“உண்மையாவா? ஆர் அவன்?”
“டியூஷன் வாத்திதான் சேர். ஆனா என்ன, இவன் ஸ்பெஷல் கிளாஸ் எண்டு எல்லா டியூஷன் செண்டர்ஸுக்கும் மாறி மாறிப் போவானாம். அதுலதான் முதல் எங்களிட்ட மாட்டேல்ல. நீங்க சொன்ன மாதிரி ஒரே நேரத்தில எல்லா டியூஷன் செண்டர்ஸையும் வளைச்சுப் பிடிச்சதாலதான் மாட்டினவன். பைக் சீட்டுக்குள்ள லொலி, ஊசி, டேப்லட்ஸ் எண்டு எல்லாமே இருந்தது. அவனும் ஒத்துக்கொண்டுட்டான்.”
“ஓ! அந்தளவுக்கு நல்லவனா? ஆளை ஸ்டேஷனுக்கு கொண்டுவாங்க. நானும் வாறன்.” என்றுவிட்டு ஸ்டேஷனுக்கு விரைந்தான்.
மெல்லிய உயர்ந்த தேகத்தோடு, மூக்குக் கண்ணாடி அணிந்து, மரியாதைக்குரிய ஒரு ஆசிரியனின் அத்தனை அம்சங்களோடும் இருந்தான் அவன்.
ஏற்கனவே பயத்தில் வெளிறியிருந்த அவன் முகம், எல்லாளனைக் கண்டதும் இன்னுமே இரத்தப் பசையை இழந்தது. தானாகவே எழுந்து நின்றான்.
“சாமந்தியத் தெரியுமா?”
“தெ…தெரியும்.”
“எப்பிடி?”
“க…ணக்குப் பாடம் என்னட்டத்தான் படிச்சவா.”
“படிக்க வந்த பிள்ளைக்குத்தான் இதெல்லாம் பழக்கினியா நீ?”
அவனின் உறுமலில் சகலமும் அடங்கியது அவனுக்கு.
“சொல்லடா! இது மட்டும்தானா? இல்ல, வேற சேட்டையும் விட்டியா?”
“சேர்…” புரிந்தும் புரியாமலும் நடுங்கினான் அவன்.
“என்னடா சேர்? நான் என்ன கேக்கிறன் எண்டு உனக்கு விளங்கேல்ல?”
“இல்ல சேர். வேற எதுவும் இல்ல.”
“அப்பிடி எதுவும் இல்லாமத்தான் அந்தப் பிள்ளை தூக்குல தொங்கினவளா?” என்று கேட்டு, அவன் கவனித்த கவனிப்பில் நார் நாராகிப் போனான், அந்த ஆசிரியன்.
“பெயர் என்ன?”
“மாதவன்.”
“மாதவன்! ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு, அதுவும் நல்லாப் படிக்கிற பிள்ளைக்கு, பிழையான பாதையைக் காட்டிக் கெடுத்து, கடைசில உயிரையே விட வச்சிட்டியேடா!”
“இல்ல சேர். நானாக் குடுக்கேல்ல. அவளாத்தான் வந்து வாங்குவாள்.”
“அவள் கேட்டா நீ குடுப்பியா? உன்ர வீட்டில இதே மாதிரி ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்து, அவள் கேட்டாலும் இப்பிடித்தான் குடுப்பியா?” என்றதும் குலுங்கி அழுதான் அவன்.
“தெரியாமச் செய்திட்டன் சேர். பிளீஸ் சேர். சொறி சேர்!”
“ஏனடா இப்பிடிச் செய்தனி? சொல்லு! ஏன் இப்பிடிச் செய்தனி?” உக்கிரம் கொண்டு அவனை உலுக்கினான்.
“காசுக்காக… சொறி சேர்.”
அவனின் எந்தக் கதறலையும் எல்லாளன் காதில் வாங்கவே இல்லை. அத்தனையும் ஊமை அடிகள். இவன் சாமந்தியை உடலளவிலும் துன்புறுத்தினானா, இல்லை, போதை மட்டும்தானா என்று அவனுக்கு உறுதியாக அறிய வேண்டியிருந்தது. அதில், ஈவு இரக்கமே காட்டவில்லை.
“ஐயோ சேர்! அந்தப் பிள்ளையின்ர நிகத்தைக் கூட நான் தொட்டது இல்ல சேர்!” என்று கதறிய பிறகுதான் விட்டான்.
“இந்தப் போதைப்பொருள் எல்லாம் உனக்கு எப்பிடிக் கிடைக்குது? இத முதல் சும்மா குடுத்தியா நீ? அதுக்குப் பதிலா அவளிட்ட என்னடா வாங்கினாய்?”
“அது ஒரு கடை இருக்கு சேர். மாதத்தில ரெண்டு தரம் கேள்விக்குறி போட்டு மெசேஜ் வரும். நான் என்னட்ட இருக்கிற காசுத் தொகையைச் சொன்னா, அதுக்கு ஏற்ற மாதிரி அந்தக் கடைல பொருள் வந்திருக்கும். நான் காசக் குடுத்திட்டு அத வாங்கிக்கொண்டு வருவன். ஆனா, அது ஆர், என்ன எண்டு எல்லாம் எனக்குத் தெரியாது. கறுப்பு பைக், கறுப்பு உடுப்பு, கறுப்பு ஹெல்மெட் போட்ட ஒருத்தன் கொண்டுவருவான்.”
இங்கேயும் ஒரு கறுப்பாடு. விழிகள் இடுங்க அவனை நோக்கினான் எல்லாளன்.
அவன் கண்களில் தெரிந்த சந்தேகத்தில் பதறி, “உண்மையா சேர். ஒரே ஒருக்காத்தான் அவனை அப்பிடிக் கூடப் பாத்திருக்கிறன். அதுதான் முதல் தடவ. பிறகு அந்தக் கடைல காசக் குடுத்திட்டுப் பொருளை வாங்குவன். சாமந்திக்கும் நானா குடுக்கேல்ல சேர். என்னட்ட இருக்கு எண்டு அவளுக்கு எப்பிடித் தெரிய வந்தது எண்டும் தெரியாது. அவளாத்தான் வந்து கேட்டவள். முதல் காசு தந்தவள். பிறகு பிறகு நகை தந்தவள். கடைசில காசு, நகை ஒண்டும் இல்லை எண்டு கெஞ்சினவள். நான் குடுக்கேல்ல.” என்று இனியும் அடிவாங்கத் தெம்பில்லாமல், அவசரம் அவசரமாக அனைத்தையும் ஒப்பித்தான்.
“அதென்ன அவளுக்கு நீயாக் குடுக்கேல்ல. அந்தளவுக்கு நல்லவனா நீ?” என்றதும் அவன் முகம் கறுத்தது.
“அது… அது படிக்கிற பிள்ளைகளுக்கு வித்தா கெதியா பிடிபட்டுடுவன் எண்டு…” அவன் முகம் பாராமல் பதில் சொன்னவனை, பார்வையாலேயே பொசுக்கினான் எல்லாளன்.
“எங்க அந்தக் காசு நகை எல்லாம்?”
“அதையெல்லாம் அந்த அவனே கொண்டு போயிடுவான்.” என்றதும் பளார் என்று விழுந்தது ஒரு அறை.
“திரும்பவும் பொய்யாடா?”
“ஐயோ சேர். உண்மையா எல்லாம் அவனிட்டக் குடுத்திட்டன். என்ர பங்கைக் காசாத்தான் எடுப்பன். கடைசியாத் தந்தது ஒரு தோடு மட்டும் வீட்டை இருக்கு.” என்றதும், எங்கே வைத்திருக்கிறான் என்று கேட்டு, உடனேயே ஆளை அனுப்பி அதை எடுப்பித்தான்.
அதே நேரம், அவன் சொன்ன கடைக்கும் போலீசை அனுப்பி விசாரித்தான். அவன் சொன்னது உண்மைதான். கூடவே, அந்தக் கடைக்காரரையும் மிரட்டி, இதைச் செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. எதைக் கொடுத்து எதை வாங்குகிறார்கள் என்று கூட அறியாமல் இருந்தார், அந்தக் கடைக்காரர்.
சாகித்தியனும், “சேர், சாமந்தி அவளின்ர எக்கவுண்ட்ல இருந்த காசு எல்லாம் எடுத்திருக்கிறாள். தப்பித்தவறி தனக்கு ஒண்டு நடந்திட்டா எண்டு பயந்து, அவளுக்கும் தெரிஞ்ச இடத்திலதான் அம்மா நகைகளை ஒளிச்சு வச்சிருக்கிறா. அதுல இருந்தும் நிறையச் சின்ன சின்ன நகைகளைக் காணேல்லையாம் எண்டு அம்மா சொல்லுறா. இந்தத் தோடும் அவளின்ரதான்.” என்று, அந்தத் தோடு சாமந்தியினதுதான் என்பதை உறுதிப்படுத்தினான்.
மீண்டும் அந்த விசாரணை அறைக்கு எல்லாளன் வந்தபோது, ஒரு மூலையில் சுருண்டிருந்தான் மாதவன். இவனைக் கண்டதும் உயிர்ப்பயம் கண்ணில் தெரிந்தது.
“நீ வித்த. அவள் வாங்கினாள். ஆனா, என்னத்துக்குத் திடீரெண்டு தூக்குல தொங்கினவள். அந்தளவுக்கு அவளை என்னடா செய்தாய்? தவறா வீடியோ ஏதும் எடுத்தியா? இல்ல, அவளிட்டச் சேட்டை ஏதும் விட்டியா?” என்று திரும்பவும் தன் விசாரணையை ஆரம்பித்தான்.
“இல்ல சேர். அப்பிடி ஒண்டும் நடக்கேல்ல. ஏன் செத்தவள் எண்டு உண்மையா எனக்குத் தெரியாது. ஆனா, கடைசி நேரம் அவளிட்டக் காசு இருக்கேல்ல எண்டு நினைக்கிறன். சரியான டிப்ரெஷன்ல இருந்தவள். பிறகு காசு தாறன், ஒரு லொலியாவது தாங்க எண்டு எவ்வளவோ கெஞ்சினவள். நான் குடுக்கேல்ல. வேணுமெண்டா இன்னொரு ஆளச் சேத்துவிடச் சொன்னனான்.” என்றதும் புருவத்தைச் சுருக்கினான் எல்லாளன்.
“அது… அது பப்ளிக்கா நாங்க விக்கேலாது எண்டபடியா, இன்னொரு ஆளுக்கு இதப் பழக்கிவிட்டா இவளுக்கு ஃபிரீயா கிடைக்கும்…” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, சுர் என்று சினம் உச்சிக்கு ஏற, எட்டி அவனை உதைத்தான் எல்லாளன்.
“ஏன்டா தறுதலையே! ஒருத்தின்ர வாழ்க்கையை நாசமாக்கினது காணாது எண்டு, இன்னொரு பிள்ளையையும் கெடுக்கப் பாத்தியா?”
“அது அதுதான் எங்களுக்கான ஓடர்(ஆர்டர்). ஒரு ஆளிட்ட எப்பவும் காசு இருக்காது. போதை பழகின பிறகு அது இல்லாமயும் இருக்கேலாது. அப்ப, இப்பிடிச் சொன்னாத்தான் இன்னொரு ஆளச் சேர்த்து விடுவினம். அப்பதான் கஸ்டமர் கூடும் எண்டு. ஆனா, சாமந்தி ஆரையும் என்னட்டக் கொண்டுவரேல்ல. எனக்குத் தெரிஞ்சு, சாமந்தி போதை இல்லாம இருக்கேலாமத்தான் பிழையான முடிவு எடுத்திருக்கோணும் சேர். மற்றும்படி நான் ஒண்டும் செய்யேல்ல.” என்றவனைக் கவனித்துக்கொள்ளும்படி கதிரவனிடம் கண்ணைக் காட்டிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான் எல்லாளன்.