அவனுக்கு மாறான அமைதி காண்டீபனிடம். அவன் பார்வை, மேசையில் கோத்திருந்த தன் கைகளிலேயே நிலைத்திருந்தது. எதையோ மிகத் தீவிரமாக யோசித்தான். பின் நிமிர்ந்து, நெடிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, எல்லாளனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.
“எனக்கொரு உயிர் நண்பன் இருந்தவன். சின்ன வயதில இருந்தே நானும் அவனும்தான் கிரைம் பார்ட்னர்ஸ். ரெண்டு வீட்டிலயும் பெரிய வசதி இல்ல. அதாலயோ என்னவோ அவ்வளவு நெருக்கம். எனக்கும் அவனுக்கும் நிறையக் கனவுகள். நல்லாப் படிக்கோணும், நல்ல உத்தியோகத்துக்குப் போகோணும், எங்கட ஊர்க் கோயிலைப் பெருசாக் கட்டோணும், ஏழைகளுக்கு இலவசமாப் படிப்புச் சொல்லிக் குடுக்கோணும், முதல் முதலாக் காதலிக்கிறவளையே கட்டோணும் எண்டு நிறைய நிறைய…” என்றவனின் உதட்டோரம் வறண்ட சிரிப்பு.
தாடை இறுகப் பார்வையை வேகமாக அகற்றிக் கொண்டான் எல்லாளன்.
“அவனுக்கு ஆசிரியன் ஆகோணும் எண்டு ஆசை. எனக்கு என்ர அப்பா மாதிரி நேர்மையான போலீஸ் ஆகோணும் எண்டு ஆசை. ஒரு நாள்… அந்த ஒரு நாள் எங்கட வாழ்க்கைல வந்தே இருக்கக் கூடாது. ஆனா வந்தது. அவன்ர அம்மாவும் அப்பாவும் கொடூரமாச் செத்திட்டினம். அப்பாக்கு அதைத் தாங்கவே ஏலாமப் போச்சு. நானும் அவனும் எப்பிடியோ அப்பிடித்தான் அவரும் அவன்ர அப்பாவும். கோபத்தோட தன்ர நண்பன்ர குடும்பத்துக்கு நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேக்கப் போன அப்பாவைக் காணேல்ல. நாலு நாளாச் சித்திரவதை செய்தே இடுப்புக்குக் கீழ இயங்கவிடாமச் செய்திட்டாங்கள். எங்க போனவர், ஆரைத் தேடிப் போனவர் எண்டு அவரைத் தேடிப்போன எனக்குக் கால முறிச்சிட்டாங்கள். இந்தக் கையால இப்பவும் ஒரு அளவு தாண்டின பாரத்தைத் தூக்கேலாது. உணர்வு இல்லாமப் போயிடும். பொருளையும் விட்டுடுவன்.” என்று இடக்கையைக் காட்டினான்.
அதிர்வுடன் காண்டீபனையே பார்த்தான் எல்லாளன். சின்னதாகச் சிரித்தான் காண்டீபன். அந்தச் சிரிப்பின் பின் இருந்த வலியை, வேதனையை, விரக்தியைக் கண்டுகொண்ட எல்லாளனுக்குள் பெரும் பிரளயங்கள் நிகழ ஆரம்பித்தன.
“ஒரு மாசம், அப்பாவும் மகனும் அனாதைகள் மாதிரி ஆஸ்பத்திரில கிடந்தோம். ஆருமே வந்து பாக்கேல்லை. ஆருக்குமே நாங்க என்ன ஆனோம், எங்க போனோம் எண்டு தெரியாது. அதோட, அப்பாக்கு நான் இருக்கிறனா எண்டு தெரியாது. எனக்கு அவர் இருக்கிறாரா எண்டு தெரியாது. ஒருவழியா ரெண்டு பேரும் உயிரோட வந்து சேர்ந்தா, என்ர உயிர் நண்பனைக் காணேல்ல.” என்றவன் அந்த நாள்களுக்கே சென்று வந்திருக்க வேண்டும். பெரும் களைப்புடன் விழிகளை மூடித் திறந்தான்.
“அதுக்குப் பிறகும் அவனைத் தேடுற நிலைமைல நான் இல்ல. என்னைப் பாப்பேனா, இல்ல, அப்பாவைப் பாப்பேனா? அவனுக்கு என்னில கோவமாம், தோள் குடுத்திருக்க வேண்டிய நேரத்தில அப்பாவையும் கூட்டிக்கொண்டு நான் எங்கயோ போயிட்டேன் எண்டு நினச்சிருக்கிறான். அவனுக்கு உதவிக்கு வந்தா எங்களுக்கும் ஏதும் நடந்திடுமோ எண்டு நாங்க பயந்திட்டோமாம் எண்டு சொல்லியிருக்கிறான். இத, பிறகு ஒரு நாள் மிதிலா சொன்னவள்.” என்றதும் மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டான் எல்லாளன்.
அன்றைய நாள்களில் அவன் அப்படி நினைத்ததும் அதை மிதிலாவிடம் சொன்னதும் உண்மைதான். அதனால்தான் போகுமிடத்தைக் கூட யாரிடமும் சொல்லாமல் போனான். அந்த நேரம் அவ்வளவு விரக்தியும் கோபமும்.
“ஆனா, எனக்கு அவனில கோவம் இல்ல. திடீரெண்டு அம்மா அப்பாவக் கோரமாப் பறி குடுத்திட்டு, அதுக்கு போலீஸ், கேஸ் எண்டு அலஞ்சுகொண்டு, குமர்ப்பிள்ளையா இருக்கிற தங்கச்சியையும் வச்சுக்கொண்டு, இனி அவனுக்கும் அவன்ர தங்கச்சிக்கும் எந்த நேரம் என்ன நடக்குமோ எண்டு பயந்துகொண்டு, அந்த நேரம் அவன் என்ன பாடெல்லாம் பட்டிருப்பான் எண்டு எனக்குத் தெரியும். அவனால தெளிவாச் சிந்திக்கக் கூட ஏலாம இருந்திருக்கும். என்ன, அவனுக்கு நான் தேவையா இருந்த நேரம் கூட நிக்கேலாமப் போயிட்டுதே எண்டுதான் எனக்குக் கவலை. அத அவன் எண்டைக்காவது ஒருநாள் விளங்கிக்கொண்டான் எண்டாக் காணும்.” என்றவன், “என்ர நண்பன் அத விளங்கிக்கொள்ளுவான் தானே, ஏஎஸ்பி சேர்?” என்று வினவினான்.
எல்லாளன் கதைக்கும் நிலையில் இல்லை. காண்டீபனையே பார்த்திருந்தான்.
“அப்பாக்கு இடுப்புக்குக் கீழ இயங்காமலேயே போயிட்டுது. எனக்குக் காலுக்குக் கம்பி வச்சு, நான் தனியா நடக்கிறதுக்கே எவ்வளவோ காலமாயிற்றுது. ஆசைப்பட்ட வேலைக்குப் போறதுக்குக் கூடத் தகுதி இல்லாதவனா நிண்டனான். எல்லாமே வெறுத்துப் போச்சு. நண்பன் வருவான் எண்டு நினைச்சன். அவனும் வரவே இல்ல. எங்க போனான் எண்டும் தெரியாது. அந்த ஊரும், மனுசரும் நடந்த மோசமான சம்பவங்களைத்தான் திரும்ப திரும்ப நினைவுபடுத்தினது. அதால, நாங்களும் அந்த ஊரை விட்டே வந்திட்டம். அப்பாவையும் பாத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுறதுக்கு ஒரு வேல எண்டு படிச்சு, ஒரு விரிவுரையாளனா ஆகி, வாழ்க்கை எப்பிடியோ போய்க்கொண்டு இருந்த நேரம், யாழ்ப்பாணத்துக்குப் புது ஏஎஸ்பியா எல்லாளன் இராமச்சந்திரன் பதவியேற்கிறாராம் எண்டு நியூஸ்ல சொன்னாங்கள்.” என்றவன், கண்களில் படிந்திருந்த மெல்லிய நீர்ப் படலத்துடன் சந்தோசமாகச் சிரித்தான்.
“அவ்வளவு சந்தோசமா இருந்தது. நான் போலீஸ் ஆகாட்டி என்ன, என்ர நண்பன் ஆகி நிக்கிறான், பாருங்கடா எண்டு கத்தோணும் மாதிரி இருந்தது.” என்றவனின் பார்வை எல்லாளனில் படிந்தது.
“நல்லாத்தான் இருக்கு, என்ர நண்பனுக்கு இந்த உடுப்பு, இந்தக் கம்பீரம், இந்த மிடுக்கு எல்லாமே!” அவனுக்கே உரித்தான உதட்டோரச் சிரிப்புடன் தலையை அசைத்துச் சொன்னவன் விழிகளில் மிகுந்த ரசனை.
எல்லாளன் நிலை மிக மோசமாக இருந்தது. விருட்டென்று எழுந்து சென்று, அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டான். அவனுக்குத் தன்னைச் சமாளித்துக் கொள்வதற்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. அவற்றைச் செலவு செய்து, தன்னை நிதானப்படுத்திவிட்டுத் திரும்பி வந்து, மேசையில் இரு கைகளையும் ஊன்றி நின்றான்.
“எல்லாம் சரி, தமயந்திக்கு ஏன் போதையப் பழக்கினனீ?” என்றான் நிதானமாக.
காண்டீபனும் அசரவில்லை. “என்ர குடும்பத்தையும் என்ர நண்பனின்ர குடும்பத்தையும் நாசமாக்கினவனை சும்மா விடச் சொல்லுறியா?” என்று திருப்பிக் கேட்டான்.
“இத நான் நம்போணும்?”
“உண்மை அதுதான்.”
“என்னட்ட அடி வாங்காத. உயிர் நண்பன், அது இது எண்டு ஆயிரம் கத சொன்னியே, அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு! இப்ப நான் ஏஎஸ்பி, நீ சந்தேக நபர்! உடம்பப் புண்ணாக்காம உண்மையச் சொல்லு!”
காண்டீபனின் உதட்டோரம் மெல்லிய முறுவல். “என்னட்ட வேற உண்மை இல்ல ஏஎஸ்பி சேர்!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே எல்லாளனின் இரும்புக் கரம் அவன் தாடையில் அதி வேகத்துடன் இறங்கிற்று.
காண்டீபன் அணிந்திருந்த கண்ணாடி தரையில் சென்று விழுந்தது. இரத்தம் மொத்தமும் முகத்துக்குப் பாய, நொடி நேரம் கதி கலங்கிப்போனான். விழிகளை இறுக்கி மூடித் திறந்து தன்னைச் சமாளிக்க முயன்றான். உதடு வெடித்து இரத்தம் கசியத் தொடங்கிற்று.
எல்லாளனின் கண்ணசைவில் கீழ், காண்டீபன் முன்னே தண்ணீர்க் கோப்பை வைக்கப்பட்டது. எடுத்து அருந்தினான். வாயில் கசிந்திருந்த இரத்தம் தண்ணீரோடு உட்சென்றது. மெல்ல அந்த உதட்டோரத்தை பெரு விரலால் துடைத்துவிட்டுக்கொண்டு, எல்லாளனை நிமிர்ந்து பார்த்தான். அவன் விழிகள் இலேசாகச் சிவந்து, கலங்கி இருந்தன.
“இப்பச் சொல்லு!” என்றான் எல்லாளன் எதற்கும் கலங்காதவனாக.
“நீ அடிச்சதுக்காக இல்ல. எனக்குமே எல்லாத்தையும் முடிச்சு வைக்கத்தான் விருப்பமா இருக்கு!” என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சுடன் பேசத் தொடங்கினான்.
“என்ர அப்பாவும் நானும் இப்பிடியாகிறதுக்கு அவன் காரணம். உன்ர குடும்பம் நொருங்கிப் போனதுக்கும் அவன்தான் காரணம். இப்பிடி நிறையக் குடும்பங்கள். அஞ்சலி என்ர மாணவி. அவள் போதைக்கு அடிமையானதுக்கும், மாதவன் ஜெயிலுக்குப் போய் வந்ததுக்கும் அவன்தான் காரணம். அஞ்சலி மூலம் எனக்குப் போதை மருந்து ஈஸியா கிடைக்கும். தமயந்தி என்ர வகுப்புக்கே வந்தது நானே எதிர்பாக்காதது. லட்டு மாதிரி அவனே எனக்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தரேக்க விடச் சொல்லுறியா? ஊர்ல இருக்கிற அத்தனை பேருக்கும் போதையப் பழக்கிறவன்ர மனுசிக்கே பழக்கினா எப்பிடி இருக்கும்? அதுதான் பழக்கினான்!”
எல்லாளனின் விழிகள் அவனையே கூர்ந்தன. தயங்காது எதிர்கொண்டான் காண்டீபன். இப்போதும் எதையும் அவன் முழுமையாகச் சொல்லவில்லை என்கிற அந்த எண்ணம், அவனுக்கு மறையவில்லை
“இவனை செல்லுக்க போடுங்க!” என்று உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.