இரண்டாவது முறையாக, அவளின் பெண் மனத்தைப் பிரட்டிப் போட்டான். அன்று தெரியாமல். இன்று தெரிந்தே!
நொடிகள் சில கடந்து அவன் விடுவித்தபோது, அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. முகம் செக்கச் சிவந்திருந்தது. அதை அவனுக்குக் காட்ட முடியாமல் அங்கிருந்து ஓட முயன்றாள்.
வேகமாக அவளை எட்டிப் பிடித்தவனின் முகம் முழுக்கச் சிரிப்பில் மலர்ந்திருந்தது. அந்த அறைக்குள் வரும் போதிருந்த கோபம் இப்போது மருந்துக்கும் இல்லை. “இனியும் என்னத் தேடாம இருப்பியா?” என்றான் உல்லாசக் குரலில்.
அதற்கா இந்த வேலை பார்த்தான்? விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் ஆதினி.
“இந்த ஆச கொழும்புக்கு வந்த நேரமே இருந்தது. ஆனா, படிக்கிற பிள்ளையைக் கெடுக்கக் கூடாது எண்டுதான் பேசாம இருந்தனான். இப்பவும் உன்ர திமிரக் காட்டி, நீதான் என்னைச் செய்ய வச்சது!” என்றான் கண்களால் சிரித்தபடி.
இல்லாவிட்டால் செய்திருக்க மாட்டானாமா? எப்படியெல்லாம் கதையை மாற்றுகிறான்! ஆதினியால் நடப்பதை நம்பவே முடியவில்லை. அவளைக் களவாடும் கண்கள், இளகி மலர்ந்திருந்த முகம், சிரிக்கும் உதடுகள் என்று இந்த எல்லாளன் முற்றிலும் புதிதாய்த் தெரிந்தான்.
அவள் பார்வை அவனை இன்னும் ஈர்த்தது போலும். “என்னடி செய்றாய் என்ன?” என்றான் கரகரத்த குரலில். “அப்பிடியே உன்னைக் கடிச்சுச் சாப்பிட வேணும் மாதிரி இருக்கு. இவ்வளவு காலமும் நல்லாத்தான் இருந்தன். நீதான் என்னைக் கெடுத்திட்டாய்.” என்றவனின் உதடுகள், அவள் கழுத்து வளைவில் ஒரு வேகத்துடன் புதைத்தன.
ஆதினியின் தேகத்தில் உணர்வுகளின் பேரலை. “ப்ளீஸ் விடுங்க!” என்றாள் அவனைத் தடுக்க வழியற்று.
“இந்த ரெண்டு நாளையும் வீணாக்கிப் போட்டு இப்ப விடுங்கவா? கொஞ்ச நேரம் பேசாம இரு! இப்ப போனா இனி எப்ப பாக்கிறது?”
அவனின் எல்லை மீறல்களில் அவளுக்குள் பூகம்பம். பலகீனமான அவள் மறுப்புகள் எல்லாம் பயனற்றுப் போயின. கடைசியில் நிற்கமுடியாமல் தொய்ந்து, அவன் மார்பிலே அடைக்கலமாகியிருந்தாள் ஆதினி.
அப்போதும் முகம் முழுக்க முத்தமிட்டு அவளை மூச்சடைக்க வைத்தான்.
அவன் மீதான மயக்கத்தோடே கொழும்பு வந்து சேர்ந்தாள் ஆதினி. அதன் பின்னான நாள்கள் எல்லாம் அவன் நினைவுகளின் ஆதிக்கத்தோடே கழிந்தன.
*****
காலம் மின்னலாக விரைந்துகொண்டிருந்தது. நாட்டின் மீது அக்கறை கொண்ட இளையவர்களை ஒன்றாக இணைத்து, கண்ணுக்குத் தெரியாத காவலாளிகளாக மாற்றினான் எல்லாளன்.
சாகித்தியன், அஜய் போன்றவர்களையும் பயன்படுத்திக்கொண்டான். சந்தேகப்படும்படியாக என்ன நடந்தாலும் அவன், கதிரவன், அகரன் மூவரின் இலக்கங்களுக்கும் தகவல் தர வைத்தான்.
கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், ஒதுக்குப்புறமாக இளம் பிள்ளைகள் கூடுகிற இடங்கள், கிரவுண்டுகள், தேநீர்க் கடைகள், சந்திகள் என்று எல்லா இடங்களையும் வளைத்து வளைத்துப் பிடித்தான். என்ன வளைத்துப் பிடித்தும் போதை மருந்து விநியோகிக்கும் வலைப்பின்னலின் பெரிய தலையைப் பிடிக்க முடியவில்லை.
காரணம், அதில் இருப்பவர்களுக்கே தலை யாரென்று தெரியாது. அனைத்துத் தகவல் பரிமாற்றமும் குறுந்தகவல் மூலம் நடந்திருந்தன. அவையும் தகவல்கள் வந்த சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.
அந்தக் கைப்பேசி இலக்கங்களைத் தேடிப் போனால், எங்கோ பின்தங்கிய கிராமம் ஒன்றில், கைப்பேசியின் வாசமே தெரியாத யாரோ ஒருவரின் பெயர் இருந்தது.
இது, இப்படித்தான் முடியும் என்பது அவன் அறிந்ததுதான். என்றாலும், எங்காவது ஒரு சின்ன துணுக்காவது கிடைத்துவிடாதா என்கிற வெறியுடன் விடாமல் வேட்டையாடிக்கொண்டே இருந்தான். இராட்சத மீனைப் பிடிப்பதற்கு சிறு தூண்டில் தேவையாகத்தானே இருக்கிறது!
அன்று, பொழுது மாலையைத் தொட்டிருந்தது. முன்னும் பின்னும் மெய்ப்பாதுகாவலர்கள் பைக்கில் வர, காரில் நீதிமன்றிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தார் இளந்திரையன்.
ஆதினியைப் பார்த்து இரண்டு மாதங்களாகியிருந்தன. கொழும்புக்கு ஒரு முறை சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு நிமிர்ந்தவர், கண் முன்னே நடப்பதைக் கண்டு அதிர்ந்து, “குமார், கார நிப்பாட்டுங்க!” என்றார் அவசரமாக.
அது ஒரு நாற்சந்தி. வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. முன்னால் சென்ற மெய்ப்பாதுகாவலர் தன் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி, வாகனங்களை ஒதுக்கி இவரின் காருக்கு வழி விட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, எங்கிருந்தோ திடீரென்று முளைத்த ஒருவன், அவர் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவி, மின்னல் விரைவில் இவரின் காரை நோக்கிச் சுட்டான். நொடி நேரம் செய்வதறியாது திகைத்தாலும், “குமார், கீழ படுங்க!” என்று ஓட்டுனருக்குக் கட்டளையிட்டபடி, தன் உடலையும் குறுக்கி மறைத்துக்கொண்டார் இளந்திரையன்.
சில நொடிகளுக்குச் சத்தமில்லாமல் போக, தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தார். அங்கே, அவரது மெய்ப்பாதுகாவலரும், அந்தத் தாக்குதலாளியும் ஒருவரை ஒருவர் பிடித்து, இழுபறிப்பட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றிவிடப் போராடிக்கொண்டு இருந்தனர்.
“ஏய்! அவரை விடு!” என்றபடி காரை விட்டு இறங்கப் போனவரை பின்னால் வந்த மெய்ப்பாதுகாவலர் அனுமதிக்கவில்லை.
“சேர், ப்ளீஸ் வெளில வராதீங்க!” என்று அவர் இறங்க முடியாதபடி கார் கதவருகில் நின்றுகொண்டு, தாக்குதலாளியை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு குண்டு அவன் தோள் பட்டையைத் துளைத்தது. அதற்குமேல் பொறுக்க முடியாதவன், தன்னைப் பிடித்திருந்தவரைத் தள்ளி விழுத்திவிட்டு, அவரை நோக்கிச் சுட்டான். அதே வேகத்துடன் காருக்குள் இருந்தவரை நோக்கியும் சில குண்டுகளைத் துப்பிவிட்டு, எதிரில் வந்த பைக்கில் பாய்ந்து ஏறித் தப்பினான்.
திடீரென்று நடந்த இந்தச் சூட்டுச் சம்பவத்தில் அவரின் இரண்டு மெய்ப்பாதுகாவலரும் காயமடைந்திருந்தனர். இளந்திரையனுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்ட நிலை. அடுத்த கணமே, காவல்துறைக்கு அறிவித்துவிட்டு, அவரும் குமாருமாகச் சேர்ந்து இருவரையும் தூக்கிக் காரில் போட்டுக்கொண்டு, வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
இடையிலேயே, எல்லாளன் தலைமையிலான காவற்படை விரைந்து வந்து, பொறுப்பை எடுத்துக்கொண்டிருந்தது. நின்று நிதானிக்க யாருக்கும் நேரமில்லை. ஒற்றைப் பார்வையில் அவரை அளந்து, அவருக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்துகொண்டு, படுகாயமுற்ற இருவரையும் வைத்தியசாலையில் பாதுகாப்பாகச் சேர்ப்பித்தான்.
அதே நேரம், அவர்கள் இருவரின் நிலை என்ன என்று அறியாமல், வைத்தியசாலையை விட்டு நகரவே மாட்டேன் என்று நின்றவரைக் கட்டாயப்படுத்தி வீட்டில் சேர்ப்பித்தான். உடனேயே வீட்டின் பாதுகாப்பையும் அதிகப்படுத்தினான்.
தப்பியோடிய குற்றவாளியைத் துரத்திப் பிடிப்பதற்காக, விசேட அதிரடிப் படை யாழ்ப்பாணம் முழுவதற்கும் இறக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சாட்சிகளைத் திரட்டும் வேலையும் நடந்தது.
செய்தி அறிந்த ஆதினி அடித்துப் பிடித்து அன்றே ஓடி வந்தாள். அவர்கள் வாழ்வு எப்போதுமே ஆபத்து நிறைந்தது என்பது அவளுக்குச் சொல்லப்படாததன்று! இத்தனை காலத்தில் அது பேச்சளவில் மட்டுமே இருந்ததில் அவளிடம் எப்போதுமே ஒருவித அசட்டைத்தனம் குடிகொண்டிருக்கும்.
இன்றோ, அந்த ஆபத்துக் கண் முன்னே வந்துவிட்டுப் போயிருக்கிறது. கதிகலங்கிப்போனாள். நடுக்கத்துடன் தந்தையின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
அதைக் கவனித்துவிட்டு, “இப்பிடிப் பயப்பிடக் கூடாது அம்மாச்சி. நீங்க வந்தே இருக்கத் தேவேல்ல. அப்பாக்கு ஒண்டுமில்லை!” என்று இளந்திரையன் எவ்வளவோ தேற்றியும் அவள் தெளிவதாக இல்லை.
இதற்குள் முதலாவது மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்தார். நடந்த நிகழ்விலேயே ஆடிப்போயிருந்த இளந்திரையன், பதினைந்து வருடங்களாகத் தன்னுடனேயே பணியாற்றிய மனிதர், இன்று தனக்காகவே உயிர் நீத்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மொத்தமாக உடைந்துபோனார்.
செய்தி காட்டுத் தீயைப் போன்று வேகமாகப் பரவிற்று. யார், எதனால், எப்படி என்று யோசிக்க முடியாமல் மொத்த யாழ்ப்பாணமும் கதிகலங்கி நின்றது. தம் பெரும் சொத்தான நீதிபதி இளந்திரையனின் உயிரைக் காத்துகொண்டாயிற்று என்று மகிழ்வதா, இல்லை, அவருக்காகத் தன்னுயிரை நீத்த மெய்ப்பாதுகாவலருக்காக வருந்துவதா என்று தெரியாத நிலை.
இரண்டாவது மெய்ப்பாதுகாவலரும் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார் என்று அறிந்து, அவரைப் பார்க்கப் போகிறேன் என்று நின்ற இளந்திரையனை எல்லாளனும் அகரனும் அனுமதிக்கவே இல்லை.
அதனால், அவருக்கு மிகுந்த மனவருத்தம். இந்தமுறை ஆதினியும் எல்லாளன் பக்கமே நின்று, அவரை எங்கும் செல்ல விடாமல் வீட்டில் வைத்துக்கொண்டாள்.
அன்று முழுக்க அகரனும் எல்லாளனும் எவ்வளவு தேடியும் சுட்டவனையும், அவனை ஏற்றிக்கொண்டு தப்பியோடிய அந்த பைக் காரனையும் பிடிக்கவே முடியவில்லை. அவர்கள் தப்பிச் சென்ற பாதை நெடுகிலும் இருந்த சிசிடிவி கமராக்கள் அத்தனையையும் ஆராய்ந்தும் ஒரு பகுதிக்கு மேல் அவர்களைத் தொடர முடியவில்லை.
அது கொடுத்த எரிச்சலும் சினமுமாக வீடு வந்தவர்கள் மொத்தமாகவே களைத்துப்போயிருந்தனர். அகரன் குளிக்கச் சென்றுவிட, ஒரு ஓரமாக ஒடுங்கி அமர்ந்திருந்த ஆதினியை அப்போதுதான் கவனித்தான் எல்லாளன்.
“ஏன் இப்பிடி இருக்கிறாய்? எங்க அங்கிள்?”
“அறைக்க ஃபோன் கதைக்கிறார்.” பதில் சொன்னவளுக்குச் சத்தமே எழும்பவில்லை. அவனைக் கண்டதில் இன்னுமே அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
நினைவு தெரிய ஆரம்பித்த காலத்திலிருந்தே அன்னை இல்லை என்று தெரியுமாதலால் அது அவளைப் பெரிதாகத் தாக்கியதில்லை. அதுவே அப்பாவும் இல்லை என்கிற நிலை வந்தால் என்று நினைத்த மாத்திரத்தில் விழிகள் சூடான கண்ணீரைத் தள்ளிவிட, இதழ்கள் அழுகையில் துடித்தன.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் வேகமாக எழுந்து வந்து, “என்ன நீ? அப்பிடி எல்லாம் அங்கிளை விட்டுடுவமா நாங்க?” என்று அவள் தலையைத் தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“அப்ப இண்டைக்கு நடந்தது?” அதைக் கேட்கும்போதே அவள் தேகம் அழுகையில் குலுங்கிற்று.
“இதென்ன அழுகை?” என்று அவள் கண்களைத் துடைத்து விட்டுவிட்டு, “இண்டைக்கு என்ன நடந்தது? சுட வந்தவனால அங்கிள சுட முடிஞ்சதா? இல்லத்தானே? அதுக்கு என்ன காரணம்? அவருக்குப் பாதுகாப்பா வந்த போலீஸ். அந்தப் பாதுகாப்பு எப்பவும் இருக்கும். இனி இன்னும் கூடுதலா இருக்கும். அதால பயப்பிடாத. ஒரு நிமிசம் அப்பா செத்த அந்தக் குடும்பத்தை யோசிச்சுப் பார். உன்ன மாதிரி ரெண்டு பிள்ளைகள் அவருக்கும்.” என்று என்னென்னவோ சொல்லித்தான் அவளைத் தேற்றினான்.
மேலே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. “அகரன் குளிச்சிட்டான் போல.” என்றான் அவளிடம்.
அப்போதுதான் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு, வயிற்றில் முகம் புதைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, வேகமாக விலகினாள். முகமும் சூடாகிப்போயிற்று
மெல்லிய குறுஞ்சிரிப்புடன் அகரன் வருகிறானா என்று மேலே ஒரு முறை பார்த்துவிட்டு, அவள் தாடையைப் பற்றி உயர்த்தித் தன்னைப் பார்க்க வைத்து, “என்னட்ட என்னடி கூச்சம் உனக்கு? அகரனுக்கு முன்னால நாங்க இப்பிடி நிக்கிறது அழகில்லை எண்டுதான் சொன்னனான். மற்றும்படி நீ என்னட்ட இப்பிடித்தான் இருக்கோணும், சரியா? இல்லையோ வா உன்ர அறைக்க போவம்.” என்றதும் முகம் சிவக்க அவனைப் பிடித்துத் தள்ளி விட்டுவிட்டு, எழுந்து உள்ளே ஓடினாள் அவள்.
சின்ன நகைப்புடன், “பசிக்குது ஆதினி. சாப்பிட ஏதாவது சாந்தி அக்காட்ட வாங்கிக்கொண்டு வா.” என்று பின்னாலேயே குரல் கொடுத்தான்.