அதற்கான ஆவன செய்வதாகாச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் அறைக்குள் வந்தான். கண்களில் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவனை நோக்கினான் அருள்.
“இதெல்லாம் உங்களுக்கு எங்க இருந்து கிடைக்கிறது?” என்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் மிகுந்த பதட்டத்துடன் பார்த்துக்கொண்டனர். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தாலும் அவர்கள் மீதே பார்வையைப் பதித்துப் பதிலுக்காகக் காத்திருந்தான் எல்லாளன்.
“அது.. அது தெரியாது சேர்.”
“ஓ..! தெரியாது. ஓகே! போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டுபோய் விசாரிச்சாத் தெரியவரும் தானே.” என்றதும் அவர்கள் இருவருக்கும் வெளிப்படையாகவே நடுங்கியது. “சத்தியமா சேர், ஆர் என்ன எண்டு தெரியாது. எங்கட ஊர் சந்தில வச்சுத்தான் ஆர் எண்டு தெரியாத ஒரு ஆள் முதல் முதல் தந்தவர். இப்ப எல்லாம் ஒரு கருப்பு மோட்டர்பைக்ல கருப்பு ஹெல்மெட்டால முகம் மறைச்சு, ஒரு ஆள் வரும். அவர் சொல்லுற காச குடுத்தா லொலி, டேப்லெட்ஸ், ஊசி எது எண்டாலும் தருவார். பெரும்பாலும் நைட்லதான் சேர் வருவார். அதுவும், எப்ப எப்பிடி எண்டெல்லாம் தெரியாது. அந்தச் சந்தில நிப்பம். வந்தா வாங்குவம். இல்லாட்டி இல்ல. குரலை வச்சுத்தான் ஆம்பிளை எண்டே தெரியும் சேர்.”
இப்படி ஏதாவதுதான் இருக்கும் என்று அவனும் ஊகித்தான் தான். இது மிகப்பெரிய சங்கிலி. அதன் முனையைக் கண்டு பிடிப்பது என்பது இலகுவே அல்ல. அவனும் கடந்த இரண்டு வருடங்களாகத் தீவிரமாகத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான். இவர்களைப் போன்ற பலிகடாக்களும், மிஞ்சி மிஞ்சிப் போனால் இவர்களுக்கு விற்பனை செய்யும் டீலர்களும் மாட்டுவார்கள். தலை தப்பிக்கொண்டே இருக்கும்.
“நீ நிதானமா இருக்கிறாய், எப்பிடி?” மற்றவனை நோக்கி வினவினான் எல்லாளன்.
“அது.. அது எனக்குப் பெருசாப் பிடிக்காது சேர். இவன்தான் லொலி தந்து பழக்கினவன். இதெல்லாம் வேண்டாம், எங்கட வாழ்க்கையே போயிடும், விடடா எண்டு சொல்ல சொல்லக் கேக்கேல்ல சேர். அதுதான்..” என்றான் அவன்.
யார் அந்தக் கறுப்பாடு? கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்று மனதில் எண்ணியபடி, அருளைப் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அந்த வைத்தியசாலையை விட்டு வெளியே வந்தவனுக்கு அழைத்தான், கதிரவன்.
“சொல்லு!”
“அந்த டியூஷன் வாத்தியத் தூக்கிட்டன், சேர்.”
“அவன்தானா? வடிவாத் தெரியுமா?”
“ஓம் சேர். பைக் சீட்டுக்குள்ள லொலி, ஊசி, டேப்லட்ஸ் எண்டு எல்லாமே இருந்தது. கையும் களவுமாப் பிடிபட்டதில அவனே ஒத்துக் கொண்டுட்டான்.”
“ஓ…! அவன் என்ன அவ்வளவு நல்லவனா? வை, வாறன்.” என்றுவிட்டு ஸ்டேஷனுக்கு விரைந்தான்.
வெள்ளை நிற ஷேர்ட்டும் கருப்பு ஜீன்சும் அணிந்து, மெல்லிய உயர்ந்த தேகத்தோடு, ஒரு ஆசிரியனுக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் இருந்தான், அவன். இந்த வெளித்தோற்றத்தில் தான் பிள்ளைகள் ஏமாந்துவிடுகிறார்களோ? ஏற்கனவே பயத்தில் வெளிறியிருந்த அவன் முகம், எல்லாளனைக் கண்டதும் இன்னுமே இரத்தப்பசையை இழந்தது. தானாகவே எழுந்து நின்றான்.
“சாமந்தியத் தெரியுமா?” அவன் முன்னே வந்து நின்று வினவினான் எல்லாளன். இரும்புச் சட்டங்கள் இரண்டு உரசுவது போன்ற அந்தக் குரலில் இவனுக்கு தேகமெல்லாம் ஆடியது.
“தெ..தெரியும்.”
“எப்பிடி?”
“க..ணக்குப் படம் என்னட்டத்தான் படிச்சவா..”
“படிக்க வந்த பிள்ளைக்குத்தான் இதெல்லாம் பழக்கினியா நீ?” அவனின் உறுமலில் சகலமும் அடங்கியது அவனுக்கு.
“சொல்லடா! இது மட்டும் தானா? இல்ல, வேற சேட்டையும் விட்டியா?”
“சேர்..” புரிந்தும் புரியாமலும் நடுங்கினான் அவன்.
“சொல்லு!” பல்லைக் கடித்தபடி வார்த்தையைக் கடித்துத் துப்பிய வேகத்தில், “இல்ல சேர். வேற எதுவும் இல்ல.” என்று பதறினான் அவன்.
“அப்பிடி எதுவும் இல்லாமத்தான் அந்தப் பிள்ளை தூக்குல தொங்கினவளா?” என்று கேட்டு அவன் கவனித்த கவனிப்பில், நார் நாராகிப்போயிருந்தான் அந்த ஆசிரியன்.
“என்னடா பெயர் உனக்கு?”
“மாதவன்.”
“மாதவன்! ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு, அதுவும் நல்லாப் படிக்கிற பிள்ளைக்குப் பிழையான பாதையைக் காட்டிக் கெடுத்துக் கடைசில உயிரையே விட வச்சிட்டியேடா!”
“இல்ல சேர். நானாக் குடுக்கேல்ல சேர். என்ர மேசைல இருந்த லொலியை எடுத்துச் சாமந்திதான் தெரியாமச் சாப்பிட்டவள். பிறகு பிறகு அவளே கேட்டு வாங்கினவள் சேர்.”
“அவள் கேட்டா நீ குடுப்பியா? உன்ர வீட்டில இதேமாதிரி ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்து, அவள் கேட்டாலும் இப்பிடித்தான் குடுப்பியா?” என்றதும் குலுங்கி அழுதான் அவன். “தெரியாமச் செய்திட்டன் சேர். பிளீஸ் சேர். சொறி சேர்!” அவனின் எந்தக் கதறலையும் காதில் வாங்கவே இல்லை எல்லாளன். அத்தனையும் ஊமை அடிகள். சாமந்தியை இவன் உடலளவிலும் துன்புறுத்தினானா, இல்லை, போதை மட்டும் தானா என்று அவனுக்கு உறுதியாக அறியவேண்டி இருந்தது. அதில், ஈவு இரக்கமே காட்டவில்லை.
“ஐயோ சேர்! அந்தப் பிள்ளையின்ர நிகத்தைக் கூட நான் தொட்டது இல்ல சேர்!” என்று கதறிய பிறகுதான் விட்டான்.
“இந்தப் போதைப்பொருள் எல்லாம் உனக்கு எப்பிடிக் கிடைக்குது? இத முதல் சும்மா குடுத்தியா நீ? அதுக்குப் பதிலா அவளிட்ட என்னடா வாங்கினாய்?”
“ஆர் எண்டு எனக்குத் தெரியாது. ஆனா, கருப்பு பைக், கருப்பு உடுப்பு, கருப்பு ஹெல்மெட் போட்ட ஒருத்தன் கொண்டு வருவான். அவனிட்டத்தான் வாங்கிறனான்.” என்றவனின் பேச்சைக் கேட்டதும் எல்லாளனின் புருவங்கள் சுருங்கிற்று.
இங்கேயும் ஒரு கறுப்பாடு. விழிகள் இடுங்க அவனை நோக்கினான்.
தான் பொய் சொல்லுவதாக நினைத்துவிட்டானோ என்று பயந்து, “உண்மையா சேர். ஆள் அடையாளம் தெரியாது. அவன் முகம் காட்டுறதும் இல்ல. பைக் நம்பர் கூடத் தெரியாது. ஒரு இடம் இருக்கு. அங்க, காசோ நகையோ வச்சா எப்பிடிப் பாக்கிறான் எண்டு தெரியாது. ஆனா அரை மணித்தியாலத்தில பொருள் வந்திடும். சாமந்தி முதல் காசு தந்தவள். பிறகு பிறகு நகை தந்தவள். கடைசில காசு, நகை ஒண்டும் இல்லை எண்டு கெஞ்சினவள். நான் குடுக்கேல்ல.” என்று இனியும் அடிவாங்கத் தெம்பில்லாமல், அவசரம் அவசரமாக அனைத்தையும் ஒப்பித்தான்.
“எங்க அந்தக் காசு, நகை எல்லாம்?”
“அ..அதையெல்லாம் அந்த அவனே கொண்டு போயிடுவான்..” என்றதும் பளார் என்று விழுந்தது ஒரு அறை.
“திரும்பவும் பொய்யாடா?”
“ஐயோ சேர். உண்மையா எல்லாம் அவனிட்டக் குடுத்திட்டன். கடைசியாத் தந்தது ஒரு தோடு மட்டும் வீட்டை இருக்கு.” என்றதும், எங்கே வைத்திருக்கிறான் என்று கேட்டு, உடனேயே ஆளை அனுப்பி அதை எடுப்பித்தான்.
அதை போட்டோ எடுத்து சாகித்தியனுக்கு அனுப்பிவைத்தான். அடுத்த நிமிடமே சாகித்தியன் இவனுக்கு அழைத்தான். “சேர், சாமந்தின்ர அக்கவுண்ட்ல இருந்த காசு எல்லாம் எடுத்திருக்கிறாள். தப்பித்தவறி தனக்கு ஒண்டு நடந்திட்டா எண்டு பயந்து, நகைகளை அவளுக்குக் காட்டித்தான் அம்மா வீட்டுக்கு பின்னால ஒளிச்சு வச்சிருக்கிறா. அதுல இருந்தும் நிறையச் சின்ன சின்ன நகைகளைக் காணேல்லையாம் எண்டு சொல்லுறா. இந்தத் தோடு அவளின்ர தான்.” அவன் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டவன் மீண்டும் மாதவனிடம் வந்தான்.
அந்த விசாரணை அறையின் ஒரு மூலையாக ஒண்டிக்கொண்டு கிடந்தவனுக்கு, இனியும் இந்த எமனிடம் அடி வாங்கும் தெம்பு கொஞ்சமும் இல்லை. உயிர்ப்பயத்தைக் கண்களில் தேக்கி இவனைப் பார்த்தான்.
“உண்மையச் சொன்னா இனியாவது உடம்பு தப்பும். இல்ல..” என்றவன் பார்த்த பார்வையில் அவனுக்கு நெஞ்சுக்கூடு நடுங்கிற்று.
“உண்மையா நான் பொய் சொல்லேல்ல சேர்.”
“நீ வித்த. அவள் வாங்கினாள். ஆனா, என்னத்துக்கு திடீரெண்டு தூக்குல தொங்கினவள். அந்தளவுக்கு அவளை என்னடா செய்தாய்? தவறா வீடியோ ஏதும் எடுத்தியா? இல்ல, அவளிட்ட சேட்டை ஏதும் விட்டியா?”
“இல்ல சேர். அப்பிடி ஒண்டும் நடக்கேல்ல சேர். ஏன் செத்தவள் எண்டு உண்மையா எனக்குத் தெரியாது. ஆனா, கடைசி நேரம் அவளிட்டக் காசு இருக்கேல்ல எண்டு நினைக்கிறன். சரியான டிப்ரெஷன்ல இருந்தவள். பிறகு காசு தாறன், ஒரு லொலியாவது தாங்க எண்டு எவ்வளவோ கெஞ்சினவள். நான் குடுக்கேல்ல. வேணுமெண்டா இன்னொரு ஆளச் சேத்துவிடச் சொன்னனான்.” என்றதும் புருவத்தைச் சுருக்கினான் எல்லாளன்.
“இன்னொரு ஆளச் சேர்க்கிறதா? என்ன கதை இது?”
“அது… அது இன்னொரு ஆளுக்கு இதப் பழக்கிவிட்டா இவளுக்கு ஃபிரீயா கிடைக்கும்..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே சுர் என்று சினம் உச்சிக்கு ஏற, எட்டி அவனை உதைத்தான். “ஏன்டா தறுதலையே! ஒருத்தின்ர வாழ்க்கையை நாசமாக்கினது காணாது எண்டு இன்னொரு பிள்ளையையும் கெடுக்கப் பாத்தியா?” என்றவன் மீண்டும் நெருங்கவும் அவன் துடித்துப்போனான்.
“ஐயோ அடிக்காதீங்க சேர்.” இன்னுமொரு முறை அவனின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் கதறினான். “அது அவன்தான் சொல்லுவான். ஒரு ஆளிட்ட எப்பவும் காசு இருக்காது. போதை பழகின பிறகு அது இல்லாமையும் இருக்கேலாது. அப்ப இப்பிடிச் சொன்னாத்தான் இன்னொரு ஆளச் சேர்த்து விடுவினம். அப்பதான் கஸ்ட்மர் கூடும் எண்டு. ஆனா, சாமந்தி ஆரையும் என்னட்டக் கொண்டு வரேல்ல. போதை இல்லாம இருக்கேலாமத் தான் பிழையான முடிவு எடுத்திருக்க வேணும் சேர். மற்றும்படி நான் ஒண்டும் செய்யேல்ல.” என்றவனைக் கவனித்துக்கொள்ளும்படி கதிரவனிடம் கண்ணைக் காட்டிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான் எல்லாளன்.
அவனுடைய அறையின் இருக்கையில் விழுந்தவனுக்கு அவள் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணத்தை, ஊகிக்க முடிந்தது. கூடவே, சாமந்தியின் வழக்கு ஒரு முடிவுக்கு வந்ததில் ஒரு நிம்மதி. இனி, மாதவனையும் அஜய்யையும் நீதிமன்றின் முன்னே நிறுத்தும் வேலைகள் இருந்தது. ஒரு தேநீரைப் பருகிவிட்டு அந்த வேலையை ஆரம்பித்தான்.