நீ தந்த கனவு 29 – 2

அந்தக் கூட்டம், தொடர்ந்து ஒருவனையே தமக்கான ஆளாக வைத்திருக்க மாட்டார்கள். அது, அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதால் ஆள், இடம் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். அவன் வேறு சிறை சென்று வந்தவன். சாமந்தி தற்கொலை செய்து கொண்டது வேறு, ஊரையே பெரிதாக உலுக்கி இருந்தது.

அதனால் இனித் தன்னை அணுகமாட்டார்கள் என்றுதான் இவ்வளவு நாள்களும் நம்பியிருந்தான். மீண்டும் அதற்குள் சிக்கிவிடுவோமோ என்று நினைக்கையிலேயே நெஞ்சு நடுங்கியது.

அஞ்சலி மீதுதான் அத்தனை கோபமும் திரும்பியது.

“அந்த நேரம் அஞ்சலி இப்பிடி எண்டு எனக்குத் தெரியாது சேர். ஒரு நாள் அவளைக் காணேல்ல எண்டு சித்தி எடுத்து அழவும் திகைச்சுப் போனன். அதுக்குப் பிறகு தெரிய வந்த விசயம் எல்லாம் நம்பவே ஏலாததா இருந்தது. வயசான அம்மா அப்பா, நிம்மதியான வேல எண்டு இருந்த வாழ்க்கை, அப்பிடியே மாறிப் போயிற்று. ரெண்டு நாள் கழிச்சுத்தான் அவளை விட்டவங்கள். அவள் வேற தற்கொலைக்கு முயற்சி செய்திட்டாள். சித்தி பாத்ததால ஒரு மாதிரிக் காப்பாத்திட்டம். எல்லாமே அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா இருந்தது. மெல்ல மெல்ல வெளில வருவம் எண்டு நினைச்சா, ஒரு நாள் ஒரு பார்சல் வந்தது. திறந்து பாத்தா… போட்டோஸ்…” அவனுக்குத் தொண்டைக்குழி அடைத்துக்கொண்டது.

அன்று அவற்றைப் பார்த்து உடம்பெல்லாம் பதறி, நெஞ்சு நடுங்கி, ஆவேசமும் ஆத்திரமும் கொண்டு, இதற்கெல்லாம் காரணமானவர்களைக் கொல்லும் அளவுக்கு வெறி கொண்டு அலைந்தது என்ன, கடைசியில் குடும்ப மானத்துக்கு அஞ்சி, அஞ்சலியின் எதிர்காலத்தை எண்ணி, அவர்கள் சொன்னதைக் கேட்டு நடந்தது என்ன என்று, எத்தனை துயரங்களை அனுபவித்துவிட்டான்.

இப்போது நினைக்கையிலும் அவர்களை எல்லாம் தேடிப் பிடித்துக் கொல்லும் அளவுக்கு வெறி வந்தது. முடியாதே! காவல்துறைக்கே தண்ணி காட்டுகிறவர்கள் அவன் கையிலா சிக்கப் போகிறார்கள்?

“அந்த ஃபோட்டோஸ் இன்னும் இருக்கா?”

மாதவன் மறுத்துத் தலையசைத்தான். “அத வச்சிருக்கவும் ஏலாது, வச்சுப் பாக்கவும் ஏலாது சேர். அவ்வளவு மோசம். அம்மா அப்பா பாத்தாத் தாங்காயினம் எண்டு எரிச்சிட்டன்.” கனத்த குரலில் சொன்னான்.

“அதுக்குப் பிறகு அவங்களுக்கு எதிரா என்னால எதுவுமே செய்யேலாமப் போச்சு சேர். சரி எது, பிழை எது எண்டு சிந்திச்சு நடக்கிற அளவுக்கு நான் தெளிவாவும் இல்ல. ஏற்கனவே சாக முயற்சி செய்து, தன்னைத் தானே அசிங்கமா நினைச்சு அழுற அஞ்சலி, இதுவும் தெரிய வந்தா இன்னும் என்ன செய்வாளோ எண்டுற பயம் ஒரு பக்கம், நடந்தது முழுசாத் தெரியாமக் கலங்கிப்போயிருந்த அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா இன்னொரு பக்கம், நான் மறுக்க, திரும்பவும் தங்கச்சிய ஏதும் செய்திடுவாங்களோ எண்டுற பயம் எண்டு, எனக்கும் அவங்கள் சொல்லுறதைக் கேக்கிறதைத் தவிர வேற வழி இல்லாமப் போயிற்று சேர்.” என்றவன் சில கணங்களுக்கு அந்த நாள்களுக்கே சென்றிருந்தான்.

“நீங்க வந்து என்னைப் பிடிச்ச பிறகுதான் என்ர அம்மா அப்பாவுக்கே இதெல்லாம் தெரியும். நம்புவீங்களா தெரியாது, ஜெயிலுக்குப் போய் வந்தது பெரிய கேவலமா இருந்தாலும் மனதில கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல். செய்த பாவத்துக்குத் தண்டனை அனுபவிச்சு இருக்கிறன் எண்டு. அதுதான், இப்ப வீடும் விவசாயமும் எண்டு என்ர உலகத்தைச் சுருக்கிட்டன்.”

அவன் பொய் சொல்லவில்லை என்று அவன் குரலே சொல்ல, “அதுக்குப் பிறகு ஏதும் மிரட்டல் வந்ததா?” என்று விசாரித்தான்.

“இல்ல. உண்மையா வரேல்ல. ஆனா, இனி வருமோ எண்டு பயமா இருக்கு.”

“அப்பிடி வந்தாலும் பயப்பிடாதீங்க. எங்களிட்ட வாங்க. நீங்களா எதையாவது செய்து, பிரச்சினைகளைப் பெருசாக்காதீங்க.”

“இல்ல சேர். இனி மறைக்க மாட்டன்.” மாதவனுக்கு அனுபவம் பேசியது.

அந்த நடுச்சாமத்தில் உடன்பிறவாத் தமையனோடு தம் வீட்டுக்கு வந்து நின்றவர்களைக் கண்டு, அஞ்சலிக்கு உறக்கம் போன இடம் தெரியவில்லை. பயத்தில் முகம் வெளுத்தது.

“என்னய்யா? என்ன பிரச்சினை?” இப்போது கொஞ்சக் காலமாகத்தான் நிம்மதியாக இருக்கிறார்கள். அதற்கும் குந்தகம் வந்துவிட்டதோ என்கிற கலக்கமும் பயமும் நெஞ்சைச் சூழ, அவள் பெற்றோர் பதற்றத்துடன் வினவினர்.

“ஒரு பிரச்சினையும் இல்லச் சித்தி. பயப்பிடாதீங்க. அப்ப நடந்த எதையும் நாங்க போலீஸ்ல சொல்லேல்லத்தானே? அத இப்ப அறிஞ்சு விசாரிக்க வந்திருக்கினம். அவ்வளவுதான். ஒண்டுக்கும் யோசிக்காதீங்க.” தன் கலக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் தைரியம் சொன்னான் மாதவன்.

இங்கே, அஞ்சலியைத் தனியாக அழைத்து வந்திருந்தான் எல்லாளன். அவன் முன்னே நடுங்கிக்கொண்டு நின்றாள் அஞ்சலி. எதற்கு வந்திருக்கிறான், என்ன கேட்கப்போகிறான் என்று எதையும் அனுமானிக்க முடியவில்லை. பயம் மட்டுமே அவளைப் போட்டு உலுக்கியது.

முன்னர், தன் குடும்பமே பாதிக்கப்பட்டதால் உண்டான கோபம் கொடுத்த தைரியம் இருந்தது. அதில், எப்போதுமே ஒருவிதக் கவனம் இருக்கும். மாட்டிக்கொண்டால் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்கிற தயார்ப்படுத்தலும் இருக்கும்.

ஆனால், அது எல்லாமே பல்கலைக்கழகத்தோடு முடிந்து போயிருந்தது. காண்டீபன் கூட அவளுடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்திருந்தான். அதில், தன் இறுக்கங்களைக் களைந்து, இயல்பாக வாழ ஆரம்பித்திருந்தாள்.

இப்போது திடீர் என்று போலீஸ் வந்து நிற்கவும் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்று சிந்திக்கக் கூட முடியாமல் நிலைகுலைந்து நின்றாள்.

எல்லாளனின் பார்வை வேறு, அந்த இருளையே துளைத்துக்கொண்டு அவள் நெஞ்சை ஊடுருவியது.

“எப்பிடி உங்களுக்கு இந்தப் பழக்கம் வந்தது?”

“ஏ எல் படிக்கேக்க ஒரு கூல்பாருக்கு டெய்லி போவம். அங்க பீடா இருக்கும். சும்மா விளையாட்டுக்கு ஆரம்பிச்சது. பிறகு, பான்பராக் சாப்பிட்டு, அது… அது அந்தக் கடைக்காரன் பிறகு பாக்கு மாதிரியே வேற ஒண்டு தந்தவர். அது அது போதை எண்டு அப்ப எனக்குத் தெரியாது சேர். அப்பிடியே… அப்பிடியே…”

“அப்பிடியே?”

“போதை மருந்தும் பழகிட்டன். ஒரு நாள் என்ன நடந்தது எண்டு தெரியாது. அங்க வாங்கி வாய்க்க போட்டுக்கொண்டு வரேக்க ரோட்டுல மயங்கி விழுந்த நினைவு. பிறகு…” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

“பிறகு?” நெஞ்சு கொதித்தது எல்லாளனுக்கு. ஆனாலும் அடக்கிக்கொண்டு நிதானமாக வினவினான்.

“முழிச்சுப் பாக்கேக்க எங்கயோ ஒரு அறைக்க இருந்தனான். அவேதான் அப்ப ஊசி ஏத்தி விடுவினம். பிறகு, என்னை விடேக்கையும் ஒரு கடை சொல்லி, அங்க வாங்காட்டித் திரும்பக் கடத்துவம் எண்டு சொன்னவே சேர். பயத்தில… எனக்கும் விடேலாமா இருந்தது.”

“பிறகு?”

“பிறகு…”

அவள் பதில் சொல்லத் தடுமாறவும், “தமயந்தியத் தெரியுமா?” என்றான் பட்டென்று.

“ஆ… என்ன?” அந்த நேரத்தில் அந்தப் பெயரை மருந்துக்கும் எதிர்பாராதவள் விழுக்கென்று நிமிர்ந்தாள். அவள் விழிகளில் பெரும் அச்சம் படர்ந்தது. கை கால்களெல்லாம் வெளிப்படையாகவே நடுங்கின.

எல்லாளனுக்கு அந்தளவும் போதுமே!

“சொல்லுங்க! தமயந்திக்கு எப்பிடிப் போதையப் பழக்கினனீங்க? இப்பிடி இன்னும் எத்தின பேரின்ர வாழ்க்கையை அழிச்சீங்க அஞ்சலி? நீங்க மட்டும்தானா? இல்ல, மொத்தக் குடும்பமும் சேர்ந்து செய்றீங்களா? உங்களுக்குப் பின்னால இருக்கிறது ஆர்?” அவளைச் சிந்திக்க விடாமல் கேள்விகளால் விளாசினான்.

“சேர்… என்ன சேர் இப்பிடியெல்லாம் கேக்கிறீங்க? அப்பிடியெல்லாம் இல்ல சேர்.” நெஞ்சுக்கூடே நடுங்கச் சொன்னாள்.

“என்ன அப்பிடியெல்லாம் இல்ல? தமயந்தியை உங்களுக்குத் தெரியாது? அந்தப் பிள்ளைக்கு நீங்க போதையப் பழக்கேல்ல? எனக்கு உண்மை வேணும் அஞ்சலி. பொம்பிளைப் பிள்ளை எண்டு தன்மையா விசாரிச்சா, எல்லாத்தையும் மறைக்கலாம் எண்டு நினைக்காதீங்க! நீங்க என்ன செய்தீங்க, எப்பிடிச் செய்தீங்க எண்டு தெரியாமத்தான் இந்த நடுச்சாமத்தில வந்து உங்கள விசாரிக்கிறனா? நீங்களா எல்லாத்தையும் சொல்லிட்டா நானும் உங்களுக்காக யோசிப்பன். இல்லையோ, உங்களிட்ட இருந்து உண்மைய எப்பிடி வெளில கொண்டு வாறது எண்டும் தெரியும், என்ன மாதிரியான கேஸை எல்லாம் போட்டு உங்கள வெளில வரவிடாமச் செய்றது எண்டும் தெரியும். செய்யவா?” என்று மிரட்டினான்.

மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக வெடவெட என்று நடுங்கினாள் அஞ்சலி. மொத்தமாக மாட்டிக்கொண்டுவிட்டோம் என்று நன்றாக விளங்கிற்று. இனி என்ன செய்வது என்று தெரியாது உடைந்து அழுதாள்.

அவ்வளவு நேரமாகச் சாதாரண விசாரணை போலும் என்று எண்ணியிருந்த மாதவனும் அவள் பெற்றோரும் பதட்டத்தோடு இவர்களை நெருங்க முனைய, கதிரவன் தடுத்துப் பிடித்தான்.

அப்போதும், “சேர் என்ன சேர்?” என்று பதறிய மாதவனை எல்லாளனின் சீற்றம் மிகுந்த ஒற்றைப் பார்வை அடக்கியது.

இந்தளவு தூரத்துக்கு நிலைகுலைய வைத்தும் உண்மையைச் சொல்ல மறுக்கும் அவளைக் கண்டு உண்மையிலேயே எல்லாளனுக்குக் கோபம் உண்டாயிற்று. “கதிரவன், இது சரி வராது! மொத்தக் குடும்பத்தையும் ஏத்துங்க ஜீப்ல. ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சாத் தெரியும்தானே?” என்றுவிட்டு ஜீப்பை நோக்கி நடந்தான்.

பயந்துபோனாள் அஞ்சலி. “சேர் சேர் வேண்டாம் சேர். ப்ளீஸ் சேர். அம்மா அப்பா பாவம் சேர்.” அவன் பின்னால் ஓடி வந்தபடி கெஞ்சினாள்.

“ஏத்துங்க கதிரவன்!” என்றவனின் ஒற்றை அதட்டலில் கதிரவன் அவள் அன்னையின் கையைப் பற்றவும், எல்லாமே தன் கையை மீறிப் போனதை உணர்ந்தாள் அஞ்சலி.

“ஐயோ, வேண்டாம் சேர். நான் உண்மையச் சொல்லுறன் சேர். அம்மா அப்பாவை விட்டுடுங்கோ, பிளீஸ். என்னால அவே பட்டது போதும்!” என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.

“சொல்லுங்க!”

“காண்டீபன் சேர்தான் குடுக்கச் சொன்னவர். ஆனா, நான் சாதாரண லொலி மட்டும்தான்…” அவள் சொல்லி முடிக்க முதலே, “காண்டீபனா? எந்தக் காண்டீபன்?” என்று அதிர்ந்து ஒலித்தது, எல்லாளனின் குரல்.

“சொல்லுங்க அஞ்சலி! எந்தக் காண்டீபன்?” அவள் பதில் சொல்லும் வரைக்கும் காத்திருக்கும் பொறுமையற்று உறுமினான்.

“கா…காண்டீபன் சம்மந்தன்.”

அந்தப் பெயரைக் கேட்டு, சில்லுச் சில்லாகச் சிதறி நின்றான் எல்லாளன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock