அந்த எல்லாமே போச்சுக்குப் பின்னால் இருந்த குமுறலை உணர்ந்த அகரனின் மனமும் கனத்துப் போனது.
“அம்மா, அப்பா இனி திரும்பி வரப்போறேல்ல மச்சான். ஆனா, அவே எப்பவும் உன்னோடதான் இருப்பினம். மற்றும்படி மிச்சம் எல்லாம் நடக்குமடா. கேஸ்தான் முடிஞ்சுதே. ஒரு நல்ல பெட்டையா பாத்துக் கட்டு. உன்ர தங்கச்சி உனக்குப் பக்கத்திலதான் இருப்பாள். அதுக்கு நான் கேரண்டி. ஆணும் பெண்ணுமா ரெண்டு பிள்ளை என்ன நாலு எண்டாலும் பெறு. வாழ்க்கை சந்தோசமா மாறும்.” என்றவனின் பேச்சில், அவனுடைய ஆழ்மனதில் அழியாமல் இருக்கும் அந்த முகம் கண்களில் வந்து மின்னியது.
காதலா என்றால் அவனுக்குத் தெரியாது என்பான். ஆனால், இன்றுவரையில் மறக்கவிடாத அளவுக்கான பெரும் ஈர்ப்பொன்று, வாலிபம் எய்திய நாட்களில் இருந்தது உண்மை. எதிர்காலத்தை அவளோடு கற்பனை செய்துபார்த்து, தனக்குள் ரசித்தும் இருக்கிறான். அதெல்லாம், உலகமறியா பருவத்தில் பெரும் கற்பனைகளையும் கனவுகளையும் சுமந்து திரிந்த நாட்கள். அனைத்தும் போயே போச்சு. எங்கு இருக்கிறாளோ, எப்படி இருக்கிறாளோ தெரியாது. இத்தனை வருடங்களாக யாருமறியாமல் தேடிக்கொண்டுதான் இருக்கிறான். அவள் அகப்படவே இல்லை. திருமணம் ஆகியிருக்கலாம்; அவனை மறந்திருக்கலாம்; இப்போது அவளுக்குப் பிள்ளைகள் கூட இருக்கலாம். ஆனாலும், அவளை ஒருமுறை பார்த்துவிட மனம் ஆவல் கொண்டது.
“என்னடா யோசனை?” எங்கோ நிலைத்திருந்த எல்லாளனின் விழிகள் அவன் இங்கில்லை என்று சொல்ல வினவினான் அகரன்.
“ம்..” என்றபடி எண்ணங்கள் கலையத் திரும்பியவன், “அது ஒண்டுமில்ல. நீ முதல் உன்ர தொங்கச்சிக்கு சொல்லி வை மச்சான், சேட்டையைக் கொஞ்சம் குறைக்கச் சொல்லி. இல்ல, நான் எப்ப விசர்ல இருக்கிறனோ அப்ப நல்லா வாங்கிக் காட்டுவாள், பார்!” என்றான் சீறலாக.
அகரனின் உதட்டினில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. அவர்கள் இருவருக்கும் ஒத்தே போகாது. இவன் தீவிரமான எண்ணங்களும் செயல்களும் கொண்டவன். அவளுக்குத் தீவிரத்தின் பொருளே தெரியாது. இருவரும் எப்போதும் முட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அதில், சிரிப்புடன் நடந்ததை விசாரித்தான்.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “ஒரு ஏசிபியா இருந்துகொண்டு, பொது ஆளான அவளுக்கு சல்யூட் அடிச்சு பிரச்சினையை முடி எண்டு வாயால சொல்லவாடா ஏலும். அந்த அரை லூசனுக்குச் செய்டா எண்டு கண்ணால சொல்லுறன், அவன் மாட்டன் எண்டு விறைச்சுக்கொண்டு நிக்கிறான். அவளிட்டயே வாங்கிக் கட்டுடா எண்டு விட்டுட்டு வந்திட்டன்.” என்றான் கடுப்புடன்.
“பிறகு?” சிரிப்புடன் சுவாரியமாகக் கதை கேட்டான் அவளின் தமையன்.
“என்ன பிறகு? சல்யூட்டும் அடிச்சு, கையெடுத்தும் கும்பிட்ட பிறகுதான் போனவளாம்!” என்றவனின் பேச்சைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தான் அகரன்.
“இதுல எள்ளு வய கொள்ளு வய எண்டு பட்டப்பேர் வேற. டியூட்டில நிக்கேக்க என்னடா இதெல்லாம்? கொஞ்சம் சொல்லி அடக்கி வை மச்சான். உன்ரயும் அங்கிளின்ரயும் முகத்துக்காகத்தான் பொறுக்க வேண்டி இருக்கு!” என்று பொருமினான் எல்லாளன்.
“இதை உன்ர அங்களிட்டயே சொல்ல வேண்டியதுதானே.” அவனைச் சீண்டும் சிரிப்புடன் சொன்னான் அகரன்.
அது முடிந்தால் அவன் ஏன் இவனிடம் புலம்பப் போகிறான்? பிறகு, அந்த மனிதர் இவனுக்குத்தான் பதினைந்து வருட கடூழியச்சிறை தண்டனையை விதிப்பாராக இருக்கும். முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் அவன்.
“பிறகு என்னத்துக்கு என்னட்ட சொல்லுறாய்? நீதித்துறையே அவளின்ர கைக்க இருக்கேக்க காவல்துறையால ஒண்டும் செய்யேலா மச்சி!”
“நீயெல்லாம் ஒரு ஏசிபி. இதுல கிரைம் பிராஞ்ச் வேற. இப்பிடிச் சொல்ல வெக்கமா இல்ல?”
“டேய்! சும்மா இரு. அவள் சின்னப்பிள்ளை. சந்தோசமா இருக்கட்டும். அவளை மாதிரி ஒரு நாள் என்ன ஒரு மணித்தியாலமாவது எங்களால இருக்க முடியுதா சொல்லு? எப்ப பாரு கொலை, கொள்ள, கடத்தல், கற்பழிப்பு எண்டு.. கொடுமை!” என்றவனின் பார்வை திசை மாறியது. கண்ணும் முகமும் மலர்ந்தது. அங்கு வந்துகொண்டு இருந்த சியாமளாவைப் பார்த்து வா என்பதாகத் தலையை அசைத்து, முறுவலித்தான்.
அழுத அடையாளங்களைச் சுமந்த முகம் இவனைக் கண்டதும் மலர்ந்தது. மென் முறுவலுடன் வந்து எல்லாளனின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
“இப்ப சந்தோசமா?” தங்கையின் முகம் பார்த்து வினவினான் எல்லாளன்.
“ம்ம்.. இனித்தான் அம்மா அப்பான்ர ஆத்மா சாந்தி அடையும் அண்ணா.” எனும்போதே அவள் விழிகள் கரிக்க ஆரம்பித்தன.
எல்லாளனும் அப்படித்தான் நினைத்தான். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல், “இனி அழுறேல்ல. நாங்க ஆசைப்பட்டது நடந்திட்டுது. குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக் குடுத்திட்டோம். இனி நீ சந்தோசமா இருக்கோணும்.” என்று அவன் சொல்லும்போதே, “அதுதான், அவளைச் சந்தோசமா வச்சிருக்கத்தான் நானே ஓடி வந்திருக்கிறன்.” என்றான் அகரன் வேண்டுமென்றே.
“என்னவோ என்னைப் பாக்க வந்ததா சொன்னாய்..”
“உன்னையும் எண்டுதான் சொன்னனான் மச்சி.”
“இப்பிடியெல்லாம் போலீஸ்காரனோட என்ர தங்கச்சிய அனுப்பேலாது!”
“அப்ப நான் என்ர தங்கச்சியோட கதைக்க வேண்டி வரும்.” என்றபடி அகரன் கைபேசியை பொக்கெட்டில் இருந்து எடுக்க, “ஐயா ராசா. நீ இவளை கூட்டிக்கொண்டே போ! என்னை விட்டுடு!” என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாகச் சொன்னான் எல்லாளன்.
“அந்தப் பயம் இருக்கட்டும்!” என்று நகைத்தான் அகரன்.
அப்போது, எல்லாளனுக்கு அழைத்தான் கதிரவன். “சேர், இங்க ஒரு தற்கொலை கேஸ். ஏஎல் படிக்கிற பிள்ளை தூக்குல தொங்கியிருக்கு.” என்றான் அவன்.
“ஓ! ஸ்பொட்டுக்கு உடனேயே போ! நானும் இப்ப வாறன்.” அவசரமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தபடி எழுந்தான் எல்லாளன். “சரி மச்சான், புது கேஸ் ஒண்டு வந்திருக்கு. நான் அங்க போகோணும். நீங்க கவனமா போங்க.” என்று இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு, தங்கைக்கும் ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.


