காவல் நிலையத்தில், ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த வாங்கிலில், கனத்திருந்த தலையைப் பற்றியபடி அமர்ந்திருந்தான் சாகித்தியன். அஜய்யின் கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன என்கிற அளவுக்கு அவன் மனம் வெறிகொண்டு உறுமிக்கொண்டிருந்தது. துரோகி! நம்பிக்கைத் துரோகி!
என்னவோ நல்லவன் போன்று இத்தனை நாட்களும் கூடவே நின்றானே. மனம் கூசவே இல்லையா? குற்றவுணர்ச்சி குத்தவே இல்லையா? ஒரு வார்த்தை ஒரேயொரு வார்த்தை சொல்லியிருக்கத் தங்கையைக் கவனித்திருப்பானே. அவள் அவர்களை விட்டுப் போயிருக்க மாட்டாளே.
வாழ்க்கை இத்தனை கொடூரமானது என்று அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை. கூடவே பிறந்து, கூடவே வளர்ந்து, கூடவே இருந்தவள் திசைமாறிப் போயிருக்கிறாள்; செய்யக்கூடாத தப்பையெல்லாம் செய்திருக்கிறாள். அவனுக்குத் தெரியாது. உயிர் நண்பன் என்று பழகியன் உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்திருக்கிறான். அதுவும் தெரியாது. அவனெல்லாம் என்ன வாழ்க்கையை வாழ்கிறான்? இனியும் வாழ்வில் யாரையாவது நம்புவானா? நம்பத்தான் முடியுமா?
அப்போது, அவன் தோளைப் பற்றியது ஒரு கரம். கலங்கிச் சிவந்திருந்த விழிகளோடு தலையை உயர்த்திப் பார்த்தான். எல்லாளன் நின்றிருந்தான். “எழும்பி வா!” அவனை அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு நடந்தான். அங்கே, அவனுக்கான இருக்கையைக் காட்டிவிட்டு மேசையைச் சுற்றிக்கொண்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
இருவருக்கும் பால் தேநீர் வரவழைக்கப்பட்டது. அதை உணராதவனாக அமர்ந்திருந்தான் சாகித்தியன்.
“எடுத்துக் குடி!”
“இல்ல. எனக்கு வேண்டாம்.”
“குடி சாகித்தியன். இந்த டீயை குடிக்காம இருக்கிறதால எதுவும் மாறப்போறேல்ல. கொஞ்சம் தெம்பு வரும். குடி.”
அவன் பேச்சை மீறும் தெம்பற்று ஒருவாய் மட்டும் பருகினான். நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்த பாரத்தில் அது தொண்டையைத் தாண்டி இறங்கமாட்டேன் என்றது. கோப்பையை மீண்டும் மேசையில் வைத்துவிட்டு அவனைப் பார்த்தான். இன்னும் என்ன இடியை என் தலையில் இறக்கப் போகிறாய் என்று கேட்பது போலிருந்தது.
“நான் கதைக்கப்போறது உனக்கு இன்னும் வேதனையைத் தரும் எண்டு எனக்குத் தெரியும் சாகித்தியன். ஆனா, வேற வழி இல்ல. இத கதைச்சுத்தான் ஆகவேணும். அஜய்க்கும் அவளுக்குமான அந்த உறவுதான் முதலும் கடைசியுமானதா? இல்ல, அதுக்கு முதலும் அதுக்குப் பிறகும் அவளுக்கு வேற ஆரோடையும் அப்பிடியான தொடர்பு இருந்ததா எண்டு எங்களுக்குத் தெரியாது. அதைக் கண்டு பிடிக்கிறது அவ்வளவு ஈஸியும் இல்ல. ஆனா, அதுக்கான முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கு..” என்றவனின் பேச்சு, எரியும் கற்பூரத்தை விழுங்கியது போல், சாகித்தியனின் நெஞ்சைச் சுட்டுக்கொண்டு இறங்கிற்று. “என்ர தங்கச்சி அப்பிடியானவள் இல்ல சேர்.” பட்டென்று முகிழ்த்த சினத்துடன், அவன் முகம் பாராது சொன்னான் சாகித்தியன்.
“நீ சொல்லுறது உண்மையா இருக்கவேணும் எண்டுதான் நானும் ஆசைப்படுறன்.”
சாகித்தியனின் முகம் இலேசாகக் கன்றியது. அதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல், “போதைய எவனும் சும்மா குடுக்க மாட்டான். உன்ர தங்கச்சியும் காசு, நகை இப்பிடி ஏதாவது குடுத்திருக்க வேணும். அதால, அவளின்ர நகைகள், அவளின்ர பெயர்ல பாங்க்ல காசு போட்டிருந்தா அது, வீட்டில இருக்கிற நகைகள் இதையெல்லாம் செக் பண்ணிப் பாத்திட்டு சொல்லு.” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.
விட்டால் போதும் என்று எழுந்து ஓடினான் சாகித்தியன். சாமந்திக்கு அண்ணாதான் என்றாலும் இருபத்தியொரு வயதுகள் மாத்திரமே நிரம்பிய வாலிபன். எத்தனை இடிகளைத்தான் தாங்குவான்? எத்தனை அவமானங்களை என்று கடந்து வருவான்? எந்த மானத்துக்கு அஞ்சி உயிரை மாய்த்தாளோ அந்த மானமே இன்றைக்கு ஊருக்கு முன்னே கடைபரப்பட்டு, அக்குவேறு ஆணிவேராக ஆராயப்படுவதை அறிவாளா? இதற்கு அவள் உயிருடன் இருந்தே வாழப் போராடியிருக்கலாம். யாருமில்லாத மலை உச்சியில் நின்று, மனதின் அழுத்தமெல்லாம் வெளியே வருமளவுக்கு வாய் விட்டுக் கத்தவேண்டும் போல் இருந்தது.
அடுத்ததாக இளந்திரையனைச் சென்று சந்திக்க எண்ணினான் எல்லாளன். அன்றைக்கு நடந்தவைகளைப் பற்றி இன்னும் அவரோடு அவன் பேசவில்லை. அந்த வேலையை இன்றைக்கே முடிக்க நினைத்தான். கூடவே, அன்றைக்கு, அவன் பேசிவிட்டு வந்ததற்குப் பிறகு கண்ணிலேயே படாத ஆதினி வேறு, அவன் சிந்தைக்குள் நின்று குடைந்தாள். எதுவுமே நடக்காமல், அவளாக ஒதுங்கியிருக்கப் பெரிதாகத் தெரிந்திராது. கவனித்தும் இருக்கமாட்டான். இப்போதோ, என்ன செய்கிறாள், ஏது செய்கிறாள் என்று கவனிக்கச் சொல்லி மூளை அறிவுறுத்திக்கொண்டே இருந்தது.
அவர்களின் வீட்டுக்கு அவன் வந்தபோது, இளந்திரையனின் காரோடு ஆதினியின் ஸ்கூட்டியும் வீட்டு வாசலில் நின்றிருந்தது.
இளந்திரையனை அவரின் அலுவலக அறையிலேயே சந்தித்தான். மெல்லிய சங்கடம் ஒன்று சூழ்ந்து கொண்டது. அவர் முகத்தில் ஏதாவது தென்படுகிறதா என்று ஆராய்ந்தான். தன் சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறம் தள்ளி வைத்துவிட்டு, எத்தனை எத்தனையோ வழக்குகளுக்குத் தீர்ப்பெழுதிய மனிதர், தன் மனதிலிருப்பதை அவ்வளவு எளிதாகக் காட்டிவிடுவாரா என்ன?
“சொறி அங்கிள்.” மெல்லச் சொன்னான். அப்போதும் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார் இளந்திரையன். அவனே சொல்லவந்ததைச் சொல்லிமுடிக்கட்டும் என்று நினைக்கிறார் என்று புரிந்தது. “அண்டைக்கு அப்பிடி நடந்திருக்கக் கூடாது அங்கிள். என்னையும் மீறி நடந்திட்டுது. உண்மையா சொறி. ஆனா, உங்களுக்கு நான் தந்த சம்மதம் எண்டைக்கும் மாறாது.” என்று தன் நிலையை அவருக்குத் தெரியப்படுத்தினான்.
அவர் மறுப்பாகத் தலையை அசைத்தார். “இனி அந்த சம்மதத்துக்கு எந்த அர்த்தமும் இல்ல எல்லாளன். எதுவா இருந்தாலும் ஆதினிக்குப் பிடிக்காதது, விருப்பம் இல்லாதது நடக்காது.” அவரும் தன் நிலைப்பாட்டை அமைதியான குரலில் எடுத்துரைத்தார்.
“அண்டைக்கு உன்ன நான் மறைமுகமா வற்புறுத்தினது உண்மைதான். அதுக்குக் காரணம், செல்லமா நான் வளத்த பிள்ளையை நல்லவன் ஒருத்தன்ர கைல பிடிச்சுக் குடுத்திடவேணும் எண்டுற ஆசை. கண்ணுக்கு முன்னால இருக்கிற திறமையானவன கைநழுவ விட்டுடக் கூடாது எண்டுற அவசரமே தவிர, என்ர பிள்ளையைக் கட்டிக்கொடுக்க ஏலாம இல்ல.” என்று அவர் சொன்னதும் அவன் முகம் இலேசாகக் கன்றியது. அன்றைக்கு, மிகுந்த ஆவலோடும், உரிமையோடும் தன்னிடம் சம்மதம் வாங்கிய மனிதரை, இன்றைக்கு, இப்படிச் சொல்ல வைத்துவிட்டானே.
அதைவிட, அவர் அவனுக்கு விளக்கம் சொல்வதா?