“மாமா… அது…” நான்தான் அவனைக் கைது செய்தேன் என்று சொல்லமுடியாமல் நிமிர்ந்தவனின் பார்வையில் பட்டாள், மிதிலா. கண்ணீரில் மிதந்திருந்த விழிகள், அவனைக் குற்றம் சாட்டுவது போலிருந்தது.
ஆதினிக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. யாரும் இங்கே இயல்பாக இல்லை என்பதை வந்ததுமே கணித்திருந்தாள் தான். எப்போதும் எதையும் அழுத்தமாகவும் நிதானமாகவும் கையாளும் எல்லாளனின் நடவடிக்கைகளும் வழமை போன்று இல்லை! இதில், காண்டீபனைக் காவல் துறை கூட்டிக்கொண்டு போய்விட்டதாம். பெரும் அதிர்வுக்குள் சிக்கியவள் எல்லாளனின் முன்னே சென்று நின்றாள். “காண்டீபன் அண்ணா எங்க?” எனும்போதே அவள் முகம் அழுகையை அடக்கியத்தில் சிவந்தது.
“ஆதினி..”
“உங்களுக்குத் தெரியாம இது நடக்கக் சான்ஸ் இல்ல. நீங்களும் இங்க வந்ததில இருந்து நோர்மலா இல்ல. சொல்லுங்க! எங்க காண்டீபன் அண்ணா?” ஆத்திரம் அழுகை எல்லாம் சேர்ந்து வந்தது, அவளுக்கு.
“நான்தான் அவனைக் கைது செய்தனான்!” சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் சொன்னான்.
நம்ப முடியாமல் ஆதினியின் விழிகள் விரிந்தது. “ஏன், ஏன் எல்லாளன்? அப்பிடி அவர் என்ன செய்தவர். அவர் ஒண்டும் கெட்டவர் இல்ல! எனக்கு அவரைப் பற்றித் தெரியும்!”
என்ன என்று சொல்வான்? அங்கிருக்கும் மூவருமே அவனைப் பற்றிய விசயத்தை அறிந்தால் தாங்கி கொள்வார்கள் போல் இல்லை. அதுவும் குழந்தையைச் சுமக்கும் மிதிலா அவனை வாயைத் திறக்க விடாமல் கட்டிப்போட்டாள்.
அவனின் அமைதியில் ஆதினியின் பொறுமை பறந்து போனது. ஆத்திரத்தோடு அவன் சட்டையைப் பற்றி உலுக்கினாள். “என்ன செய்து வச்சிருக்கிறீங்க எண்டு விளங்குதா உங்களுக்கு? இங்க இருக்கிற எல்லாருக்கும் அண்ணா தேவை! அம்மா இல்லையே எண்டு நான் நினைச்ச நேரம் எனக்கு நினைவுக்கு வந்தவர் அவர். அப்ப அவர் ஆர் எனக்கு எண்டு விளங்குதா உங்களுக்கு? அவரைப் போய்.. ஏன் எல்லாளன்?” ஆவேசமும் ஆத்திரமுமாக ஆரம்பித்தவள் தாங்கமுடியாத அழுகையில் அவன் மார்பிலேயே உடைந்து அழுதாள்.
அவன் கைகளும் அவளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்ட போதும், அவளின் வார்த்தைகள், கூர் ஈட்டியாக அவனுக்குள் பாய்ந்தது. முன்பின் தெரியாதவனை நம்பிப் பழகியிருக்கிறாள் என்று அவன் கோபப்பட்டால், அவள் அவனை, அன்னையின் இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறாள்.
“எனக்குக் காண்டீபன் அண்ணா வேணும். இப்பயே வெளில விடுங்க!”
“முதல் நீ அழுறத நிப்பாட்டு!” தன் கைக்குள் இருந்தவளைத் தேற்றியபடி மற்ற இருவரையும் பார்த்தான் அவர்களின் விழிகளிலும் கண்ணீர் தான். அதுவும் மிதிலா, என் காத்திருப்பைத்தான் பொய்யாக்கினாய் என்று பார்த்தால் கடைசியில் என் கணவனையும் சிறையில் அடைத்துவிட்டாயா என்று அவனை அப்பட்டமாகச் குற்றம் சாட்டினாள்.
அவன் பார்க்கவும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சுருக்கென்று தைத்தது அவனுக்கு.
“மாமா, அவர் என்ன பிழை செய்தவர் எண்டு கைது செய்தவராம் எண்டு கேளுங்க!” உடைந்து தழுதழுத்த குரல் என்றாலும் கோபம் தெறித்தது மிதிலாவிடம்.
“அத நேரா என்னட்டக் கேள்!” என்றான் அதட்டலாக. என்னவோ அவன் ஆசைப்பட்டுக் கொண்டுபோய் உள்ளுக்குத் தள்ளியதுபோல் ஆளாளுக்குக் கேள்வி கேட்டால் அவனும் என்னதான் செய்வான்? காண்டீபனைப் பற்றி அறிந்ததில் இருந்து இந்த நிமிடம் வரைக்கும் அவனும் தானே துடித்துக்கொண்டு இருக்கிறான்.
அப்படிக் கோபப்படுவான் என்று எதிர்பார்க்கவில்லை போலும். திகைப்போடு அவனைப் பார்த்தாள், மிதிலா. அதுவும் அவனைத் தாக்கியது. அதுவரை, அவன் கைக்குள் இருந்த ஆதினி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “நான் கேக்கிறேன் தானே, சொல்லுங்க. அண்ணாவை ஏன் கைது செய்தீங்க?” மூக்குச் சிவந்து, கண்கள் கலங்கி கோபமும் கவலையும் தெரிந்த அந்த முகத்தைப் பார்க்க முடியவில்லை. “நீ முதல் கண்ணைத் துடை!” என்றான் மீண்டும்!
அவனிடமிருந்து விலகி, வேக வேகமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் இப்போது நிதானத்துக்கு வந்துவிட்டது புரிந்தது. மிதிலாவைக் குறித்துப் பயம் இருந்தபோதும் வேறு வழியற்று மெதுவாக நடந்ததைச் சொன்னான்.
மிதிலாவுக்கும் சம்மந்தனுக்கும் பெரும் அதிர்ச்சி. சம்மந்தன் மனது உடைந்துவிட, தொய்ந்து போய்ச் சுவரில் தலையைச் சாய்த்து விழிகளை மூடிக்கொண்டார், சம்மந்தன். இன்றைக்கு, அவர் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். என்றோ ஒருநாள், காவல் துறையில் பனி புரிந்தவருக்கு எல்லாளனின் எந்தத் தவறும் இல்லை என்று விளங்கிற்று. ஆனால், உள்ளே இருப்பவன் மகனாயிற்றே. இனி என்ன செய்யப் போகிறார்?
மிதிலாவின் விழிகளில் இருந்து கரகர என்று கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. தன் உடலைத் தாங்கவே முடியாதவள் போன்று அப்படியே தரையில் சரிந்திருந்தாள்.
“அவரை… அவரை வெளில கொண்டு வரேலாதா?” வழியும் கண்ணீரோடு எல்லாளனை நோக்கிக் கேட்டாள்.
“ஏன் கொண்டு வரேலாது?” என்றாள் ஆதினி. அவளிடம் பழைய திடம் மீண்டிருந்தது. மிதிலாவின் முன்னே சென்று அமர்ந்தாள். “இதெல்லாம் ஒரு கேஸ் இல்ல மிதிலாக்கா. பாதிக்கப்பட்ட நபர் வந்து கேஸ் குடுக்கேல்ல. இவர் சொல்லுறத வச்சுப் பாத்தா அது எப்பவோ நடந்த விசயம். இவரும் எந்தப் பொருளோடயும் அண்ணாவைக் கைது செய்ய இல்ல. அதால கேஸ் நிக்காது. இந்தக் கேஸ நான் உடைக்கிறன். காண்டீபன் அண்ணாவை நான் வெளில கொண்டுவாறன். நீங்க அழாதீங்க.” தைரியமாகச் சொன்னவள், எல்லாளனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அங்கிள்!” என்று சம்மந்தனை அழைத்தாள்.
உயிர்ப்பற்ற விழிகளால் அவளைப் பார்த்தார், அவர்.
“இங்க சிலருக்கு தாங்க பெரிய, ‘தங்கப்ப தக்கம் சிவாஜி’ எண்டு நினைப்பு. நேர்மை, நீதி, நியாயம் எண்டுதான் வாழுவீனமாம். நீங்க அதையெல்லாம் பெருசா எடுக்காதீங்க. தைரியமா இருங்க. அண்ணாவை வெளில கொண்டு வரவேண்டியது என்ர பொறுப்பு!” என்றவளை எல்லாளனுக்கு மெய்யாகவே அப்போதுதான் பிடித்தது. அவளின் கோபத்தில் உண்டான குத்தலை அவன் பெரிதாக எடுக்கவே இல்லை. நெஞ்சில் நேசம் பொங்கிப் பெருகியது. அவளின் அழகை விடவும் அறிவுதான் ஆராதித்தது. அவள் ஒன்றும் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணி அல்ல. எடுத்த சத்திய பிரமாணத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால், அவ்வளவு துணிவாகவும் தைரியமாகவும் தெளிவாகவும் பேசுகிறாள்.
அவளும் அருகில் இருந்தால் அவர்களை இன்னும் கொஞ்சம் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்றுதான் அழைத்து வந்தான். கூடவே, காண்டீபனுக்காக அவள் நிற்கவேண்டும் என்றும் ஆழ்மனம் விரும்பியது. அவனாகச் சொன்னால் அதற்காகவே மறுக்கும் அளவுக்கான வீம்புக்காரியாயிற்றே அவள். அவன் எண்ணியது போலவே காண்டீபனின் வழக்கை அவள் எடுத்துக்கொண்டதில் அவன் நிம்மதியானான்.