“உங்களிட்ட கடுமை காட்ட எனக்கு விருப்பம் இல்ல அம்மா. அதோட, அயலட்டையில தேவையில்லாம உங்களைக் காட்டிக் குடுக்க வேண்டாம் எண்டுதான் சாதாரண உடுப்பில வந்து விசாரிக்கிறம். உங்கட வீட்டுல ஆரோ ஒரு ஆளுக்குத்தான் இந்தப் பழக்கம் இருக்கு. அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சும் திருத்தாம மறைக்கிறதே சட்டப்படி குற்றம். அது அந்த நபரின்ர எதிர்காலத்துக்கும் நல்லம் இல்ல. நீங்க உண்மையச் சொன்னா நானும் உங்களுக்கு உதவி செய்வன். இல்லாட்டி, மொத்தக் குடும்பத்தையும் கொண்டுபோய் ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்கவேண்டி வரும்.” என்றவனின் பேச்சில் உடைந்தார், அவர். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக அவர் சுமக்கும் நெஞ்சின் வேதனைகள் அனைத்தும் வெடித்துக்கொண்டு வந்தது.
“என்ர மகன் தான் தம்பி. என்னால அவனை மாத்தேலாமா போயிட்டுது. கடைசில மானத்துக்கு அஞ்சி மறைச்சுப்போட்டன். இவர் பொல்லாத கோபக்காரர். தெரிஞ்சா நொறுக்கிப் போடுவார். மகள் கலியாணத்துக்கு நிக்கிறா. இது தெரிய வந்தா என்ன ஆகும் சொல்லுங்கோ? கௌரவமா வாழுற குடும்பம், இப்பிடி எண்டு தெரிஞ்சா ஊர் உலகம் காறித் துப்பும் எண்டுற பயத்தில அவன் அடிச்சாலும் வாங்கிக்கொண்டு வாய மூடிக்கொண்டு இருக்கிறன் தம்பி.” என்று அழுதவரை அதிர்ச்சியோடு பார்த்தனர் இருவரும்.
கதிரவன் சமையலறையை தேடிப்போய் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான். அருந்தி ஆசுவாசம் ஆனதும், “ஆழாதீங்கோ அம்மா. அழாம என்ன எல்லாம் நடந்தது எண்டு சொல்லுங்கோ.”
“இது கிட்டத்தட்ட மூண்டு வருசமா நடக்குது தம்பி. காசு கேப்பான். குடுக்காட்டி அடிப்பான், கையக் கால உடைப்பான். நான் வீட்டில ஒருத்தருக்கும் சொல்லுறேல்ல. ஒவ்வொரு முறையும் அங்க விழுந்திட்டன் இங்க விழுந்திட்டன் எண்டு பொய்யைச் சொல்லிச் சமாளிக்கிறது. இப்ப காசு பிடுங்கி முடிஞ்சு நகையைப் பிடுங்க ஆரம்பிச்சிட்டான். சத்தியமா எனக்கு என்ன செய்ய எண்டு தெரியேல்ல. கலியாணத்துக்கு நிக்கிற ஒரு பொம்பிளைப் பிள்ளையை வச்சுக்கொண்டு இத வெளில சொல்லேலுமா சொல்லுங்க?” என்றவரின் பேச்சைக் கேட்கையில் கோபம் தான் வந்தது.
“ரகசியமாத் தன்னும் எங்களிட்ட வந்து சொல்லி எல்லோம்மா இருக்கவேணும். மானம், மரியாதை, குடும்ப நிம்மதி எண்டு நீங்க மறைச்சதுதான் அவனுக்கு அவ்வளவு தைரியத்தைக் குடுத்திருக்கு. இல்லாம உங்களுக்கு அடிக்கிற அளவுக்கு வளந்திருப்பானா? சில விசயங்களை முளையிலேயே கிள்ளவேணும் அம்மா. அந்தச் சின்னப் பிள்ளைக்கு உயிராபத்து ஏதும் வந்திருந்தா என்ன செய்து இருப்பீங்க?”
“ஓம் தம்பி. நானும் நல்லா கலங்கிப் போனன். அப்பதான் இவ்வளவு நாளும் எவ்வளவு பெரிய பிழை செய்திருக்கிறன் எண்டு விளங்கினது. ஐயா, உங்களிட்ட கெஞ்சிக் கேக்கிறன். நீங்க என்ன எண்டாலும் செய்ங்கோ. எனக்கு எப்பயோ அவனில பிள்ளைப் பாசம் அற்றுப் போச்சு. ஆனாப்பு ஒரு மகள் இருக்கிறா. அவவின்ர வாழ்க்கைக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. பிறகு, இந்தக் கேவலத்தை எல்லாம் நான் பொருத்தத்துக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.” என்று அழுதார் அவர்.
“சரியம்மா. நான் உங்களிட்ட வரவும் இல்ல. நீங்க என்னட்ட எதுவும் சொல்லவும் இல்ல. சரியா? மிச்சத்தை நான் பக்கிறன். இனியும் நீங்க இதைப்பற்றி ஆரிட்டையும் கதைக்காதீங்க. முக்கியமா உங்கட மகனுக்கு முன்னால எப்பவும் போல இருங்க.” என்றுவிட்டுப் புறப்பட்டான் எல்லாளன்.
“இனி என்ன சேர்? இந்த அம்மான்ர மகனை பிடிக்கிறதா?”
“அவனை ஆறுதலா பிடிக்கலாம். முதல் அவன் எங்க வாங்குறான் எண்டு பிடிக்கவேணும். அதுவரைக்கும் இந்த விசயம் எங்க ரெண்டுபேரையும் தாண்டி வெளில வரவேண்டாம்.”
கேள்வியாக அவனைப் பார்த்த கதிரவன் மேலே எதுவும் கேட்கவில்லை. எதிராளி நிதானிக்க முதல் மடக்க முயல்கிறான் என்று புரிந்தது. ஒற்றை பைக்கில் இருவராக வந்தவர்கள் ஆளுக்கொரு பைக்காக மாறிக்கொண்டனர். பல்கலைக்கழகத்தின் இரு திசையிலும் இருவரும் நின்றுகொண்டனர்.
இரண்டு மணிநேரக் காத்திருப்பின் பின்தான் வெளியே வந்தான் அவன். கையில் இருந்த போட்டோவில் சரிபார்த்துக் கொண்டனர். அவனின் பைக் எல்லாளன் இருந்த புறமாகப் புறப்பட, இவர்கள் இருவரின் பைக்கும் அவனுக்குச் சந்தேகம் வராத இடைவெளியில் அவனைப் பின்தொடர்ந்தது.
ஊரின் உட்புறம் அமைந்திருந்தது ஒரு பெட்டிக்கடை. அங்கே சென்றான் அவன். அவனைக் கண்டதும் கடைக்காரரிடம் மாறிய உடல்மொழியும், போனதும் வந்ததுமாக அவனிடம் இருந்த வேகமுமே அவர்களுக்குள் என்ன விற்பனைப் பரிமாற்றம் நடந்திருக்கும் என்று சொல்லிற்று.
எல்லாளனைத் திரும்பிப் பார்த்தான் கதிரவன். அவனையும் பிடிக்கவில்லை. கடைக்காரனையும் மடக்கவில்லை எனும்போது அடுத்து என்ன என்கிற கேள்வி அவனிடம். “இந்தக் கடைக்காரனுக்கு ஆர் சப்லை எண்டு கண்டு பிடிக்கவேணும் கதிரவன். இரவு பகல் பாக்காமச் சிரமப்பட்டு, ஒருத்தனைக் கூட விடாம நாங்க பிடிச்சு உள்ளுக்குப் போட்டா, புதுசா ஆரோ ஒருத்தன் இந்த வேல பாத்துக்கொண்டே இருக்கிறான். அவனைப் பிடிக்கோணும்.” என்றான் பல்லைக் கடித்தபடி.
நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. இருவரும் மற்றவர்களின் கவனத்தைக் கவராதபடிக்கு அந்தக் கடையைக் கண்காணித்தபடியே எதிரெதிர் திசையில் நின்றுகொண்டனர். வேறு ஆட்களை இதற்குள் புகுத்தவில்லை எல்லாளன். எந்த விதத்திலும் எதிராளி உசாராகிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தான். அதில், அவனே களத்தில் நின்றான். தன்னை எந்தளவுக்கு நம்புவானோ அந்தளவிற்குக் கதிரவனையும் நம்புவான்.
இருவரும் காலையில் சாப்பிட்டது. இப்போது வரை வேறு எதுவுமில்லை. எப்போது எப்படி வருவானென்று தெரியாதவனைப் பிடிக்க நாள் முழுக்கக் காத்திருக்கிறார்கள். ஒருவர் இல்லாத நேரத்தில் அவன் வந்து மற்றவனால் பிடிக்க முடியாமல் போயிற்று என்றால் அன்றைய நாளில் அவர்கள் பட்ட பாடு அனைத்துமே வீணாகிவிடும். கூடவே, அவன் உசாராகிவிடுவான். இடம் மாற்றப் பட்டுவிடும். அதற்கு ஒருநாள் பட்டினி பரவாயில்லையே. அந்தக் கடைக்கே சென்று இரண்டு குளிர்பானங்கள் வாங்கி வந்தான் கதிரவன்.
“இரவு பத்துக்குப் பூட்டுவாராம்.”
“அதுவரைக்கும் பாப்பம்.”
அவ்வளவுதான் அவர்கள் பேசிக்கொண்டது. மீண்டும் கதிரவன் சென்று தனக்கான இடத்தில் நின்றுகொண்டான்.
இந்தக் கடைக்கு விநியோகிக்கிறவன் அன்றைக்கே வருவானா தெரியாது. ஆனால், கடைக்காரர்கள் காவல்துறைக்கு அஞ்சி நிறைய வாங்கி வைத்து விற்கமாட்டார்கள் என்பது எல்லாளனின் கணிப்பு. அதுவும், இது ஒரு சின்னப் பெட்டிக்கடை என்கையில் அளவு கொஞ்சமாகத்தான் இருக்கும். இன்றைக்கு இல்லாவிடில் நிச்சயம் நாளைக்கு மாட்டுவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
அவர்களின் காத்திருப்புப் பொய்க்கவில்லை. கடையைப் பூட்டுவதற்கு கடைக்காரர் அனைத்துப் பொருட்களையும் ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த நேரத்தில், கருப்பு பைக் வந்து நின்றது. நம்பர் பிளேட் தெளிவில்லை என்றதுமே, “கதிரவன் ரெடியா இருங்க!” என்று, ஹெட் போன்ஸ் வாயிலாக அறிவித்தல் கொடுத்தான் எல்லாளன்.
ஒரு பையில் கொண்டுவந்த பொருளும், மின்னல் விரைவில் நடந்த பணப்பரிமாற்றமும் அவன்தான் என்று உறுதிப்படுத்திவிட, அவனைப் பிடிக்கப் பாய்ந்தான் கதிரவன்.
நொடியில் கவனித்துவிட்டவன் பைக்குக்கு தாவி, மின்னல் விரைவில் எல்லாளனின் திசையில் அதை விரட்டினான். இதை எல்லாளன் எதிர்பார்த்தான் தானே. அவனை நோக்கி ஓடிவந்தவன் பைக்கில் இருந்தவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான். வீதியில் விழுந்து உருண்டாலும், அதே வேகத்தில் எழுந்து ஓட்டம் பிடித்தான் அவன். அதற்குள், கதிரவன் பைக்கை எடுத்துக்கொண்டு வர எல்லாளன் துரத்திக்கொண்டு ஓடினான். இரண்டு நிமிடத் தூரத்தில் மடக்கிப் பிடித்தனர்.
அவனும் இவர்களிடமிருந்து விடுபட முழு வீச்சுடன் போராடிக் கொண்டிருந்தான். முழங்காலில் இடித்து, அவனைத் தரையில் விழுத்தி, கைகள் இரண்டையும் எல்லாளன் மடக்கியதும் ஹெல்மெட்டைக் கழற்றினான் கதிரவன்.
யார் என்று பார்த்த இருவருமே அதிர்ந்து போயினர். கருத்த முகமும் அவமானத்தில் சிவந்த விழிகளுமாக அங்கிருந்தவன் சாகித்தியன்.


