“அவளுக்கு அதைச் செய்ய ஏலாம மனச்சாட்சி உறுத்தி இருக்கு. தன்னை மாதிரி இன்னொருத்தர தானே கெடுத்து விட்டுடக் கூடாது எண்டுற பிடிவாதம். போதைப்பாவனை இல்லாம இருக்கவும் முடியாத அடிமையான நிலைமை. இனி என்ன செய்றது எண்டு தெரியாத பதட்டம். இதெல்லாம் தெரியவந்தா அம்மா அப்பா என்ன நினைப்பினம் எண்டுற பயம். அவளை நம்பின உங்க மூண்டுபேருக்கும் துரோகம் செய்திட்டனே எண்டுற குற்றவுணர்ச்சி, அவளைப்பற்றின விசயம் வெளில வந்தா ஊரும் உலகமும் என்ன கதைக்கும் எண்டுற பயம், இந்தப் பழக்கத்தில இருந்து வெளில வரமுடியாத பலகீனமான நிலைமை எல்லாம் சேர்ந்து, அவளுக்கே அவளில் வெறுப்பு வந்திருக்கும் சாகித்தியன். அது ஒருவிதமான மன அழுத்தத்தைத் தந்திருக்கும். நானெல்லாம் உயிரோட இருக்கிறதே அவமானம் எண்டு நினைச்சிருப்பாள்.” என்றவன் ஒருமுறை பேச்சை நிறுத்திவிட்டு, “அதாலதான் தற்கொலை செய்ற நேரத்தில கூட மாதவனைப் பற்றி அவள் சொல்லேல்ல.” என்றான்.
“இப்ப என்ன சேர், என்ர தங்கச்சி செய்ததுதான் பிழை. மாதவனும் அஜய்யும் செய்தது எல்லாம் பெரிய விசயமே இல்லை எண்டு சொல்லுறீங்களா? சட்டத்தை மலையளவுக்கு நம்பினோம் சேர். தங்கச்சிதான் கிடைக்கமாட்டாள். அவள் சாவுக்கு காரணமானவங்களுக்கு நல்ல தண்டனையாவது கிடைக்கும் எண்டு நம்பினோம் சேர். இப்ப அதுவும் இல்ல.” என்றான் விரக்தியும் வெறுப்புமாக.
அவன் தோளில் அழுத்திக்கொடுத்தான் எல்லாளன்.
“நீ இப்ப உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய். தங்கச்சிய இழந்த சோகம் உன்ன இப்பிடியெல்லாம் கதைக்க வைக்குது. அமைதியா இருந்து யோசிச்சா சட்டம் சரியான தீர்ப்பத்தான் சொல்லியிருக்கு எண்டு உனக்கே விளங்கும். மற்றது, வீட்டில இருக்கிற நாங்களும் இதையெல்லாம் கவனிக்க வேணும் தம்பி. பொறுப்பா இருக்க வேணும். அத நாங்க செய்யாம விட்டுட்டு ஒட்டுமொத்தமா மற்றவையக் குறை சொல்லுறதில அர்த்தம் இல்லையே. இது ஒரு நாள் ரெண்டு நாளில வாற பழக்கம் இல்ல. இருந்தும், நீங்க ஆரும் அவளைக் கவனிக்க இல்லை தானே. அப்ப, அவளின்ர இந்தத் தற்கொலைக்கு நீங்களும் ஏதோ ஒரு வகைல காரணம் எண்டு உங்களையும் கைது செய்றதா?” என்றதும் அதிர்ந்து அவனைப் பார்த்தான் சாகித்தியன்.
“சட்டம் எல்லாருக்கும் பொதுவானது எண்டு இப்ப விளங்குதா? அது, குற்றவாளி, பாதிக்கப்பட்டவர், தவறு செய்தவர் எண்டு எல்லாம் பிரிச்சுப் பாக்காது. எல்லாரையும் ஒரே தராசுல வச்சுத்தான் பாக்கும்.”
“அப்ப அஜய்? அவனை ஏன் சேர் விடுதலை செய்திருக்கு? அவன் செய்தது துரோகம் இல்லையா சேர். நம்பிப் பழகினேனே”
“தீர்ப்பை நீ வடிவா கேக்க இல்லையா? உன்ர தங்கச்சிக்கு பதினெட்டு வயசுக்கு மேல. வன்புணர்வு நடக்க இல்ல. ரெண்டுபேர் சேந்து ஒரு முறையற்ற காரியத்தைச் செய்தா அதுக்கு ரெண்டுபேரும் தான் பொறுப்பு. அதுல ஒருத்தரை மட்டும் குற்றவாளியாச் சொல்லேலாது. ஆனா ஒண்டு, அவன் சட்டத்திட்ட இருந்துதான் வெளில வந்திருக்கிறான். அவன்ர மனச்சாட்சிட்ட இருந்து இல்ல. விளங்குதா?” என்று வினவினான்.
நீ சொல்வதை எல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முகத்தில் காட்டியபடி அவனைப் பாராமல் அமர்ந்திருந்தான் சாகித்தியன். எல்லாளனுக்குக் கோபம் வரவில்லை. மாறாக, அவன் மனதின் ஆதங்கத்தை, கொதிப்பை ஆற்ற விரும்பி தன்மையாகவே விளங்கப்படுத்தினான்.
“நீ நினைக்கிறியா அவனைப் பிடிச்சு சிறைக்குள்ள போட்டு, கம்பி எண்ண வைக்கிறது மட்டும் தான் தண்டனை எண்டு. இல்ல! இப்ப அவனைப்பற்றி இந்த ஊர் முழுக்கத் தெரியும். இந்தச் சமூகமே அவனைக் கேவலமாப் பாக்கும். ஒரு காமுகனா நினைச்சு ஒதுக்கி வைக்கும். உன்னை மாதிரி அறிஞ்ச மனுசர், தெரிஞ்ச மனுசர், நண்பர்கள் எண்டு ஆக்களின்ர முகத்தில அவனால முழிக்கேலாது. இது எல்லாத்தையும் விட நொடி நேரம் விடாம அவன்ர மனச்சாட்சியே அவனைக் குத்தும், வதைக்கும். அதுதான் பெரிய தண்டனை. சிறைக்குப் போயிட்டு வந்தாக் கூடச் செய்த பிழைக்குத் தண்டனை அனுபவிச்சிட்டன் எண்டு நிம்மதியா இருந்திருப்பான். இப்ப அவனுக்கு, அதுக்குக் கூட வழி இல்ல. வாழுற நாள் முழுக்க அவனுக்குச் சிறை தான். தண்டனை தான். அமைதியா இருந்து யோசிச்சா உனக்கே இதெல்லாம் விளங்கும். உன்ர மனநிலை எனக்கு விளங்குது. ஆனா, இனி எல்லாம் முடிஞ்சுது. இதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வா. அம்மா அப்பாவைப் பாத்துக்கொள்ளு. அவேக்கு இப்ப இருக்கிறது நீ ஒருத்தன் தான். நல்லாப் படி. நல்ல இடத்துக்கு வா. ஓகே!” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பிவைத்தான்.
——————
‘ஐஸ்’ எனப்படும், ‘மெத்தம்பெட்டமைன் (Methamphetamine)’ படிகங்களாக(Crystals) காணப்படுகின்ற கலப்படமற்ற போதைப்பொருளாகும். இதனை ஒருதடவை உள்ளெடுத்தால், அந்த நபரை அது அடிமையாக்கி விடும் என்றும், பாவித்து 48 மணித்தியாலங்களுக்கு அதன் செயற்பாடு உடலில் இருக்கும் என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.