குழந்தையை வைத்துக்கொண்டு என்ன கதை இது? அவனைப் பயங்கரமாக முறைத்தாள் ஆதினி. அதற்குள் சியாமளா தமையனின் குரல் கேட்டு வந்தாள். மகிழினியை அவளிடம் கொடுத்துவிட்டு, கைப்பேசியுடன் வெளியே வந்தான் எல்லாளன்.
அங்கே, அவள் சிலுக்கு ஒரு ஓரமாக நின்றிருந்தது. அதில் சாய்ந்து நின்றுகொண்டு, “பிறகு?” என்றான்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி. காலையில் அவன் காட்டிய கோபப்பட்டதினால் உண்டான ஆதங்கம் அவளிடத்தில் இன்னுமே குறையாமல் இருந்தது.
அவனுக்கும் அது புரிந்தது. இரவு நேரக் குளிர் காற்றோடு சேர்ந்து, அவள் கோபமும் இதமாகத் தாலாட்ட, “ஓய் கோவக்காரி!” என்றான் சிரிப்புடன்.
அவள் அசையவே இல்லை.
“முகத்தக் கொஞ்சம் இந்தப் பக்கம் திருப்பிறது.”
அவள் திரும்பவேயில்லை.
“அடியேய் சிலுக்கு!”
சிலுக்கா? அதிர்ந்து திரும்பியவள் முகத்தில் அப்பட்டமான திகைப்பு.
“என்ன பார்வை? நீ அச்சு அசல் சிலுக்குத்தான்!” என்றான் கண்களால் அவளை ரசித்துக்கொண்டே.
படக்கென்று வீடியோ கோலை துண்டித்த ஆதினி, ஏதும் அரைகுறையாகக் காட்சி கொடுத்துவிட்டோமோ என்று வேகமாகத் தன்னை ஆராய்ந்தாள். சின்னவளோடு கதைக்க என்று அழைப்பெடுத்ததில் உடை பற்றிய கவனம் அவளிடம் இருக்கவில்லை. அப்படி எதுவும் இல்லை என்ற பிறகுதான் கொஞ்சமேனும் மூச்சை இழுத்துவிட்டாள்.
அவன் விடவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான்.
ஒரு கட்டத்துக்கு மேல் விடமாட்டான் என்று தெரிந்துவிட, கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்துத் தன்னை முழுவதுமாகப் போர்த்திக்கொண்டு அழைப்பை ஏற்றாள்.
பார்த்தவன் அடக்கமாட்டாமல் நகைத்தான். “அறிவு வாளியடி நீ!” என்றான் அந்த நகைப்பினூடு.
“இப்பிடியே சிரிச்சீங்க எண்டு வைங்க. பல்லக் கழட்டிக் கைல தந்திடுவன், சொல்லிப்போட்டன்!” என்றாள் கோபத்தில் முகம் சிவக்க.
அதன் பிறகுதான் கொஞ்சமேனும் அடங்கினான் எல்லாளன்.
இருவரிடத்திலும் ஒரு மௌனம். பார்வை மற்றவரிடத்திலேயே இருந்தது. தொலைதூரத்தில் அவள். ஆனால் அந்த இரவும், அது வீசிய சில்லிடும் காற்றும், கண்முன்னே அவளும் என்னவோ அவள் தொட்டுவிடும் தூரத்திலேயே இருப்பதுபோலிருக்க, “திரும்பிற பக்கமெல்லாம் விசாரணை எண்டுற பெயர்ல கேள்வியாக் கேட்டுச் சாகடிக்கிறாங்கள். ஆறுதலாக் கதைப்பாய் எண்டு எடுத்தா நீயும் கத்துறாய். அதான் கோவம் வந்திட்டுது.” என்றான் தன் செயலுக்கான விளக்கமாக.
தன்னிடம் ஆறுதலை எதிர்பார்த்தானா? திகைப்போடு பார்த்தாள் ஆதினி. எப்போதுமே அவர்கள்தானே அவளைப் பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் அடைகாப்பார்கள். அதற்கே பழக்கப்பட்டவள் அவன் தன்னிடம் ஆறுதலைத் தேடுவான் என்று யோசிக்கவில்லை.
ஆனால் இப்போது யோசிக்கையில் யோசித்திருக்க வேண்டுமோ என்றிருந்தது. நெஞ்சில் ஏதோ ஒரு பாரம் ஏறி அமர்ந்துகொள்ள, “எனக்குப் பயமா இருக்கு…” என்றாள், அமர்ந்திருந்த கட்டிலின் மெத்தையில் ஒற்றை விரலால் சுரண்டியபடி.
இப்போது அவனால் கோபப்பட முடியவில்லை. அந்தப் பயம் கூட அவன் மீதிருந்த அக்கறையால் விளைந்தது என்று விளங்க, “என்ன நடந்தாலும், நாளைக்கு நானே இல்லை எண்டுற ஒரு நிலை வந்தாலும் பயப்பிடக் கூடாது ஆதினி. தைரியமா இருக்கப் பழ…” மிகுதியை அவன் துண்டிக்கப்பட்ட கைப்பேசியிடம்தான் சொல்லிக்கொண்டிருந்தான்.
‘இவளொருத்தி!’ என்று தலையை அழுத்திக் கோதிவிட்டவனுக்கும் தான் இல்லாத அவள் வாழ்க்கையை யோசிக்க முடியவில்லை. ஆனால், இதுதானே வாழ்க்கை. திடீரென்று ஒரு நாள் அவனும் சியாமளாவும் தாய் தந்தை இல்லாத அனாதைகளாக நின்றார்களே!
ஒரு நெடிய மூச்சுடன் இரவுணவை அங்கே முடித்துக்கொண்டு தன் குவார்ட்ஸுக்கு சென்றவன், “எனக்கும் உன்னோட நிறையக் காலம் வாழோணும். குறைஞ்சது மூண்டு பிள்ளைகளாவது எங்களுக்கு வேணும். எனக்கு நீ விட்ட சேட்டை எல்லாத்தையும் என்ர பிள்ளைகள் உனக்குச் செய்றதப் பாத்து நான் ரசிக்கோணும். இது எல்லாத்துக்கும் ரெடியா இரடி சிலுக்கு!” என்று எழுதி அனுப்பிவிட்டான்.
அவ்வளவு நேரமாக அரும்பிவிட்ட கண்ணீரோடு அவன் சொல்ல வந்ததை ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தவளுக்கு அவன் எழுதிய அனுப்பியதைக் கண்டு கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது.
‘என்ர பிள்ளைகள் எனக்குச் சேட்டை விடுவினமா? என்னைப் போலப் பத்து மடங்கு உங்களுக்கு அரியண்டம் தர வைக்கேல்ல நான் ஆதினி இல்ல!’ என்று மனத்தில் கருவிக்கொண்டாள்.
*****
அடுத்த நாள் காலை, தன்னுடைய காவல்நிலைய அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் எல்லாளன். யாரின் அனுமதியையும் பெறாது, படார் என்று கதவைத் திறந்துகொண்டு வந்து நின்றான் சத்தியநாதன். அவன் விழிகள் செவ்வரி ஓடிப்போய்க் கிடந்தன. முகத்தில் கொலைவெறி தாண்டவமாடிற்று.
“இத நீ செய்திருக்கக் கூடாது எல்லாளன். தண்டனையை வாங்கிக் குடுத்திட்டு உயிரோட விட்டிருக்கலாம். அவனைக் கொன்டு பெரிய பிழை விட்டுட்டாய். இதுக்கு நிச்சயமாக் கவலப்படுவாய்!” என்று விரல் நீட்டிச் சூளுரைத்தான்.
அன்று மரியாதை தந்து நகைத்துப் பேசியவனின் இன்றைய கட்டுப்பாட்டை இழந்த நிலை கண்டு மிகுந்த திருப்தி கொண்டான் எல்லாளன்.
தன் நாற்காலியில் நிதானமாகச் சாய்ந்தமர்ந்துகொண்டு, “அந்தளவுக்கு அவன் நல்லவனா சத்தியநாதன்?” என்று வினவினான்.
“நல்லவனோ கெட்டவனோ அவன் என்ர தம்பி. ஏற்கனவே ஒரு தம்பியோட விளையாடிட்டாய். அதுக்கே இன்னும் நான் கணக்கு முடிக்கேல்ல. இதுக்க அடுத்தவனையும் முடிச்சிட்டாய். இது நடந்திருக்கக் கூடாது எல்லாளன். நடந்தே இருக்கக் கூடாது! பதில் வாங்க ரெடியா இரு!” என்று எச்சரித்தான்.
“சரி சந்தோசம், போயிட்டு வா!” என்றான் எந்த மிரட்டலுக்கும் அசராது.
அவனையே இமைக்காமல் சில கணங்கள் பார்த்துவிட்டுச் சிறிதாய்ச் சிரித்தான் சத்தியநாதன். அவன் மேசையில் இரண்டு கைகளையும் ஊன்றி, “வலிக்க வலிக்க அடிச்சா எப்பிடி இருக்கும் எண்டு உனக்குத் தெரியாது என்ன? தெரிய வரும்! தெரிய வைக்கிறான்! ஓகே!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
‘போடா டேய்!’ என்று அலட்சியமாக அவனை ஒதுக்கிவிட்டு வேலையைப் பார்த்தாலும் அந்தப் பார்வையும் சிரிப்பும் எல்லாளனை எச்சரித்தன. உடனேயே குணசேகரனுக்கு அழைத்தான். இங்கு நடந்தவற்றைச் சொல்லி, ஆதினிக்கான பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தச் சொன்னான்.
*****
ஒரு தம்பி இனித் திரும்பி வரவே போவதில்லை என்றானதும் மேல் முறையீடு செய்து, மற்றவனுக்கான தண்டனையைக் குறைப்பதற்கான வேலையில் மும்முரமாக இறங்கினான் சத்தியநாதன்.
அந்த இடைவெளியில் ஆதினி மூன்றாவது வருடத்தையும் நிறைவு செய்து, எட்டு வருடங்களுக்கு மேல் சட்டத்தரணியாகப் பணிபுரியும் குணசேகரனிடமே முறையான பயிற்சிச் சட்டத்தரணியாகச் சேர்ந்து, தன் பயிற்சியையும் ஆரம்பித்திருந்தாள்.
இந்த மூன்று வருடங்களும் அவளுக்குக் கற்பித்தவை நிறைய நிறைய! சட்டம் கற்கும் மாணவியாக மட்டுமே இருந்திருந்தால் கூட இந்தளவு அனுபவத்தைப் பெற்றிருப்பாளா தெரியாது. குணசேகரனிடம் கிட்டத்தட்டப் பயிற்சிச் சட்டத்தரணி போலவே கற்றுக்கொண்டதில் எத்தனை எத்தனையோ வழக்குகளைப் பார்த்திருந்தாள்.
துரோகங்கள், பொய்கள், ஏமாற்றுகள், கொலை, கொள்ளை கண்ணீர், கதறல் என்று ஒவ்வொரு வழக்கிலும் அவள் கற்றுக்கொண்டவை ஏராளம்.
வாழ்க்கை என்பது என்ன என்றும், அந்த வாழ்க்கையில் இருக்கிற துன்பங்கள் எல்லாம் எத்தகையது என்றும் அவள் அறிந்துகொண்ட மூன்று வருடங்கள். உன் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், ‘ப்பூ’ என்று ஊதித் தள்ளிவிட்டுப் போகும் தூசுகள் என்று சொல்லித்தந்த நாள்கள் அவை!
இந்த மூன்று வருடங்களில் முடிகிற போதெல்லாம் தன் மொத்தக் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு, அவளைப் பார்க்க வந்துவிடுவான் காண்டீபன்.
அப்படி வருகிற பொழுதுகளில் எல்லாம் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத்தான் அவளை வரவழைப்பான். அவள் எவ்வளவோ அழைத்தும் குணசேகரன் வீட்டுக்கு வர மறுத்து விடுவான். அதற்குக் காரணமாக இயலாத தந்தையையும் மாமியாரையும் காட்டி, அடுத்தவர்களுக்குத் தொந்தரவாக இருக்க விருப்பமில்லை என்பான். அதை நம்ப மறுத்தாள் அவள்.
இந்தமுறை அழைத்தும் அவன் வரவில்லை என்றதும், “அண்ணா, முதலுமே எனக்கு இந்த டவுட் இருந்தது. இப்பவும் சொல்லுறன், உங்களிட்ட என்னவோ சரியில்ல. என்ன எண்டு சொல்லிடுங்க. இல்லையோ, நானே கேச போட்டு உள்ளுக்குத் தள்ளிப்போடுவன்!” என்றதும் ஒரு கணம் அதிர்ந்து நின்றுவிட்டு, பின் சத்தமாக நகைத்தான் காண்டீபன்.
அவள் பேச்சே அவளின் முதிர்ச்சியைக் காட்டிற்று. மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்த அதேவேளை, இவள் முன்னே குற்றவாளியாக நிற்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணிக் கலங்கியும் போனான்.
தன்னைச் சமாளித்துக் கொண்டு, “பாத்தீங்களாப்பா, ஆள் லோயர் ஆகிட்டா எண்டு காட்டுறா!” என்று பேச்சை மாற்றினான்.
“இப்பவும் சிரிச்சுச் சமாளிக்கிறீங்களே தவிர உண்மையச் சொல்லுறீங்க இல்ல. மிதிலாக்கா, அண்ணாவைக் கொஞ்சம் கவனிங்க. இன்னும் எண்ணி ஆறு மாதம்தான். பிறகு நான் அங்க வந்திடுவன். அதுக்குப் பிறகு அண்ணாவைக் கண்காணிக்கிறதுதான் எனக்கு வேலையே!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
அன்றிலிருந்து மெல்லிய கலக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தான் காண்டீபன். அப்போதுதான் இனிய செய்தியாக மிதிலா கருவுற்றாள். அந்த வீடே புதிதாகப் பிறந்து, மலர்ந்து, மணம் வீசியது.
ஆதினியும் ஆறுமாதப் பயிற்சிக் காலம் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்குத் தயாரானாள்.