நீ தந்த கனவு 33 – 1

கடந்த மூன்று வருடங்களாக எல்லாளனோடு இணைந்து பணியாற்றுகிறான் கதிரவன். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம் கொண்டுபோவான், சந்தேகிக்கும் குற்றவாளிகளை என்ன விதமாக மடக்குவான் என்பதெல்லாம் கதிரவனுக்குத் தெள்ளத் தெளிவு! அப்படியான எல்லாளனின் விசாரணைகள் எப்படி இருக்கும் என்றும் தெரியும்.

இன்று காலையில் நடந்ததும் அப்படியான கடுமை மிகுந்த ஒரு விசாரணைதான். ஒரு விரிவுரையாளனாக இருந்துகொண்டு தன்னிடம் கற்ற மாணவிக்குப் போதை மருந்தைப் பழக்கியிருக்கிறான் என்று அறிந்ததிலிருந்து, கதிரவனுமே உக்கிரம் கொண்டிருந்தான்.

அப்படி இருக்கையில்தான் பகல் பொழுதில் சாதாரண உடையில் காவல் நிலையத்திற்கு மீண்டும் வந்திருந்தான் எல்லாளன். முதலில் அதனை அவன் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அதன் பிறகு நடந்தவை? நடந்துகொண்டு இருப்பவை?

அவன் மட்டுமல்ல, அன்றைக்குப் பணியில் இருந்த அனைவருமே அந்தச் சிறை அறையைத்தான் நம்ப முடியாமல் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர். நடப்பது புதிது மாத்திரமன்று, எல்லாளனின் இளகிய சிரிப்பும் பேச்சும் கூடப் புதிதாய் இருந்தன.

அதிலிருந்தே அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று அறிய முடிந்தது. அப்படியான நண்பனையா காலையில் அத்தனை கடினத்தோடு கையாண்டான் என்று நினைக்கையில், எல்லாளன் மீதான மதிப்பும் மரியாதையும் இன்னுமே அதிகமாயிற்று. கூடவே, எல்லாளனின் மனத்துக்கு இந்தளவில் நெருக்கமான ஒருவன், இப்படியான காரியங்களில் ஈடுபடுவானா என்கிற கேள்வியும் குடைந்தது.

நேரம் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கான அடுத்த கட்டளைகள் என்ன என்று தெரியாது. அவர்களுக்குள் இடையிட்டுக்கொண்டு போக மனமற்று, அங்கேயே குட்டி போட்ட பூனை போன்று சுற்றிக்கொண்டிருந்தான்.

இதை, எல்லாளன் கவனித்திருக்க வேண்டும். “கதிரவன்!” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான்.

“சேர்!” அடுத்த நொடியே அவன் முன்னே நின்றான்.

“இவன், என்ர சின்ன வயசு நண்பன், காண்டீபன்.”

“ஹாய் சேர்!” என்றான் சிறு தலையசைப்புடன்.

அந்த மரியாதை எல்லாளனினால் தனக்குக் கிடைக்கிறது என்று உணர்ந்து, “ஒரு குற்றவாளிக்கான மரியாதையே போதும் கதிரவன்.” என்றான் காண்டீபன் சிறு புன்னகையோடு.

அதுவே அவன் குணத்தைச் சொல்ல, “ஓகே சேர்.” என்றான் இப்போது, இறுக்கங்கள் அற்ற இயல்பான சிரிப்போடு.

“ஏதும் அவசர வேல இருக்கா?” என்று விசாரித்தான் எல்லாளன்.

“மாதவன், அஞ்சலிக்கு அடுத்த ஸ்டெப் என்ன எண்டு சொன்னா, அதப் பாப்பன் சேர். சாகித்தியனும் இன்னும் இஞ்சதான் இருக்கிறான். மற்றது…” என்று இழுத்துவிட்டு, “ஆதினி மேம் இன்னும் மூண்டு மணித்தியாலத்தில வந்திடுவா. கூப்பிடப் போகோணும் எண்டு சொன்னீங்க.” என்று, அதையும் நினைவூட்டினான்.

“ஓ, அதுக்கிடையில அவ்வளவு நேரம் போயிற்றுதா?” கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். அதுவும், ஆமாம் என்றது.

“ஓகே! நீங்க…” என்றபடி நிமிர்ந்தவனுக்குக் கதிரவன் பயபக்தியுடன் ஆதினியைப் பற்றிச் சொன்னது அப்போதுதான் கவனத்திற்கு வந்தது. முறுவல் அரும்ப, “உனக்குத் தெரியுமா, கதிரவனும் ஆதினியும் திக் ஃபிரெண்ட்ஸ்.” என்றான் காண்டீபனிடம்.

“சேர்!” என்று கதிரவன் அதிர, “எனக்கும் தெரியும். அவவின்ர ஸ்கூட்டியை விழுத்திப்போட்டு இவர் பட்ட பாட்டப் பாத்தனான்.” என்று சிரித்தான் காண்டீபன்.

அந்த நாள் கதிரவனுக்கு மறக்குமா? என்ன சொல்வது என்று தெரியாது திணறி நின்றான்.

“நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் அவா இல்ல கதிரவன். அருமையான பிள்ளை. இவன்தான் சும்மா சும்மா அவாக்கு எதையாவது சொல்லிக் கோபப்படுத்தி, அவாவையும் பதிலுக்கு எதையாவது செய்ய வைக்கிறது. பிறகு, அவாவைப் பிழை சொல்லுறது. நீங்க கொஞ்சம் ஃபிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு நல்ல ஒரு நண்பி கிடைப்பா!” என்றான் காண்டீபன்.

அவளோடு ஒரு நட்பா? நினைக்கையிலேயே அவன் நெஞ்சம் ஆட்டம் கண்டது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “ஓகே சேர்.” என்றான்.

அவனுடைய பாவனையில், அடுத்த ஐந்து வருடத்தில், எல்லாளனின் அடுத்த பதிப்பாக அவன் இருப்பான் என்று தெரிய, “கொஞ்சம் இலகுவா இருங்க கதிரவன். இவனோட சேர்ந்து சேர்ந்து உங்களுக்கும் இவன்ர குணம் வருது எண்டு நினைக்கிறன்.” என்ற காண்டீபனைக் கதிரவனுக்கு மிகவுமே பிடித்துப் போனது.

கதிரவனை அனுப்பிவிட்டு, நேரமாவதை உணர்ந்து எழுந்து கொண்டான் எல்லாளன். இனி அவன் போக வேண்டும்; இருக்கும் வேலைகளைப் பார்க்க வேண்டும். ஆனால் காண்டீபன்? அந்தச் சிறைக்குள் வரும் போது இருந்த இறுக்கம், மீண்டும் அவனைக் கவ்விக்கொண்டது.

அவன் நினைத்தால் கைது செய்த அடையாளமே தெரியாமல் வெளியே விட்டுவிட முடியும். ஆனால், சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டவன் அவன். அவனால் அது நிச்சயம் முடியாது! ஆனால், இனி நடக்கப் போகிறவை? மீண்டும் தனக்குள் போராட ஆரம்பித்தான்.

அப்போதுதான் மின்னலாக வெட்டியது அந்த விடயம். “டேய் உன்னைப் பற்றிச் சத்தியநாதனுக்கு ஏதும் தெரியுமா?” என்றான் அவசரமாக.

“எனக்கு எப்பிடியடா அது தெரியும்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“நிச்சயமா அவனுக்கு என்னவோ தெரிஞ்சிருக்கு!” என்றவனுக்கு இப்போதுதான் அனைத்தும் புரிவது போலிருந்தது.

தன் நிலைக்குக் காண்டீபன்தான் காரணம் என்று தமயந்தி நிச்சயமாகச் சத்தியசீலனிடம் சொல்லியிருப்பாள். அவன் காண்டீபன் ஏன் இதைச் செய்தான் என்று தேடிப் போயிருப்பான். அதில், அவனுக்கும் எல்லாளனுக்குமான உறவை இலகுவாகவே அறிந்திருப்பான். அதனால்தான் இந்த வழக்கை இவன் புறம் தள்ளி இருக்கிறான். மனம் உள்ளூர அதிர்ந்து அடங்கிற்று.

இவ்வளவு தானா? அல்லது, இதற்கு மேலும் போவானா? கலங்கிப்போனான் எல்லாளன்.

அவன் முகம் சரியில்லை என்று கண்டு, “அளவுக்கதிகமா என்னை மனதுக்க எடுக்காத மச்சான். இதெல்லாம் தெரியாம நான் எதையும் ஆரம்பிக்கேல்ல. அதால எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருக்கிறன். உன்னைப் பாத்திட்டன், உன்னோட கதைச்சிட்டன். இனி எனக்காக நீயும் இருக்கிறாய். அவ்வளவும் போதும்.” என்றான் காண்டீபன்.

எல்லாளனுக்கு அது போதாதே! மனத்தில் இருப்பத்தைச் சொல்லி, அவனைக் கலங்கடிக்க விருப்பம் இல்லை. அவன் மனது, கடமைக்கும் நட்புக்கும் இடையில் கிடந்து அல்லாடியாது.

“டேய்! என்னைப் பற்றி யோசிக்காம ஆதினியப் போய்ப் பார். அவளோட இந்த நாளைக் கொண்டாடு! போ!” என்று துரத்தினான் காண்டீபன்.

அதற்குப் பதிலேதும் சொல்லாது, காண்டீபனை நோக்கிக் கைகளை விரித்தான் எல்லாளன். மெல்லிய திகைப்புடன் அவனையும் அவன் விரித்திருந்த கரங்களையும் பார்த்த காண்டீபனின் முகம் கலங்கிப்போயிற்று. வேகமாக விழிகளை அகற்றிக்கொண்டான். தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

“டேய், வாடா!”

“இல்ல மச்சான், நீ போ!”

“இப்ப வரப் போறியா இல்லையா நீ?”

காண்டீபனின் நிலை மிக மோசமாகிக்கொண்டிருந்தது. நண்பனைப் பார்க்க மறுத்தான்.

“என்ன நடந்தாலும் சரி, நீ வராம இஞ்ச இருந்து நான் போகமாட்டன்!” உறுதியான குரலில் சொன்னான் எல்லாளன்.

வேறு வழியற்று, மனமே இல்லாமல் எழுந்து, எல்லாளனின் அணைப்புக்குள் வந்தான் காண்டீபன்.

அவனைப் போல் அல்லாமல் ஆரத்தழுவிக்கொண்டான் எல்லாளன். உள்ளுக்குள் தவிக்கும் மனத்தை ஆற்றுப்படுத்தும் அளவுக்கு இறுக்கி அணைத்தான். இளம் வயதில் உணர்ந்த நண்பனின் அந்தத் தேகச் சூடு, மனத்தை நிறைத்தது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock