நீ தந்த கனவு 2 – 1

இன்றைய பிரதான செய்திகள்!

பூநகரி – நாச்சிக்குடா பிரதேசத்தில் நடந்த இரட்டைக்கொலைக் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் அதிரடித் தீர்ப்பு!

2014ம் ஆண்டு 6ம் மாதம் 21ம் திகதி அன்று, பூநகரி – நாச்சிக்குடாப் பகுதியில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த, கந்தவனம் இராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி இராமச்சந்திரன் ஆகிய இருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இத்தம்பதி கொலை தொடர்பில், கிளிநொச்சியைச் சேர்ந்த சத்தியசீலன் மற்றும் அவனது சகோதரன் சதீஸ்வரன் ஆகிய இருவருக்கும் எதிராகக் கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இருந்தும், சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பியோடிய காரணத்தினால், இவ்வழக்கு நிலுவையிலேயே இருந்து வந்தது. ஆறு வருடங்களுக்குப் பிறகு, 2022ம் ஆண்டு மூன்றாம் மாதம் 17ம் திகதி அன்று, அவர்களது மூத்த சகோதரன் திருமணத்தின்போது, கிளிநொச்சித் திருமண மண்டபத்தில் வைத்து, யாழ். மாவட்ட உதவிக் காவல் ஆணையர் எல்லாளன் இராமச்சந்திரன் தலைமையில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொல்லப்பட்டவர்களின் மகள், பொலிஸார், நிபுணத்துவச் சாட்சிகள் மற்றும் எதிரிகள் தரப்புச் சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, முதலாவது எதிரியான சத்தியசீலன், பரமேஸ்வரி என்பரை உயிர் போகும் படி கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரது நகைகளைக் கொள்ளையிட்டமை, இராமச்சந்திரனை உயிர் போகும் வரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியமை அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதனால், அவரைக் குற்றவாளியாக உறுதி செய்து, பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரட்டைத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்படுவதாக, நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் உத்தரவிட்டார்.

அத்துடன் தூக்குத் தண்டனைக் குற்றவாளியை இலங்கை ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

அதேவேளை, இரண்டாவது எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள், நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்தார்.

அத்துடன் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு, முறையான சாட்சியங்களோடு குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்திய யாழ். காவல்துறைக்கும் தனது பாராட்டினைத் தெரிவித்தார்.

வவுனியா பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு…

அந்தப் பிரதான செய்திகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. அதைச் செவிமடுக்காது, இலக்கற்று வெறித்தபடி யாழ். நீதிமன்ற வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தன் ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்தான் எல்லாளன்.

காலையிலேயே வழக்கு முடிவடைந்திருந்தது. நடந்தது, தமிழர் பிரதேசத்தையே உலுக்கிய கொடூரக் கொலைகள் என்பதாலும், எட்டு வருடங்களாகத் தீர்ப்பளிக்கப்படாமல், சந்தேக நபர்களைப் பிடிக்க முடியாமல், பிடித்த பிறகும் பணமும் அரசியல் செல்வாக்கும் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததாலும், அது எல்லோர் கவனத்தையும் பெற்றிருந்தது.

இத்தனை குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் காவல்துறை சிறப்பாகச் செயற்பட்டது என்றால், எதற்கும் அஞ்சாமல் தீர்ப்பை வழங்கியிருந்தார் இளந்திரையன். அதனாலேயே தொலைக்காட்சிகள் இந்தச் செய்தியினை மீள் ஒளிபரப்புச் செய்துகொண்டே இருந்தன.

பொது மக்களாகக் கேட்கிறவர்கள் இதைக் குறித்து மெய் சிலிர்க்கலாம்; தங்களின் நீதித்துறையும் காவல்துறையும் சிறப்பாகச் செயற்பட்டதாகப் பெருமை கொள்ளலாம். ஆனால், பணம் ஒரு பக்கம், பதவி ஒரு பக்கம், செல்வாக்கு இன்னொரு பக்கம், அரசியல்வாதிகளின் அதிகாரவர்க்கத்தின் குறுக்கீடு மற்றொரு பக்கம் என்று, அவன் சந்தித்தவைகள் ஒன்றா இரண்டா?

அத்தனையையும் தாண்டி, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றித் தண்டனையும் வாங்கிக்கொடுத்துவிட்டான். அவனுடைய எட்டு வருடப் போராட்டம் இன்றைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், வந்து என்ன பயன்? போனவர்கள் திரும்பியா வரப் போகிறார்கள்?

அப்போது, பின்னிருந்து அவன் தோளைத் தட்டியது ஒரு கரம். திரும்பிப் பார்க்க அகரன் நின்றிருந்தான்.

“டேய்! நீ எங்கயடா இஞ்ச?” மெல்லிய ஆச்சரியம் குரலில் ஓங்கி நிற்கக் கேட்டான் எல்லாளன்.

“சும்மாதான், வா! உன்னப் பாத்துக்கொண்டு போவம் எண்டு வந்தனான்.” அவனை கண்டீனுக்கு இழுத்துக்கொண்டு நடந்தபடி சொன்னான் அவன்.

“ஆரு நீ! என்னப் பாக்க வவுனியாவில இருந்து யூனிபோர்மை கூட மாத்தாம வந்திருக்கிறாய்?” என்றவனின் கேள்வியில் கண்ணடித்துவிட்டுச் சிரித்தான் அகரன்.

“சத்தியமா ரெண்டு நாள் லீவுல உன்னையும் பாக்கத்தான் வந்தனான்.”

இரண்டு காக்கிகளும் ஆளுக்கொரு கோப்பிக் கோப்பைகளுடன் அந்தக் கண்டீனின் ஒரு பக்கமாகக் கரை ஒதுங்கின. சில நொடிகள் இருவரும் கோப்பியை மாத்திரமே பருகினர். எல்லாளனின் பார்வை எங்கு என்றில்லாமல் இருக்க, அகரன் அவனை ஆராய்ந்தான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock