நீ தந்த கனவு 19 – 1

இன்றைய பிரதான செய்திகள்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மாணவியின் தற்கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்!

உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர் கற்று வந்த தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த சந்தேக நபர் கதிர்வேலு மாதவன் என்பவர், ‘ஐஸ்’ என்கிற போதைப் பொருளினைத் தன் உடைமையில் வைத்திருந்தபோது, காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருளினைத் தன் உடைமையில் வைத்திருந்தது, அதனை விற்பனை செய்தது, மாணவி ஒருவரைத் தற்கொலை செய்யும் அளவுக்குத் தூண்டியது எனும் குற்றங்களின் அடிப்படையில், சந்தேக நபரின் மீது காவல் உதவி ஆணையர் திரு எல்லாளனினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

போதைப் பொருளினை வைத்திருந்து, மாணவிக்கு விற்பனை செய்தார் எனும் குற்றங்களைச் சந்தேக நபரே ஒப்புக்கொண்ட காரணத்தினாலும், சந்தேகத்திற்கு இடமின்றி அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாலும் நீதிமன்றம் அவரைக் குற்றவாளியாக உறுதி செய்தது.

அதே வேளை, குற்றம் சுமத்தப்பட்டவரினால்தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பதனைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் காவல்துறை நிரூபிக்கத் தவறியதாலும், இதுவரையில் அவர் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான கைரேகைப் பதிவுகள் எதுவும் இல்லை என்பதையும் கவனத்திற்கொண்டு, மாணவியின் தற்கொலைக்கு அவர் காரணமென்று கருத முடியாது என்றும் நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்தார்.

கடைசியாக, குற்றவாளி தன் உடைமையில் வைத்திருந்த போதைப் பொருட்களின் அளவு, சட்டத்துக்கு உட்பட்ட சிறிய அளவாக இருந்த காரணத்தினால், போதைப் பொருட்களைத் தன் உடைமையில் வைத்திருந்து, மாணவிக்கு விற்பனை செய்த குற்றங்களின் அடிப்படையில், அவருக்கு இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனையும், ஐம்பதினாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த மாணவியின் மரணத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மற்றுமோர் சந்தேக நபரான அஜய் அரியரட்ணம் என்பவர் மீது, சாட்சியங்கள் எதுவும் முன் வைக்கப்படாத நிலையில், அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப் படவில்லை என்றும் தெரிவித்தார்.

மாணவியின் பிரேத பரிசோதனையில் வன்புணர்வு நடந்ததற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கப் பெறாத காரணத்தினாலும், அம்மாணவி பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர் என்பதாலும் அஜய் அரியரட்ணம் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்தார்.

*****

சாகித்தியனின் பெற்றோருக்கு மகளை இழந்த சோகம் என்றுமே தீரப்போவதில்லை. அதற்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைத்து, அதன் மூலம் தமக்குச் சின்ன ஆறுதலாவது கிடைத்துவிடாதா என்றுதான் இத்தனை நாள்களாகக் காத்திருந்தார்கள்.

வந்த தீர்ப்போ பெரும் ஏமாற்றத்தைத் தந்து, மீண்டும் மரண வலியைக் கொடுத்திருந்தது. அதுவும் அஜய் விடுதலையானதைப் பொறுக்க முடியாமல் எல்லாளனின் முன்னே சீற்றத்துடன் வந்து நின்றான் சாகித்தியன்.

“இது தானா சேர் தீர்ப்பு? இதுதானா உங்கட சட்டம்? படிக்க வந்த பிள்ளைக்குப் போதையப் பழக்கின கேடு கெட்டவனுக்கு ரெண்டு வருசத் தண்டனை. நண்பன் எண்டு சொல்லி, நம்பிக்கைத் துரோகம் செய்த துரோகி, நிரபராதி. நல்லாருக்கு சேர் உங்கட நியாயம்! ஒரு உயிரை இழந்திருக்கிறம். அதுக்கு இவ்வளவுதானா உங்களால செய்ய முடிஞ்சது?”

அவனின் குமுறலுக்குப் பதிலாக எல்லாளன் கோபப்படவில்லை. நிதானமாக, பொறுமையாக நடந்தவற்றை அவனுக்கு விளக்க முயன்றான்.

“முதல் விசயம், மாதவன் அவளுக்குப் போதையப் பழக்கேல்ல. அதுக்கு முதலே அவள் எங்கயோ பழகி இருக்கிறாள். எங்க, எப்பிடிப் பழகினாள் எண்டுறது இன்னுமே மர்மமாத்தான் இருக்கு. ரெண்டாவது, அந்த முழு டியூஷன் செண்டரையே நான் விசாரிச்சிட்டன். வேற ஆரும் மாதவனிட்ட வாங்கவும் இல்ல, அவன் வித்தது வேற ஆருக்கும் தெரிஞ்சிருக்கவும் இல்ல. அவன்ர டீலிங் எல்லாம் வெளிலதான் இருந்திருக்கு. அதாலதான் முதல் கட்ட விசாரணைல அவன் எங்களிட்ட மாட்டேல்ல. அவனிட்ட இருக்கு எண்டுற விசயம் இவளுக்கு மட்டும் எப்பிடித் தெரிய வந்தது எண்டுறது, எங்களுக்கே இன்னும் தெரியேல்ல. அவள் போதையப் பழகின இடத்தில இருந்து தகவல் ஏதும் வந்திருக்கலாம்.” என்றான் அவன்.

என்னவோ மர்மக் கதையைக் கேட்பது போலவே இருந்தது சாகித்தியனுக்கு.

“ அதுவரைக்கும் கைல இருந்த காசையும், உங்கட வீட்டுக்குத் தெரியாம எடுக்கக்கூடிய நகைகளையும் எடுத்து, போதை மருந்து வாங்கினவளுக்கு ஒரு கட்டத்துக்கு மேல அது ஏலாமப் போயிருக்கு. இன்னொருத்தர இதுக்குப் பழக்கி விட்டா ஃபிரீயா கிடைக்கும் எண்டு தெரிஞ்சும் அதைச் செய்ய ஏலாம, மனச்சாட்சி உறுத்தி இருக்கு. தன்னை மாதிரி இன்னொருத்தரத் தானே கெடுத்து விட்டுடக் கூடாது எண்டுற பிடிவாதம். போதைப்பொருள்ப் பாவனை இல்லாம இருக்கவும் முடியாத அடிமையான நிலைமை. இனி என்ன செய்றது எண்டு தெரியாத பதட்டம். இதெல்லாம் தெரிய வந்தா அம்மா அப்பா என்ன நினைப்பினம் எண்டுற பயம். அவளை நம்பின உங்க மூண்டு பேருக்கும் துரோகம் செய்திட்டனே எண்டுற குற்றவுணர்ச்சி, அவளைப் பற்றின விசயம் வெளில வந்தா ஊரும் உலகமும் என்ன கதைக்கும் எண்டுற யோசனை எல்லாம் சேர்ந்து, அவளுக்கே அவளில ஒரு வெறுப்பு வந்திருக்கும் சாகித்தியன். அது ஒரு விதமான மன அழுத்தத்தைக் குடுத்திருக்கும். அதைத் தாங்கேலாம, நானெல்லாம் உயிரோட இருக்கிறதே அவமானம் எண்டு நினைச்சு…” என்றவன், சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு, “அதாலதான், தற்கொலை செய்ற நேரத்தில கூட, மாதவனைப் பற்றி அவள் சொல்லேல்ல.” என்று முடித்தான்.

அவன் சொல்ல சொல்ல சாகித்தியனுக்குள் பெரும் வலி. ஆனாலும் வந்த தீர்ப்பையும், அவன் சொல்லும் விளக்கத்தையும் அவனால் ஒப்ப முடியவில்லை.

“இப்ப என்ன சேர், என்ர தங்கச்சி செய்ததுதான் பிழை. மாதவனும் அஜயும் செய்தது எல்லாம் பெரிய விசயமே இல்லை எண்டு சொல்லுறீங்களா?” என்று கசப்புடன் கேட்டான்.

“சட்டத்தை மலையளவுக்கு நம்பினோம் சேர். தங்கச்சிதான் கிடைக்கமாட்டாள். அவள் சாவுக்குக் காரணமானவங்களுக்கு நல்ல தண்டனையாவது கிடைக்கும் எண்டு நம்பினோம் சேர். இப்ப அதுவும் இல்ல.” என்றான் விரக்தியும் வெறுப்புமாக.

அவன் மனநிலையை உணர்ந்தவனாக அவன் தோளில் அழுத்திக்கொடுத்தான் எல்லாளன்.

“நீ இப்ப உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய். தங்கச்சிய இழந்த சோகம் உன்ன இப்பிடியெல்லாம் கதைக்க வைக்குது. அமைதியா இருந்து யோசிச்சா, சட்டம் சரியான தீர்ப்பத்தான் சொல்லியிருக்கு எண்டு உனக்கே விளங்கும். மற்றது, வீட்டில இருக்கிற நாங்களும் இதையெல்லாம் கவனிக்கோணும் தம்பி. பொறுப்பா இருக்கோணும். அத நாங்க செய்யாம விட்டுட்டு, ஒட்டுமொத்தமா மற்றவையக் குறை சொல்லுறதில அர்த்தம் இல்லையே. இது ஒரு நாள் ரெண்டு நாளில வாற பழக்கம் இல்ல. இருந்தும் நீங்க ஆரும் அவளைக் கவனிக்கேல்லத்தானே? அப்ப அவளின்ர இந்தத் தற்கொலைக்கு நீங்களும் ஏதோ ஒரு வகைல காரணம் எண்டு, உங்களையும் கைது செய்றதா?” என்றதும் அதிர்ந்து அவனைப் பார்த்தான் சாகித்தியன்.

“இப்ப விளங்குதா, சட்டம் எல்லாருக்கும் பொதுவானது எண்டு? அது குற்றவாளி, பாதிக்கப்பட்டவர், தவறு செய்தவர் எண்டு எல்லாம் பிரிச்சுப் பாக்காது. எல்லாரையும் ஒரே தராசுல வச்சுத்தான் பாக்கும்.”

“அப்ப அஜய்? அவனை ஏன் சேர் விடுதலை செய்திருக்கு? என்ர தங்கச்சியைக் கெடுத்திருக்கிறான் சேர்.” என்றான் குரல் உடைய.

அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு நடந்தபடி, “தீர்ப்பை நீ ஒழுங்கா விளங்கிக்கொள்ளேல்ல போல இருக்கு. உன்ர தங்கச்சிக்குப் பதினெட்டு வயசுக்கு மேல. வன்புணர்வு நடக்கேல்ல. ரெண்டு பேர் சேந்து முறையற்ற ஒரு காரியத்தைச் செய்தா, அதுக்கு அந்த ரெண்டு பேரும்தான் பொறுப்பு. அதுல ஒருத்தரை மட்டும் குற்றவாளியாச் சொல்லேலாது. ஆனா ஒண்டு, அவன் சட்டத்திட்ட இருந்துதான் வெளில வந்திருக்கிறான். அவன்ர மனச்சாட்சிட்ட இருந்து இல்ல. விளங்குதா?” என்றான்.

பதில் ஒன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் சாகித்தியன். இருவர் சேர்ந்து செய்த தவறு என்று சொல்லி, அவன் தங்கையையும் எல்லாளன் தவறிழைத்தவளாகக் காட்டுவதகாவே அவனுக்குப் பட்டது.

“நீ நினைக்கிறியா அவனைப் பிடிச்சுச் சிறைக்குள்ள போட்டு, கம்பி எண்ண வைக்கிறது மட்டும்தான் தண்டனை எண்டு? இல்ல! இப்ப அவனைப் பற்றி இந்த ஊருக்கே தெரியும். இந்தச் சமூகமே அவனைக் கேவலமாப் பாக்கும். ஒரு காமுகனா நினைச்சு ஒதுக்கி வைக்கும். உன்னை மாதிரி அறிஞ்ச மனுசர், தெரிஞ்ச மனுசர், நண்பர்கள் எண்டு ஆரின்ர முகத்திலயும் அவனால முழிக்கேலாது. இது எல்லாத்தையும் விட, நொடி நேரம் விடாம அவன்ர மனச்சாட்சியே அவனைக் குத்தும், வதைக்கும். அதுதான் பெரிய தண்டனை. சிறைக்குப் போயிட்டு வந்தாக் கூட, செய்த பிழைக்குத் தண்டனை அனுபவிச்சிட்டன் எண்டு நிம்மதியா இருந்திருப்பான். இப்ப அவனுக்கு அதுக்குக் கூட வழி இல்ல. வாழுற நாள் முழுக்க அவனுக்குச் சிறைதான். தண்டனைதான். அமைதியா இருந்து யோசிச்சா உனக்கே இதெல்லாம் விளங்கும்.”என்றவன் சாகித்தியனைத் தன் முன்னே நிறுத்தி,

“உன்ர மனநிலை எனக்கு விளங்குது. ஆனா, இனி எல்லாம் முடிஞ்சுது. இதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வா. அம்மா அப்பாவைப் பாத்துக்கொள்ளு. அவேக்கு இப்ப இருக்கிறது நீ ஒருத்தன்தான். நல்லாப் படி. நல்ல இடத்துக்கு வா. ஓகே!” என்று, தன்னால் முடிந்தவரையில் அவனைத் தேற்றி அனுப்பிவைத்தான்.

*****

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock