அவளுக்குச் சட்டென்று முகம் சூடாகிற்று. அவன் கையின் கதகதப்பு வேறு, கையின் வழியே தேகமெங்கும் பரவி, நெஞ்சுக்குள்ளேயே இறங்கியது.
“பிறந்தநாளே முடியப் போகுது. இப்ப வந்து சொல்லுறீங்க!” தன் மனவுணர்வுகளை மறைப்பதற்காகவே சொன்னாள்.
“எப்பிடியோ முடிய முதல் சொல்லீட்டன்தானே!” என்றவன், ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து அவளுக்கென்று வாங்கிவந்த மோதிரத்தை எடுத்து, அவள் விரலில் தானே அணிவித்துவிட்டான்.
இரண்டு மெல்லிய கம்பிகள் சிறிய இடைவெளியில் சுற்றிவர, நடுவில் பறக்கும் நட்சத்திரம் ஒன்று வீற்றிருந்து, அவள் விரலை வசீகரித்தது.
“இது நிச்சய மோதிரம் இல்ல. பிறந்தநாள் பரிசும் இல்ல. இந்தப் பிறந்தநாளில எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லுற மோதிரம்.” என்றான் அவள் முகம் பார்த்து.
இதை ஆதினி எதிர்பார்க்கவே இல்லை. அவனும் சும்மா சொல்லவில்லை என்று, இங்கு வந்ததிலிருந்து அடிக்கடி அவளில் படியும் பார்வையும், அதில் இருந்த வித்தியாசமும் சொல்லின. இதைச் சொல்லத்தான் அங்கிருந்து வந்தானா? மனதில் மெல்லிய சாரல் வீச, பதில் எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதி காத்தாள்.
“இதுக்கும் பதில் சொல்ல மாட்டியா?” என்றவனுக்கு அவள் இன்னுமின்னும் புதிதாய்த் தெரிந்தாள்.
முன்னர் எப்படியெல்லாம் மல்லுக்கு நிற்பாள்? கண்களில் எந்தச் சலனமும் இல்லாமல், கைகளில் நடுக்கமும் இல்லாமல், அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தவளாயிற்றே! ஆனால் இன்று? அவன் பார்வையையே தவிர்க்கிறாள்.
சத்தமாகச் சிரித்தான் எல்லாளன்.
ஆதினிக்கு அவன் தன்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறான் என்று தெரிந்தது. அதில் உண்டான கோபத்தோடு, “என்ன?” என்றாள் அதட்டலாக.
ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்தவனின் சிரிப்பு மட்டும் குறைவதாக இல்லை.
சற்று நேரம், கொழும்பு எப்படி இருக்கிறது, படிப்பு எப்படிப் போகிறது என்று அவள் வாயைப் பிடுங்கினான். அகரனுக்கு அழைத்து அவளைப் பேச வைத்தான். அவள் வேண்டாம் என்று சொன்னதைக் காதில் விழுத்தாமல், நாளாந்தம் போடக்கூடிய மாதிரி உடைகள் வாங்கிக் கொடுத்தான். பயணத்திற்கு நேரமாக உணவையும் வெளியே முடித்துக்கொண்டு வீடு திரும்பினர்.
அப்போதே ஆதினியின் மனம் மெல்ல மெல்லக் கனக்க ஆரம்பமாயிற்று. கையில் இருந்த பைகளை அறைக்குள் கொண்டுபோய் வைத்துவிட்டுத் திரும்பியவள், தன் பின்னாலேயே வந்தவனைக் கவனிக்காமல் விட்டதில், அவனோடு மோதிக்கொண்டாள்.
“பாத்து பாத்து!” என்று அவளைப் பற்றி நிறுத்தினான் எல்லாளன்.
தன் கையில் இருந்தவற்றையும் அவளுக்குப் பின்னால் இருந்த மேசையில் எட்டி வைத்துவிட்டு, “அப்பிடி இவ்வளவு பெரிய உருவம் வாறதே தெரியாம வந்து மோதுற அளவுக்கு என்ன யோசின?” என்று வினவினான்.
அவளாலேயே ஏன் இப்படி ஆகிறோம் என்று கணிக்க முடியாதபோது, அவனிடம் என்ன என்று சொல்லுவாள்? “ஒண்டுமில்ல.” என்றாள் அவனைப் பாராமல்.
தான் புறப்படுவதால்தான் என்று விளங்கிற்று. நெருங்கிச் சென்று அவளைத் தேற்ற மனம் உந்திற்று. இருவரும் அவளுடைய அறைக்குள் நின்றாலும் வாசலருகில்தான் நின்றிருந்தனர். அறைக்கதவும் திறந்துதான் இருந்தது. சாற்றுவது அழகாய் இராது. அதில், “திரும்பவும் நேரம் கிடைச்சா வாறன், சரியா?” என்றான் அவள் கைபற்றி அழுத்திக் கொடுத்தபடி.
அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
அந்த நொடியில் அவனுக்குள்ளும் ஒரு மாற்றம். அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போலொரு உந்துதல். சூழ்நிலையும் படிக்கிறவளைக் குழப்பக் கூடாது என்கிற எண்ணமும் கட்டுப்படுத்த, பேர்சிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.
“இல்ல. என்னட்ட இருக்கு.”
“என்ன இது புதுசா வேண்டாம் எண்டெல்லாம் சொல்லுறாய்? நீயா என்னட்ட பறிச்சது எல்லாம் மறந்திட்டுது போல!” என்று அவள் கையில் பணத்தைத் திணித்தான்.
பயணத்திற்குத் தயாராகி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வாசல் வரைக்கும் வந்தவன், திரும்பி அவளைப் பார்த்தான். ஆதினியும் சொல்லத் தெரியாத தவிப்பை நெஞ்சில் சுமந்தபடி அவனையேதான் பார்த்திருந்தாள்.
ஒரு கையால் அவள் தோளைச் சுற்றி அணைத்து, “கவனமா இரு. நல்லாப் படி, என்ன?” என்றான் இதமாக.
வெளியே காட்டிக்கொள்ளவில்லையே தவிர, முற்றிலுமாக உடைந்து போனாள் ஆதினி. அழுகை கூட வரப் பார்த்தது. அவனோடே போய்விட வேண்டும் போலொரு துடிப்பு. அடக்கிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தாள்.
எப்படி இத்தனை மாற்றம் என்று தெரியவில்லை. மாறிப்போனாள் என்பது மட்டும் உண்மை.
ஊரில், இவர்கள் எல்லோரினதும் பாதுகாப்பில், பயம் இல்லாமல், சுதந்திரப் பறவையாக எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோம் என்று இன்று புரிந்தது. இங்கும் எந்தக் குறைவும் இல்லைதான். பெண் பிள்ளை இல்லாத குணசேகரன் வீட்டுக்கு அவள் செல்லப் பெண்தான். என்றாலும்…
அவனும் அதை உணர்ந்தான் போலும். “உங்களிட்டச் சொல்லுறதே பிழை எண்டு தெரியும் அங்கிள். எண்டாலும் அவளக் கொஞ்சம் பாத்துக்கொள்ளுங்கோ.” என்று எல்லாளனும் குணசேகரனிடம் சொன்னான்.
அவர்கள் இருவருக்குமான உறவை நண்பன் மூலம் அறிந்திருந்தவரும், “ஒண்டுக்கும் கவலைப்படாமப் போயிட்டு வாங்கோ எல்லாளன். அவா என்ர மகள். அவாவைக் கவனமாப் பாக்கிறது என்ர பொறுப்பு!” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அறைக்கு வந்த ஆதினி, கண்களில் படர்ந்திருந்த மெல்லிய நீர்ப் படலத்துடன் அவன் அணிவித்துவிட்ட மோதிரத்தையே பார்த்திருந்தாள்.
பிரிக்கமுடியாத பிணைப்பொன்று அவர்களுக்குள் உருவாகிவிட்டது புரிந்தது.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவன் பரிசு தருவது வழமைதான். அது அவளாக அவனைத் தொந்தரவு செய்து, தனக்கு வேண்டியதைப் பிடுங்கிக்கொண்டதாக இருக்கும்.
ஆனால் இது? அவனாகத் தந்தது. ‘என்ன உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று என்றோ அவள் கேட்ட கேள்விக்குப் பதிலாகத் தந்தது. மிக மிகப் பிடித்திருந்தது.
அங்கே, புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்த எல்லாளனுக்கும் அவள் நினைவுதான். பிரிவு அன்பை வளர்க்கும் என்பது எத்தனை பெரிய உண்மை?
அவள் கொழும்பு வந்ததில் இருந்தே அவனுக்குள் மாற்றம்தான். நாளாக நாளாக அது வளர்ந்துகொண்டேதான் போயிற்று. இல்லாமல், ஒழுங்காக உறங்குவதற்குக் கூட நேரம் இல்லாமல் அலைகிறவன், கொழும்பு வரை மெனக்கெட்டு வருவானா?
அவன் புறப்பட்டபோது அவளிடம் தெரிந்த தவிப்பு, அவள் நிலையும் இதேதான் என்று சொன்னதில், உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று.