அந்தக் குட்டிச் சிரிப்பு அவளின் முகத்துக்கு மிகுந்த பொலிவைக் கொடுத்தது. ஆதினியால் அவளிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.
“என்ன அப்பிடிப் பாக்கிறாய்?” என்று விசாரித்தான் காண்டீபன்.
“அக்கா நல்ல வடிவு.”
“அதாலதான் துரத்திப் பிடிச்சுக் கட்டினான்.” மிதிலாவிடம் கண்களால் சிரித்தபடி சொன்னான் அவன். “சரி சொல்லு, அப்ப நான் வடிவில்லையா?”
“அக்காவோட ஒப்பிடேக்க..” என்று இழுத்துவிட்டு, கண்கள் குறும்பில் மின்ன, இல்லை என்பதாக உதட்டைப் பிதுக்கினாள் ஆதினி.
சத்தமாக நகைத்தான் காண்டீபன். “உன்ர அக்காவைக் கேட்டுப்பார், நான்தான் வடிவு எண்டு சொல்லுவாள்.”
“அப்பிடியா அக்கா. சேர் வடிவா? இல்லை எல்லா. நீங்க ஏன் போயும் போயும் இவரைக் கட்டினீங்க?”
“எங்க விட்டாத்தானே. வேற வழியில்லாம கட்டினதுதான்.” மனைவியின் பதிலைக் கேட்டு காண்டீபனின் முகத்தில் இருந்த இளநகை மங்கவில்லை. ஆனால், பார்வை ஒரு நொடி அவளில் படிந்து மீண்டது.
“வா! கொஞ்சம் நடந்திட்டு வருவம்.” தந்தையை மீண்டும் கட்டிலில் சரித்துவிட்டு எழுந்தான் காண்டீபன்.
“என்னத்துக்கு?” தான் ஏன் வந்தோம் என்பதையே மறந்து வினவினாள் ஆதினி.
“சும்மாதான். வா!”
“மிதிலாக்கா, நீங்களும் வாறீங்களா?”
அவள் காண்டீபனைப் பார்க்க, “அவள் சாப்பிட ஏதாவது செய்யட்டும். நீ வா!” என்று கூட்டிக்கொண்டு நடந்தான்.
“என்ன பிரச்சினை?” வீட்டை விட்டு வெளியே வந்ததும் வினவினான்.
அவள்தான் எதையும் காட்டிக்கொள்ளவில்லையே. பிறகும் எப்படிக் கண்டுபிடித்தான். திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“எல்லாளனோட உனக்கு என்ன சண்டை?”
அப்போதும் பதில் சொல்லாமல் நடந்தாள் ஆதினி.
“அவன் சீரியஸ் டைப். நீ விளையாட்டுப் பிள்ளை. ரெண்டுபேருக்கும் முட்டிட்டுதா?”
அவனிடம் ஆறுதல் தேடித்தான் வந்தாள். இப்போதோ, நடந்தவற்றைச் சொல்வதா இல்லையா என்கிற பெரும் குழப்பம். ஆழ்மனது அவனிடம் சொல்லு என்றது. ஏதோ ஒரு பயம் தடுத்துப் பிடித்தது.
“இங்கபார், நான் உனக்கு அண்ணா மாதிரி. என்னை நம்பினா நீ தாராளமாச் சொல்லலாம். என்னட்ட இருந்து என்ர மனுசிக்குக் கூடக் கத போகாது. நீ சொல்லாட்டியும் பரவாயில்ல. நான் ஒண்டும் நினைக்க மாட்டன், சரியா? ஆனா, எதையும் மனதுக்க போட்டு அழுத்தாத.” என்றவன் மீண்டும் அவளின் தலையைப் பிடித்துக் கலைத்துவிட்டான்.
“சேர்! நீங்க நெடுக(எப்பவும்) என்ர தலையைக் குழப்புறீங்க!” என்று முகத்தைச் சுருக்கினாள் அவள்.
“ஏற்கனவே அது குருவிக்கூடு மாதிரித்தான் இருக்கு.” என்றான் சிரிப்புடன். அதன்பிறகு, அதைப்பற்றி, அவன் ஒன்றும் கேட்கவில்லை. வேறு பேசிக்கொண்டு வந்தான். ஆதினிக்குத்தான் அவன் பேச்சில் லயிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், “அவருக்கு என்ன, என்ர குணங்களைப் பிடிக்காதாம். அப்பா கேட்டதும் மறுக்க முடியாம ஓம் எண்டு சொல்லிட்டார். அப்பிடி விருப்பம் இல்லாம ஒரு கலியாணம் ஏன் எண்டு நான் வேணாம் எண்டு சொல்லிட்டன்.” அவளுக்கு ஆரம்பிப்பதுதான் சிரமமாக இருந்தது. அதன் பிறகு, மடைதிறந்த வெள்ளமாக, அனைத்தையும் ஒப்பித்தாள்.
இடையிடாமல் கேட்டுவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் காண்டீபன். தன் மனதின் வலியை மறைக்க முயன்றுகொண்டிருந்த ஆதினி, அவன் பார்வையைச் சந்திக்க மறுத்தாள். அவன் மனம் கனிந்து போயிற்று.
“முதலாவது விசயம், உனக்கு அடிச்சது உன்ர அண்ணா. அதையெல்லாம் பெருசா எடுக்கக் கூடாது. அவரே வந்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார். பிறகு என்ன? ரெண்டாவது, அவே சொன்ன வார்த்தைகளை நீ ஏன் பிடிச்சுக்கொண்டு தொங்குறாய்? அத விட்டுப்போட்டு அவே சொன்னதில உண்மை இருக்கா எண்டு யோசி.” என்று மென்குரலில் எடுத்துச் சொன்னான்.
அவளுக்கோ அதைக்கேட்டுக் கோபம் வந்தது. “அப்ப நீங்களும் எனக்குப் பொறுப்பில்லை, பக்குவமில்ல எண்டு சொல்லுறீங்களா அண்ணா? எல்லாளன் கூட அவரா எதையும் சொல்ல இல்லையே தவிர, அவரின்ர தங்கச்சி சொன்னதுக்கு அப்பிடி இல்லை எண்டும் சொல்ல இல்ல.” என்று படபடத்தாள்.
“அவன் கிடந்தான் விசரன்!” பட்டென்று சொன்னான் காண்டீபன். ஒருகணம் திகைத்து நின்றுவிட்டுப் பக்கென்று சிரித்தாள், ஆதினி.
“இதுதான் எங்கட ஆதினிக்கு நல்லாருக்கு.” கண்களில் கனிவுடன் சொன்னான் அவன்.
முறுவல் மாறாமல் அவனைப் பார்த்தாள் ஆதினி. எப்போதெல்லாம் அவள் உடைகிறாளோ அப்போதெல்லாம் எதையாவது சொல்லிச் சிரிக்க வைத்துவிடுகிறவனின் மீது, அவள் மனதிலும் ஒருவிதப் பாசம் படர்ந்தது.
“சரி, நான் கேக்கிறதுக்குப் பதில் சொல்லு. எப்பவும் ஒரு போலீஸ் சொல்லுறதைத்தான் சாதாரண மக்கள் கேப்பினம். அது, அந்தப் பதவிக்கான மரியாதை, பயம் இப்பிடி எதுவாவும் இருக்கும். ஆனா, அண்டைக்கு எட்டுச்செலவு வீட்டில நீ சொன்னதைத்தான் ஒரு போலீஸ்காரன் கேட்டவன். அது எப்பிடி? உன்னட்ட அப்பிடி ஏதும் அதிகாரம் இருந்ததா? நீ ஏதும் பதவில இருக்கிறியா? இல்ல, உண்மையாவே அவன் உனக்குப் பயந்துதான் நீ சொன்னதைச் செய்தானா?”
அவனுடைய கேள்விகளில் அவள் முகத்திலிருந்த சிரிப்பு துணிகொண்டு துடைத்தது போன்று மறைந்து போனது. அந்தக் கேள்விகள் உண்டாக்கிய மெல்லிய அதிர்வுடன் அவனை நோக்கினாள்.
“உன்ர அப்பா, அண்ணா, எல்லாளன் இப்பிடி அவேன்ர பதவி, அவேக்கு இருக்கிற மரியாதை, செல்வாக்கு, பயம் தான் உன்னையும் அப்பிடி நடக்க வச்சது. அந்தப் போலீஸ்காரனையும் உனக்கு அடங்கிப்போக வச்சது. அது சரி எண்டு நினைக்கிறியா? இதுவே ஒரு சாதாரண ஆதினி, என்னதான் தைரியசாலியா இருந்தாலு,ம் அப்பிடி நடந்திருப்பாளா? நடந்திருந்தா அந்தப் போலீஸ் அடங்கித்தான் போயிருப்பானா?”
அவனுடைய எந்தக் கேள்விக்கும் ஆதினியிடம் பதில் இலை. இத்தனை நாட்களாக, அவள் இப்படி யோசித்ததும் இல்லை. இப்போது, தன் செய்கைகளைக் குறித்தே அவமானமாக உணர்ந்தாள். கதிரவனை முதன் முதலாகப் பார்த்த நாளில் கூட எவ்வளவு அதிகாரமாக நடந்தாள். பொறுப்பான பதவியில் இருந்த அவனை அடக்கிவிட்டுத்தானே ஓய்ந்தாள். அதையெல்லாம் எண்ணி மனதினுள் குன்றினாள்.
அவளை அப்படிப் பார்க்க அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், சிலவற்றைப் பேசாமல் விளங்காது.
“நீ இன்னும் சின்னப்பிள்ளைதான். இல்லை எண்டு சொல்ல இல்ல. ஆனா, இதையெல்லாம் யோசிக்காம நடக்கிற அளவுக்குச் சின்னப்பிள்ளை இல்ல. விளங்குதா?” என்றான்.
அவள் விழிகள் கலங்கிப் போயிற்று. கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி தலையை மேலும் கீழுமாக அசைத்தாள்.
“நீ அழுறதப் பாக்க நல்லாருக்கே. இன்னும் கொஞ்சம் அழு, பிளீஸ்!” என்றான் அவன்.
“அண்ணா!” கண்களில் நீருடன் சிரித்தாள் ஆதினி.
அவன் முகமும் மலர்ந்து சிரித்தது. ஆசையோடு அவளின் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான். மீண்டும் திரும்பி வீடு நோக்கி நடந்தனர். “இப்ப ஓகேயா? மனதில இருந்த பாரமெல்லாம் போயிட்டுதா?”
“பாரம் போயிட்டுதா தெரியேல்ல அண்ணா. ஆனா, நான் செய்த பிழைகள் விளங்குது.” உணர்ந்து சொன்னாள் ஆதினி.
அதுவே அவனுக்குப் பெரிய முன்னேற்றமாகத்தான் தெரிந்தது. “இப்போதைக்கு இதே போதும். இனியும் இங்க இருக்க விருப்பமில்ல, எல்லாளன் வேண்டாம் எண்டு சொல்லுறதை விட்டுட்டு நல்லாப் படி. அவனோட சமாதானமாகு. சந்தோசமா இரு.” என்றான் அவன்.
“இல்ல அண்ணா. எனக்கு உண்மையாவே கொஞ்சம் விலகி இருக்கோணும் மாதிரி இருக்கு. என்னால இப்போதைக்கு அண்ணாவோட சமாதானம் அகேலாது. நான் அவரோட கதைக்காட்டி அந்தக் கோபத்தை அவர் அண்ணில காட்டப் பாப்பார். பிறகு, அவேன்ர வாழ்க்கையும் சந்தோசமா இருக்காது. அதால, நான் விலகிப் போறதுதான் சரியா இருக்கும். என்ன செய்றது எண்டுதான் தெரிய இல்ல.” என்றவளைக் கனிவுடன் நோக்கினான் காண்டீபன்.
இந்த மனம் போதும், அவளைப் பக்குவப்படுத்திவிடும் என்று நம்பினான். “இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். எங்க போறதா இருந்தாலும் இந்த செமஸ்டர் முடியோணும் தானே. அதுவரைக்கும் பொறு. அப்பவும் இதே முடிவுதான் எண்டா கொழும்பில போயிருந்து படி. அது நீ உன்ர துறைல இன்னுமே கெட்டிக்காரியா வாறதுக்கும் உதவியா இருக்கும்.” என்றான் அவன்.
அவளும் அப்படித்தான் யோசித்துக்கொண்டு இருந்தாள். அதில், சரி என்று தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டாள்.