இன்றைய பிரதான செய்திகள்
பூநகரி – நாச்சிகுடா பிரதேசத்தில் நடந்த இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் அதிரடி தீர்ப்பு!
2014ம் ஆண்டு 6ம் மாதம் 21ம் திகதி அன்று, பூநகரி – நாச்சிகுடா பகுதியில் இருந்த வீடொன்றில் வசித்த, கந்தவனம் இராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி இராமச்சந்திரன் இருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தம்பதிகள் கொலை தொடர்பில், கிளிநொச்சியைச் சேர்ந்த சத்தியசீலன் மற்றும் அவனது சகோதரன் சதீஸ்வரன் ஆகிய இருவருக்கும் எதிராக, கொலை, கொள்ளை குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இருந்தும், சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பியோடிய காரணத்தினால், இவ்வழக்கு நிலுவையிலேயே இருந்துவந்த நிலையில், ஆறு வருடங்களுக்குப் பிறகு, 2020ம் ஆண்டு மூன்றாம் மாதம் 17ம் திகதி அன்று, அவர்களது மூத்த சகோதரனின் திருமணத்தின் போது, கிளிநொச்சி திருமண மண்டபத்தில் வைத்து, யாழ். காவல் உதவி ஆணையர் எல்லாளன் இராமச்சந்திரன் தலைமையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் மகள், பொலிஸார், நிபுணத்துவச் சாட்சிகள் மற்றும் எதிரிகள் தரப்புச் சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு நியமிக்கப்பட்டது.
அதன்படி, முதலாவது எதிரியான சத்தியசீலன், பரமேஸ்வரி என்பரை உயிர் போகும் படி கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரது நகைகளைக் கொள்ளையிட்டமை, மற்றும் இராமச்சந்திரனை உயிர் போகும் வரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியமை அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால், அவரைக் குற்றவாளியாக உறுதி செய்து, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரட்டை தூக்குத் தண்டனையும் விதிக்கப்படுகிறதாக நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் உத்தரவிட்டார்.
அத்துடன், தூக்குத் தண்டனை குற்றவாளியை இலங்கை ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு, தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
அதேவேளை, இரண்டாவது எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள், நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்தார்.
அத்துடன், மிகச்சிறப்பாகச் செயற்பட்டு, குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன், முறையான சாட்சியங்களோடு நிறுத்திய யாழ். காவல்துறைக்கும் தனது பாராட்டினைத் தெரிவித்தார்.
வவுனியா பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு…
அந்தப் பிரதான செய்திகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. அதைச் செவிமடுக்காது, இலக்கற்று வெறித்தபடி, யாழ். நீதிமன்ற வளாகத்தின், வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த தன் ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்தான், எல்லாளன்.
வழக்கு காலையிலேயே முடிவடைந்திருந்தது. ஆனாலும், நடந்தது தமிழர் பிரதேசத்தையே உலுக்கிய கொடூரக் கொலைகள் என்பதாலும், எட்டு வருடங்களாகத் தீர்ப்பளிக்கப்படாமல், சந்தேக நபர்களைப் பிடிக்க முடியாமல், பிடித்த பிறகும் பணமும் அரசியல் செல்வாக்கும் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததாலும், அது எல்லோரின் கவனத்தையும் பெற்றிருந்தது.
இத்தனை குறுக்கீடுகள் இருந்த போதிலும், அதையெல்லாம் தாண்டி, காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டது என்றால், எதற்கும் அஞ்சாமல் தீர்ப்பை வழங்கியிருந்தார் இளந்திரையன். அதனாலேயே தொலைக்காட்சிகள் இந்தச் செய்தியினை மீள் ஒளிபரப்புச் செய்துகொண்டே இருந்தன.
பொது மக்களாகக் கேட்கிறவர்கள் இதைக்குறித்து மெய் சிலிர்க்கலாம். தம்முடைய நீதித்துறையும் காவல் துறையும் சிறப்பாகச் செயல் பட்டதாகப் பெருமை கொள்ளலாம். ஆனால், பணம் ஒரு பக்கம், பதவி ஒரு பக்கம், செல்வாக்கு இன்னொரு பக்கம், அரசியல்வாதியின் அதிகாரவர்க்கத்தின் குறுக்கீடு மற்றொரு பக்கம் என்று, அவன் சந்தித்தவைகள் ஒன்றா இரண்டா?
அத்தனையையும் தாண்டி குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றித் தண்டனையும் வாங்கிக் கொடுத்துவிட்டான். அவனுடைய எட்டு வருடப் போராட்டம் இன்றைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், வந்து என்ன பயன்? போனவர்கள் திரும்பியா வரப்போகிறார்கள்?
அப்போது, பின்னிருந்து அவன் தோளைத் தட்டியது ஒரு கரம். திரும்பிப் பார்த்தான். அகரன் நின்றிருந்தான்.
“டேய்! நீ எங்கயடா இங்க?” மெல்லிய ஆச்சரியம் குரலில் ஓங்கி நிற்கக் கேட்டான் எல்லாளன்.
“சும்மாதான் வா! உன்னைப் பாத்துக்கொண்டு போவம் எண்டு வந்தனான்.” அவனை கண்டீனுக்கு இழுத்துக்கொண்டு நடந்தபடி சொன்னான் அவன்.
“ஆரு? நீ! என்னைப் பாக்க வவுனியாவில இருந்து யூனிபோர்மை கூட மாத்தாம வந்திருக்கிறாய்?” என்றவனின் கேள்வியில் கண்ணடித்துவிட்டுச் சிரித்தான் அகரன்.
“சத்தியமா, ரெண்டு நாள் லீவுல உன்னையும் பாக்கத்தான் வந்தனான்.” அவன் சொல்வதில் இருக்கும் உண்மையை அறிந்திருந்த படியால் அதற்குமேல் அதைப்பற்றி வாதிடப் போகவில்லை எல்லாளன். உயிர் நட்பாயிற்றே.
இரண்டு காக்கிகளும் ஆளுக்கொரு கோப்பிக் கோப்பைகளுடன் அந்தக் கண்டீனின் ஒரு பக்கமாகக் கரை ஒதுங்கின. சில நொடிகள் இருவரும் கோப்பியை மாத்திரமே பருகினர். எல்லாளனின் பார்வை எங்கு என்றில்லாமல் இருக்க, அகரன் அவனை ஆராய்ந்தான்.
அமைதியாக இருக்கும் அவன் தனக்குள் எந்தளவுக்குக் கொந்தளித்துக்கொண்டு இருப்பான் என்று தெரியும். அதனால் தானே வந்தான். அதில், “அதுதான் எல்லாம் முடிஞ்சுதே மச்சான், விடு!” என்றான் ஆறுதலாக.
“என்னடா முடிஞ்சது? ஒருத்தன் தப்பிட்டானேடா. அவன் சந்தோசமா வெளில இருக்கப் போறான்! டாமிட்! எட்டு வருசமா நாயா அலஞ்சும் அவனை விட்டுட்டனே!” பொறுக்க முடியாமல் தன் தொடையிலேயே ஓங்கிக் குத்தினான் எல்லாளன். “இனி வெளில இருந்து இன்னும் எத்தின பேரின்ர குடிய கெடுக்கப்போறானோ தெரியாது!” பல்லைக் கடித்தவனுக்கு அவனைச் சில்லுச் சில்லாக நொறுக்கிப்போடும் ஆத்திரம்.
“விடுடா! இந்தக் கேஸ்ல இருந்துதானே தப்பியிருக்கிறான். இனியாவது நல்லவனாவா இருக்கப் போறானா? இல்ல, வேற எதுலயும் மாட்டாம போகப்போறானா? அப்ப பாப்பம், நீ பொறுமையா இரு!”
“இன்னுமா?” என்றான் விரக்தியோடு. “ஒண்டுக்கு ரெண்டு உயிரடா. சும்மா போகேல்ல. துடிக்கத் துடிக்கப் போயிருக்கு. அம்மா பாவமடா. வெங்காயம் வெட்டேக்க சும்மா கத்தி கீறினாலே அழுவா. அவாவைப்போய்..” என்றவன் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். ஆத்திரம், வெறி, ஆக்ரோசம் அத்தனையும் ஒன்றாகச் சேர்ந்து அவனுக்குள் எரிமலையாகக் கொதித்தன. வீடு புகுந்து அவர்களை வெட்டிப்போடும் ஆத்திரம் எழுந்தது. அவனுடைய உத்தியோகம் அதிகாரத்தை மாத்திரம் தருவதில்லையே. சில நேரங்களில் கைகளைக் கட்டியும் போட்டுவிடுகிறதே. அந்த நிலையில் இருந்தான் அவன். இன்னும் பொறு என்றால் எத்தனை வருடங்களுக்கு?
வார்த்தைகளை நம்பாமல் எழுந்து வந்து நண்பனை ஆரத்தழுவி விடுவித்தான் அகரன். அந்த அணைப்பு அவன் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டது போலும். “இண்டைக்கு இருக்கிற இந்த நான் நான் இல்லடா. என்ர ஆசை, கனவெல்லாம் வேற மச்சி. சின்னதா ஒரு வீடு. டீச்சிங் வேல. மனசுக்குப் பிடிச்சவளோட ஒரு எளிமையான வாழ்க்கை. எங்களோடயே அம்மா அப்பாவ வச்சுப் பாக்கோணும். அதே ஊர்லயே தங்கச்சியையும் கட்டிக் குடுத்திட்டு, நினைக்கிற நேரமெல்லாம் அவளைப் போய்ப் பாத்துக்கொண்டு, ஆணும் பெண்ணுமா ரெண்டு பிள்ளைகள் எண்டு இவ்வளவு தான்டா ஆசைப்பட்டனான். எல்லாமே போச்சு.. எல்ல்லாமே போச்சு!”