நீ தந்த கனவு 29 – 1

அதே விசாரணை அறை. தன் முன்னே அமர்ந்திருந்த எல்லாளனை நிமிர்ந்து பார்க்கக் கூடத் தைரியமற்று, தலை குனிந்திருந்தான் சாகித்தியன்.

“இப்ப உன்ன நான் என்ன செய்யோணும் எண்டு நீயே சொல்லு!” தன் கோபத்தை அடக்கியபடி கேட்டான் எல்லாளன்.

“சொல்லு சாகித்தியன்! இந்தப் போதையால உன்ர வீட்டுலயே ஒரு உயிர் போயிருக்கு. ஆனாலும் இந்த வேல பாத்திருக்கிறாய் நீ! உன்ன என்ன செய்றது எண்டு நீயே சொல்லு! இரவு பகல் பாக்காம, சாப்பாட்டக் கவனிக்காம, வீட்டைப் பற்றி யோசிக்காம, உயிரக் குடுத்து வேல செய்ற எங்களப் பாக்க உனக்கு எப்பிடி இருக்கு?”

அவனுடைய சீற்றத்தில் சாகித்தியனுக்கு நடுங்கியது. “நானா விரும்பிச் செய்யேல்ல சேர்.” என்று முணுமுணுத்தான்.

“பின்ன?”

“சாமந்தின்ர கேஸ் முடிஞ்ச கொஞ்ச நாளில எனக்கு ஒரு வீடியோ வந்தது. ‘வாட்ஸ்அப்’ல. அதில… அதில சாமந்தி… கூடாத வீடியோ சேர். என்னால அத முழுசாப் பாக்கவே ஏலாம இருந்தது.” அவமானத்திலும் அழுகையிலும் கன்றிப் போயிருந்தது அவன் முகம்.

எல்லாளனுக்கும் அதிர்ச்சியே! “எங்க அந்த வீடியோ? காட்டு!” என்றான் உடனே.

“என்னட்ட இல்ல சேர். அது ஒருக்கா மட்டுமே பாக்கிற மாதிரி செட் பண்ணி இருந்தது.” என்றவன் தன் கைப்பேசியை எடுத்துக் காட்டினான்.

அவன் சொன்னது உண்மைதான். ஒரு வீடியோ அவனுக்கு அனுப்பப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இருந்தது. புலனத்தின் நவீன வசதி கேடு கெட்டவனுக்கெல்லாம் எப்படிப் பயன்படுகிறது? ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான் எல்லாளன்.

“உனக்கு அவனைத் தெரியுமா?”

“இல்ல சேர். மெசேஜ் மட்டும்தான் வரும். அதையும் நான் பாத்ததும் அழிச்சிடுவான். புதுப்புது நம்பர்ல இருந்தெல்லாம் மெசேஜ் வரும். இப்ப எல்லாம் எனக்கு ஃபோன் சத்தம் போட்டாலே பயமா இருக்கு.”

அவன் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பது புரிந்தது. கூடவே, அவனுடைய கைப்பேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, பின் அழிக்கப்பட தடயங்களும் நிறைய இருந்தன. ஆயினும், எல்லாளனின் விழிகள் கத்தியின் கூர்மையுடன் அவனைத் துளைத்தன.

பயத்தில் நடுங்கினான் சாகித்தியன். “சேர், நான் பொய் சொல்லேல்ல. அவன் சொல்லுறதச் செய்யாட்டி அந்த வீடியோவை பப்ளிக் பண்ணிடுவன் எண்டு மிரட்டினவன். வீடியோ மெசேஜுக்கு கீழ பாருங்க, ஒரு மெசேஜ் வந்து அழிச்சது தெரியுது. அதுதான் அது. என்னாலேயே அதைப் பாக்கேலாம இருந்தது. தங்கச்சி சுய நினைவிலேயே இல்ல. அவள் அவள்… எனக்கே அப்பிடி எண்டா அம்மா அப்பா பாத்தாச் செத்துடுவினம் சேர். அதால எனக்கு வேற வழி இல்லாமப் போச்சு.”

“என்ன வழியில்லாமப் போச்சு உனக்கு? பயப்பிடாம ஸ்டேஷனுக்கே வந்து என்னோடயே சண்ட பிடிக்கத் தெரிஞ்ச உனக்கு, இதச் சொல்லத் தைரியம் இல்லாமப் போனதா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதச் செய்றதா இருந்தனி? அப்ப, அதே வீடியோவக் காட்டி, ஆரையாவது கொல்லச் சொன்னாலும் செய்திருப்பியா?”

முகம் கன்றிப் போனது அவனுக்கு. எல்லாளனை நிமிர்ந்து பார்க்கும் தைரியமற்று அமர்ந்திருந்தான்.

“படிச்சவன்தானேடா நீ? அறிவு கொஞ்சமுமா இல்ல? இந்த ரெண்டரை வருசத்துல உன்ர தங்கச்சி மாதிரி எத்தின பிள்ளைகளின்ர வாழ்க்கையை நாசமாக்கி இருக்கிறாய் எண்டு தெரியுமா உனக்கு? அங்க ஒருத்தன், பெத்த தாயையே அடிக்கிற அளவுக்கு மிருகமா மாறி இருக்கிறான். அதுக்கு நீயும் ஒரு காரணம்!” என்றவனுக்கு அப்போதுதான் முகத்தில் அறைந்தது போன்று அது தோன்றியது.

அடுத்த நொடியே, “கதிரவன்! ஜீப்பை எடுங்க!” என்றபடி வாசலை நோக்கி விரைந்தான்.

கதிரவனும் ஓடிப்போய் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னே நிறுத்தத் தாவி ஏறினான்.

“மாதவன் வீட்டுக்கு விடுங்க!”

“சேர், நேரம் இரவு பதினொண்டு தாண்டிட்டுது.” மாதவன் வீடு நோக்கி ஜீப்பை திசை திருப்பியபடியே சொன்னான் கதிரவன்.

“அதெல்லாம் பாக்கிற நிலைமைல நாங்க இல்ல கதிரவன்!” மூளையில் ஆழமாகப் பதிந்துபோன ஒற்றைத் துணுக்கைப் பற்றியபடி ஓடிக்கொண்டிருக்கிறவன் எதற்காகவும் தாமதிக்கத் தயாராயில்லை.

“சாகித்தியனுக்கு மெசேஜ் வாற நம்பர் எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ணுங்க. எப்பிடியும் எல்லாமே ஏதோ ஒரு பொய் ‘ஐடி’யாத்தான் இருக்கும். எண்டாலும் பாருங்க. ஒரு சின்ன க்ளூ கிடைச்சாலும் விட்டுடாதீங்க!” அவனுக்கான உத்தரவுகளை வழங்கிய அடுத்த இருபதாவது நிமிடம், இருவரும் மாதவன் வீட்டில் நின்றனர்.

நேரம் சென்ற நேரத்தில் வந்து நின்றவர்களைக் கண்டு மாதவன் வீட்டினர் முகத்தில் பெரும் பதட்டம்.

“சேர், நான் இப்ப எந்தப் பிழையும் செய்றேல்ல. டீச்சிங்கையே விட்டுட்டன். அம்மான்ர சீதனக் காணில விவசாயம் பாக்கிறன்.” அவசரமாகச் சொன்னான் மாதவன்.

“எனக்குத் தெரியும். ஆனா, அப்ப ஏன் நீங்க ட்ரக்ஸ் வித்தனீங்க மாதவன்? உங்களுக்கு இதுவரைக்கும் போதைப் பழக்கம் இல்ல. பிறகும் எப்பிடி அந்த லிங்க் கிடைச்சது? காசுக்காக எண்டு பொய் சொல்லாதீங்க. உங்கள எத வச்சு மிரட்டினவங்கள்? ‘உன்ர வீட்டில இதே மாதிரி ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்து, அவள் கேட்டாலும் இப்பிடித்தான் குடுப்பியா?’ எண்டு நான் கேட்டதுக்கு, குலுங்கி குலுங்கி அழுதீங்களே, ஏன்?” என்றதும் மாதவனுக்குத் திக் என்று இருந்தது.

ஒரு சிறு செயல். அன்று உக்கிர மூர்த்தியாக நின்ற அந்தப் பொழுதிலும் கவனித்தது மாத்திரமல்லாமல், இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவில் வைத்திக்கிறானே!

“சேர், அப்பிடி…” என்றவனை மேலே பேசவிடாமல் இடைமறித்தான் எல்லாளன்.

“எனக்கு விளையாட நேரமில்லை மாதவன். அதோட நான் போலீஸ்காரன், உங்கட சின்ன அசைவுக்குக் கூடக் காரணம் கண்டு பிடிக்கிறவன். இப்பவும் நீங்க திடுக்கிட்டீங்க. இனியும் பொய் சொல்லலாம் எண்டு நினைச்சீங்களோ, திரும்பவும் தூக்கி உள்ள போட்டுடுவன். ஒழுங்கா உண்மையைச் சொல்லிடுங்க. நீங்களும் ஏதோ ஒரு கட்டாயத்திலதான் செய்திருக்கிறீங்க. அது என்ன? உங்கட வீட்டுப் பொம்பிளைகள் ஏதாவது பிரச்சினைல மாட்டினவையா? அல்லது, நீங்க?” என்றவன் அவன் அன்னையின் புறமாகத் திரும்பினான்.

“இங்க பாருங்கோ அம்மா, இத நான் நல்ல முறைல விசாரிக்கத்தான் விரும்புறன். அதுக்கு உங்கட மகனும் ஒத்துழைக்கோணும். இல்லையோ, பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை.” என்றதும் துடித்துப் போனார் அவர்.

போனமுறை மகன் பட்ட பாடுகளும், அதன் பிறகான இரண்டு வருடத்துச் சிறை வாழ்க்கையும், அவர்களின் தனிமையும் என்று எல்லாம் கண் முன்னே வந்து போகக் கண்ணீரில் கரைந்தார்.

“சேர், அம்மா அப்பா வயசான மனுசர். இதெல்லாம் வேண்டாமே.” அவர் வாயைத் திறக்க முதல் அவசரமாக இடையிட்டான் மாதவன்.

“அப்ப உண்மையச் சொல்லுங்க. நீங்க மறைக்கிற ஒரு விசயத்தால எத்தின பிள்ளைகளின்ர வாழ்க்கை நாசமாப் போகுது எண்டு தெரியேல்லையா உங்களுக்கு? ஏனம்மா, உங்கட மகன் இதுவரைக்கும் செய்த பாவம் காணாது எண்டா நீங்களும் சேர்ந்து மறைக்கிறீங்க?” என்றதும் அவர் உடைந்தார்.

“அது என்ர தங்கச்சின்ர மகளப்பு.”

“ஆர் அது?”

“அஞ்சலி சேர். சித்தின்ர மகள். அவளைக் கடத்தி வச்சுக்கொண்டுதான், என்னை இதெல்லாம் செய்யச் சொன்னவங்கள். வேற வழி இல்லாமத்தான் சேர்…” இனியும் எதையும் மறைக்க முடியாது என்று மாதவனுக்குப் புரிந்து போனது. அதைவிட, இன்னொரு முறை எல்லாளனின் விசாரணையை எதிர்கொள்ளும் தெம்பு, அவன் உடம்புக்கோ மனத்துக்கோ இல்லை.

“இப்பிடியே ஆளாளுக்கு வேற வழி இல்ல எண்டு சொல்லிக்கொண்டு போனா, இந்த நாடே போதைல மிதக்கும். பரவாயில்லையா?” சின மிகுதியில் சீறினான் எல்லாளன்.

“இப்ப என்ன செய்றா? எங்க படிச்சவா? அவாக்கு எப்பிடி இந்தப் பழக்கம் வந்தது?”

“இப்ப பாங்க்ல வேல செய்றாள். யாழ்ப்பாண கம்பஸ்லதான் படிச்சு முடிச்சவள். ஆனா, ஸ்கூல் கடைசி வருசம் படிக்கேக்க…” மாதவனைச் சொல்லி முடிக்கக் கூட விடாமல் இடையிட்டு, “கம்பஸ் எந்த பட்ச்? எந்த பக்கல்டி?” என்றான் எல்லாளன்.

மாதவன் சொன்ன வருடமும் பிரிவும், தமயந்தி படித்த அதே வருடமும் பிரிவும்.

அதற்குமேல் தாமதிக்கவில்லை எல்லாளன். மாதவனைத் தூக்கி ஜீப்பில் போட்டுக்கொண்டு, அஞ்சலி வீட்டை நோக்கிப் பறந்தான். நேரம், அடுத்த நாள் காலை இரண்டை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது.

“இப்ப என்ன பிரச்சினை நடக்குது எண்டு எனக்குத் தெரியாது சேர். ஆனா, நாங்க எதுலயும் இல்லை. இப்பதான் பயம் இல்லாம, பதட்டம் இல்லாம, கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம். பிளீஸ் சேர், எங்களை விட்டுடுங்கோ!” எப்போதோ நடந்து முடிந்த ஒன்றுக்குத் தண்டனையும் அனுபவித்து முடித்த பிறகு, இப்போது வந்து மீண்டும் தோண்டுகிறார்களே என்கிற பயத்தில் கெஞ்சினான் மாதவன்.

“எப்பிடி இவ்வளவு உறுதியாச் சொல்லுறீங்க மாதவன்? திரும்பவும் உங்கட தங்கச்சியைக் கடத்தி வச்சு மிரட்டினா என்ன செய்வீங்க?”

மாதவனையும் அந்தப் பயம் அவ்வப்போது வந்து மிரட்டிக்கொண்டுதான் இருந்தது. அதில், “அவங்களப் பிடிக்கவே ஏலாதா சேர்?” என்று இயலாமையுடன் வினவினான்.

“நீங்க எல்லாரும் அவங்கள் சொல்லுறதுக்கு இழுபட்டா நாங்க எப்பிடிப் பிடிக்கிறது?”

உண்மைதானே! மானம் என்கிற ஒன்றின் முன்னே, அவர்களின் முதுகெலும்பு ஒடிந்துதானே போகிறது!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock