வெயில் நன்றாக உச்சிக்கு ஏறிய பகல் பொழுது. அடர் நீல யமஹா பைக் ஒன்று, வீதியில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதைக் கொண்டுபோய், யாழ்ப்பாண டவுனில் அமைந்திருந்த மூன்று மாடிகள் கொண்ட அந்த சூப்பர் மார்க்கெட்டின் முன்னே நிறுத்தினான், அதன் உரிமையாளன். அணிந்திருந்த கருப்புநிற ஹெல்மெட்டை கழற்றாமல் கடைக்குள் நுழைந்து, சரியாகப் பலவகையான ஊதுபத்திகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்ப் முன்னே சென்று நின்றான்.
அவன் கண்கள், அந்த ஷெல்ப்பை, மிகுந்த கூர்மையுடன் அலசியது. அங்கே, ஒரு பைக் திறப்பு, சில ஊதுபத்திகளுக்கு நடுவில் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அப்போது, ‘கருப்பு யமஹா, உன்ர பைக்கில இருந்து சரியாப் பன்னிரண்டாவதா நிக்குது. நம்பர்: xxxx’ என்று அவன் கைபேசிக்குக் குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. வாசலுக்கு வந்து நின்று, வரிசையில் நின்ற பைக்குளை விழிகளாலேயே எண்ணி, சரியாக, அந்தக் கருப்பு நிற யமஹாவை எடுத்துக்கொண்டு மீண்டும் பறந்தான்.
அது ஒரு கலவன் பாடசாலை(ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் கலந்து கற்கும் பள்ளிக்கூடம்). இடைவேளை விடுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. பள்ளிக்கூட வாசலில் இருந்து, அண்ணளவாக இருநூறு மீற்றர்கள் தள்ளி, தள்ளு வண்டிலில் ஐஸ்கிறீம் விற்கும் ஒரு ஐயா நின்றிருந்தார். அவரின் அருகில் பைக்கை நிறுத்தி, “பச்சைக் கலர் ஐஸ்.” என்றான் அவன். அவரின் முகத்தில் பதட்டம். சுற்றிமுற்றிப் பார்த்தார். அவர் ஐஸைக் கொடுக்க அவன், தன்னிடம் இருந்த பையை அவரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பறந்துபோனான்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் இடைவேளைக்கான மணி ஒலித்தது. நான்கைந்து மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்பக்கம் விரைந்தனர். இருவர் காவல் காக்க, இருவர் உதவி செய்ய, இன்னும் இருவர் உயரமான அந்த மதிலைத் தாண்டிக் குதித்து ஓடினர்.
“எடுங்க எடுங்க!” கசக்கப்பட்டிருந்த பேப்பர் குவியலைப் போன்று பொக்கெட்டுகளுக்குள் இருந்த பணக் கத்தையை அள்ளிக் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து சில ஊசிகளைப் பறித்துக்கொண்டு, அதே வேகத்தில் மறுபடியும் மதிலேறிப் பாடசாலைக்குள் குதித்தனர்.
“கொண்டா கொண்டா!” என்று பரபரத்தான் ஒருவன்.
“விசராடா உனக்கு? இங்க எண்டா மாட்டிடுவம். பாத்ரூமுக்கு வாங்கடா!”
கழிவறைக்குள் ஒவ்வொருவராக நுழைந்து, ஊசியைச் சர்வ சாதாரணமாக ஏற்றிக்கொண்டனர்.
இடைவேளை முடிந்திருந்தது. ஆளாளுக்கு வைத்திருந்த சுவிங்கங்களை வாய்க்குள் தள்ளிக்கொண்டனர். ஒவ்வொருவரின் கண்களும் மயக்கத்தைச் சுமந்திருக்க, முகங்கள் சிவந்திருக்க, மெல்லிய வியர்வை அரும்பியிருந்தது. வகுப்பறைக்குள் நுழைந்து பின்னிருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டனர்.
அந்தப் பாடவேளை ஆசிரியர், வகுப்பை ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே இவர்கள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டுகொண்டார். “டேய்! ஏனடா ஆளாளுக்குத் தூங்கி வழியிறீங்க? மத்தியான இடைவேளை விட்டாலே காணும் என்ன, உங்க எல்லாருக்கும்? போய் முகங்களைக் கழுவிக்கொண்டு வாங்க. அதுக்குப் பிறகு ஒழுங்கா வகுப்பைக் கவனிக்க இல்லையோ கிரவுண்ட சுத்தி ஓட விட்டுடுவன். போங்கடா!” என்று துரத்திவிட்டார்.
பாடசாலை முடிந்தது. சைக்கிளை எட்டி மிதித்தபடி வெளியே வந்தான், ஒரு மாணவன். நேராகச் சென்று அந்த ஐஸ் கடை ஐய்யாவின் முன்னே நிறுத்தினான்.
“இருக்கா இன்னும்?”
“ஓம் தம்பி..” மனம் ஒப்பாமல் சொன்னார். அவரால் இதை மறுக்க முடியாது. நான்கு பிள்ளைகள். மனைவி இல்லை. அவரின் இந்த உழைப்புத்தான் ஐவருக்கும் உணவிடுவது. முதன் முதலாக, இதைச் செய்ய மாட்டேன் என்று மறுத்தபோது, அவரின் தள்ளு வண்டிலையே அடித்து நொறுக்கியிருந்தார்கள். பிறகு, அவர்களாகவே புது வண்டில் வாங்கித் தந்து, இதைச் செய்ய வைத்திருந்தார்கள். இப்போது, வண்டிலும் அவர்களது என்பதில் வலுவாக எதையும் மறுக்கும் உரிமை, அவரிடமில்லை. மனச்சாட்சிக்கு விரோதமாக இதைச் செய்துகொண்டிருந்தார்.
“எத்தின மணிக்கு இங்க இருந்து போவீங்க?”
“நாலரை அஞ்சாகும்.”
“அதுக்கிடைல நான் வருவன். போறேல்ல. நான் வரேக்க நீங்க இங்க இருக்கேல்லையோ, அதுக்குப் பிறகு இங்க யாவாரம் செய்ய மாட்டீங்க!” என்று மிரட்டிவிட்டு, சைக்கிளை வீடு நோக்கி மிதித்தான், அவன்.
மனம் உடைந்துவிட, அப்படியே, அந்த நடைபாதையில் அமர்ந்துவிட்டார் மனிதர். மகன் வயதுடையவன். அவனின் மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய நிலை நெஞ்சை அறுத்தது. எதுவும் வேண்டாம் என்று உதறிவிட்டுப் போக முடியவில்லையே. தன்னையே நொந்தபடி இருந்தவரிடம், “சொக் ஐஸ் இருக்கா, மாமா?” என்றுகொண்டு வந்தாள், பள்ளிச் சிறுமி ஒருத்தி.
“இருக்காச்சி. பொறுங்கோ, எடுத்துத் தாறன்.” என்றபடி எழுந்தவர், தன் வியாபாரத்தைப் பார்த்தார்.
“அம்மா! அம்மா!” சைக்கிளை நிறுத்திவிட்டு, விறுவிறு என்று வீட்டுக்குள் நுழைந்தபடி அன்னையைக் கூவி அழைத்தான், அவன்.
“என்ன தம்பி? என்னத்துக்கு இந்தக் கத்துக் கத்துறாய்?” என்றபடி வந்தார் அவர்.
“எனக்கு அவசரமா ஒரு ரெண்டாயிரம் காசு வேணும், தாங்க!”
அவர் அதிர்ந்துபோனார். “என்ன விளையாடுறியா? இங்க என்னவோ மரத்தில காசு காய்க்கிற மாதிரிக் கேக்கிறாய்? அடிக்கடி வந்து ரெண்டாயிரம் தா மூவாயிரம் தா எண்டு வாங்கிக்கொண்டு போறியே, அப்பிடி என்ன செலவு உனக்கு? வரவர உன்ர போக்குச் சரியில்லத் தம்பி. இனி அப்பாட்டத்தான் சொல்லிக் குடுப்பன்.” என்று மிரட்டிவிட்டு சமையலறைக்கு நடந்தார் அவர்.
“ப்ச்! இப்ப தாங்க நீங்க. இனிக் கேக்க மாட்டன்!”
“இப்பிடித்தான் நேற்றும் சொன்னனீ. இனி ஒரு ரூபாவும் தரமாட்டன். முதல் தள்ளு அங்காள, நான் மா அவிக்க வேணும்.” என்று அவனைப் பாதையிலிருந்து ஒதுக்கிவிட்டபடி ஒரு அடிதான் எடுத்து வைத்திருப்பார்.
“காசு தரப்போறியா இல்லையா நீ?” என்றவன் அவரைப் பிடித்துத் தள்ளி விட்டிருந்தான். சுவரோடு சென்று மோதியவருக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. அவரின் மகனா? அவரையா? ஆத்திரமும் ஆவேசமும் பொங்கியது. “என்னடா நினைச்சுக்கொண்டு இருக்கிறாய் நீ. பிள்ளை பிள்ளை எண்டு பாத்தா என்னையே தள்ளி விடுறியோ? உனக்கு ரெண்டு போட்டாத்தான் சரியா வரும்!” என்று அவன் முதுகில் போடப்போனவரை அப்படியே, தள்ளி விழுத்தி காலால் எட்டி உதைத்தான் அவன். “காசு கேட்டாத் தரவேணும். அத விட்டுப்போட்டு அடிக்க வருவியோ நீ. எடு காச!” என்று கத்தியவன் அவரின் தலையைப் பிடித்துச் சுவரோடு மோதினான்.
“ஐயோ அம்மா!” குருதி வடிந்த நெற்றியைப் பொத்திக்கொண்டு கத்தியருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அதற்குமேல் அவரால் முடியவில்லை. அவனோ வெறிகொண்டவன் போன்று அவரைத் தாக்கத் தொடங்கியிருந்தான். அவனிடமிருந்து தப்பப் போராடினார். முடியவில்லை. பதினாறு வயது நிரம்பிய, அவர் ஊட்டி வளர்த்த ஆரோக்கியமான மகன். உள்ளே சென்றிருந்த போதையும் சேர்ந்துகொண்டதில் மூர்க்கமாகியிருந்தான். உடலின் சக்தியெல்லாம் வடிந்து, அப்படியே தரையில் சுருண்டவர், “சுவாமி அறை அலமாரிக்க காசு கிடக்கு. என்னை விடு!” என்று முணுமுணுத்தார்.
“இனித் தரமாட்டன் அது இது எண்டு ஏதாவது கதைச்சுப்பார், உனக்கு இருக்கு!” விரல் நீட்டி உறுமிவிட்டு, அவர் சொன்ன இடத்தில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு, மீண்டும் புறப்பட்டான், அவன்.
தரையில் கிடந்தவரைப் பற்றியோ அவர் நெற்றியில் வழிந்த குருதியைப் பற்றியோ அவன் பொருட்படுத்திக் கொள்ளவே இல்லை. கண்ணீர் தரையை நனைக்க, போகும் மகனையே பார்த்திருந்தார் அவர். எல்லாம் அவர் கொடுத்த இடம். அவன் செய்யும் தவறுகளை எல்லாம் கணவருக்கு மறைத்து, இடம் கொடுத்ததன் பலன்.
—————————–
பல்கலைக்கழகத்தில், என்றும்போல் அன்றும் ஆதினியைத் தேடிக்கொண்டு வந்தான் காண்டீபன். புருவம் சுருக்கி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் ஆதினி. இருவரும், இந்த நேரத்தில், இந்த இடத்தில் சந்திப்போம் என்றெல்லாம் பேசிக்கொண்டது இல்லை. ஆனாலும், தினமும் காண்டீபன் அவளைக் காண வருவான். அப்படி வந்துவந்தே, அவனுக்காக அவளைக் காத்திருக்கப் பழக்கியிருந்தான். இப்போதும், அவனுக்காகத்தான் காத்திருந்தாள். இருந்தாலும், ஏன் இப்படித் தினமும் வந்து அவளோடு பேசுகிறான்?
“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு?” கேட்டுக்கொண்டே அவளருகில் தானும் அமர்ந்தான் காண்டீபன். அவளின் மடியில் இருந்த, ‘டிபன் பொக்ஸை’ இயல்பாக எடுத்து, என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தான். புட்டும் நல்லெண்ணையில் பொரித்த முட்டைப் பொரியலும் கூடவே, இரண்டு பொரித்த மிளகாயும் இருந்தது. “பாக்கவே வாயூரூதே!” அதை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.
இப்போதெல்லாம் இதுவும் அவர்களிடத்தில் வழக்கமானதாயிற்று. அவள் எப்போதுமே, கேண்டீனில் தான் ரோல்ஸ், வடை என்று எதையாவது உண்பாள். அவள் கொண்டு வரும் உணவு அவனுக்கானது.