் என்னவாம்? உனக்கு ஒரு அண்ணாவும் இருக்கோணுமே?”

அந்தக் கேள்விகளில் நடந்தவை எல்லாம் நினைவில் வர அவள் முகம் கசங்கிப் போயிற்று. துக்கம் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. வேகமாகச் சமாளித்துக்கொண்டு, “எல்லாரும் சுகமா இருக்கினம்.” என்றாள் சுருக்கமாக.

“எப்ப கலியாணம்?”

“அது.. அது சும்மா பேச்சு மட்டும் தான் நடந்தது. இப்ப நிப்பாட்டியாச்சு. கலியாணம் அண்ணாக்குத்தான் நடக்கப்போகுது.” அவர் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவாறு சொன்னாள் ஆதினி.

அப்பா மகன் இருவர் முகத்திலும் குழப்பமும் கேள்வியும். “உன்ர அப்பா என்ன சொன்னவர்?” என்று விசாரித்தான் காண்டீபன்.

“அப்பாக்கு என்ன எண்டாலும் என்ர விருப்பம்தான்.”

“ஓ..! அப்ப உனக்குத்தான் விருப்பம் இல்லையா?”

“எனக்கு இங்க இருக்கவே விருப்பம் இல்ல.” உண்மையில் அப்படித்தான் உணர்ந்துகொண்டிருந்தாள் ஆதினி. அவளால் இனியும் அவர்களின் முகங்களைப் பார்த்துக்கொண்டு அவர்களோடே இருக்கமுடியும் போல் இல்லை. ஒரு விலகல் அவசரமாகத் தேவைப்பட்டது.

தகப்பன் மகன் இருவரின் பார்வையும் மீண்டும் ஒருமுறை சந்தித்துக்கொண்டது. அவள் எல்லாளனைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை என்பதைக் குறித்துக்கொண்டான் காண்டீபன்.

அதற்குள், ஒரு தட்டில் வைத்து எல்லோருக்கும் தோடம்பழ(ஆரஞ்சு) ஜூஸ் கொண்டுவந்தாள் மிதிலா. அவளின் கைகளில் மெல்லிய நடுக்கம். ஒற்றைப் பார்வையில் மனைவியை அளந்த காண்டீபன், எழுந்து சென்று தட்டினைத் தான் வாங்கிக்கொண்டான். அதில், ஒன்றை எடுத்து ஆதினிக்குக் கொடுத்தான். “நான் இப்பதானே சாப்பிட்டனான். எனக்கு வேண்டாம். என்ரய நீ குடி.” என்று அவனுக்கென்று கொண்டுவந்த கப்பை, மிதிலாவிடம் நீட்டினான். “இல்ல. எனக்கும்..” என்று ஆரம்பித்தவள் அவனின் பார்வையில் சொல்லவந்ததைச் சொல்லாமல் எடுத்துக்கொண்டாள். அடுத்த கிளாஸை எடுத்துக்கொண்டு தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான் காண்டீபன்.

எல்லாவற்றையும் சற்றே வித்தியாசமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆதினி. மெதுவாக அவரை எழுப்பித் தன் தோளில் சாய்த்து, அதை, அவருக்கு அருந்தக் கொடுத்தான் அவன்.

பார்த்திருந்த ஆதினிக்கு நடப்பவற்றை எப்படி உள்வாங்கிக்கொள்வது என்று தெரியாத தடுமாற்றம். வந்ததில் இருந்து அவர் கட்டிலில் சரிந்தே இருப்பதைச் சற்று வித்தியாசமாக உணர்ந்தாள்தான். என்றாலும், இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. மெல்லிய திகைப்புடன் காண்டீபனைப் பார்த்தாள்.

“அப்பாவும் ஒருகாலத்தில் இன்ஸ்பெக்டரா இருந்தவர் தான். ஆக்சிடென்ட் ஒண்டில இடுப்புக்குக் கீழ இயங்காமப் போயிட்டுது.” அவள் கேட்காத கேள்விக்குப் பதில் சொன்னான் அவன்.

“சொறி அங்கிள்.” மனம் கனத்துவிட என்ன சொல்வது என்று தெரியாது சொன்னாள் ஆதினி.

“அதெல்லாம் எப்பவோ நடந்ததம்மா. அத விடு. நல்ல மகன், அருமையான மருமகள், நிம்மதியான வாழ்க்கை. அதால இதெல்லாம் பெரிய குறையாத் தெரியிறேல்ல.” அவர் சொன்னதைக் கேட்டு அணிந்திருந்த டீ ஷர்ட்டின் கொலரை தூங்கிவிட்டான் காண்டீபன்.

அவனுடைய செய்கையில் மனத்தைச் சூழ்ந்திருந்த பாரம் விலக, ஆதினிக்குச் சிரிப்பு வந்தது. இதனால் தானே நீண்டநாள் பழக்கம் இல்லாதபோதும் அவனைத் தேடிவந்தாள். என்னவோ, அவளின் காயத்துக்கான மருந்து அவனிடம் இருப்பதுபோல் ஆழ்மனது நம்பிற்று. சிரிப்புடன் மிதிலாவைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் மென் முறுவலுடன் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock