நீ தந்த கனவு 36

அத்தியாயம் 36

எல்லாளன் வீட்டில் தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள் ஆதினி.

சத்தியப்பிரமாணத்துக்கான ஆயத்தங்களால் கடந்த ஒரு வாரமாகவே அவளுக்கு ஒழுங்கான உறக்கம் இல்லை. கூடவே, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து வந்த களைப்போடு சேர்த்துக் காண்டீபனின் கைதும் சேர்ந்துகொண்டதில் முற்றிலுமாகச் சோர்ந்திருந்தாள்.

இதெல்லாம் போதாது என்று அவள் மண்டைக்குள் ஓராயிரம்
கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.

அவளுக்கு அருகிலேயே கைகளைக் கட்டிக்கொண்டு, மேசை விளிம்பில் சாய்ந்து நின்றிருந்தான் எல்லாளன்.

காண்டீபன் வீட்டினருக்குப் பாதுகாப்புத் தேவை என்பதில், தனியார் நிறுவனத்துப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் ஒருவரை வரவழைத்து, அவருக்கான ஏற்பாடுகளைச் செய்துமுடித்துவிட்டு அவர்கள் இருவரும் புறப்பட்டபோது, நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது.

அந்த நேரத்தில் காண்டீபனிடம் அழைத்துச் செல் என்று அடம் பிடித்தவளைத்தான் இங்குக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான். அந்தக் கோபமும் இருந்தது அவளுக்கு!

எல்லாளனும் அவசரமாக அவளைச் சமாதானம் செய்யப் போகவில்லை. காரணம் மிதிலா! கைகளில் தெரிந்த வெட்டுக் காயங்களின் அடையாளங்கள், இன்னுமே தீராத நடுக்கம், பயந்த உடல்மொழி எல்லாம் அவனைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தன.

இத்தனை வருடங்கள் கழிந்தும் இப்படி இருக்கிறாள் என்றால், அன்று காண்டீபன் இவர்களைச் சந்தித்த நாள்களில் எவ்வளவு மோசமாக இருந்திருப்பாள்? தம் இருவருக்குள்ளும் இருந்த ஈர்ப்பை அறிந்திருந்தும், அவளை ஏன் காண்டீபன் மணந்தான் என்பதற்கான காரணம், இன்னுமே தெளிவாகப் புரிந்தது.

ஆனால், எதிலுமே சூட்டிகையாக இருந்த பெண், எப்படி அதற்குள் சென்று மாட்டிக்கொண்டாள்? அத்தனை காலமும் புகலிடமாக இருந்த எல்லாளன் வீடு இல்லாமல் போனதும், நட்பாய் இருந்த ஆண்கள் இருவரும் காணாமல் போனதும் சேர, எதையும் பிரித்தறியத் தெரியாமல் சென்று சிக்கிக்கொண்டாளோ?

காலம் வகுத்த கணக்கினுள் சிக்குண்டு, திசைக்கு ஒருவராக வெட்டி வீசப்பட்டுப் போன, அவர்கள் மூவரினதும் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கையில் மனத்தின் கனம் கூடிக்கொண்டே போனது.

“மிதிலாக்கா ஏன் உங்களைப் பாத்ததும் அந்தளவுக்கு அதிர்ந்தவா? உங்களிட்டயும் தடுமாற்றம் தெரிஞ்சது. அண்ணா குடும்பத்தை உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

திடீர் என்று வந்த கேள்விகளில் சிந்தனை கலைந்து அவளைத் திரும்பிப் பார்த்தான். இந்த வினாக்களுக்கான விடைகள் அவளை இன்னுமே கோபப்படுத்தி, அவனுக்கும் அவளுக்குமிடையில் பிணக்கை உருவாக்கப்போகின்றவை. அது தெரிந்தாலும் அவன் எதையும் மறைக்க விருப்பமில்லை.

அதில், “ஒரு காலத்தில எனக்கு அவளில விருப்பம் இருந்தது. அவளுக்கும்.” என்று உள்ளதைச் சொன்னான்.

சத்தியமாக இதை ஆதினி எதிர்பார்க்கவேயில்லை. அதுவும் அவனைப் போன்ற கரடுமுரடான ஒருவனுக்கு முன் கதை ஒன்று, அதுவும் காதல் கதை ஒன்று இருக்குமென்று யோசித்ததேயில்லை. சுருக்கென்று நெஞ்சை ஏதோ தைக்க அவனையே வெறித்தாள்.

அவள் பார்வை அவனையும் என்னவோ செய்ய, “அதெல்லாம் அப்ப ஆதினி.” என்றான் ஒருவித வேகத்தோடு.

வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி. இப்போதும் இருந்தால் அதற்குப் பெயர் வேறாயிற்றே! ஆனால், அவன் மனத்தில் அவளுக்கு முன் ஒருத்தி இருந்திருக்கிறாள். அதுதானே விடயம்.

மீண்டும் தோற்றுவிட்டதாக உணர்ந்தவளுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. வார்த்தைகள் சீற முயன்றன. விழிகளை இறுக்கி மூடி, நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டுத் தன்னை அடக்க முயன்றாள்.

அவளை அப்படிப் பார்க்க முடியாமல், இன்னொரு நாற்காலியை அவளருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து, அவளைத் தன் புறம் திருப்பி, “நீயா கண்டதையும் யோசிக்காத. அதெல்லாம் சின்ன வயசில நடந்தது. நாங்க மூண்டு பேரும் ஒரே ஊர்…” என்று ஆரம்பித்து, அவர்கள் ஒன்றாகத் திரிந்தது, அவனுக்கு மிதிலா மீது உண்டான ஈர்ப்பு, அன்னை தந்தைக்கு நடந்த கொடூர மரணம், அதிலிருந்து ஊரை விட்டே வெளியேறியது என்று அனைத்தையும் சொன்னான்.

அவன் என்ன சொல்லியும் அவள் மனம் சமன்படவில்லை. ஒருவித ஏமாற்றம் நெஞ்சு முழுவதும் பரவிற்று. காண்டீபன் கூட அவளிடம் உண்மையாக இருக்கவில்லையே! இவன் மீதான அன்பில்தான் அவளைத் தேடி வந்து பழகி இருக்கிறான். ஆக, மீண்டும் இவர்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டிருக்கிறாள்!

பழைய காயங்களை எல்லாம் ஆற்றிக்கொண்டு வந்தவளிடம் இந்தா பிடி புதுக் காயங்கள் என்று தருவது போலிருந்தது.

அவன் முன்னே உடையப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிச் சமாளிக்க முயன்றாள். அவளை அப்படிப் பார்க்க முடியாமல், “என்ன நீ?” என்று, அவளை இழுத்துத் தன் மார்பில் சேர்த்தான் அவன்.

அடுத்த கணமே எங்கிருந்துதான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ, “என்னைத் தொடாதீங்க நீங்க!” என்று அவனை உதறித் தள்ளினாள்.

முகம் மாறிப்போனது அவனுக்கு. அந்தளவுக்கு என்ன இன்னொருத்தியோடு குடும்பமா நடத்திவிட்டு வந்தான்? வார்த்தைகள் தடித்துக்கொண்டு வரப்பார்க்க, விருட்டென்று எழுந்து வெளியே நடந்தான்.

தேய்பிறை நிலவின் ஒளியில் நின்றவன் மனத்தின் கொதிப்பை, அந்த நேரத்துக் குளிர் காற்றுக் கூட அடக்கமாட்டேன் என்றது! அவள் உதறித் தள்ளிய காட்சியே மீண்டும் மீண்டும் கண்முன்னே வந்து நிற்க, சினம் மிகுந்துகொண்டே போனது.

ஒரு கட்டத்துக்கு மேல் தன்னை அடக்க முடியாமல் மீண்டும் உள்ளே வந்து, “நீ சொன்னதின்ர அர்த்தம் என்ன எண்டு உனக்கு விளங்கினதா?” என்று சீறினான்.

அவள் அசையவே இல்லை.

“ஆதினி!”

“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” வெடுக்கென்று நிமிர்ந்து சிடுசிடுத்தவளின் சிவந்திருந்த நாசியும், இமைகளில் படிந்திருந்த ஈரமும் அழுத்திருக்கிறாள் என்று சொல்ல, அப்படியே நின்றுவிட்டான் எல்லாளன். அவன் சினமும் கொஞ்சமாய்த் தணிந்து போயிற்று.

“அதெல்லாம் அப்ப நடந்தது ஆதினி. உலகம் அறியாத வயசில, பக்கத்தில இருந்த பிள்ளையில வந்த ஆசை. நீ இப்பிடி உடைஞ்சு போற அளவுக்கு அதில ஒண்டுமே இல்ல. நானும் அவளும் இதைப் பற்றி வாய் திறந்து கதைச்சது கூட இல்ல.” என்று அவளுக்கு விளக்க முயன்றான்.

“அதில ஒண்டுமே இல்லை எண்டா இதைப் பற்றி முதலே ஏன் சொல்லேல்ல? அப்பா கலியாணத்துக்கு கேக்கேக்க இது உங்கட நினைவில் இருக்கவே இல்லையா?” என்று வெடித்தாள் ஆதினி.

“எப்பிடியும் அவா அவான்ர வாழ்க்கையைப் பாத்திருப்பா, நானும் கிடைக்கிறவளக் கட்டுவோம் எண்டு நினைக்கேல்ல நீங்க?” அவளின் கேள்வியில் இருந்த உண்மையில் அவன் பேச்சற்று நின்றான்.

அப்போது குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்த ஒலியில் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அதில், “என்னடா? அவளைக் கூட்டிக்கொண்டு போக வாறதா?” என்று கேட்டு அனுப்பியிருந்தான் அகரன்.

மட்டுப்பட்டு நின்ற சினம் திரும்பவும் உச்சியைத் தொட்டுவிட, “கூட்டிக்கொண்டு வந்த எனக்கு, உன்னக் கொண்டுபோய் விடத் தெரியாதா?” என்று ஆதினியிடம் பாய்ந்தான்.

சினத்துடன் தன் கைப்பேசியை எடுத்து, “வரச் சொன்னா வரேலாது உங்களுக்கு? அவரிட்ட கேட்டுத்தான் வருவீங்க போல. அந்தளவுக்கு என்னைவிட அவர் முக்கியம் என்ன? ஒவ்வொரு முறையும் நீ எனக்கு முக்கியமே இல்லை எண்டு நல்ல தெளிவாச் சொல்லுறீங்க அண்ணா!” என்று கேட்டு அகரனுக்கு அனுப்பிவிட்டாள் அவள்.

எல்லாளன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனான்.
“உனக்கு என்ன விசரா? லூசுத்தனமா உளறிக்கொண்டு இருக்கிறாய்!”

“நான் என்ர அண்ணாவோட கதைக்கிறன். உங்கட தங்கச்சி மாதிரியே நடுவுக்க நீங்க வராதீங்க!”

“ஆதினி எரிச்சலை கிளப்பாத! ஒண்டுமே இல்லாததத் தூக்கிப் பிடிச்சு இருக்கிற பிரச்சினை போதாது எண்டு நீயும் புதுசா ஒண்ட ஆரம்பிக்காத!” என்றான் எரிச்சலும் அலுப்புமாக.

“என்ன ஒண்டும் இல்ல? நீங்க ஏற்கனவே ஒருத்திய நினைச்சது ஒண்டும் இல்ல, அத மறச்சது ஒண்டும் இல்ல. அதைப் பற்றி நான் கதைச்சா மட்டும் பிரச்சினையோ? இதே மாதிரி நானும்…” என்றவள் வாயை மூடியிருந்தான் அவன்.

“போதும் ஆதினி. அவள் காண்டீபன்ர மனுசி. ஒரு குழந்தையைச் சுமக்கிறவள்.”

“அப்பிடி இல்லாம இருந்திருந்தா?”

அவன் விளங்கியும் விளங்காமலும் பார்க்க, “சொல்லுங்க, அவா வெறும் மிதிலாவாவே இருந்திருந்தா?” என்று தெளிவாகவே கேட்டாள் அவள்.

தாடை இறுக, “அப்பிடி இருந்திருந்தா எவனையாவது பாத்துக் கட்டி வச்சிருப்பன். இல்லாம உன்ன விட்டுட்டு அவளிட்டப் போயிருப்பன் எண்டு நினைக்கிறியா?” என்று பல்லைக் கடித்துச் சீறினான்.

“ஆருக்கு தெரியும்.” என்றாள் அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

“ஏய்!” என்று நொடியில் சீறியவன் அவள் தாடையை பற்றித் திருப்பினான். “உன்ர கோவம் எனக்கு விளங்குது. நானும் மறைக்க நினைச்சு அத மறைக்கேல்ல. அர்த்தமே இல்லாத ஒண்டை பற்றிக் கதைக்க ஒண்டுமே இல்ல எண்டு நினைச்சுத்தான் சொல்லேல்ல. அதுக்காக என்ர ஒழுக்கத்தக் கேவலப்படுத்துவியா நீ? என்னை உனக்குத் தெரியாதா? நான் அப்பிடியான ஒருத்தன் எண்டு நினைக்கிறியா?” மனத்தாங்கலும் கோபமுமாக வினவினான்.

அவன் கேள்விகளில் இருந்த உண்மையில் அவனுக்குப் பதில் சொல்லாமல் அவன் கையைத் தன்னிலிருந்து எடுத்துவிட முயன்றாள் அவள்.

“நீ முதல் பதில் சொல்லு. இல்லாம உன்ன விடமாட்டன்!” என்று நின்றான் அவன்.

இதற்குள் அவர்களின் தனிமையில் இடையிட்டுக்கொண்டு ஓடி வந்தான் அகரன்.

அவளிடமிருந்து வேகமாக விலகிய எல்லாளன் பார்வையாலேயே அவனை எரித்தான்.

அகரன் அவனைக் கவனிக்கவே இல்லை. மாறாக, “ஆதிக்குட்டி, இவனோட நீ சண்டை பிடிச்சுக்கொண்டு சும்மா ஒரு கோவத்துல கூப்பிடுறியோ எண்டு நினைச்சுத்தான் இவனுக்கு மெசேஜ் பண்ணினான். அதுக்கு நீ முக்கியம் இல்லை எண்டு அர்த்தமா? இவன் எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல. நீ வா, நீதான் எனக்கு முக்கியம். நாங்க போவம்!” என்று அவள் கரம் பற்றி அழைத்துக்கொண்டு அவன் நடக்க, வந்த ஆத்திரத்துக்கு அவனை பிடித்துத் தள்ளிவிட்டான் எல்லாளன்.

“எனக்கு மட்டும் நீ பெரிய இவனாடா? வந்திட்டான் பெரிய பாசமலர். நீ என்னோட வா! தேவையில்லாம வந்தவன், வந்த மாதிரியே போகட்டும்!” என்றுவிட்டு, ஆதினியை இழுத்துக் கொண்டு நடந்தான் எல்லாளன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock