“இனியாவது என்னைப் பாக்க மாட்டியா?” என்றான் அகரன் அவளின் காதுக்குள்.
ஆனந்தமாக அதிர்ந்தாள் சியாமளா. இன்று காலை வரைக்கும் முகம் கொடுக்க மறுத்தவனாயிற்றே. விழிகள் மெலிதாகக் கலங்க வார்த்தைகளற்று அவனையே பார்த்தாள். அவனுக்கும் புரிந்தது. ஒரு சின்ன வருத்தம் தோய்ந்த முறுவலோடு, “விடு, இது எங்களுக்கான நாள். இனி வாழப்போறது புது வாழ்க்கை. எல்லாம் நல்லதா நடக்கும் எண்டு நினைப்பம். “ என்றான் தனக்கும் சேர்த்து.
ஆம் என்று தலையை அசைத்தவளின் உதடுகள், “சொறி!” என்று சத்தமற்று உச்சரித்தது. அவளைப்போலவே விடு என்று வாயசைத்தான் அவன்.
அப்போதுதான் சியாமளாவின் சஞ்சலங்கள் தீர்ந்து போயின.
இதோ, சுபநேர சுப முகூர்த்தத்தில், அவளின் கழுத்தில் பொன்தாலி பூட்டித் தன் பாதியாக்கிக்கொண்டான், அகரன்.
பகல் உணவுவேளை முடிந்து, அன்றைய நாளுக்கான களையைச் சற்று ஆற்றிக்கொள்வதற்காக மேடையிலேயே அமர்ந்திருந்தனர் மணமக்கள். யாரையும் கவராமல் மேடைக்குச் சென்று, அண்ணன் அண்ணியிடம் ஏதோ ஒன்றை நீட்டினாள் ஆதினி. அகரனின் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி. ஆவலோடு அவள் முகத்தையே பார்த்தான். ஏதோ பரிசு என்று புரிந்தது. அதைக் காட்டிலும், அவ்வளவு நேரமாகப் பெண்ணுக்குத் தோழியாக நின்றிருந்தபோதிலும், ஏதோ ஒரு விலகளைக் காட்டிக்கொண்டிருந்தவளின் இந்தச் செய்கை, உள்ளத்தை நெகிழ வைக்க, “அண்ணாவில இருந்த கோபம் போயிட்டுதா?” என்றான் ஆர்வத்தோடு.
“அத விட்டுட்டு இது என்ன எண்டு பாருங்க.”
அவள் சமாளிக்கிறாள் என்று கண்டுகொண்டான். மனம் வாடிப்போனது. “எனக்கு இதைவிட அதுதான் முக்கியம்.” வாய் வார்த்தைகளை உகுத்தாலும் அவள் நீட்டியதைப் பிரித்துப் பார்த்தான். மாலைதீவின் கடற்கரைக் குடில் ஒன்றை ஒரு வாரத்துக்கு அவர்கள் இருவருக்குமாக ஏற்பாடு செய்திருந்தாள் ஆதினி. பார்த்தவனுக்குப் பெரும் வியப்பு. “இந்த ஐடியா எப்பிடி வந்தது?” குட்டிப் பெண் என்று எண்ணியிருந்த தங்கை இப்போதெல்லாம், பொறுப்பாக இருந்து அவனை வியப்பிலாழ்த்திக் கொண்டிருப்பதில் வினவினான்.
திருமணத்தின் பின்னால் அவளையும் அருகில் வைத்துக்கொண்டு தமையன் சியாமளாவுடன் சந்தோசமாக வாழ்வானா என்கிற கேள்வி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. தன்னால் அவர்களின் மணவாழ்வில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பது அவளின் எண்ணம். இதையெல்லாம் மனம்விட்டு அவளால் பேசக்கூடிய ஒரே நபர் காண்டீபன் மட்டுமே. அவனிடம் சொன்னபோது, அவன் தான் இப்படிச் செய்யச் சொல்லியிருந்தான். அவர்களுக்கான தனிமை, மனங்களின் முறுகல்களை வெளியேற்றி அவர்களை இணைக்கும் என்று அவளும் அப்படியே செய்திருந்தாள்.
இதையெல்லாம் சொல்ல விருப்பமற்று, “சும்மா, என்ன பரிசு குடுக்கலாம் எண்டு யோசிக்க இந்த ஐடியா வந்தது. வாற கிழமைதான். நீங்க லீவு எடுத்துக்கொண்டு போகலாம்.” என்றவள் மாறாத முறுவலோடு இருவரையும் வாழ்த்திவிட்டு இறங்கப்போக, அவளின் கைப்பற்றி நிறுத்தினான் அகரன்.
“இப்பிடி முறைகளை முறையாகச் செய்றது என்ர ஆதிக்குட்டி இல்லையே. ஆதிக்குட்டி அண்ணாவில இருக்கிற கோபத்தை மறந்து பழைய மாதிரி கதைக்கிறதுதான் எனக்குக் கிடைக்கிற பெரிய கலியாணப் பரிசு.” என்றான் அவன்.
முகம் மாறாமல் காக்க மிகவுமே சிரமப்பட்டபடி, “கோபம் போகாமையா பரிசு தந்திருக்கிறன்.” என்று வினவினாள்.
கோபம் இருப்பதால் தான் இந்தப் பரிசே என்று புரியாமல் இல்லை. அதற்குமேல் அதைப்பற்றிப் பேசி சங்கடமான சூழ்நிலையை உருவாக்கவும் மனமற்று, “நில்லு, ஒரு செல்பி எடுப்பம்.” என்றவன் விழிகளால் நண்பனைத் தேடிக் கண்டுபிடித்து, “டேய் மச்சான், வா ஒரு செல்பி எடுக்க!” என்று அவனையும் அழைத்தான்.
ஏதோ வேலையாக நடந்துகொண்டிருந்தவன் நின்று திருப்பி மேடையைப் பார்த்தான். ஆதினி முகம் மாறாமல் காத்தபடி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அந்தச் செய்கை, சற்று முன் இளந்திரையனின் சீண்டலையும் நினைவூட்டிவிட, விறுவிறு என்று மேடையேறியவன் தன் தங்கையின் அருகில் நிற்காமல் ஆதினியை நெருங்கி நின்றுகொண்டு, “எடு!” என்றான்.
திகைத்துப்போனாள் ஆதினி. மணடபத்தில் எல்லோரும் இருக்கையில், அதுவும் மேடையில் வைத்து, இப்படிச் செய்வான் என்று எதிர்பாராதவள் தமையனை நெருங்கி நிற்க முயல, அதற்கு விடாமல் ஒற்றைக் கையால் அவள் கையைப் பற்றித் தன்னருகிலேயே நிறுத்திக்கொண்டான் எல்லாளன்.
எதுவும் செய்யமுடியாத நிலை ஆதினிக்கு. இதில், “என்னடா எடுக்கிறாய்? இங்க கொண்டுவா!” என்று கைப்பேசியைப் பறித்து, அவன், ஆதினி, அகரன், சியாமளா என்கிற வரிசையில் நிறுத்தி சுயமிக்களை எடுத்துவிட்டு, அதைத் தன் கைபேசிக்கும் அனுப்பிவிட்டான்.
ஆதினிக்கோ அடக்கமுடியாத ஆத்திரம். அதைக் காட்ட வழியற்ற நிலை. தீப்பார்வையால் அவனை எரித்துவிட்டு, விறுவிறு என்று மேடையை விட்டு இறங்கி நடந்தாள்.
“ஏன்டா நீ வேற?” என்று சலித்தான் அகரன்.
“என்ன நீ வேற? உன்ர கலியாணத்துக்கு வந்திருக்கிறவனில பாதிப்பேருக்கு அவள் வேணுமாம். என்னையே கூப்பிட்டு விசாரிக்கிறாங்கள். இதுல அங்கிள் வேற ஆதினியக் கேக்கினமாம் எண்டு எனக்கே சொல்லுறார். இவள் முறுக்கிக்கொண்டு நிக்கிறாள். அதுதான் எல்லாருக்கும் சேர்த்துப் பதில் சொல்லியிருக்கிறன். “ என்றுவிட்டுப் போனான் அவன்.
தன் திருமண நாளில் கூடத் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அகரன்.