வெளிச்சங்களை விழுங்கி இருள் பரவத் தொடங்கிய பொழுது. எல்லாளனின் பைக், காண்டீபனின் வீடு நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. மனது மட்டும், காற்றுக் கூடப் பெரிதளவில் நுழைய மறுக்கும் சிறைக்குள் அடைக்கப் பட்டிருக்கும் நண்பனில் நிலைகொண்டிருந்தது. அவன் வீட்டினருக்கு எதை எப்படி என்று விளக்குவான்? சம்மந்தன் மாமாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்? மிதிலா, அவளும் இருக்கிறாளே.
பெரும் அழுத்தத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட மனது, இயல்பாய்த் தன் துணையைத் தேடிற்று. தன் பின்னால் அமர்ந்து இருந்தவளைக் கண்ணாடி வழியே பார்த்தான்.
அவள் வரட்டும் என்றுதான் அன்று முழுக்கக் காண்டீபனின் வீட்டுக்குச் செல்லாமல் காத்திருந்தான். அவள் கூடவே இருந்தால் சமாளிக்க முடியும் என்கிற ஒரு எண்ணம். அவர்களை எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை. இந்தளவில், தன் வாழ்வின் துணையாக, பற்றுக் கோலாக எப்போது மாறினாள் என்று கேட்டால் தெரியாது. அவனின் கண்முன்னே வளர்ந்தவள். அடாவடி. ஒருகாலத்தில் என்ன வார்ப்பு இவள் என்று யோசித்திருக்கிறான். ஆனால் இன்றைக்கு? அவளைத் தன் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தவன் அவளையே பார்த்தான்.
அவனுக்கும் அவளுக்குமிடையில் அளவுக்கதிகமான இடைவெளியைக் கடைப் பிடித்தபடி அமர்ந்து இருந்தாள், அவள். அவன் இறுக்கமானவன்; உறுதி குழையாதவன்; சிறு சிறு சலனங்களுக்கெல்லாம் இடம் கொடாதவன். அவனையே பாதிக்கிறாள் அவள். அப்படி இருக்கையில், அவளை அவனுடைய அருகண்மை ஒன்றும் செய்யவே இல்லையா? இன்றைக்கு, அவள் வந்ததில் இருந்து அவனைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி இதுதான்.
கொடிபோன்று மெலிந்திருந்த மேனி, திருத்தப்பட்டிருந்த புருவங்கள், இதழ்களை நனைத்திருந்த உதட்டுச் சாயம், பளபளக்கும் முகம் என்று அனைத்தும் கண்களில் பட்டுத் தொலைத்து, மனதை அலைபாய வைத்துக்கொண்டு இருந்தது.
எவ்வளவு நேரம்தான் அவன் பார்வைகளை உணராதது போலவே காட்டிக் கொள்வது? இயல்பாக இருக்க முடியாமல் திணறினாள், ஆதினி. காண்டீபனைப் பார்க்கும் ஆர்வத்தில், இவனோடு தொற்றிக்கொண்டது தவறோ என்று தோன்றும் அளவில் இருந்தது, அவன் பார்வைகள் உண்டாக்கும் சலனம். ஒரு கட்டத்துக்கு மேலே முடியாமல் போக, முறைக்க எண்ணிக் கண்ணாடியில் அவன் பார்வையைச் சந்தித்தாள். ஆனால், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவளைக் கவர்ந்துகொண்ட அவன் விழிகள், மனதையே பிரட்டிப் போட்டுவிட, ஒருகணம் தடுமாறிவிட்டு வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அந்தளவும் போதுமே! அவளைப் பார்த்த நிமிடத்தில் இருந்து அவனை அரித்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட, பைக்கை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, அவளின் கைகள் இரண்டையும் பற்றி இழுத்தான். இதை எதிர்பாராத ஆதினி, அவன் முதுகோடு வந்து மோதினாள்.
“அம்மா…! என்ன இது, ரோட்டுல வச்சு?” அவளின் கைகள் இரண்டும் அவனின் இடுப்பைச் சுற்றிப் பிடித்திருந்ததில் அதிர்ந்து வினவினாள்.
“என்ன என்ன இது? ஒரு பார்வை பாக்கிறியா? குட்டியா ஒரு சிரிப்பு? உனக்குப் பின்னால என்னை அலைய வைக்கோணுமோ உனக்கு?” இருக்கிற மன அழுத்தத்துக்கு இவள் கொஞ்சம் இதமாக இருக்கக்கூடாதா என்கிற கோபத்தில் சீறினான், அவன்.
இருவரினதும் ஹெல்மெட்டுகளும் அவளைக் காப்பாற்றி இருந்தது. இல்லையோ முகத்தோடு முகம் உரசியிருக்கும். அந்தளவு நெருக்கமாக அவளை வைத்திருந்தான், அவன். பிறகு எங்கே பதில் சொல்வது? “விடுங்க!” என்றாள் முணுமுணுப்பாக.
“அப்பிடியெல்லாம் விடேலாது. கோவம் எல்லாம் தீரட்டும், படிப்பை முடிச்சிட்டு வரட்டும் எண்டுதான் அப்பவே உன்ன கொழும்புக்குப் போக விட்டனான். இனி, ஒழுங்கா பக்கத்தில இருக்கோணும், முகம் பாத்துக் கதைக்கோணும், சிரிக்கோணும். இல்லையோ… இல்லையோ என்ன இல்லையோ. நீ செய்றாய். அவ்வளவுதான்! முந்தியாவது சின்னப்பிள்ளை எண்டு விட்டன். இப்ப, உனக்கு எல்லாம் காணும்.”
எல்லாம் காணுமா? கன்னங்கல் சூடேறிவிட, பிடிவாதமாகக் கையை இழுத்துக்கொண்டாள், ஆதினி. மல்லுக்கட்டாமல் பைக்கை எடுத்தவனுக்குப் பிறகுதான் புரிந்தது போலும், “அறிவு கூடினவளே! வயசைத்தான் நான் சொன்னனான். நீ கண்டதையும் நினைக்காத!” எனும்போதே அவன் குரல், சிரித்து அவளைச் சீண்டியது.
உதட்டைக் கடித்தவளுக்கு ஓங்கி அவன் மண்டையில் குட்டவேண்டும் போல் இருந்தது. ஆனாலும், அடக்கிக் கொண்டாள். காண்டீபனின் வீடும் வந்து சேர்ந்தது. வீதியிலேயே ஓரமாகப் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கிய எல்லாளன், “என்ன நடந்தாலும் கொஞ்சம் நிதானமா இரு.” என்றான் முன்னேற்பாடாக.
அதன் பொருள் புரியாமல் புருவங்களைச் சுருக்கினாள், ஆதினி. “வா” அவன் கேட்டைத் திறக்கவும் நாய் பெருங்குரலில் குலைத்துக்கொண்டு வந்தது. அணைந்திருந்த வீட்டின் வெளி விளக்குகள் வேகமாக உயிர் பெற்றன. “ஆரு?” பயந்த மெல்லிய குரல் ஒன்று கேட்டது.
அது மிதிலா. அந்தக் குரல் செவிகளைத் தீண்டியதும் எல்லாளனை மிகப் பெரிய இறுக்கம் ஒன்று சூழ்ந்தது. ஆதினியின் கரத்தைத் தேடிப் பற்றினான். அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. குவிந்திருந்த இருள் அவனின் உணர்வுகளை முழுவதுமாகப் படிக்க விடாமல் தடுத்திருந்த போதும், இறுக்கமான உடல் மொழி என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று.
“நீதான் எண்டு சொல்லு.” என்றான் மெல்லிய குரலில்.
அதையே அவன் சொன்னால் என்ன? எழுந்த கேள்வியைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, “மிதிலாக்கா, நான் ஆதினி.” என்று, குரல் கொடுத்தாள்.
“ஆதினியா? வாரும்..” பயம் தெளிந்திருக்க வேண்டும். குரலில் இருந்த நடுக்கம் குறைந்திருந்தது.
வீட்டின் கதவைத் திறந்த மிதிலா, எல்லாளனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று புரிந்தது. அதிர்ந்து நின்றாள். பார்வை அவனிலேயே நிலைகுத்தி நின்றது.
ஆதினிக்குக் குழப்பம் உண்டாயிற்று. அவனை எதற்கு இப்படிப் பார்க்க வேண்டும்? இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
என்னதான் எதிர்பார்த்து வந்திருந்த போதிலும், ஆறுமாத வயிற்றோடு கண்முன்னே நின்றவளைக் கண்டு, எல்லாளனும் சற்றுத் தடுமாறித்தான் போனான். ஆனால் அது, நீண்ட இடைவெளியின் பின்னான முதல் சந்திப்புக்கான தடுமாற்றம். அவளைக் கண்டதும் அந்த நாட்களும், அன்றைய ஈர்ப்புகளும் நினைவில் வராமல் இல்லை. இருந்தும், அவை அவனுடைய இதயத்தை ஊடுருவவில்லை. இழப்பைப் பறைசாற்றவில்லை. பசுமை நிறைந்த இளமைக் காலத்து நினைவுகளாக மாத்திரமே வந்து போயின. நண்பனின் மனைவி என்பதுதான் முதன்மையாக நின்றது.
மனம் தெளிந்துவிட, “உள்ளுக்கு வரலாமா?” என்றான், அவனே இப்போது.
“வா… வாங்க!” வழிவிட்டு விலகி நின்றவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை என்று, இவர்கள் வீட்டுக்குள் வந்த பிறகும் அவள் கதவைப் பற்றிக்கொண்டு நின்றதிலேயே தெரிந்தது.
“தம்பி… எல்லாளா?” நம்பவியலா வியப்பும் ஆனந்தமுமாகத் தழுதழுத்த குரலில் அழைத்தார், சம்மந்தன். வேகமாக அவரிடம் விரைந்தான், எல்லாளன். விறாந்தையில், சுவரோரமாகப் போடப்பட்டிருந்த கட்டிலில், சாய்ந்து அமர்ந்து இருந்த மனிதரைக் கண்டு, அதிர்ந்தே போனான். உடல் பாதியாகி, கம்பீரம் குன்றி, களை இழந்து யாரோ போலிருந்தார். “மாமா!” என்றவனுக்கு நலன் விசாரிக்க வார்த்தைகள் வரமாட்டேன் என்றது. அதுதான் பார்க்கிறானே! விழிகள் பனித்துப் போனது. அவரால் அவன் அணிந்த காக்கி உடை அவன் தோள்களில் கிடக்க, அவரோ முடங்கிக் கிடக்கிறார். இவர்களை எல்லாம் தேடாமல் விட்டுவிட்டேனே என்று அப்போதும் மனம் குத்தியது.
“தம்பி, எப்பிடி ஐயா இருக்கிறாய்? ஏன், ஏனப்பு இவ்வளவு நாளும் எங்களைத் தேடி வரேல்ல? என்ர பிள்ளையைப் போலீஸ் பிடிச்சுக்கொண்டு போயிட்டாங்களாம் எண்டு சொல்லுறாங்கள். என்ன ஏது எண்டு ஒண்டும் தெரியேல்ல அப்பு. காலும் ஏலாம, நடக்கவும் வழி இல்லாம முடங்கிப்போய்க் கிடக்கிறன். இந்த வீட்டின்ர முதுகெலும்பே அவன் தான். இந்த ஒரு நாளே அவன் இல்லாம உடைஞ்சு போய்ட்டோம். என்ன எண்டு ஒருக்கா விசாரி தம்பி. அவன் சோலி சுரட்டுக்குப் போகமாட்டான்.” என்றவருக்கு மேலே பேச முடியாமல் குரல் உடைந்து போயிற்று. வயோதிகத்தின் தள்ளாமையில் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.