இருள் பரவ ஆரம்பித்த வேளையில் தான் வீட்டுக்கு வந்தான் காண்டீபன். அவன் முகமே சரியில்லை. யாரோடும் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
“தம்பி ஏனம்மா ஒருமாதிரி இருக்கிறான்?” தன்னிடம் கூட ஒரு வார்த்தை பேசாமல் சென்ற மகனைக் கவனித்துவிட்டு வினவினார், சம்மந்தன்.
“என்ன எண்டு எனக்கும் தெரியேல்ல மாமா. இருட்டுது, எங்க நிக்கிறீங்க எண்டு கேட்டு கோல் பண்ணின பிறகுதான் இப்பவும் வந்திருக்கிறார்.” என்று அவருக்குச் சொல்லிவிட்டு, அவனுக்குப் பிடித்த ஏலக்காய் தேநீரை ஊற்றப் போனாள் மிதிலா. பகலும் சாப்பிட வரவில்லை. கேட்டதற்கு வெளியே பார்த்துக்கொண்டதாகச் சொல்லியிருந்தான். இப்போது முகமும் சரியில்லை. என்னவோ? மனம் அவனைப் பற்றிச் சிந்திக்க, கை வேலையைப் பார்த்தது.
அணிந்திருந்த உடையைக் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்திருந்தான் காண்டீபன். ஒரு கை முகத்தில் கிடந்தது. விழிகள் மூடிக்கிடந்தாலும் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அல்லாடிக்கொண்டிருந்தது. சிலவற்றை அவன் நினைப்பதில்லை. தன் மனத்தைத் தானே இறுக்கிக் கட்டிப் பூட்டி வைத்திருப்பான். இன்றைக்குப் பார்த்த புகைப்படங்கள் அதையெல்லாம் உடைத்துப் போட்டிருந்தது. என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் சுழன்றடித்தது; விரும்பத் தகாத காட்சிகள் எல்லாம் விரிந்தது; காலம் ஆடிய கோரத் தாண்டவத்தில் வதைபட்டுப்போன நிகழ்வுகள் எல்லாம் அவன் தொண்டைக் குழியை நெருக்கின. அத்தனையையும் இறுக்கி மூடிய விழிகளுக்குள் அடக்கி, ஆழ் மனதுக்குள் புதைக்க முயன்றான். வெற்றி கிட்ட மாட்டேன் என்றது.
ஆதினியிடம் அவன் சொன்னதெல்லாம் முழுப்பொய். மாமிக்கு எந்த வருத்தமும் இல்லை. அடுத்த அறையில், நிம்மதியான உறக்கத்தில் இருக்கிறார், அவர். அவனால் அவர்களின் முன்னே சென்று நிற்க முடியாது. அவை அழகிய கூடுகள். சிதைந்துபோன சித்திரத்துக்கு அங்கென்ன அலுவல்? அவனுக்கான சாபங்கள் அவனோடே முடியட்டும்.
தேநீர்க் கோப்பையுடன் அறை வாசலில் வந்து நின்றாள், மிதிலா. கணவன் அப்படிப் படுத்திருப்பது அவளை இன்னுமே கவலைக்குள்ளாக்கியது. அந்த வீட்டின் ஆணிவேரே அவன்தான். அவர்களை எல்லாம் ஆலமரமாகத் தாங்குகிறவனும் அவன்தான். தன் சிரிப்பால், கேலியால், சீண்டலால் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பவன். அறையின் கதவைச் சத்தமில்லாமல் சாற்றிவிட்டு வந்து, அங்கிருந்த மேசையில் கோப்பையை வைத்தாள். அப்போதும் அவன் அசையவில்லை. மெல்லச் சென்று, கட்டிலில் அவனருகில் அமர்ந்தாள். அவளை அவன் உணராமல் இருக்கப் போவதில்லை. இருந்தும் முகத்தில் இருந்த கையைக் கூட விலக்க மறுத்தான்.
“தீபன், ஏன் இந்த நேரம் படுத்திருக்கிறீங்க?”
அவனிடம் பதில் இல்லை. என்னாயிற்று இவனுக்கு? “தீபன்?” அவன் மார்பில் தன் கரத்தை வைத்து மெதுவாக உசுப்பியபடி அழைத்தாள்.
அவனின் ஒரு கை அவளின் கையைப் பற்றியது. விழிகளையும் திறந்து அவளைப் பார்த்தான். “என்னப்பா? ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?” எப்போதும் சீண்டிச் சிரிக்கும் அந்த விழிகளில் தெரிந்த அலைப்புறுதலில் இவள் மனது கலங்கிப் போயிற்று. ஒன்றும் சொல்லாமல் பற்றியிருந்த அவளின் கையை இழுத்தான். அவன் மீது வந்து விழுந்தாள் மிதிலா. அப்படியே அவளை வளைத்துத் திருப்பினான். கட்டிலின் மறுபக்கத்துக்கு வந்து சேர்ந்தாள் மிதிலா. என்ன நடக்கிறது என்று அதிர்ந்து நிமிரும் முன்னேயே, அவனின் இறுகிய அணைப்புக்குள் இருந்தாள், அவள்.
“தீபன்?” பயமும் பதட்டமுமாக அழைத்தாள்.
“நீ வேணும் எனக்கு!” அவளின் கழுத்தில் முகம் புதையச் சொன்னான் அவன்.
மிதிலாவின் அத்தனை அசைவுகளும் நின்று போயிற்று. அணைப்பும் முத்தங்களும் அவர்களுக்குள் இருப்பதுதான். தன் ஆசையையும் மறைமுகமாகச் சொல்லுவான் தான். ஆனால், இந்த நேரடி வேண்டுதல்? இது புதிது. அவன் முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்க்க முயன்றாள். அதற்கு மறுத்தபடி இன்னுமின்னும் அவளுக்குள் புதைய முனைந்தான், அவன்.
“நீங்க முதல் என்னைப் பாருங்கோ. என்ன பிரச்சினை எண்டு சொல்லுங்கோ?” அவன் முகத்தைத் தாங்கித் தன்னைப் பார்க்க வைத்தபடி சொன்னாள் அவள்.
“எனக்கு நீ வேணும் மிதிலா. நிம்மதி வேணும். தரமாட்டியா?” என்றான் அவன் அவள் முகம் பார்த்து. திகைப்புடன் அவனைப் பார்த்தாள் மிதிலா. அவன் சுயத்தில் இல்லை; எதையோ எண்ணி அலைபாய்கிறான்; அவன் மனதுக்குள் பெரும் சூறாவளி வீசுகிறது என்று அவன் விழிகள் காட்டிக்கொடுத்தது. அமைதியடைய அவளைக் கேட்கிறான். எப்படி மறுப்பாள்? சின்ன விம்மலோடு அவனைத் தன் மார்பில் சேர்த்தாள்.
சம்மதம் கிடைத்ததும் அவன் கைகள், அவளை, ஒருவித வேகத்துடன் வளைத்தன. தன் சந்தோசத்தைக் காட்டுகிறவனாக அவளின் முகமெங்கும் முத்தமிட்டான். கழுத்தில் முகம் புதைத்தான். அவளின் மென்மையும் இணக்கமும் அவனை ஆட்டிப்படைத்த அத்தனை அலைப்புறுதல்களையும் மறக்கடித்தது. அவள் மாத்திரமே அவன் உலகமானாள். அந்த உலகத்துக்குள் தன்னை மொத்தமாகத் தொலைத்தான். சூழ்ந்துவிட்ட இருளும் தொந்தரவற்ற பொழுதும் அவர்களுக்குக் கைகொடுத்தது. அவளிடமிருந்து அவன் விலகியபோது, அடித்து ஓய்ந்த சூறாவளிக் காற்றைப் போன்று அவன் மனமும் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது.
மிதிலாவின் மனதிலும் பெருத்த அமைதி. அதுநாள் வரையில், அவளைப்போட்டு மருட்டிய அர்த்தமற்ற பயங்கள் எல்லாம் உடைந்து போயிற்று. இத்தனை நாட்களாக, அவளைச் சூழ்ந்திருந்த ஒருவித வெறுமை அகன்று, இன்றைக்கு, நிறைவாக உணர்ந்தாள். இதற்கா நானும் பயந்து அவனையும் தவிக்கவிட்டோம் என்று நினைக்கையில், அவள் உதட்டினில் சின்னச் சிரிப்புக் கூட முகிழ்த்தது. அவன் கைகளுக்குள் களைத்துப்போய்ச் சுருண்டிருந்தவள், விழிகளை மாத்திரம் உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் முகத்திலும் அவள் காண ஆசைப்பட்ட அமைதி சூழ்ந்திருந்தது. ஆசையோடு அவன் கன்னம் வருடினாள். விழிகளை மூடி அதை அனுபவித்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். இருவர் பார்வையும் விலகாமல் கலந்தன. தம் உணர்வுகளைப் பார்வையால் பரிமாறிக்கொண்டனர். அவள் புறமாகச் சரிந்து தன் வெற்று மார்பில் அவளைச் சேர்த்துக்கொண்டான் காண்டீபன். “கோபம் இல்லையே?” அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்.
தலையை மறுப்பாக அசைத்துவிட்டு, “வெளில போக வெக்கமா இருக்கு. மாமா என்ன நினைப்பார்?” என்றாள் அவள். இதுவரையில், இவ்வளவு நேரத்தை இவர்கள் இருவரும் மட்டுமாகத் தனியறையில் செலவழித்ததில்லை. அதுவே, அவருக்கு, அவர்களுக்குள் நடந்ததைச் சொல்லிவிடுமோ என்று வெட்கினாள்.
அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு உண்டாயிற்று. “இப்ப தெரியாட்டியும், இனி இது அடிக்கடி நடக்கேக்க தெரியவரத்தான் போகுது. அதால இதையெல்லாம் யோசிக்காத.” என்றான் அவன்.
எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டுகிறானா? அவளுக்கு அவன் முகம் பார்க்க முடியவில்லை. இன்னும் அவனுக்குள் ஒன்றினாள். வாகாக அவளைத் தன் மார்பில் சேர்த்தவனுக்கு இப்போது, மனம் தெளிந்திருந்தது. சிலவற்றை எப்போதும்போல் கடந்திருந்தான். இப்போது, வேறு சிந்தனைகள் அவனைச் சூழ்ந்தன.
“திரும்ப என்ன யோசிக்கிறீங்க?” அவன் அமைதியாகிவிட்டதை உணர்ந்து வினவினாள் மிதிலா.
“இப்போதைக்குப் பிள்ளை வேண்டாம் மிது. கொஞ்ச நாள் போகட்டும். எங்க ரெண்டுபேருக்கும் வயசிருக்குத் தானே.” என்றான் அவன்.
அதைப்பற்றியெல்லாம் அவள் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதில், அவன் சொன்னதற்கு அவளிடம் எந்த மறுப்பும் இல்லை. “உங்கட விருப்பம்.” என்றாள்.