அதற்குமேல் அவன் அங்குத் தாமதிக்கவில்லை. அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் எதுவும் எப்படியும் மாறலாம். மாதவனையும் தூக்கி ஜீப்பில் போட்டுக்கொண்டு புறப்பட்டான். நேரம் அடுத்தநாள் காலை இரண்டை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது.
“இப்ப என்ன பிரச்சினை நடக்குது எண்டு எனக்குத் தெரியாது சேர். ஆனா, நாங்க எதுலயும் இல்லை சேர். இப்பதான் பயம் இல்லாம, பதட்டம் இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம். பிளீஸ் சேர் எங்களை விட்டுடுங்கோ.” என்று மீண்டும் கெஞ்சினான் மாதவன்.
“எப்பிடி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க மாதவன்? திரும்பவும் உங்கட தங்கச்சியைக் கடத்திட்டா என்ன செய்வீங்க?” என்றவனின் கேள்வியில் அதிர்ந்துபோனான் மாதவன். “அவங்கள பிடிக்கவே ஏலாதா சேர்?”
“எப்பிடிப் பிடிக்கிறது? நீங்க எல்லாரும் அவங்கள் சொல்லுறதுக்கு இழுபட்டா நாங்க எப்பிடிப் பிடிக்கிறது?” என்று சீறினான் எல்லாளன். மாதவன் அமைதியாகிப் போனான். கேள்விகளை எல்லோராலும் கேட்டுவிட முடியும். ஆனால், மானம் என்கிற ஒற்றைச் சொல்லில் ஒவ்வொரு குடும்பங்களினதும் மொத்த முதுகெலும்பும் ஒடிந்துவிடுமே!
தொடர்ந்து ஒருவனையே தமக்கான ஆளாக வைத்திருக்க மாட்டார்கள் என்று தெரியும். அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதால் ஆள், இடம் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும். தான் வேறு சிறை சென்று வந்தவன் என்பதனால் காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பான் என்று தன்னை அணுக்கமாட்டார்கள் என்றுதான் இவ்வளவு நாட்களும் நம்பியிருந்தான். இப்போதானால், மீண்டும் இப்படியாச சிக்கல் அதற்குள்ளும் சிக்கிவிடுவோமோ என்று நினைத்ததுமே மாதவனுக்கு நெஞ்சு நடுங்கியது. அஞ்சலி மீதுதான் அத்தனை கோபமும் திரும்பியது.
“அதுவரைக்கும் எனக்கு அஞ்சலி இப்பிடி எண்டு எதுவுமே தெரியாது சேர். வயசான அம்மா அப்பா, வேல எண்டு நிம்மதியா இருந்த வாழ்க்கை அப்பிடியே மாறிப் போச்சுது. ரெண்டுநாள் கழிச்சுத்தான் அவளை விட்டவங்கள்.
கோபத்தில போய் அஞ்சலியை அடிச்சுப்போட்டன். அடுத்தநாள் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறாள். நல்லகாலம் சித்தி பாத்துக் காப்பாத்திட்டா. அதுக்குப் பிறகு எனக்கும் அவங்கள் சொல்லுறதைக் கேக்கிறதைத் தவிர வேற வழி இல்லாம போயிட்டுது சேர். என்ர போன் நம்பர் வீட்டு நம்பர் எல்லாமே அந்த நேரம் அவங்களிட்ட இருந்தது. நீங்க வந்து என்னைப் பிடிச்ச பிறகுதான் என்ர அம்மா அப்பாவுக்கே இதெல்லாம் தெரியும் சேர்.”
“இப்ப திரும்ப ஏதும் மிரட்டல் வந்ததா?
“இல்ல சேர். உண்மையா வர இல்ல. ஆனா, இனி வருமோ எண்டு பயமா இருக்கு.”
“அப்பிடி வந்தாலும் பயப்பிடாதீங்க. எங்களிட்ட வாங்க. நீங்களா எதையாவது செய்து பிரச்சனைகளைப் பெருசாக்காதீங்க.”
“இல்ல சேர். இனி மறைக்க மாட்டன்.”
அஞ்சலியின் வீடு. வந்திருப்பது மாதவன் என்றதும் மொத்தக் குடும்பமும் எழுந்து ஓடி வந்து திறந்தனர். மாதவனோடு நின்ற மற்ற இருவரையும் பார்த்ததுமே அஞ்சலிக்கு முகம் பயத்தில் வெளுத்தது. தேகம் முழுவதும் நடுங்குவது அப்பட்டமாகத் தெரிந்தது. தன் பயத்தை மறைக்கக்கூட முடியாமல் வியர்க்க ஆரம்பித்தாள்.
ஒருகணம் அவளைக் கூர்ந்தான் எல்லாளன். அதன்பிறகு, யோசிக்கக் கூட அவளுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை அவன். அவளிடம் தெரிந்த அளவுக்கதிகமான பயமும் பதட்டமும் விசாரணையின் முறையை மாற்றச் சொன்னதில் தனியாக அழைத்துச் சென்றான். “சேர்..” என்று இழுத்த மாதவனைக் கூட, “எனக்கு அவாவை தனியா விசாரிக்க வேணும் மாதவன். இங்கேயா ஸ்டேஷனா எண்டு நீங்கதான் முடிவு செய்யவேணும்.” என்றதும் வாயை மூடிக்கொண்டான் அவன்.
“என்னய்யா? என்ன பிரச்சினை?” கண்களில் கலக்கமும் பயமுமாக வினவினார் அவளின் பெற்றோர்.
“பயப்பிடாதீங்க சித்தி. அப்ப நடந்த எதையும் நாங்க போலீஸ்ல சொல்லேல்ல தானே. அத இப்ப அறிஞ்சு விசாரிக்க வந்திருக்கிறார். அவ்வளவுதான். ஒன்றுக்கும் யோசிக்காதீங்க.” என்று தைரியம் சொன்னான் மாதவன். ஆனாலும், அவனையும் ஒருவிதக் கலக்கம் ஆட்டிப்படைத்தது.
இவர்கள் மீது ஒரு கண் இருந்தாலும் கதிரவனின் பார்வை அந்த வீட்டையே அலசியது. “அஞ்சலின்ர அறை எது?” என்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த ஒரு அறையை எட்டிப் பார்த்தான். அது சுவாமி அறை.
“மற்ற அறைதான் அஞ்சலிக்கு. நாங்க ஹோல்ல தான் படுகிறது.” என்றார் அவளின் அன்னை.
அவர்கள் காட்டிய அறைக்குள் புகுந்தான் கதிரவன்.
இங்கே, எல்லாளனின் முன்னே நடுங்கிக்கொண்டு நின்றாள் அஞ்சலி. அவன் பார்வை, அந்த இருளைக்கூட துளைத்துக்கொண்டு அவளின் நெஞ்சையே ஊடுருவியது.
“சே..ர்..” பயத்தில் இழுத்தாள் அஞ்சலி.
“எப்பிடி உங்களுக்கு இந்தப் பழக்கம் வந்தது?”
“ஏஎல் படிக்கேக்க ஒரு கூல்பாருக்கு டெய்லி போவம். அங்க வீடா இருக்கும். சும்மா விளையாட்டுக்கு ஆரம்பிச்சது. பிறகு பான்பராக் சாப்பிட்டு அது.. அது அந்தக் கடைக்காரன் பிறகு பாக்கு மாதிரியே வேற ஒண்டு தந்தவர். அது அது போதை எண்டு அப்ப எனக்கு தெரியாது சேர். அப்பிடியே.. அப்பிடியே..”
“பிறகு?” என்று பல்லைக் கடித்தான் எல்லாளன்.
“ஒருநாள் என்ன நடந்தது எண்டு தெரியாது. அங்க வாங்கி வாய்க்க போட்டுக்கொண்டு வரேக்க ரோட்டுல மயங்கி விழுந்த நினைவு. பிறகு..” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
“பிறகு?” நெஞ்சு கொதித்தது எல்லாளனுக்கு.
“முழிச்சுப் பாக்கேக்க எங்கயோ ஒரு அறைக்க இருந்தனான். அவேதான் அப்ப ஊசி ஏத்தி விடுவினம். பிறகு என்னை விடேக்கையும் ஒரு கடை சொல்லி அங்க வங்காட்டி திரும்பக் கடத்துவம் எண்டு சொன்னவே சேர்.. பயத்தில.. எனக்கும் விடேலாமா இருந்தது.”
“தற்கொலைக்கு முயற்சி செய்தது?”
“அது… பயத்தில..”
“பிறகு எப்பிடி இதுல இருந்து வெளில வந்தீங்க?” அவளின் அளவுக்கதிகமான பதட்டம் அவனைத் தொடர்ந்து சந்தேகிக்க வைத்துக்கொண்டே இருந்தது.
“அது.. அது நானா…”
“எனக்கு உண்மை வேணும் அஞ்சலி!” என்று அதட்டியவனை இடையிட்டுக்கொண்டு வந்தான் கதிரவன். “சேர், அவவின்ர அறைல இந்த லொலி இருந்தது.”
அஞ்சலிக்கு நெஞ்சு ஒருமுறை திக் என்றது. “சேர், அது சும்மா லொலிதான். வேணும் எண்டால் நீங்களே சாப்பிட்டுப் பாருங்க.” என்று, பயத்தில் அவசரமாகச் சொன்னாள்.
“அப்ப சும்மா இல்லாத லொலியும் இருக்கா அஞ்சலி?” நிதானமாக அவள் விழிகளையே கூர்ந்தபடி வினவினான் எல்லாளன்.
“சேர்…” தன் வாயால் தானே மாட்டிக்கொண்டது புரிந்துபோனது அவளுக்கு. பயத்தில் தேகமெல்லாம் வெடவெட என்று நடுங்கியது.
“சொல்லுங்க அஞ்சலி.”
“இல்ல சேர். அது சும்..மா லொலிதானே. அத அது ஏன் ஒரு விசயமா சொல்லுறார் எண்டுதான்..” வார்த்தைகள் ஒவ்வொன்றும் தந்தியடித்தது அவளுக்கு. அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க மறுத்தாள். அந்த இரவு நேரத்துக் குளிரிலும் அவளுக்கு வியர்த்தது.
“ஓ..! அப்ப இதைப்பற்றி உங்களுக்கு ஒண்டும் தெரியாது.”
“தெரியாது சேர்!” அவன் முகம் பாராமல் சொன்னாள்.
“பொம்பிளைப் பிள்ளை எண்டு தன்மையா விசாரிச்சா சேட்டை விடுறீங்களா? ஸ்டேஷனுக்கு வாறீங்களா போவமா?” என்றவனின் உறுமலில் வேகமாக இரண்டு அடி பின்னுக்கு நகர்ந்தாள் அஞ்சலி. “சேர் பிளீஸ் சேர்.” என்று இறைஞ்சினாள்.
அவ்வளவு பயத்திலும் உண்மையைச் சொல்லாமல் சாதிக்கும் அவளைக்கண்டு உண்மையிலேயே எல்லாளனுக்குக் கோபம் வந்தது. “கதிரவன், இது சரி வராது! மொத்தக் குடும்பத்தையும் ஏத்துங்க ஜீப்ல. ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா தெரியும் தானே?” என்றுவிட்டு ஜீப்பை நோக்கி நடந்தான் எல்லாளன்.
“சேர் சேர் வேண்டாம் சேர். அம்மா அப்பா பாவம் சேர்.” அவனோடு கூடவே ஓடிவந்தபடி சொன்னவளின் பேச்சை அவன் கருத்தில் எடுக்கவே இல்லை.
“ஏத்துங்க கதிரவன்!” என்றவனின் ஒற்றை அதட்டலில், “நான் உண்மையச் சொல்லுறன் சேர். அம்மா அப்பாவை விட்டுடுங்கோ பிளீஸ். என்னால அவே பட்டது போதும் சேர்!” என்று அழுதாள் அவள்.
“சொல்லுங்க!”
“சத்தியமா இப்ப நான் பாவிக்கிறேல்ல சேர். ஆனா ஆனா காண்டீபன் சேருக்கு…” என்றவளை மேலே பேச விடாமல், “காண்டீபனா?” என்று அதிர்ந்தான் எல்லாளன். அந்தப் பெயரே அவனுக்குள் இடியென இறங்கிற்று. “எந்தக் காண்டீபன்? காண்டீபன் சம்மந்தனா? இல்ல வேற காண்டீபனா?” முதன் முறையாக நிதானத்தை இழந்து அவன் பதறிப் பார்க்கிறாள் அஞ்சலி.
அவளைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. “சொல்லுங்க அஞ்சலி! எந்தக் காண்டீபன்?” தன் சுயத்தை இழந்து அவள் முகத்தருகில் வந்து உறுமினான்.
“காண்டீபன் சம்மந்தன்.”
சில்லுச் சில்லாகச் சிதறி நின்றான் எல்லாளன். அவன் மனதில் கருமையைப் பரப்பியபடி அடுத்த நாளின் விடியல் புலர ஆரம்பித்திருந்தது.