“பிறகு எப்பிடிப் போதைப் பழக்கம் வந்தது?”
அந்த வார்த்தையைக் கேட்டதும் துடித்துப் போனார் அன்னை. “இல்ல, என்ர பிள்ளைக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்ல! நான் அப்பிடி என்ர மகளை வளக்கேல்ல.” கண்ணீருடன் அவசரமாகச் சொன்னார்.
பொத்தி பொத்தி வளர்த்த மகள் உயிரை மாய்த்துக் கொண்டதும் அல்லாமல், இப்படி ஒரு அவப் பெயரை வாங்கி விடுவாளோ என்று பதறினார்.
“தம்பிதான் அப்பிடிச் சொல்லுறான். அதுவும் இண்டைக்குத்தான் சொன்னவன். ஆனா, நான் ஒவ்வொரு நாளும் அவளின்ர அறைய கிளீன் பண்ணுறனான். தட்டிக் கூட்டுறனான். அப்பிடி ஒரு நாளும் மணக்கவும் இல்ல, நான் பாக்கவும் இல்ல. எங்கட பிள்ளை அப்பிடியான பிள்ளை இல்ல.”
அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவர்களின் மகனைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தான் எல்லாளன்.
“பெயர் என்ன?”
“சாகித்தியன்.”
“படிக்கிறீரா?
“ஓம், கம்பஸ் செக்கண்டியர். ஆர்ட்ஸ்.”
தன்னைத் திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றாலும் உள்ளுக்குள் முற்றிலுமாக உடைந்துபோயிருக்கிறான் என்று அவன் முகமே சொல்லிற்று.
“தங்கச்சிக்கு காதல், இல்ல ஆரும் பெடியலாள(boys) பிரச்சினை எண்டு ஏதும் தெரியுமா?”
இல்லை என்று தலையசைத்தான் அவன்.
“உமக்கு ஏதும் சந்தேகம் இருக்கா?”
அதற்கும் இல்லைதான்.
“போதைப் பழக்கம் எண்டு சொன்னது?”
“எனக்கும் வடிவாத்(ஒழுங்கா) தெரியாது சேர். ஆனா, சந்தேகமா இருக்கு. இண்டைக்குத் தூக்குல தொங்கி இருந்ததைப் பாத்ததும் பதறிப்போய் உயிர் இருக்கா எண்டு அவளைப் போட்டு உலுக்கினனான். அப்பத்தான் அவளின்ர கைல பாத்தனான். ஊசி ஏத்தின அடையாளம் இருந்தது. அதுக்குப் பிறகு யோசிச்சுப் பாத்தா, இப்ப கொஞ்ச நாளா அவள் முழுக்கை இல்ல முக்காக்கை உடுப்புகள்தான் போடுறவள் எண்டு தெரிஞ்சது. முந்தி மாதிரி எங்களோட வந்திருந்து கதைக்கிறதும் குறைவு. அறைக்கையே இருப்பாள். எப்பவும் கொஞ்சம் சோம்பலா இருப்பாள். ஏஎல் எக்ஸாமுக்கு இரவிரவாக் கண் முழிச்சுப் படிக்கிறதால அப்பிடி எண்டு நாங்களும் பெருசாக் கவனிக்கேல்ல. இப்ப யோசிக்க யோசிக்க அப்பிடி இல்லையோ எண்டு இருக்கு.” குரல் அடைக்கச் சொன்னான் அவன்.
தைரியம் கொடுக்கும் விதமாக அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் எல்லாளன். “பிரேத பரிசோதனை(postmortem) ரிப்போர்ட் வரட்டும். என்ன எண்டு கண்டு பிடிக்கலாம். வேற ஏதும் நினைவு வந்தாலோ, இல்ல, இனி ஏதாவது சந்தேகப்படுற மாதிரி நடந்தாலோ, உடன எங்களுக்குச் சொல்லோணும், சரியா?”
அவன் சரி என்று தலையை ஆட்டினான்.
தற்காலிகமாக அந்த வீட்டை சீல் வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, தடயங்களை யாராவது அழிக்க முற்படலாம் என்று இரு கொன்ஸ்டபிள்களை காவலுக்கு நிறுத்தினான். அவர்களின் அறிவிப்பு வருகிற வரைக்கும் ஊரை விட்டு வெளியே எங்கேயும் போகக் கூடாது என்று வீட்டினருக்கு அறிவித்தான்.
மிகுதி வேலைகளைக் கதிரவனைக் கவனிக்கச் சொல்லிவிட்டு அவன் வெளியே வந்தபோது, ஸ்கூட்டியில் இன்னொரு பெண்ணுடன் வந்தாள் ஆதினி. கூடவே, இன்னும் இரண்டு பைக்குகளில் நான்கு ஆண்கள்.
புருவத்தைச் சுருக்கினான் எல்லாளன்.
“என்ர ஃபிரெண்ட்ஸ், சேர்.” அவசரமாக ஓடி வந்து சொன்னான் சாகித்யன்.
அப்போதும் எல்லாளனின் விழிகள் அவளைத்தான் உறுத்து விழித்தன. அதைக் கண்டு உள்ளுக்குள் அலறினாலும் காட்டிக்கொள்ளாமல் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவனிடம் வந்தாள் ஆதினி.
“சாமந்தி எங்கட ஸ்கூல். எனக்குத் தெரியும். சாகி அண்ணாவையும் பழக்கம்தான்.”
எப்போதும் துரு துரு என்று இருக்கும் அவள் முகம், இன்று கலங்கியிருப்பதைக் கண்டு மனம் சற்றே இளகினாலும் காட்டிக்கொள்ளவில்லை எல்லாளன்.
“எதுவா இருந்தாலும் இப்ப என்னத்துக்கு இங்க வந்தனி?” என்று குரலைத் தணித்து அதட்டினான்.
இப்போது அவள் விழிகளிலும் மெல்லிய கோபம் படர்ந்தது. “இப்பதான் கேள்விப்பட்டனாங்க. அதுதான், என்ன நடந்தது எண்டு கேக்க வந்தனாங்க.” என்றாள் அவனை முறைத்தபடி.
“கேட்டு என்ன செய்யப் போறாய்? கேஸ நீ விசாரிக்கப் போறியா?”
“நாங்களும் சட்டம்தான் படிக்கிறம். இன்னும் நாலஞ்சு வருசத்துல நாங்களும் விசாரிப்பம்!” ரோசத்தோடு சொன்னாள் அவள்.
“இப்பிடியே திரிஞ்சியோ கட்டாயம் நடக்கும்!”
அப்படி அவன் மட்டம் தட்டியதில் நண்பர்களுக்கு மத்தியில் அவமானமாகப் போயிற்று அவளுக்கு. பதில் சொல்லாமல் அவனை முறைத்தாள்.
அதைப் பொருட்படுத்தாமல், “இதெல்லாம் ஆரு?” என்று அவளோடு நின்றவர்களைக் காட்டி வினவினான். அவளின் கூட்டத்தை அவனுக்கும் தெரியும். இந்த முகங்கள் அத்தனையும் புதிதாக இருந்தன.
“அது… சாகி அண்ணான்ர ஃபிரெண்ட்ஸ்.”
“ஓ! நீ இருந்தா போலீஸ்காரன் எவனும் கேள்வி கேக்க மாட்டான். அதைப் பயன்படுத்தித் தைரியமா வந்திட்டுப் போகலாம் எண்டு பிளான் போட்டீங்களோ?”
உண்மை அதுதான் என்பதில் பதில் சொல்லத் திணறினாள் ஆதினி.
அவளை ஒரு பார்வை பார்த்தவன், “அஞ்சு நிமிசம்தான் டைம். அதுவும் எனக்கு முன்னாலதான் என்ன கதைக்கிறதா இருந்தாலும் கதைக்கோணும்! அதுக்கு மேல ஒரு கணம் கூட இஞ்ச நிக்கக் கூடாது!” என்று முடித்துவிட்டு அங்கேயே நின்றுகொண்டான்.
அவன் அரட்டிய அரட்டிலேயே எல்லோரும் நடுங்கிப்போயிருந்தனர். இதில், அவன் முன்னிலையில் பேசு என்றால் என்னத்தைப் பேசுவது? ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனரே தவிர, ஒரு வார்த்தை வெளியில் வரவில்லை.
இலங்கையின் முக்கிய நீதிபதிகளில் ஒருவரின் மகள். அவருக்கான ஆபத்துகள் அவளைச் சூழ்வதற்குச் சாத்தியங்கள் அதிகம். கவனமாக இரு என்று எத்தனையோ முறை சொல்லியாயிற்று. எல்லாமே எருமை மாட்டுக்கு மேல் பெய்த மழைதான்!
எல்லாளனிடம் என்னவோ சொல்ல வந்த கதிரவன், இவளைக் கண்டதும் ஒரே ஓட்டமாகத் திரும்பி வீட்டுக்குள் ஓடியிருந்தான். கவனித்தாலும் கருத்தில் கொள்ளவில்லை எல்லாளன். ஐந்து நிமிடங்கள் முடியவும் கையைத் திருப்பி நேரம் பார்த்தான்.
புறப்படு என்கிறான். அவளுக்கு எரிச்சல் மண்டியது. பார்வையால் எரித்து விட்டு, “வாறம் அண்ணா. ஏதும் ஹெல்ப் வேணும் எண்டால் கேளுங்கோ!” என்று சாகித்தியனிடம் சொல்லிவிட்டு, அவனைத் திரும்பியும் பாராமல் நடந்தாள்.
அவர்களின் பின்னாலேயே வந்த எல்லாளன், அவள் ஸ்கூட்டியின் பக்கம் திரும்பவும், “ஸ்கூட்டியை அந்தப் பிள்ளையிட்டக் குடுத்திட்டு நீ போய் ஜீப்பில ஏறு!” என்றான் உத்தரவாக.
சும்மாவே ஆதினிக்கு எதிலும் பொறுமை இல்லை. இன்றைக்கு இறப்பு வீடு என்று அவனுடைய அத்தனை அதட்டல்களுக்கும் அடங்கிப் போனது வேறு உள்ளுக்குள் நின்று எரிந்து கொண்டிருந்தது. இப்போது உத்தரவு வேறு போடுகிறான். “அப்பிடியெல்லாம் வரேலாது. நான் என்ர சிலுக்கிலதான் வருவன்!” என்று பிடிவாதக் குரலில் மறுத்துரைத்தாள்.
அதற்கெல்லாம் அசராமல் அவள் கையில் இருந்த திறப்பைப் பறித்து, அவளின் நண்பியிடம் கொடுத்தான். “ஆள் வந்து உங்கட வீட்டில ஸ்கூட்டியை எடுக்கும். இப்ப நீங்க வெளிக்கிடுங்க.” என்றுவிட்டு, இவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தான்.
அவளின் மறுப்பையோ, கையை உருவப் பார்த்தத்தையோ பொருட்டில் கொள்ளாமல், ஜீப்பின் கதவைத் திறந்துவிட்டு, “ஏறு!” என்றான்.
அவன் இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து, அவன் நெற்றியைப் பதம் பார்த்தால் என்ன என்கிற அளவுக்குக் கோபம் வந்தது அவளுக்கு. “எள்ளுவய, உனக்கு இருக்கடா!” பக்கத்தில் யாருமில்லை என்கிற தைரியத்தில் வாய் விட்டுச் சீறிவிட்டு, ஏறி அமர்ந்துகொண்டாள்.