நீ தந்த கனவு 3(1)

சட்டப்படி செய்யவேண்டிய ஒரு செயலைச் செய்யாமல் இருந்தாலும், சட்டப்படி செய்யக்கூடாத ஒரு செயலைச் செய்தாலும், அது குற்றமாகும்!

——————————

கதிரவன் சொன்ன அந்த வீதிக்குள் நுழையும்போதே எல்லாளனின் விழிகள் கூர்மை பெற்றுக்கொண்டன. மத்திய தர வகுப்பினர் வாழும் இடம் என்று பார்க்கவே தெரிந்தது. மதில்களைக் கொண்டு கூண்டுகள் அமைத்து, புதிதாகக் கட்டிய அல்லது திருத்தியமைக்கப்பட்டுப் புதியதுபோல் காட்சி தரும் வீடுகள் தான் பெருமளவில் இருந்தது. வீடுகளின் முன்னே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் அவர்களின் வனப்பைத்தான் சொல்லின.

சற்றுத் தள்ளி ஜீப்பை நிறுத்திவிட்டு, தன் வேக நடையில் அந்த வீட்டை நெருங்கினான். காவல் துறை வாகனங்கள், பிணத்தைப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லும் வண்டி, தடயவியலாளர்களின் வாகனங்கள், காக்கிச் சட்டைகளின் அதீத நடமாட்டம் என்று, அந்த இடமே அசாதாரணச் சூழ்நிலையைத் சுமந்திருந்தது. வீட்டின் முன்னே, சிவப்பும் வெள்ளையும் கோடு போட்ட கயிறு கட்டப்பட்டு, யாரையும் அனுமதியற்று உள் நுழையத் தடை செய்யப்பட்டிருந்தது. அதைச் சுற்றி ஊர்மக்கள் கூடியிருந்தனர். எல்லோர் முகங்களிலும் மித மிஞ்சிய அச்சமும் திகிலும் அப்பிக் கிடந்தது.

இவனைக் கண்டதும் அவசரமாக விலகி வழிவிட்டு நின்றுகொண்டனர். நடை, உடை, தோரணை அத்தனையிலும் மிகுந்த கம்பீரம். கத்தி போன்ற விழிகளால் அங்கிருந்தவர்களை ஒரு அலசு அலசினான். அதுவே, அவர்களுக்குள் ஒருவித அச்சத்தை விதைத்தது.

முதல் வேலையாகக் கான்ஸடபிள் ஒருவரை அழைத்துக் கூட்டத்தைக் கலைக்க உத்தரவிட்டான். இவனைக் கண்டுவிட்டு கதிரவன் ஓடிவந்து சல்யூட் அடித்தான். விறுவிறு என்று வீட்டுக்குள் நடந்தவனோடு கூடவே நடந்தபடி தகவல்களைத் தரத் தொடங்கினான்.

“விடிய காய்ச்சல் இருந்திருக்கு. தாய் பனடோல் குடுத்திருக்கிறா. பள்ளிக்கூடம் போகேல்ல எண்டு சொல்லிப்போட்டுப் படுத்திட்டாவாம். பகல் எழுப்பிச் சாப்பாடும் குடுத்திருக்கிறா. இப்ப கொஞ்சத்துக்கு முதல் காய்ச்சல் விட்டுட்டுதா எண்டு பாக்கப் போன அம்மாதான் முதல் பாத்திருக்கிறா.” அவன் சொன்னதை உள்வாங்கியவனின் விழிகள், அந்த வீட்டை மிகுந்த கவனத்துடன் அலசியது.

எங்கும் எதுவும் கலைந்திருக்கவில்லை. எந்த இடத்திலும் அசம்பாவிதம் ஒன்று நடந்ததற்கான அறிகுறியே இல்லை. வெள்ளை உடையில் தம்மை முழுவதுமாகப் போர்த்தியிருந்த தடயவியலாளர்கள், எதையும் கலைக்காமல் தடயங்களைத் திரட்டிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பெண் பிள்ளையின் அறை வாசலிலேயே எதிர்ப்பட்டது அவளின் சடலம். தொங்கிய கயிற்றில் இருந்து இறக்கியிருந்தனர். போர்வையை விலக்கிப் பார்த்தான். பூப்போன்ற அழகிய முகம். “பெயர் என்னவாம்?” சடலத்தில் கீறல்கள், காயங்கள் ஏதும் கண்ணுக்கு எட்டுகிறதா என்று ஆராய்ந்தபடி வினவினான்.

“சாமந்தி.”

வேகமாகத் திரும்பிக் கதிரவனைப் பார்த்தான் எல்லாளன். அவன் முகத்திலும் பார்க்கும் வேலையைத் தாண்டிய துயரம் தெரிந்தது. அந்தளவில் அந்த முகம் சாமந்திப் பூவேதான். ஆனால், உயிர் போயிற்றே!

“உடம்பில வேற ஏதும் காயம்?”

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சின்னக் கீறல் கூட இல்ல சேர்.”

“அனுப்பிவிடு!” என்றுவிட்டு வாசலில் நின்றபடியே அறையை ஆராய்ந்தான்.

தடயவியலாளர்கள் தரையெங்கும் ஷோக்பீஸ் கோடுகள் வரைந்திருந்தனர். விரல் ரேகைகள் எடுப்பதற்காகத் தூவப்பட்டிருந்த இரசாயன மருந்தின் நெடி, மூக்கை நிரடியது. பொருட்கள் பல பரவிக் கிடந்தன. ஆங்காங்கே கோடுகள், கீறல்கள் என்று அவர்களின் மொழியில் எதையெதையோ குறித்திருந்தனர். எதையும் கலைக்காமல், கவனமாகக் காலடிகளை எடுத்துவைத்து, நிதானமாக அறைக்குள் தாவினான்.

கேர்ட்டின், கட்டில் விரிப்பு, தலையணைகள், அவளின் மேசை, கப்போர்ட்டில் ஒட்டியிருந்த போட்டோக்கள் அனைத்திலும் பிங்க் வர்ணம் கலந்திருந்தது. பார்பி பொம்பைகள் சின்னதும் பெரிதுமாக அறை முழுக்க வைத்திருந்தாள். அதைவிட, அவளுக்கு அவளின் அறையை மிகவும் பிடிக்கும் போலும். அவ்வளவு நேர்த்தியாக, மிக அழகாகப் பராமரித்திருந்தாள். இப்படி, ரசித்து வாழ்ந்த அறையிலேயே தன் வாழ்க்கையையும் முடித்துக்கொள்வோம் என்று என்றாவது நினைத்திருப்பாளா?

பொருளாதார ரீதியில் எந்தக் குறையும் இருப்பதுபோல் அந்த அறை சொல்லவில்லை. அவள் பயன்படுத்திய லாப்டப், கைபேசி என்று அனைத்தையும் கையகப்படுத்தினான். கையுறை அணிந்து, அங்கிருந்த புத்தகங்கள், அவளின் கப்போர்ட், மேசையின் இழுப்பறைகள் என்று அனைத்தையும் அலசினான். வீட்டின் பின்பக்கம், முன்பக்கம் என்று எல்லா இடமும் சுற்றிப் பார்த்தான். சந்தேகத்திற்கிடமாக எதுவுமே அகப்படவில்லை.

ஒரே ஒரு கடிதம் மட்டும். அதில், “அம்மா, அப்பா, அண்ணா சொறி. நான் போறன். எனக்கு வாழ விருப்பம் இல்ல.” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.

தன் அறையையே ரசித்துப் பராமரித்தவளுக்கு வாழ ஏன் விருப்பம் இல்லாமல் போனது?

பிரேத பரிசோதனைக்குச் சடலத்தை அனுப்பிவிட்டு வந்த கதிரவனிடம், “இங்க இருக்கிற புக்ஸ் எல்லாத்தையும் கவனமா பாக்கச் சொல்லு. முன் பக்கம், பின் பக்கம் எண்டு ஏதாவது எழுதி இருக்கலாம். ஒரு சின்னச் சாட்சி கூட மிஸ் ஆகக்கூடாது! அயலட்டையில விசாரி. முக்கியமா சின்னாக்கள் இருப்பினம். அவேய பிடி.” என்று உத்தரவிட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றான்.

அழுதழுது ஓய்ந்து, முழுச் சக்தியையும் இழந்து, ஏன் இப்படி ஆனது என்கிற கேள்வியைச் சுமந்து அவனைப் பார்த்தனர்.

“நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்கட மகள் ஏன் இந்த முடிவுக்குப் போனவா எண்டு ஏதும் தெரியுமா? இல்ல, உங்களுக்கும் அவவுக்கு ஏதும் சண்டை நடந்ததா?”

தாய் மளுக்கென்று கண்ணீர் உகுக்க, முற்றிலுமாக உடைந்து போயிருந்த தந்தை பெரும் சிரமத்துக்கு மத்தியில் இல்லை என்று தலையை அசைத்தார்.

“வேற ஏதாவது சந்தேகம் மாதிரி?”

அக்கேள்விக்கு என்ன விதமாகப் பதில் சொல்வது என்று தெரியாது மூவரும் அவனையே பார்த்தனர். “நல்லா படிப்பாள். டொக்டருக்கு படி பிள்ளை எண்டு நான் சொல்லியும், இல்ல டீச்சராகப் போறன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்தவள். இப்பிடித் தலையில மண்ணை அள்ளிப் போடுவாள் எண்டு நினைக்கவே இல்ல.” என்று அழுதார் அன்னை.

“யாரும் ஏதும் மிரட்டின மாதிரி, வெளில போகப் பயந்த மாதிரி, இல்ல, அடிக்கடி போன்ல கதைக்கிறது இப்பிடி ஏதாவது.. வழமையா செய்றதை விட வித்தியாசமா ஏதும்? நல்லா யோசிச்சு சொல்லுங்கோ.”

இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்தார் தகப்பன். “ஒவ்வொரு நாளும் ஒழுங்கா பள்ளிக்கூடம் போவா. டியூசனும் போகாம நிக்கிறேல்ல. இண்டைக்கு மட்டும் தான். அதுவும் நல்ல காய்ச்சல் எண்டுதான் போகேல்ல. ஓடி ஓடிப் படிக்கிற பிள்ளை, அதுதான் காய்ச்சல் வந்திட்டுது போல, ரெண்டு நாள் ஓய்வா இருக்கட்டும் எண்டு நினைச்சம்..” என்றவருக்கும் மேலே பேசமுடியாமல் போயிற்று. வாழ்நாள் முழுமைக்குமான ஓய்வை அல்லவோ எடுத்துக்கொண்டாள்.

“பிறகு எப்பிடி போதைப் பழக்கம் வந்தது?”

அந்த வார்த்தையைக் கேட்டதும் துடித்துப்போனார் அன்னை. “இல்ல. என்ர பிள்ளைக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்ல!” கண்ணீருடன் அவசரமாகச் சொன்னார். பொத்திப் பொத்தி வளர்த்த மகள் உயிரை மாய்த்துக்கொண்டதும் அல்லாமல், இப்படி ஒரு பெயரை வாங்கிவிடுவாளோ என்று பதறினார். “தம்பிதான் அப்பிடிச் சொல்லுறான். அதுவும் இண்டைக்குத்தான் சொன்னவன். ஆனா, நான் ஒவ்வொரு நாளும் அவளின்ர அறைய கிளீன் பண்ணுறனான். தட்டிக் கூட்டுறனான். அப்பிடி ஒரு நாளும் மணக்கவும் இல்ல, நான் பாக்கவும் இல்ல. எங்கட பிள்ளை அப்பிடியான பிள்ளை இல்ல.” என்றார் வேகமாக.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவர்களின் மகனைத் தனியாக அழைத்துக்கொண்டு போனான் எல்லாளன்.

“பெயர் என்ன?”

“சாகித்தியன்.”

“படிக்கிறீரா?

“ம். கம்பஸ் செக்கண்டியர். ஆர்ட்ஸ்.”

தன்னைத் திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றாலும் உள்ளுக்குள் முற்றிலுமாக உடைந்து போயிருக்கிறான் என்று அவன் முகமே சொல்லிற்று.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock