அருளை வைத்துக் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், ஒதுக்குப்புறமாக இளம் பிள்ளைகள் கூடுகிற இடங்கள், கிரவுண்டுகள், தேநீர் கடைகள், சந்திகள் என்று எல்லா இடமும் வளைத்து வளைத்துப் பிடித்தான். என்ன வளைத்துப் பிடித்தும் அதன் தலையைப் பிடிக்க முடியவில்லை. காரணம், அவர்களுக்கே தலை யாரென்று தெரியாது. அனைத்துத் தகவல் பரிமாற்றமும் குறுந்தகவல் மூலம் நடந்திருந்தது. அவையும் தகவல்கள் வந்த சில நிமிடங்களில் அழிக்கப்பட்டிருந்தது. அந்தக் கைபேசி இலக்கங்களைத் தேடிப்போனால், எங்கோ பின்தங்கிய கிராமம் ஒன்றில், கைபேசியின் வாசமே தெரியாத யாரோ ஒருவரின் பெயர் இருந்தது.
இது இப்படித்தான் முடியும் என்பது அவன் அறிந்ததுதான். என்றாலும் எங்காவது ஒரு சின்னத் துணுக்காவது கிடைத்துவிடாதா என்கிற வெறியுடன் விடாமல் வேட்டையாடிக்கொண்டே இருந்தான். அதில், போதை பாவனை ஓரளவு கட்டுக்குள் வந்திருந்தது. ஆனால், அது நிரந்தரமல்ல; ஒரு ஓட்டையை அடைக்க இன்னொரு ஓட்டையைப் போடுவார்கள் என்று தெரியும்.
அவன் எதிர்பார்த்தது போலவே, காவல்துறையின் இந்தக் கெடுபிடியின் காரணமாக இங்கே, அந்த அடர் நீல பைக், கருப்பு பைக்காக மாறி, பாடசாலையின் முன்னே இருந்த ஐஸ் விற்கும் ஐயாவிடம் தகவல் சொல்லிவிட்டுப் பறந்தது. மாணவர்கள் பொருள் வாங்க வந்தபோது, இடமாற்றம் அறிவிக்கப் பட்டது.
“சேர், ஆரம்பிக்கவா?” தமயந்தி வருவதற்கு முதல் பல்கலைக்கழகத்தில் காண்டீபனைத் தனியாகப் பிடித்து வினவினாள் அஞ்சலி.
“நீ கொண்டுவா. நான் குடுக்கிறன்!” சற்றுக்கு யோசித்துவிட்டுச் சொன்னான் அவன்.
“நானே குடுக்கிறேனே சேர்.”
“மாதவன் வர நீ உள்ளுக்குப் போகப்போறியா?” மெல்லிய கோபத்துடன் அதட்டினான் காண்டீபன்.
“பிறகு, உங்களுக்குப் பிரச்சினை வராதா?”
“எனக்கு வந்தா வரட்டும். நீ லொழிய மட்டும் கொண்டுவா!” என்று முடித்துக்கொண்டான் காண்டீபன்.
அஞ்சலியும் தமயந்தியும் நெருங்கிய நண்பிகள். பல்கலை நேரம் முழுவதிலும் ஒன்றாகவே சுற்றுவார்கள். காண்டீபனிடம் சந்தேகம் கேட்பதானாலும் அப்படியே. அப்போதெல்லாம், அவன் மேசையில் இருக்கிற லொலிகளில் ஒவ்வொன்று இவர்களுக்கு வந்துவிடும். அதுவே வழக்கமாயிற்று. இப்போதெல்லாம், அஞ்சலியை விடவும் அந்த லொலிகளின் மீதான பிரியம் தமயந்திக்கு அதிகமாயிற்று. அதன் சுவை அவளின் தேகத்தின் மூளை முடுக்கெங்கும் சென்று பரவ ஆரம்பித்திருந்தது.
காலங்கள் மின்னலாக விரைந்துகொண்டிருந்தது. ஏற்கனவே இங்கு, முதல் வருடத்தை முடித்துக்கொண்டு போனவள் அங்கு, இரண்டாம் வருடத்தையும் முடித்துக் கடைசி வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தாள். விடுமுறை நாட்களில் கூட யார் அழைத்தும் இங்கு வரவில்லை. கொழும்பிலேயே இருந்துகொண்டாள். அதற்கு, குணசேகரனிடம் அவள் பார்க்கும் வேலையைக் காரணம் காட்டிக்கொண்டாள்.
இதற்குள், அகரன் சியாமளா தம்பதியினர் ஒரு பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆகியிருந்தனர். குழந்தை மகிழினியைப் பார்க்கக் கூட ஆதினி வரவில்லை. அகரனுக்கு அது மிகப்பெரிய காயமாக மனதில் பதிந்து போனது. சியாமளாவும் அதன்பிறகு அவளுக்கு அழைப்பதை நிறுத்தியிருந்தாள்.
எல்லாளனுக்கு இப்போதுதான் அவள் மீது உண்மையான கோபமே உண்டாயிற்று. இந்தளவு தூரத்துக்குப் பிடிவாதமாக விலகி நிற்கும் அளவுக்குப் பாரதூரமாக எதுவும் நடக்கவில்லையே. அப்படி என்ன பிடிவாதம்? வரட்டுக் கோபம்? வரட்டும் பேசிக்கொள்வோம் என்று எண்ணிக்கொண்டு காத்திருந்தான்.
அவளின் மனநிலையை ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால் இளந்திரையனும் வற்புறுத்தவில்லை. நண்பனிடம் மட்டும் மகளைப் பற்றி விசாரித்துக்கொள்வார். “டேய் நண்பா, புலிக்குப் பிறந்தது பூனையாகுமாடா? செல்லம் குடுத்து நீதான் பிள்ளையக் கெடுத்து வச்சிருந்திருக்கிறாய். அவா கெட்டிக்காரி. கொஞ்சம் பட்டை தீட்டினாக் காணும். நட்சத்திரமா ஜொலிஜொலிப்பா. அதால, நீ எதுக்கும் கவலைப்படாத! எனக்குப் பொம்பிளைப் பிள்ளை இல்லாத குறையத் தீர்க்க வந்திருக்கிறா. பிடிச்ச வரைக்கும் இங்கயே இருக்கட்டும், விடு.” என்று, அவர் வேறு சொல்லிவிட்டதால் கவலையற்று இருந்தார், இளந்திரையன்.
இதோ, ஆதினி மூன்றாவது வருடத்தையும் நிறைவு செய்து, எட்டு வருடங்களுக்கு மேல் சட்டத்தரணியாகப் பணிபுரியும் குணசேகரனிடமே முறையான பயிற்சிச் சட்டத்தரணியாகச் சேர்ந்து தன் பயிற்சியையும் ஆரம்பித்திருந்தாள்.
இந்த இரண்டு வருடங்களில், நான்கு முறை வாகனம் பிடித்துக்கொண்டு சென்று அவளைப் பார்த்துவிட்டு வந்திருந்தான் காண்டீபன். நான்கு முறையுமே அவர்கள் தங்கிய ஹோட்டலுக்குத்தான் அவளை வரவழைத்தான். குணசேகரனின் வீட்டுக்கு அவள் எவ்வளவோ அழைத்தும் மறுத்திருந்தான். “அண்ணா, முதலுமே எனக்கு இந்த டவுட் இருக்கிறது. இப்பவும் சொல்லுறன், உங்களிட்ட என்னவோ சரியில்ல. என்ன எண்டு சொல்லிடுங்க. இல்லையோ, நானே கேச போட்டு நானே உள்ளுக்குத் தள்ளிப்போடுவன்!” என்றதும் ஒருகணம் அதிர்ந்து நின்றுவிட்டுப் பின் சத்தமாக நகைத்தான் காண்டீபன்.
அவளின் பேச்சே அவளின் முதிர்ச்சியைக் காட்டிற்று. மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்த அதே வேளை, இவளின் முன்னே குற்றவாளியாக நிற்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணிக் கலங்கியும் போனான்.
தன்னைச் சமாளித்துக்கொண்டு, “பாத்தீங்களாப்பா, ஆள் லோயர் ஆகிட்டா எண்டு காட்டுறா.” என்றான், இளம் முறுவலோடு அவளை ரசித்துப் பார்த்திருந்த சம்மந்தனிடம்.
“இப்பவும் சிரிச்சுச் சமாளிக்கிறீங்களே தவிர உண்மையச் சொல்லுறீங்க இல்ல அண்ணா. மிதிலா அக்கா, அண்ணாவைக் கொஞ்சம் கவனிங்க. இன்னும் எண்ணி ஆறுமாதம் தான். பிறகு நான் அங்க வந்திடுவன். அதுக்குப்பிறகு, அண்ணாவைக் கண்காணிக்கிறதுதான் எனக்கு வேலையே!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் புறப்பட்டாள் ஆதினி.
அன்றிலிருந்து மெல்லிய கலக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தான் காண்டீபன். அப்போதுதான் இனிய செய்தியாக மிதிலா கருவுற்றாள். அந்த வீடே புதிதாகப் பிறந்து, மலர்ந்து, மணம் வீசியது. இதோ, ஆதினியின் ஆறுமாதப் பயிற்சிக் காலமும் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காகக் காத்திருந்தாள் ஆதினி.
மகிழினிக்குச் சின்னம்மை போட்டிருந்ததால் அகரனின் குடும்பம் இங்கேயே நிற்பது என்றும் இளந்திரையன் மட்டும் போய்விட்டு வருவதாகவும் முடிவாயிற்று.