அப்போது, காண்டீபனின் கைபேசி அழைத்தது. இவளைக் கைக்குள் வைத்துக்கொண்டே எட்டி எடுத்துப் பார்த்தான். அஞ்சலி அழைத்துக் கொண்டிருந்தாள். அழைப்பை ஏற்காமல், “பசிக்குது மிது, சாப்பிட ஏதாவது தாறியா?” என்றான் மிதிலாவிடம்.
“முதலே சொல்ல மாட்டீங்களா? அஞ்சு நிமிசத்தில தாறன்.” திடீரென்று தொற்றிக்கொண்ட பரபரப்புடன் எழுந்து, தன்னைச் சீராக்கிக்கொண்டு, குளிக்க ஓடினாள் மிதிலா.
அதன் பிறகுதான், அஞ்சலிக்கு அழைத்தான் காண்டீபன்.
“சேர், தமயந்தி இப்ப எங்கட வீடு வரைக்கும் வர வெளிக்கிட்டுட்டா. லொலியை மாத்திக் கொடுக்கவா?” பரபரப்புடன் வினவினாள் அஞ்சலி. இரண்டு வருடக் கடூழியத் தண்டனையில் மாதவனைப் போட்டுவிட்ட கோபம் அவளின் தயக்கங்களை உதற வைத்திருந்தது.
ஒரு சில கணங்கள் புருவத்தைச் சுரண்டியபடி யோசித்துவிட்டு, “இல்ல, இப்ப வேண்டாம் அஞ்சலி. முதல் ஆதினி இங்க இருந்து போகட்டும்.” என்றான் காண்டீபன்.
“ஆதினிக்கும் இதுக்கும் என்ன சேர் சம்மந்தம்?”
“இப்ப வரைக்கும் எதுவும் இல்ல. இனியும் எந்தச் சம்மந்தமும் வரக்கூடாது.” என்றவனின் குரலில் அவ்வளவு உறுதி.
ஏதும் நடக்க முதலே அவளைக் காப்பாற்ற முனைகிறான் என்று புரிந்தது. “அவா எப்ப போவா சேர்?
“போக வைக்கோணும். போக வச்சிட்டுச் சொல்லுறன், அப்ப ஆரம்பி.” என்றுவிட்டு வைத்தான் அவன்.
——————
அகரனும் சியாமளாவும் ஒரு வாரம் மாலைதீவுக்குச் சென்று வந்திருந்தனர். அவர்களுக்குள் இருந்த கோபதாபங்களை எல்லாம் மறந்து, அந்நியோன்யமான கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்திருந்தனர். யாழ்ப்பாணத்துக்கே மாற்றல் வாங்கிவிட முயற்சி செய்ய ஆரம்பித்திருந்தான், அகரன்.
சியாமளாவும் இங்கு என்பதில் தினமும் வந்து போனான் எல்லாளன். அவனது இரவு உணவு அங்கேதான் கழிந்தது. தனியாக அங்கே ஏன் இருக்கிறாய்; இங்கேயே வந்துவிடு என்று இளந்திரையன் உட்பட எல்லோருமே வற்புறுத்தியும் எல்லாளன் மறுத்திருந்தான். அதில், உணவுக்கு இங்கேதான் வரவேண்டும் என்பது அவனுக்கான உத்தரவாகிற்று.
அவர்களின் வீட்டில், எல்லோருமே வேலை, கல்லூரி என்று இருக்க நிற்க நேரமற்று ஓடுபவர்கள். எல்லோரையும் இணைக்கும் பாலமாக அன்னையும் இல்லை. அதனால், இளந்திரையனுக்கு, இரவுணவை எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட வேண்டும் என்பது விருப்பம். சியாமளாவும் எல்லாளனும் அந்த வீட்டின் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொண்டதில், இப்போதெல்லாம், ஆதினியால் அவர்களைத் தவிர்க்க முடிவதில்லை. அவளின் வீட்டில், அவளே அவர்களை எல்லாம் விட்டு ஒதுங்க ஆரம்பித்தாள். அதுவே, இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்கிற அவளின் எண்ணத்தை, நாளுக்கு நாள் அதிகப்படுத்திற்று.
———————————-
அன்று, காண்டீபனின் வகுப்புக்குச் சாகித்தியன் வரவில்லை. இது முதல் முறையும் அல்ல. கடந்த இரண்டு வாரங்களாக, மற்ற வகுப்புகளில் இருப்பவன் காண்டீபனின் வகுப்பை மாத்திரம் தவிர்க்க ஆரம்பித்திருந்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், அஜய்யை இவன் வவுனியா பல்கலைக்கு மாற்றியதில் இருந்து இப்படித்தான்.
அன்று, இவன் வகுப்பு ஆரம்பிக்க முதல் அங்கிருந்து வெளியேறியவனைக் காத்திருந்து பிடித்தான் காண்டீபன். “உனக்கு என்னில என்ன கோபம்?” நேராகவே வினவினான்.
சாகித்தியனின் மிகுந்த மரியாதைக்குரிய விரிவுரையாளன்தான் காண்டீபன். அவனிடம் நேரடியாகத் தன் கோபத்தைக் காட்ட முடியாமல் தான் இத்தனை நாட்களாகத் தவிர்த்துக் கொண்டிருந்தான். இன்று, அவனே நேரே பிடித்துவைத்துக் கேட்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று. “நீங்க செய்தது சரியா சேர். போலீசும் கோர்ட்டும் எங்களுக்கு நியாயமா நடக்கேல்ல எண்டு பாத்தா நீங்களும் இப்பிடிச் செய்யலாமா சேர்?” கோபமும் குமுறலுமாகக் கேட்டான் அவன்.
அவனின் கோபத்துக்கு முற்றிலும் மாறான நிதானம் காண்டீபனிடம் இருந்தது. “ஆரா இருந்தாலும் நல்லாருக்கோணும் எண்டுதான் ஆசைப்படுறேன். அதுவும், நீங்க எல்லாருமே இளம் பிள்ளைகள். நேர் வழில படிச்சு, செய்த பிழைகளைத் திருத்தி, முன்னுக்கு வரவேணும் எண்டு நினைக்கிறது, பிழையா?” என்று வினவினான்.
“அந்தளவுக்கு அவன் நல்லவனா சேர்?”
“கைபிடிச்சுத் தூக்கி விடவே கூடாத அளவுக்குக் கெட்டவனும் இல்ல.”
அதற்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் சாகித்தியன். அந்தளவுக்குக் கெட்டவன் இல்லை என்றால் அவன் செய்தது பாரிய தவறில்லை என்று பொருளா?
அவன் மனம் கோபத்தில் கொந்தளித்தது.
“இங்க பார், அவனுக்கு அவளைப் பிடிச்சிருந்திருக்கு. அதைக்கூடச் சொல்லாம அவள் படிச்சு முடிக்கட்டும் எண்டு காத்திருந்திருக்கிறான். எல்லை மீறிப் போனது பிழைதான். பெரும் பிழை. ஆனா, அதை அவன் திட்டம் போட்டோ கெட்ட எண்ணத்தோடயோ செய்யேல்ல. பிறகு, அதைத் தொடரவும் இல்ல. அத வச்சு உன்ர தங்கச்சிய அவன் வேற எதுக்கும் மிரட்டவும் இல்ல. அதேமாதிரி, அவள் செத்ததுக்கு அவன் காரணம் இல்லையடா. அவள் பழகின போதையும் அதால உண்டான டிப்ரஷனும் தான் காரணம். அத விளங்கிக்கொள்ளு சாகித்தியன்!” அழுத்திச் சொன்னான் காண்டீபன்.
திரும்ப திரும்ப எல்லோருமே அவன் தன்கையில் தானே கொண்டுவந்து முடிக்கிறார்கள். மனம் வெறுத்துவிட, “ஓகே சேர். நான் போகவா?” என்றான் சாகித்தியன்.
“டேய்!” என்றவனுக்கு இன்னும் என்ன சொல்லி அவனுக்குப் புரியவைப்பது என்று பிடிபடமாட்டேன் என்றது. “எனக்கு நீயும் அவனும் ஒண்டுதான். இது எல்லாத்துலயும் இருந்து வெளில வந்து, நீ நல்லாருக்க வேணும் எண்டு எப்பிடி நினைக்கிறேனோ அப்பிடித்தான், அவனையும் நினைக்கிறன். இங்க அவனால படிக்கேலாது. அவனைத் தினமும் பாத்துக்கொண்டு உன்னாலயும் நிம்மதியாப் படிக்கேலாது. உனக்கு இருக்கிற கோபத்துக்கு, நீ அவனோட சண்டை சச்சரவுக்குப் போய், உன்ர வாழ்க்கையும் பாத மாறிப் போயிடக் கூடாது எண்டு உன்னைப் பற்றியும் யோசிச்சிட்டுத்தான் அவனை மாத்தி விட்டனான்.” என்றான் கடைசியாக.
“ஆர் என்ன சொன்னாலும் நம்பின எல்லாருமே கைய விட்டுடீங்க சேர்!” என்றான் மனம் விட்டுப்போன குரலில்.
“டேய்! அப்பிடிச் செய்வமாடா? நீ முதல், இந்தப் பிரச்சினைகளுக்க இருந்து கொஞ்சம் வெளில வந்து யோசி சாகித்தியன். அப்ப எல்லாம் விளங்கும். அதைவிட, படிப்பில கவனத்தைச் செலுத்தடா. முடிஞ்சதையே பிடிச்சுக்கொண்டு தொங்கித் தயவுசெய்து உன்ர எதிர்காலத்தைப் பாழாக்கிப் போடாத.” தன்னால் முடிந்ததாக அவனுக்குப் புத்தி சொன்னான் காண்டீபன்.