“இப்ப உன்ன நான் என்ன செய்யோணும்?” விசாரணை அறையில், தன் முன்னே அமர வைக்கப்பட்டு இருந்தவனிடமே கேட்டான், எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த கடுமை. அடித்து நொறுக்கும் அளவுக்கான ஆத்திரத்தில் கை நரம்புகள் புடைத்தன. அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளினதும் எதிர்காலத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து, இரவு பகல் பாராது, உணவைக் கவனிக்காமல், வீட்டைப் பற்றி நினைக்காமல் அவர்கள் இறங்கி வேலை செய்ய, இப்படி ஒவ்வொருவராகப் புறப்படுவார்களாமா?
“சொல்லு சாகித்தியன்! இந்தப் போதையால உன்ர வீட்டுலயே ஒரு உயிர் போயிருக்கு. ஆனாலும், இந்த வேல பாத்திருக்கிறாய் நீ. அண்டைக்கு வந்து அஜய்யை விட்டுட்டன், துரோகம் செய்திட்டன், எளிய மனுசர் எண்டதும் எங்களைக் கவனிக்காம விட்டுட்டீங்க எண்டு நிறையத் துள்ளினாய். இண்டைக்கு நான் உன்ன செய்ய வேணும் எண்டு நீயே சொல்லு? கேஸ் பைல் பண்ணி உள்ளுக்குத் தள்ளவா? சொல்லு, செய்யவா?” என்று, உறுமியவனின் சீற்றத்தில் சாகித்தியனுக்கு நடுங்கியது. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“நானா விரும்பிச் செய்யேல்ல சேர்.” மெல்ல முணுமுணுத்தான்.
“பின்ன?”
“சாமந்தின்ர கேஸ் முடிஞ்ச கொஞ்ச நாளில எனக்கு ஒரு வீடியோ வந்தது, சேர்.” என்றவன் முகத்தை மூடிக்கொண்டு அழுதான்.
“முதல் விசயத்த முழுமையா சொல்லு சாகித்தியன்!” செய்வதை எல்லாம் செய்துவிட்டு என்ன அழுகை என்று எரிச்சல் உண்டாயிற்று அவனுக்கு.
“சேர், திடீரெண்டு ஒருநாள், ‘வாட்ஸ்அப்’ ல எனக்கு ஒரு வீடியோ வந்தது. அதுல.. அதுல சாமந்தி… கூடாத வீடியோ சேர். என்னால அத முழுசா பாக்கவே ஏலாம இருந்தது சேர்.”
“எங்க அந்த வீடியோ, எடு!”
“என்னட்ட இல்ல சேர். அது ஒருக்கா மட்டுமே பாக்கிற மாதிரி செட் பண்ணி இருந்தது.” என்றவன் தன் கைபேசியை எடுத்துக் காட்டினான். அவன் சொன்னது உண்மைதான். ஒரு வீடியோ அவனுக்கு அனுப்பப் பட்டதற்கான அடையாளம் மட்டுமே இருந்தது. புலனத்தின் நவீன வசதி கேடு கெட்டவனுக்கெல்லாம் எப்படிப் பயன்படுகிறது? ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான் எல்லாளன். இந்த முறையும் அடுத்தக் கட்டத்துக்கு நகராமல் அப்படியே நிற்கப் போகிறதா அவனுடைய முயற்சி என்று எண்ணியதுமே பெருஞ்சினம் ஒன்று அவனைச் சூழ்ந்தது. இனி என்ன செய்வது? இவன் வெறும் அம்பு. எய்தவன் எங்கே? புருவத்தை நீவி விட்டான் எல்லாளன்.
“உனக்கு அவனைத் தெரியுமா?”
“இல்ல சேர். மெசேஜ் மட்டும் தான் வரும். அதையும் நான் பாத்ததும் அழிச்சிடுவான்.”
ஒன்றும் பேசாமல் நிமிர்ந்து சாகித்தியனை ஒரு பார்வை பார்த்தான் எல்லாளன். நடுங்கிப் போனான் சாகித்தியன்.
“சேர், நான் பொய் சொல்லேல்ல சேர். அந்த வீடியோ வந்த நேரம், அவன் சொல்லுறத நான் செய்யாட்டி அந்த வீடியோவை பப்ளிக் பண்ணிடுவன் எண்டு மிரட்டினவன் சேர். கீழ பாருங்க ஒரு மெசேஜ் வந்து அழிச்சது தெரியுது. அதுதான் அவன் அனுப்பினது. என்னாலேயே அதைப் பாக்கேலாம இருந்தது சேர். தங்கச்சி சுய நினைவிலேயே இல்ல. அவள் அவள்.. எனக்கே இப்பிடி எண்டா அம்மா அப்பா பாத்தா செத்துடுவினம் சேர். அதால எனக்கு வேற வழி இல்லாம போச்சு சேர்.” என்று தான் மாட்டிக்கொண்ட விதத்தை முழுமையாகச் சொன்னான் சாகித்யன்.
அடக்க முடியாத ஆத்திரம் ஒன்று கிளம்ப, “என்ன வழியில்லாம போச்சு உனக்கு? பயப்பிடாம ஸ்டேஷனுக்கு வந்து என்னோடயே சண்டை பிடிக்கத் தெரிஞ்ச உனக்கு, இதைச் சொல்லத் தைரியம் இல்லாமப் போச்சு, என்ன? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதைச் செய்றதா இருந்தனி? உன்ர அம்மாவும் அப்பாவும் சாகிற வரைக்குமா? எண்டாவது ஒருநாள் இது முடிவுக்கு வந்தே ஆகும் எண்டு தெரியாதா உனக்கு. அதை அண்டைக்கே செய்திருந்தா குறைஞ்ச பட்சம் மற்றப் பிள்ளைகளாவது தப்பியிருக்குங்கள். படிச்சவன் தானேடா நீ. அறிவு கொஞ்சமுமா இல்ல. இந்த ரெண்டரை வருசத்துல உன்ர தங்கச்சி மாதிரி எத்தினைப் பிள்ளைகளின்ர வாழ்க்கையை நீ நாசமாகியிருக்கிறாய் எண்டு தெரியுமா உனக்கு? அங்க ஒருத்தன் பெத்த தாயையே அடிக்கிற அளவுக்கு மிருகமா மாறி இருக்கிறான். அதுக்கு நீயும் ஒரு காரணம்!” என்றவனுக்கு அப்போதுதான் முகத்தில் அறைந்ததுபோன்று அது தோன்றியது. அடுத்த நொடியே, “கதிரவன்! ஜீப்பை எடுங்க!” என்றபடி வாசலை நோக்கி விரைந்தான்.
கதிரவனும் ஓடிப்போய் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னே நிறுத்த தாவி ஏறினான். ஜீப்பை வீதியில் ஏற்றியபடி, “எங்க சேர்?” என்றான் கதிரவன்.
“மாதவன் வீட்டுக்கு விடுங்க!”
“சேர், நேரம் இரவு பதினொண்டு தாண்டிட்டுது.”
“அதெல்லாம் பாக்கிற நிலைமைல நாங்க இல்ல கதிரவன்!” அவன் மூளையில் ஆழமாகப் பதிந்துபோன ஒற்றைத் துணுக்கைப் பற்றியபடி ஓடிக்கொண்டு இருக்கிறவன் எதற்காகவும் தாமதிக்கத் தயாராயில்லை. “சாகித்தியனுக்கு மெசேஜ் வாற நம்பரை ட்ரேஸ் பண்ணுங்க. எப்பிடியும் ஏதோ ஒரு பொய் ‘ஐடி’யாத்தான் இருக்கும். எண்டாலும் பாருங்க. மற்றது, அவன் சொன்ன அந்த சூப்பர் மார்க்கெட்ல சீசீடிவி கமரா இருக்கா எண்டு பாத்துச் செக் பண்ணுங்க. ஒரு சின்ன க்ளூ கிடைச்சாலும் விட்டுடாதீங்க!” அவனுக்கான உத்தரவுகளை வழங்கிய அடுத்த இருபதாவது நிமிடம் இருவரும், மாதவனின் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருந்தனர்.
உறக்கம் முற்றிலும் நீங்காத விழிகளோடு மாதவன் தான் வந்து திறந்தான். பின்னால் அவனுடைய பெற்றோர். இவர்களைப் பார்த்ததும் அவர்களின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. “சேர், நான் இப்ப எந்தப் பிழையும் செய்றேல்ல. டீச்சிங்கையே விட்டுட்டன். அம்மான்ர சீதனக் காணில விவசாயம் தான் பாக்கிறன்.” பதறிக்கொண்டு அவசரமாகச் சொன்னான் மாதவன்.
“எனக்குத் தெரியும். ஆனா, அப்ப ஏன் நீங்க ட்ரக்ஸ் வித்தீங்க மாதவன்? உங்களுக்கு இதுவரைக்கும் போதைப் பழக்கம் இல்ல. பிறகும் எப்பிடி அந்த லிங்க் கிடைச்சது? உங்கள எத வச்சு மிரட்டினவங்கள்? ‘உன்ர வீட்டில இதேமாதிரி ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்து, அவள் கேட்டாலும் இப்பிடித்தான் குடுப்பியா?’ எண்டு நான் கேட்டதுக்குக் குலுங்கி குலுங்கி அழுதீங்களே, ஏன்?” என்றதும் மாதவனுக்குத் திக் என்று இருந்தது.
பெற்றவர்களை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “சேர், அப்பிடி…” என்றவனை மேலே பேசவிடாமல் இடைமறித்தான் எல்லாளன்.
“இங்க பாருங்க மாதவன், பொய் சொல்லலாம் எண்டு யோசிச்சாலே திரும்பவும் தூக்கி உள்ள போட்டுடுவன். ஒழுங்கா உண்மையைச் சொல்லிடுங்க. நீங்களும் ஏதோ ஒரு கட்டாயத்தில தான் செய்திருக்கிறீங்க. அது என்ன? உங்கட வீட்டுப் பொம்பிளைகள் ஏதாவது பிரச்சினைல மாட்டினவையா? அல்லது நீங்க?” என்றவன் அவனின் அன்னையின் புறமாகத் திரும்பினான். “இங்க பாருங்கோ அம்மா, இத நான் நல்ல முறைல விசாரிக்கத்தான் விரும்புறன். அதுக்கு உங்கட மகனும் ஒத்துழைக்க வேணும். இல்லையோ, பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை.” என்றதும் துடித்துப்போனார், அவர். போனமுறை அவரின் மகன் பட்ட பாடுகளும், அதன் பிறகான இரண்டு வருடத்துச் சிறை வாழ்க்கையும், அவர்களின் தனிமையும் என்று எல்லாம் கண்முன்னே வந்து போனது.
“சேர், அம்மா அப்பா வயசான மனுசர். இதெல்லாம் வேண்டாமே.” அவர் வாயைத் திறக்க முதல் அவசரமாக இடையிட்டான் மாதவன்.
“அப்ப உண்மையச் சொல்லுங்க. நீங்க மறைக்கிற ஒரு விசயத்தால எத்தின பிள்ளைகளின்ர வாழ்க்கை நாசமா போகுது எண்டு தெரியேல்லையா உங்களுக்கு? ஏனம்மா, உங்கட மகன் இதுவரைக்கும் செய்த பாவம் காணாது எண்டா நீங்களும் சேர்ந்து மறைக்கிறீங்க?” என்றதும் அவர் உடைந்தார்.
“அது என்ர தங்கச்சின்ர மகளப்பு..” என்று அழுதார்.
“ஆர் அது?” எல்லாளனின் கூரிய விழிகள் மாதவனைத் துளைத்தது.
இனியும் எதையும் மறைக்க முடியாது என்று மாதவனுக்குப் புரிந்துபோனது. அதைவிட, இன்னொருமுறை எல்லாளனின் விசாரணையை எதிர்கொள்ளும் தெம்பு அவன் உடம்புக்கோ மனத்துக்கோ இல்லை. அதில், “அஞ்சலி சேர். அவளைக் கடத்தி வச்சுக்கொண்டுதான் என்னை இதெல்லாம் செய்யச் சொன்னவங்கள். வேற வழி இல்லாமத்தான் சேர்..” என்றவனின் விழிகளிலும் கண்ணீர். “ப்ளீஸ் சேர், அவள் இப்பதான் அதுல இருந்து வெளில வந்து, படிச்சு முடிச்சு பாங்க்ல வேலைக்குச் சேர்ந்து நிம்மதியா இருக்கிறாள். பிளீஸ், விசாரணை எண்டுற பெயர்ல அந்த நிம்மதியப் பறிச்சுப் போடாதீங்கோ.” என்று கெஞ்சினான் மாதவன்.