இன்றைய பிரதான செய்திகள்!
போதைப்பாவனைக்கு அடிமையான மாணவியின் தற்கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்!
உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் கற்றுவந்த தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிவந்த சந்தேக நபர் கதிர்வேலு மாதவன் என்பவர், ‘ஐஸ்’ என்கிற போதைப் பொருளினை தன் உடைமையில் வைத்திருந்தபோது, காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருளினை தன் உடைமையில் வைத்திருந்தது, அதனை விற்பனை செய்தது, மாணவி ஒருவரைத் தற்கொலை செய்யும் அளவுக்குத் தூண்டியது எனும் குற்றங்களின் அடிப்படையில், சந்தேக நபரின் மீது, காவல் உதவி ஆணையர் திரு எல்லாளனினால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
போதைப்பொருளினை வைத்திருந்து, மாணவிக்கு விற்பனை செய்தார் எனும் குற்றங்களை சந்தேக நபர் ஒப்புக்கொண்ட காரணத்தினாலும், சந்தேகத்துக்கு இடமின்றி அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாலும் நீதிமன்றம் அவரைக் குற்றவாளியாக உறுதிசெய்தது.
அதேவேளை, குற்றம் சுமத்தப்பட்டவரினால் தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பதனை சந்தேகத்துக்கு இடமின்றிக் காவல்துறை நிரூபிக்கத் தவறியதாலும், இதுவரையில் அவர் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான கைரேகைப் பதிவுகள் எதுவும் இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டு, மாணவியின் தற்கொலைக்கு அவர் காரணமென்று கருதமுடியாது என்றும், நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்தார்.
கடைசியாக, குற்றவாளி தன் உடைமையில் வைத்திருந்த போதைப் பொருட்களின் அளவு, சட்டத்துக்கு உட்பட்ட சிறிய அளவாக இருந்த காரணத்தினால், போதைப்பொருளை தன் உடைமையில் வைத்திருந்து, மாணவிக்கு விற்பனை செய்த குற்றங்களின் அடிப்படையில், அவருக்கு இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனையும் ஐம்பதினாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஒருவருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அந்த மாணவியின் மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட, மற்றுமோர் சந்தேகநபரான அஜய் அரியரட்ணம் என்பவர் மீது சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில், அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மாணவியின் பிரேத பரிசோதனையில் வன்புணர்வு நடந்ததற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கப்பெறாத காரணத்தினாலும், அஜய் அரியரட்ணம் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்தார்.
குறித்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்:
தனியார் கல்வி நிறுவனங்கள் மிகவும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என்றும், பாலியல்வதை, போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாத வகையில், ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, பாலியல்வதை மற்றும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் எவரேனும் தனியார் கல்வி நிலைய வளாகத்தினுள் கைது செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு, அதன் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களில், இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில், சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
———————————
சாகித்தியனின் வீட்டினருக்கு பெற்ற பிள்ளையை இழந்த சோகம் என்றுமே தீரப்போவதில்லை. அதற்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைத்து, அதன்மூலம், தமக்குச் சின்ன ஆறுதலாவது கிடைத்துவிடாதா என்றுதான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தார்கள். வந்த தீர்ப்போ பெரும் ஏமாற்றத்தைத் தந்து மீண்டும் மரண வலியைக் கொடுத்திருந்தது.
அதுவும், அஜய் விடுதலையானதைச் சாகித்தியனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பொறுக்க முடியாமல் காவல் நிலையத்துக்குச் சென்றான். கையில் கோப்புடன் எதிர்ப்பட்ட கதிரவனிடம், “இதுதானா சேர் தீர்ப்பு? இதுதானா உங்கட சட்டம்? ஒரு உயிரை இழந்திருக்கிறம் சேர். சும்மா இல்ல. படிப்பிக்கிற ஒரு மாஸ்டர் மாணவிக்குப் போதைப்பொருளை பழக்கினத்துக்கு ரெண்டு வருசம் தான் தண்டனையா? நண்பன் எண்டு சொல்லி நம்பிக்கை துரோகம் செய்த துரோகி குற்றவாளி இல்லையா? எளிய மனுசர் எண்டு உங்கட சட்டமும் எங்களை மிதிக்குதா?” மனம் வெதும்பிப்போய் கோபத்தோடு குமுறினான்.
“கொஞ்சம் அமைதியா கதை சா..” எனும்போதே கதிரவனின் பார்வை சாகித்தியனின் பின்னால் நகர, ஒரு சல்யூட்டையும் எல்லாளனுக்குப் பரிசளித்தான்.
ஒரு தலையசைப்பால் அதை ஏற்றுவிட்டு, “நீ போ. நான் கதைக்கிறன்.” என்று கதிரவனை அனுப்பி வைத்துவிட்டு, சாகித்தியனை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு நடந்தான்.
அவனின் மேசைக்கு முன்னே இருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் அவனை இருத்திவிட்டு மற்றையதில் தானும் அமர்ந்து, “சாமந்தி என்ன செய்திருக்கிறாள் எண்டு உனக்கே விளங்க இல்லையா சாகித்தியன்? தன்னட்ட இருக்கிற ஃபோனையோ லாப்டாப்பையோ வித்துப் போதைமருந்து வாங்கினா பிடிபட்டுடும் எண்டு வங்கில இருந்த காசை எடுத்து வாங்கியிருக்கிறாள். பிறகு சின்ன சின்ன நகைகளை எடுத்துக் குடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில அவளிட்டக் கைல காசு இல்ல. காசுக்குப் பதிலா இன்னொரு ஆளக் கொண்டுவந்து சேர்த்துவிடு எண்டு சொல்லியிருக்கிறாங்கள். அப்பிடி, ஒவ்வொருத்தரா இவள் சேத்து விட்டிருந்தா ஃபிரீயாவோ இல்ல குறைஞ்ச காசுக்கோ போதைமருந்து கிடைச்சிருக்கும்.” என்றதும் அதிர்வோடு எல்லாளனைப் பார்த்தான் சாகித்தியன்.
இது என்ன விதமான வலைவிரிப்பு? இப்படித்தானா மக்களிடையே இந்தப் போதை மருந்து ஊடுருவுகிறது?