இந்த இரண்டரை வருடங்களில் தனிமையைத் தனக்குப் பழக்கிக் கொண்டிருந்தான் எல்லாளன். ஆனாலும் சில நேரங்களில், அதிக வேலையினால் களைத்தோ மனம் சோர்ந்தோ வரும் நாட்களில் வீட்டின் அமைதியும் வெறுமையும் இன்னுமே, அவனைச் சோர்வடையச் செய்துவிடும். வேகவேகமாகக் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு ஆதினியின் வீட்டுக்கு ஓடிவிடுவான். அங்கு, மகிழினி இருக்கிறாளே. அவள் தான் இவனின் உலகம். அவளின் மழலையிலும் சிரிப்பிலும் தான் அவன் தன்னை மீண்டும் மீட்டெடுப்பது.
ஆனால், கடந்த இரண்டு மூன்று நாட்களாக எல்லாளனுக்கு மனது சரியே இல்லை. காரணம் மட்டும் எவ்வளவு யோசித்தும் பிடிபட மறுத்தது. நாளை மறுநாள் ஆதினி வந்துவிடுவாள். அவள் வந்ததும் திருமணத்தை விரைவில் வைத்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தான். இதில், எதைக்குறித்தும் கலங்கவேண்டிய அவசியம் இல்லையே.
காரணம் பிடிபடாமல் போனதில் எப்போதும்போல, எதுவானாலும் வருகிறபோது கண்டுகொள்வோம் என்று எண்ணிக்கொண்டு, வேலையில் ஆழ்ந்திருந்தவனை அழைத்தான், கதிரவன்.
“சேர், எட்டு வயசுப் பிள்ளை மயங்கி விழுந்திட்டா எண்டு அம்மா, அப்பா கொண்டுவந்து ஆஸ்பத்திரில சேர்த்திருக்கினம். செக் பண்ணின டொக்டர் போதை மருந்து உட்கொண்டு இருக்கிறா எண்டு சொல்லுறார், சேர்.” என்று, அவன் சொன்னதைக் கேட்டு, தினம் தினம் இப்படியான வழக்குகளைக் கையாளும் எல்லாளனே அதிர்ந்துபோனான். “என்ன சொல்லுறீங்க கதிரவன்? எட்டு வயசுப் பிள்ளைக்கு எப்பிடி இது கைல கிடைச்சது? அம்மா அப்பாவை விசாரிங்க. அவேன்ர வீட்டு அட்ரெச வாங்கி எனக்கு அனுப்பிவிடுங்க.” என்று உத்தரவிட்டான்.
அடுத்த நிமிடமே கதிரவனும் விலாசத்தை அனுப்பிவிட, தன் ஜீப்பை அங்கு விரட்டினான், எல்லாளன். அங்கு, அந்தச் சிறுமிக்கு என்னாயிற்றோ என்கிற கலக்கத்துடன் அயலட்டையினர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர். காவல்துறை ஜீப்பை கண்டதும் இன்னுமே கலவரமாயிற்று.
வீதியின் ஓரமாக ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி வந்தவனையே கேள்வியும் பயமுமாகப் பார்த்தனர்.
“எட்டு வயசுப் பிள்ளை மயங்கி விழுந்தது எந்த வீடு?”
“இதுதான் சேர் வீடு.” என்று காட்டினார் ஒரு வயதானவர்.
“என்ன நடந்தது? நடந்ததைப் பாத்த ஆராவது இருந்தா மட்டும் வந்து சொல்லுங்கோ!” என்றபடி அந்த வீட்டின் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவனின் விழிகள், அந்த இடத்தைக் கூர்மையுடன் அலசியது.
அப்போது, ஒரு பெண், சிறுமி ஒருத்தியைக் கையில் பற்றியபடி தயக்கத்துடன் அவனருகில் வந்து நின்றார். திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான் எல்லாளன்.
“இவா என்ர மகள் சேர். பக்கத்து வீடுதான் எங்கட. இவாவும் அவாவும் தான் விளையாடிக்கொண்டு இருந்தவே. திடீர் எண்டு இந்துஜா மயங்கி விழுந்திட்டா எண்டு இவாதான் ஓடிவந்து சொன்னவா. நான், இவர், இந்துஜான்ரா அம்மா, அப்பா எல்லாரும் பதறிப்போய் ஓடிவந்து பாத்தா, இந்த செம்பரத்தை மரத்தடில மயங்கிக் கிடந்தவா. ஆளுக்குப் பேச்சும் இல்ல மூச்சும் இல்ல. தண்ணி தெளிச்சு, ஆளை தட்டிப்பாத்து எண்டு என்ன செய்தும் எழும்ப இல்ல சேர். வச்சிருக்க வச்சிருக்க ஏதும் நடக்கக்கூடாதது நடந்திடுமோ எண்டுற பயத்தில இவரும் சேர்ந்துதான் ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ட்டினம். என்ன நடந்தது எண்டு மகளை விசாரிச்சனான் சேர். பூக்கண்டுக்கு தண்ணி விட்டு விளையாடி இருக்கினம். பிறகு, சிரிஞ்ச் வச்சு விளையாடினவையாம். வேற ஒண்டும் செய்ய இல்லையாம் எண்டு சொல்லுறா.”
“சிரிஞ்ச்சா? மருந்து ஏத்துற ஊசியா?” இவர்களின் கைக்கு கிடைக்கிற அளவுக்கு எப்படி அது வந்தது என்கிற கேள்வியுடன் அந்தச் சிறுமியைப் பார்த்தான் எல்லாளன். அழுதிருக்கிறாள் என்று சொல்லும் சிவந்த முகம். கண்களில் அப்பட்டமான பயம். அவன் பார்க்கவும் நடுக்கத்தோடு அன்னையின் கையை இன்னுமே இறுக்கமாகப் பற்றுவது கூடத் தெரிந்தது.
“பிள்ளைக்கு என்ன பெயர்?” அவள் முகம் பார்த்துக் கனிவுடன் வினவினான்.
“விதுரா.”
“விதுரா வடிவான பெயர். எந்த வகுப்புப் படிக்கிறீங்க?”
“மூண்டாம் வகுப்பு.”
“இந்துவும் மூண்டாம் வகுப்பா?”
ஆம் என்று அவள் தலையை ஆட்டினாள்.
“ரெண்டுபேரும் ஒண்டாவா பள்ளிக்கூடம் போறனீங்க?”
“ஓம்..”
“இந்துவுக்கு ஒண்டும் இல்ல. ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்திடுவா. நீங்க பயப்பிட வேண்டாம், சரியா?” என்று அவளின் பயத்தை முதலில் தெளிய வைத்தான்.
அவளும் தலையை ஆட்டினாள்.
“அந்த ஊசி எங்க? இருக்கா?” என்றதும் விதுராவின் அன்னை, அங்கிருந்த மரத்தின் இரண்டு கிளைகளுக்கு நடுவில் வைத்திருந்த அந்த ஊசியைக் கொண்டுவந்து கொடுத்தார்.
“இந்துஜா இத எங்க இருந்து எடுத்தவாமா?”
“வேலில செருகி இருந்தது.”
“ஓ..!” என்றவனின் பார்வை அந்த வேலியை ஆராய்ந்தது. தென்னோலை வேலி. அந்த வீதியால் போகிற யார் வேண்டுமானாலும் போகிற போக்கில் ஊசியைச் செருகிவிட்டுப் போகலாம்.
“இதவச்சு என்ன விளையாடினீங்க?”
“இதுல தண்ணி நிரப்பி பூக்கண்டுக்கு விட்டனாங்க. ஒருக்கா விதுரா குடுச்சும் பாத்தவள். அதோட மயங்கிட்டாள்.” என்றாள் அவள்.
வீட்டின் வெளியே வந்து அந்த வேலியை ஆராய்ந்தபடி நடந்தவனின் கைகளில் இன்னும் இரண்டு ஊசிகள் சிக்கிற்று. அவற்றை இலேசாக மணந்து பார்த்ததுமே என்ன ஊசி என்று அதிலிருந்து வந்த நெடியே சொல்லிற்று.
வீடுகள் செறிந்து இருக்கும் இடம் அது. இங்கு யாராக இருக்கும் என்கிற கேள்வியுடன் அவன் விழிகளைச் சுழற்றியபோது, ஒரு அம்மா, இவன் பார்வைக்கு மறைவதை அவனுடைய கூரிய விழிகள் கண்டுகொண்டது.
ஆனாலும், கவனித்தது போன்று காட்டிக்கொள்ளாமல், அந்த மூன்று ஊசிகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அங்கு, இந்துஜா மயக்கம் தெளிந்திருந்தாள். ஆனாலும், தலை சுற்றல், வயிற்றுப்போக்கு, மெல்லிய மயக்க நிலையிலேயே இருந்தாள். ஆபத்தில்லை; இரண்டு நாட்களில் வீட்டுக்கு விட்டுவிடுவோம் என்று வைத்தியர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு புறப்பட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில், சாதாரண உடையில் வந்து, அதே தெருவின் கடைசியில் இருக்கும் வீட்டின் பெல்லை அழுத்தினான் எல்லாளன். கதிரவனும் கூட வந்திருந்தான்.
வந்து திறந்த பெண்மணியின் முகத்தில் இவனைக் கண்டதும் அப்பட்டமான அதிர்ச்சி.
“உங்களோட கொஞ்சம் கதைக்கோணும் அம்மா. உள்ளுக்கு வரலாமா?” அவரின் முக மாற்றத்தைக் குறித்துக் கொண்டபடியே வினவினான்.
அவருக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. மறுக்க முடியாமல் மெல்ல விலகி வழிவிட்டார்.
“வீட்டுல ஆர் ஆர் இருக்கிறீங்க?”
“நான், இவர், மகள், மகன் நாலுபேர்.” அவருக்கு நடுங்கியது.
“எங்க மற்ற எல்லாரும்?”
“இவர் சுகாதார திணைக்களத்தில வேல. வேலைக்குப் போய்ட்டார். மகளும் டீச்சரா இருக்கிறா. மகன் கம்பஸ் போய்ட்டார்.”
“இதுல ஆரம்மா போதை ஊசி பாவிக்கிறது?” இதுவரையில் விசாரித்துக்கொண்டிருந்த அதே சாதாரண குரலில் தான் அவன் கேட்டான். அவருக்கோ வியர்த்து வழிய ஆரம்பித்தது. “இல்ல… அப்பிடி ஆரும் இல்ல..” என்று தடுமாறினார்.