கேள்வியை உள்வாங்கியவன் எங்கோ பார்வை நிலைகுத்தியிருக்க, அப்படியே அமர்ந்திருந்தான்.
அவனுடையது கலைப்பீடம். அவளுடையது சட்டம். இருவரும் சந்திக்கச் சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை. ஆனாலும் அவள் முகம் பார்க்கவும் அவளோடு பேசவும் என்று தினமும் வருவான்.
இன்றைக்கு அவள் அவனைத் தூக்கி அவனின் இறந்தகாலக் கிடங்கிற்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டாள். அதற்குள் மூழ்கப்போன மனத்தைப் பிடிவாதமாக வெளியே இழுத்துக்கொண்டு எழுந்து, தன் வகுப்பு நோக்கி நடந்தான்.
அங்கே ஒரு திருப்பத்தில் அழுது வீங்கிய முகத்துடன் அவனுக்காகக் காத்திருந்தாள் அஞ்சலி. ஒரு நொடி நடை நிற்கப் புருவங்களைச் சுருக்கியவன், வேகமாக அவளருகில் வந்து, “மாதவன் பிடிபட்டுட்டாரா?” என்று தாழ்ந்த குரலில் வினவினான்.
ஆம் என்று தலையை அசைத்தவளின் கன்னங்களில் கண்ணீர் உருண்டு ஓடியது.
ஒரு கணம் அமைதி காத்துவிட்டு, “இது எப்பயாவது ஒரு நாள் நடக்கும் எண்டு எதிர்பாத்ததுதானே? பிறகு என்ன? முகத்தைக் கழுவிக்கொண்டு விரிவுரைக்கு நடவும்!” என்றுவிட்டு அவளைக் கடந்து போனான் காண்டீபன்.
“நான் இண்டைக்கு வீட்டுக்குப் போகட்டா சேர்?”
முதுகுப்புறமிருந்து வந்த கேள்வியில் நடந்துகொண்டு இருந்தவன் நின்று திரும்பி, “போய்? என்ன செய்யப்போறீர்? தனியாக் குந்தி இருந்து அழப்போறீரா? இல்ல…” என்று இழுத்தான்.
அதற்குமேல் அவன் பார்வையை எதிர்கொள்ளத் தைரியமற்றுத் தலை குனிந்தாள் அஞ்சலி.
“பேசாம நடவும் வகுப்புக்கு!” என்று அதட்டியவன் மீண்டும் அவளருகில் வந்து, “தமயந்திக்குக் கொஞ்ச நாளைக்கு ஒண்டும் குடுக்க வேண்டாம். வீட்டிலயும் எதையும் வச்சு எடுக்காதயும். எல்லாளன் கொஞ்சம் அமைதியாகட்டும். லொலி கேட்டா சும்மா லொலிய குடும்.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நடந்தான்.
அன்று அவனுடைய விரிவுரைகள் நண்பகலோடு முடிந்திருந்தன. குறிப்பு எடுக்க வேண்டிய வேலை இருந்தது. எப்போதும் பல்கலைக்கழக நூலகத்தில் அமர்ந்துதான் அதை முடிப்பான். இன்று ஏனோ மனம் எதிலும் இலயிக்க மாட்டேன் என்றது.
ஆதினியின் கேள்வி, மாதவன் சிறைப்பட்டது என்று எல்லாம் சேர்ந்து அவன் அமைதியைக் குலைத்திருந்தது. காலையில் மாத்திரமே உண்டுவிட்டு வந்த வயிறு வேறு என்னைக் கவனி என்றது. பேசாமல் வீட்டுக்குப் புறப்பட்டான்.
உச்சி வெய்யில் இன்னுமே தணியவில்லை. மாமரத்தின் நிழலின் கீழே வண்டியை நிறுத்திவிட்டு வந்தவனை அமைதியான வீடே வரவேற்றது. பகல் என்பதில் பெரியவர்கள் இருவரும் உணவை முடித்துக்கொண்டு உறங்கியிருந்தார்கள்.
மனைவியைத் தேடி விழிகளைச் சுழற்றினான். அவள் உறங்கமாட்டாளே என்று எண்ணியவனின் எண்ணத்தை மெய்யாக்கிக்கொண்டு, வீட்டின் பின்பக்கமிருந்து வந்துகொண்டிருந்தாள் மிதிலா. இவனைக் கண்டதும் அவள் விழிகளில் மெல்லிய வியப்பு.
நீர்த் திவலைகளைச் சுமந்திருந்த முகமும், தோளில் கிடந்த துவாயும் அப்போதுதான் குளித்திருக்கிறாள் என்று சொல்ல, அவன் விழிகளில் ரசனை படர்ந்தது.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேகமாக அறைக்குள் ஓடினாள் மிதிலா. கண்ணும் முகமும் சிரிக்க அவளின் பின்னே அறைக்குள் புகுந்து, சத்தமில்லாமல் கதவைச் சாற்றிவிட்டு அவளைப் பின்னிருந்து அணைத்தான்.
மிதிலாவுக்குத் தேகமெங்கும் நடுக்கமொன்று ஓடி மறைந்தது.
“நான் இன்னும் சாப்பிடேல்லை.” அவள் காதோரமாகச் சொன்னான்.
“உடுப்பை மாத்திக்கொண்டு வாங்கோ. சாப்பாடு போடுறன்.”
அவனிடமிருந்து நாசுக்காக விலக முயன்றபடி சொன்னவளைத் திருப்பி, தன் முகம் பார்க்க வைத்தான் காண்டீபன்.
“இது ஒரு வருசப் பசி எண்டு தெரியாதா உனக்கு?”
அவன் பார்வையில் தெரிந்த தீவிரத்தில் அவளுக்கு நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
“மாமா இப்ப எழும்பிடுவார்.” எழும்பாத குரலில் மெல்ல இயம்பினாள்.
“எழும்பினாக் கூப்பிடுவார். நான் இருக்கிறன் எண்டு தெரிஞ்சா அதுவும் செய்யமாட்டார்.” விடாப்பிடியாகச் சொன்னவனைக் கலவரத்துடன் நோக்கினாள் மிதிலா.
“உங்களுக்குப் பசிக்கேல்லையா?”
“பசிக்குது எண்டுதானே சொல்லுறன்.” பார்வை அவளைக் கொய்ய, வலிவும் வனப்பும் மிகுந்த நீண்ட விரல்கள் பட்டுக் கன்னத்தை வருடின.
எப்போதும் இப்படிப் பிடிவாதம் பிடிக்கமாட்டானே. மனம் தவித்தது. அலைபாய்ந்த விழிகள் என்னை விட்டுவிடேன் என்று கெஞ்சின.
அதற்குப் பதில்போல், “பொறுத்தது காணும் எண்டு நினைக்கிறன்மிதிலா.” என்றான் அவன்.
திக் என்றது அவளுக்கு. தேகம் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது. “ப்ளீஸ்.” விழிகளில் நீர் கோக்க இயலாமையுடன் கெஞ்சினாள்.
அவன் சொன்னது போல, அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடமாகப் போகிறது. இன்னுமே ஒருமித்த மனதாக அவனோடு இணைய முடியாமல் மனதெங்கும் ஆயிரம் கசடுகள்.
அவளின் யாசிப்பில் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. “என்ன பிளீஸ்? சொல்லு! என்னத்துக்குப் பிளீஸ்? ஆரும் எங்கயும் ஆருக்காகவும் தேங்கி நிக்கேல்ல. அவே அவே, அவே அவேன்ர வாழ்க்கையைப் பாத்துக்கொண்டுதான் இருக்கினம். நீயும் நானும் மட்டும் அதே இடத்தில நிக்கிறதால இந்த உலகமும் நிண்டுடாது மிது. அது போய்க்கொண்டேதான் இருக்கும். விளங்குதா உனக்கு?” என்று அடிக்குரலில் சீறியவன், “இல்ல…” என்று ஏதோ சொல்ல வரவும் நடுங்கும் விரல்களால் அவன் உதட்டினை மூடி, தளும்பிவிட்ட விழிகளோடு சொல்லாதே என்று மறுத்துத் தலையசைத்தாள் மிதிலா.
“நான் ஆருக்காகவும் எதுக்காகவும் விலகி நிக்கேல்ல. எனக்கும் உங்களோட வாழோணும். நிறையக் காலம். நிறையப் பிள்ளைகளோட. ஆனா… இன்னும் கொஞ்ச நாள்… பிளீஸ் தீபன்.” என்றவளை அடுத்த நொடியே எலும்புகள் நொறுங்கிவிடுமோ எனுமளவுக்கு இறுக்கி அணைத்திருந்தான் காண்டீபன்.
தீபன்! ஆடிப்பாடித் திரிந்த காலத்தில் வாய்க்கு வாய் அவள் சொன்ன தீபனை மீண்டும் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு கேட்டிருக்கிறான். இது போதுமே! தன் மகிழ்வைச் சொல்லுகிறவனாக அவள் இதழினில் ஆழ்ந்து முத்தமிட்டான்.
நொடிகள் கரைந்தபின் நிறைவுடன் விலகி, “போய்ச் சாப்பாட்டைப் போடு! வாறன்.” என்றான், விழிகளினோரம் படர்ந்துவிட்ட மெல்லிய நீர்ப் படலத்துடன்.
அவள் முகத்திலும் கண்ணீரும் சிரிப்பும் ஒருங்கே மலர்ந்திருந்தன. சரி என்பதாகத் தலையை அசைத்துவிட்டுத் துள்ளிக்கொண்டு ஓடினாள்.