“தயவு செய்து ஆளாளுக்கு என்னாலயா என்னாலயா எண்டு கேக்காதீங்க. என்னவோ எனக்கு நான் செய்யவே கூடாத ஏதோ ஒண்டச் செய்ற மாதிரி இருக்கு. எனக்கு இருவது வயது. இந்த உலகத்தைத் தனியா எதிர்கொள்ள விருப்பமா இருக்கு. எப்பிடியும் நான் லோயர் ஆகவேணும் எண்டால் கொழும்புக்குப் போகத்தான் வேணும். அத இப்பவே செய்றன். அதைவிட நான் ஒண்டும் நிரந்தரமா இங்க இருந்து போகவும் இல்ல. ரெண்டரை வருசம் தான். திரும்ப இங்கதான் வரப்போறன். சோ பிளீஸ், இனி ஆரும் இதைப்பற்றிக் கதைக்க வேண்டாம்!” என்றவள் எழுந்து கையைக் கழுவிக்கொண்டு தன்னுடைய அறைக்கு மாடியேறினாள்.

அதுவரையில் ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல் உண்பதில் மாத்திரம் கவனம் செலுத்திய எல்லாளனின் மீது எல்லோரின் பார்வையும் குவிந்தது. அவனோ, “அந்தப் பருப்பில கொஞ்சம் போடு.” என்று தங்கையிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்.
ஏதாவது சொல்வானாக்கும் என்று அகரன் அவனை அவனைப் பார்க்க, அவனோ உணவை முடித்துக்கொண்டு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

அதுவேறு அகரனுக்குக் கோபத்தைக் கொடுத்தது. “என்னப்பா இதெல்லாம்?” என்று தந்தையிடம் வினவினான்.

“தம்பி இங்க பார், ஏதோ ஒரு விதத்தில அவாக்கு மனம் விட்டுப் போயிற்று. தனியா இருக்க ஆசைப்படுறா. வலுக்கட்டாயமாப் பிடிச்சு நிப்பாட்டி இன்னுமின்னும் வெறுப்பை வளக்கிறத விட இப்பிடி விட்டுப் பாசத்தை வளக்கலாம். கொழும்பு ஒண்டும் பெரிய தூரமில்லை. நாங்களும் போகலாம். அவாவும் வரலாம். அதால ஒண்டும் கதைக்காத விட்டுப்பிடி.” என்றுவிட்டுப் போனார் இளந்திரையன்.

இப்போது, கணவனும் மனைவியும் மட்டுமே எஞ்சியிருக்க, “உண்மையா சொறி அகரன். இந்தளவுக்கு இதெல்லாம் வரும் எண்டு நான் யோசிக்கவே இல்லையப்பா.” என்று கண்ணீருடன் சொன்னவளை, “ப்ச் விடு! நீயும் இன்னும் எத்தின தரம்தான் மன்னிப்பு கேப்பாய்!” என்றுவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவினான் அவன்.

சியாமளா எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அவர்களின் அறைக்கு வந்தபோது, “நான் அவளைத்தான் கட்டுவன் கிழிப்பன் எண்டெல்லாம் சொல்லிப்போட்டு, அவள் கொழும்புக்குப் போறன் எண்டு சொல்லுறாள், உனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை எண்டுற மாதிரி போற நீ. நீயெல்லாம் என்னடா மனுசன்?” என்று ஏறிக்கொண்டிருந்தான் அகரன்.

அதைவைத்தே தன் தமையனுடன்தான் பேசுகிறான் என்று புரிந்துவிட, அவளுக்கும் அந்தக் கேள்வி இருந்ததில் அமைதியாக அவர்கள் பேசுவத்தைச் செவிமடுக்க ஆரம்பித்தாள் சியாமளா.

“இதை அவள் உன்ர கலியாணத்தில வச்சே எனக்குச் சொன்னவள் மச்சான். நான் தான் இந்தளவுக்கு யோசிக்க இல்ல. அங்கிளும் ஓம் எண்டு சொல்லியிருக்கிறார் எண்டா யோசிக்காம சொல்லியிருக்க மாட்டார். ரெண்டரை வருசம் தானே. விடு பாப்பம்.” என்றுவிட்டு வைத்தான் அவன்.

“என்னடியப்பா இவன்? எனக்கு இருக்கிற பதட்டம் கூட இல்லாம இருக்கிறான்.” என்று புலம்பினான் அகரன். “குணசேகரன் அங்கிளுக்கு ரெண்டு மகன்மார். ரெண்டுபேருமே லோயர் தான். அதை நினைக்க வேற எனக்குப் பயமா இருக்கு. இவன் இடிச்சப்புலி மாதிரி அசையாம இருக்கிறான்.”

ஆனால், அங்கே எல்லாளன் இவன் எண்ணியது போலல்லாமல் கொதித்துப் போயிருந்தான். எல்லோரையும் வைத்துக்கொண்டு அவளிடம் கோபப்பட வேண்டாம் என்றுதான் அங்கே அமைதியாக இருந்துவிட்டு வந்திருந்தான். திருமணவீட்டில் வைத்து அவள் எடுத்தெறிந்து பேசியதே அவனை ஆழமாகத் தாக்கிகியிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு விட்டுப் பிடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் அமைதியாக இருந்தான். இப்படி விலகிப் போகிற அளவுக்குப் போவாள் என்று எதிர்பார்க்கவில்லை. மெய்யாகவே அவனை அவளுக்குப் பிடிக்காமல் போயிற்றோ. அந்தளவில் வெறுப்பாளாக இருந்தால் அவன் பிடிவாதமாக நிற்பது சரியாக வராது. இதற்கு ஒரு முடிவை இன்றைக்குக் கண்டே ஆகவேண்டும் என்று மனம் சொல்லிவிட, எதையும் யோசிக்காமல் அவளுக்கு அழைத்தான்.

முதல் இரு முறையும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. “ஆதினி, எடு! எனக்கு உன்னோட கதைக்கோணும்!” என்று, ‘வொயிஸ் மெசேஜ்’ அனுப்பிவிட்டு மீண்டும் அழைத்தான்.

“என்ன வேணும் இப்ப உங்களுக்கு?” அழைப்பை ஏற்றதுமே இப்படித்தான் ஆரம்பித்தாள் ஆதினி.

“உண்மை வேணும்.”

“என்ன உண்மை?”

“உண்மையாவே உனக்கு நான் வேண்டாமா?”

“இல்ல! வேண்டாம்!”

“ஓ! ஒரு செக்கன் கூட யோசிக்காம பதில் சொல்லுற அளவுக்குத் தெளிவா இருக்கிறியா நீ? அப்ப, அங்கிள் மேல சத்தியமா என்னை உனக்குப் பிடிக்கேல்ல எண்டு சொல்லு!” என்றான் அவன்.

அதிர்ந்துபோனாள் ஆதினி. “என்ன விசர் கதை கதைக்கிறீங்க?” என்று சீறினாள். மனமோ பதட்டத்தில் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

“இங்க பார், இவ்வளவு நாளும் கோவத்துல முறுக்கிக்கொண்டு திரியிறாய், கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியா வரும் எண்டுதான் நினைச்சிருந்தனான். இப்ப பாத்தா பிடிக்கவே பிடிக்காத ஒருத்திய வற்புறுத்திற மாதிரி இருக்கு. அப்பிடி, உனக்கு உண்மையாவே என்னைப் பிடிக்க இல்லை எண்டா நான் விலகிப்போறன். அதுக்கு நீ எனக்கு உண்மையச் சொல்லவேணும். அதாலதான் கேக்கிறன், அங்கிள் சத்தியமா உனக்கு என்னைப் பிடிக்காது எண்டு சொல்லு, இதைப்பற்றி உன்னோட நான் கதைக்கிறது இதுதான் கடைசித் தடவையா இருக்கும்.” என்றான் அவன் தெளிவாக.

“அப்பிடியெல்லாம் சத்தியம் செய்யேலாது. எனக்கு என்ர அப்பா முக்கியம்.”

“அப்ப, என்னைப் பிடிக்கேல்ல எண்டு சொல்லுறது பொய்யா?”

அவன் மடக்கியதில் அவளுக்குச் சினமாயிற்று. “நான் ஏன் பொய் சொல்ல? எனக்கு உங்களைப் பிடிக்கேல்ல பிடிக்கேல்ல பிடிக்கேல்ல!” என்று படபடத்தாள்.

“அப்ப சத்தியத்தைப் பண்ணு!” இலகுவாய்ச் சொன்னான் அவன்.

“பண்ணமாட்டன் போடா!” என்றாள் எரிச்சலுடன்.

“உனக்கு என்னைப் பிடிக்கும். ஆனாலும் கோவம். அதுதானே என்னைப்போட்டு இந்தப் பாடு படுத்திறாய்? இவ்வளவு கோவம் தேவையா உனக்கு?”

அதோடு உடைந்திருந்தாள் ஆதினி.

“எனக்கு உங்களைப் பிடிக்கும் தான். ஆனாலும் நீங்க எனக்கு வேண்டாம். என்னை மதிக்காத என்னைக் கேவலமா நினைக்கிற நீங்க எனக்கு வேண்டவே வேண்டாம்!” ஆவேசமாகச் சொன்னவள், “நான் எங்கயடி..” என்றவனின் பேச்சைக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள். ஆத்திரமும் அழுகையும் சேர்ந்து வந்தது.

உடனேயே திருப்பி அழைத்தான் அவன். அதன்பிறகு, எத்தனையோ தடவைகள் அவன் அழைத்தும் அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.

அவளின் விருப்பம் இல்லாமல் அவள் மனதை அவளின் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறான். அந்தக் கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது. கூடவே, அவளின் மனதை அறிந்துகொண்டதில் அவனுக்குள்ளும் மெல்லிய ஆசுவாசம். எதிர்காலம் பற்றிய எண்ணங்களில் இனி ஒரு தெளிவு இருக்குமே. அந்த நிம்மதியோடு, ‘வொயிஸ் மெசேஜ்’ ஒன்றை அவளுக்குப் பதிவு செய்தான். “நீ ஆசைப்படுற மாதிரியே போய்க் கொழும்பில இருந்து படிச்சிட்டு வா. ஆனா, வரேக்க இருக்கிற கோபம் எல்லாத்தையும் விட்டுப்போட்டு வா. நானும் நீ திரும்பி வாறதுக்கிடையில நீ ஆசைப்படுற மாதிரி உன்னக் காதலிச்சு வைக்கிறன், சரியா?” எனும்போது அவன் குரல் இலேசாகச் சிரித்தது.

பதில் வருமா என்று சற்றுநேரம் காத்திருந்தான் கேட்டுவிட்டாள் என்று காட்டியது. ஆனால், பதில் இல்லை. ‘சரியான அழுத்தக்காரி!’ அப்படியே கட்டிலில் விழுந்தவனின் உதட்டோரம் மெல்லிய முறுவல் மலர்ந்திருந்தது.