நீ தந்த கனவு 23

அடுத்த நாள் காலையே அவளைப் பார்க்க வந்தான் எல்லாளன். அறைக்குள் இருந்துகொண்டே அவனைப் பார்க்க மறுத்தாள் ஆதினி. சற்று நேரத்தில் அவள் அனுமதியை எதிர்பாராமல், திறந்திருந்த அறையின் கதவைப் பெயருக்கு இரண்டு முறை தட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான் எல்லாளன்.

இதை எதிர்பாராத ஆதினி ஒரு நொடி திகைத்துவிட்டு அவனை முறைத்தாள்.

“என்ன பார்வை? வீட்டுக்கையே இருந்துகொண்டு வரமாட்டன் எண்டு சொல்லுறாய் என்ன? நீ வராட்டி நான் வருவன். எனக்கில்லாத உரிமையா?” அவள் கட்டிலில் இலகுவாக அமர்ந்தபடி சொன்னான் அவன்.

விழிகள் விரிய அப்படியே நின்று விட்டாள் ஆதினி. எதையாவது வைக்கவோ, தரவோ அறை வாசல் வரைக்கும் அவன் வருவதெல்லாம் நடந்திருக்கிறதுதான். ஆனால் அறைக்குள்ளேயே வருவது? இதுதான் முதல் முறை.

அதுவே அவளுக்குள் பெரும் அதிர்வாக இறங்க, அவனானால் அவள் கட்டிலிலே அமர்ந்துவிட்டான்.

“எப்ப வெளிக்கிடுறாய்?” அங்கிருந்த பயணப் பெட்டிகளைப் பார்த்துவிட்டு இயல்புபோல் விசாரித்தான்.

அவனை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி.

“கதைக்க மாட்டியோ?” மெல்லிய முறுவல் அரும்ப வினவினான்.

அது அவளைச் சீண்டியது. இப்படி அவள் அறைக்கே வந்து, அவளைச் சீண்டும் அளவுக்கு அவனைக் கொண்டுவந்தது நேற்றைய அவளின் வெடிப்பு என்கிற கோபமும் சேர, “என்ன இது? இப்பிடித்தான் ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர அறைக்க சொல்லாமக் கொள்ளாம வந்து நிப்பீங்களா? மரியாதையா வெளில போங்க!” என்று அதட்டினாள்.

“அதென்ன ஒரு பொம்பிளைப்பிள்ளை எண்டு மொட்டையாச் சொல்லுறாய்? நீ எனக்குச் சொந்தமாகப் போற பொம்பிளைப்பிள்ளை. அதால நான் வரலாம்.” என்றான் அவன் அமர்த்தலாக.

உள்ளே மனம் கொதித்தாலும் நேற்று அவனிடம் கட்டுப்பாட்டை இழந்து உடைந்ததும், இன்று அவன் அறைக்கே வந்து நிற்பதும் அவளை மனத்தளவில் புரட்டிப்போட்டிருக்க, பதிலுக்குப் பதில் என்று நிற்க முடியவில்லை.

அதை அவனும் உணர்ந்தான் போலும். அவளையே சில கணங்கள் பார்த்தவன், எழுந்து வந்து அவள் முன்னே நின்றான்.

அவனை முறைத்துவிட்டு அவள் விலக முயல, அதற்கு விடாமல் நிறுத்தி, அவள் தாடையைப் பற்றித் தன் முகம் பார்க்க வைத்து, “நேற்று உன்ன அழ வச்சதுக்கு சொறி! உண்மையச் சொன்னதுக்கு தாங்க்ஸ்! ஆனா, எந்த இடத்திலயும் உன்ன நோகடிக்கோணும் எண்டோ, உன்னைப் பிடிக்காமையோ நான் எதையும் செய்யேல்ல. வேலைல இருக்கிற அழுத்தமும், நீ எதையாவது யோசிக்காமச் செயறதால வாற கோவமுமா இருக்குமே தவிர, உன்ன நான் கேவலமா நினைச்சதே இல்ல. சியாமளா கதைச்சது உண்மையாப் பிழைதான். ஆனா அவள் எங்கட அம்மாவும் அப்பாவும் கொடூரமாச் சாகிறதக் கண்ணால பாத்தவள். அந்தச் சின்ன வயசில அது எவ்வளவு ஆழமாப் பதிஞ்சிருக்கும் எண்டு யோசிச்சுப் பார். அந்தப் பயமும், எதிர்கால வாழ்க்கையும் நிம்மதி இல்லாமப் போயிடுமோ எண்டுற கவலையும்தான் அவளையும் அப்பிடிக் கதைக்க வச்சது. எண்டாலும் பிழைதான். நானும் உடனேயே அவளைக் கண்டிச்சனான். அதையும் நீ கேட்டுத்தான் இருப்பாய். எண்டாலும், இனி இப்பிடி நடக்காது. சரியா?” என்று இதமான குரலில் சொன்னவன், பதிலற்று நின்றவள் கன்னத்தில் மெலிதாகத் தட்டிவிட்டு, அறையை விட்டு வெளியேறினான்.

உறைந்துபோய் நின்றிருந்தாள் ஆதினி. என்ன நடக்கிறது அவளுக்குள்? அவளை என்ன செய்துவிட்டுப் போகிறான் இவன்? அவனும், அவன் பார்வையும், அவன் கன்னத்தில் தட்டியதும்தான் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன.

அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ? அவள் கீழே இறங்கி வந்தபோது, ஒருவிதப் பதட்டத்துடன் நின்றிருந்தாள் சியாமளா. காரணம் புரியாமல் கேள்வியாகப் பார்த்தாள்.

“மாமாவும் இல்லாம, இவரும் இல்லாம மேல போக வேண்டாம் எண்டுதான் சொன்னனான். அண்ணாதான் அஞ்சு நிமிசம் கதைச்சிட்டு வந்திடுவன் எண்டு சொன்னவர். எதா இருந்தாலும் நேராக் கதைக்கிறது நல்லம் எண்டு நினைச்சுத்தான் விட்டனான். குறையா நினைக்காத, ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.

தன் அறைக்கு எல்லாளன் வந்ததைச் சொல்கிறாள் என்று புரிந்தது. கூடவே, அவளின் அந்தப் பதட்டத்தைக் கண்டு ஒரு மாதிரியாகிவிட, “பரவாயில்ல அண்ணி.” என்றுவிட்டுப் போனாள்.

அதன் பிறகுதான் சியாமளாவிற்கு மூச்சே வந்தது.

*****

ஆதினி கொழும்பு சென்று ஒரு வாரமாகியிருந்தது. தன் வாழ்வில் முக்கியமான எதையோ இழந்தது போன்று தவித்துப்போனான் காண்டீபன். தினமும் வந்து, அவள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொள்வான். உள்ளம், அவளோடான பொழுதுகளை அசைபோடும். அவளின் செல்லக் கோபம், முறைப்பு, சிரிப்பு, கேள்விகள் என்று எல்லாமே நினைவில் வந்து போகும்.

அவன் மனது, தன் நிம்மதியைத் தொலைத்துப் பல வருடங்களாயிற்று. இந்தக் கொஞ்ச நாள்களாகத்தான் அமைதி கொண்டிருந்தது. காரணம் ஆதினி. தாய் மடியில் தலை வைத்துப் படுக்கும் நிறைவைத் தந்திருந்தாள்.

இப்போது மீண்டும் அதை இழந்து நிற்கிறான். அவர்களின் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். பசுமரத்து ஆணியாகப் பதிந்து போன பல காட்சிகள், மனக்கண்ணில் வலம் வந்தன. எல்லாம் போயிற்று! காலம் மாறி, காட்சிகள் மாறி, காயங்கள் கூடி எல்லாமே தொலைந்து போயிற்று! எதையும் புதுப்பித்துக்கொள்ள முடியாத நிலையில் வேறு நிற்கிறானே!

அதற்குமேல் எதையும் நினைக்கப் பிடிக்காமல், வேகமாக எழுந்து, விறுவிறு என்று நடந்தான்.

இங்கே, இளந்திரையன், அகரன், சியாமளா, எல்லாளன் எல்லோருமே அவரவர் பாட்டில் இருக்கும் இயல்பு கொண்டவர்கள்; அழுத்தமான குணம் கொண்டவர்கள். அவர்கள் எல்லோரையும் உயிர்ப்புடன் வைத்திருந்ததே அவள்தான் என்று, அவள் இல்லாத இந்த நாள்களில்தான் உணர்ந்தார்கள்.

இன்றைக்கு அவர்களுக்குள் பேச ஊரில் நடக்கும் குற்றங்களைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லாதது போன்ற ஒரு நிலை.

நாள்கள் நகர, பரீட்சைகளில் சித்தியடைந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்திருந்தாள் ஆதினி. இளந்திரையனோடு மட்டும் தினமும் எடுத்துப் பேசினாள். சியாமளா இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தானாக அழைத்துப் பேசுவாள். இவர்கள் இருவரையும் அவள் ஒதுக்கி வைத்துவிட்டதில் அகரன் புலம்பிக்கொண்டிருந்தான்.

*****

“சேர், ஆரம்பிக்கவா?” காண்டீபனைத் தனியாகப் பிடித்து வினவினாள் அஞ்சலி.

சற்று நேரம் யோசித்துவிட்டு, “நீர் கொண்டு வாரும். நானே குடுக்கிறன்!” என்றான் அவன்.

“நானே குடுக்கிறனே சேர்.”

“ஏன்? மாதவன் வர நீர் உள்ளுக்குப் போகப்போறீரா?” என்று அதட்டினான்.

“பிறகு, உங்களுக்குப் பிரச்சினை வராதா?”

“வந்தா நான் பாக்கிறன்.” என்று முடித்துக்கொண்டான் காண்டீபன்.

அதன் பிறகு கடந்துபோன நாள்களில் காண்டீபனிடம் இருக்கும் லொலிகளுக்கு தமயந்தி பழகிப்போனாள். இப்போதெல்லாம் அஞ்சலியை விடவும் தமயந்திக்குத்தான் அந்த லொலிகளின் மீதான பிரியம் அதிகமாயிற்று. அதன் சுவை அவள் தேகத்தின் மூளை முடுக்கெங்கும் சென்று பரவ ஆரம்பித்திருந்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock