ஆதினியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான், எல்லாளன். தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள், அவள். அவளின் அருகிலேயே கைகளைக் கட்டிக்கொண்டு, மேசை விளிம்பில் சாய்ந்து நின்றிருந்தான், எல்லாளன்.
கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக எத்தனை குண்டுகளைத் தூக்கி அவளின் தலையில் போட்டுவிட்டான். அனைத்தையும் உள்வாங்கி, ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறும் அவள் பால், அவனின் மனம் இரக்கப்பட்டது.
இதில், இந்த நிமிடமே காண்டீபனிடம் அழைத்துச் செல் என்று அடம் பிடித்தவளை, பிடிவாதமாக இங்கு கூட்டிக்கொண்டு வந்திருந்தான். இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று அந்தக் கோபமும் சேர்ந்து கொண்டதில், அவன் முகம் பார்க்கவே மறுத்தாள், அவள்.
அந்த இரவுப் பொழுதில், காண்டீபன் இல்லாது உறங்கப் பயந்துகொண்டு இருந்தவர்களுக்குத் துணையாக, தனியார் நிறுவனத்துப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் ஒருவரை, அப்போதே தேடிப் பிடித்து, அவர் அங்கு வருகிறவரைக்கும் காத்திருந்து, அவர் தங்குவதற்கும் ஏற்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துவிட்டுப் புறப்படுவதற்குள் நேரம், இரவு பத்தைக் கடந்திருந்தது.
அந்த நேரத்தில், அவளைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்தக் கோபம் அவளுக்கு!
எல்லாளனும் அவசரமாக அவளைச் சமாதானம் செய்யப் போகவில்லை. காரணம் மிதிலா! அவளின் தோற்றம், கண்ணீர், பயம், பதட்டம் எல்லாமே அவனைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. கைகளில் தெரிந்த வெட்டுக் காயங்களின் அடையாளங்கள், இன்னுமே தீராத நடுக்கம், பயந்த உடல்மொழி எல்லாம் அவனுக்குள் திகைப்பைத்தான் பரப்பிக் கொண்டிருந்தது. இத்தனை வருடங்கள் கழிந்தும் இப்படி இருக்கிறாள் என்றால், அன்று, காண்டீபன் இவர்களைச் சந்தித்த நாட்களில் எவ்வளவு மோசமாக இருந்திருப்பாள்? தம் இருவருக்குள்ளும் இருந்த ஈர்ப்பை அறிந்திருந்தும் காண்டீபன், அவளை ஏன் மணந்தான் என்பதற்கான காரணம், இன்னுமே தெளிவாகப் புரிந்தது. ஆனால், எதிலுமே சூட்டிகையாக இருந்த பெண், எப்படி அதற்குள் சென்று மாட்டிக்கொண்டாள்?
அன்னைக்குத் தினந்தோறும் வேலை என்பதில், அவளின் உலகம் உருண்டதே எல்லாளனின் வீட்டிலும் காண்டீபனின் வீட்டிலும் தான். திடீரென்று, அவர்கள் இருவரும் காணாமல் போய்விடவும், எதையும் பிரித்தறியத் தெரியாமல் சென்று சிக்கிக்கொண்டாளோ?
காலம் வகுத்த கணக்கினுள் சிக்குண்டு, திசைக்கு ஒருவராக வெட்டி வீசப்பட்டுப் போன அவர்கள் மூவரினதும் வாழ்க்கையை எண்ணி எண்ணிப் பார்க்கையில், மனதின் கனம் கூடிக்கொண்டே போனது.
“மிதிலாக்கா ஏன் உங்களைப் பாத்ததும் அந்தளவுக்கு அதிர்ந்தவா?”
திடீர் என்று வந்த கேள்வியில் சிந்தனை கலைந்து, அவளைப் பார்த்தான், எல்லாளன். ஆயினும் உடனேயே பதிலிறுக்கவில்லை. இந்தக் கேள்விக்கான பதில், அவளைக் கோபப்படுத்தி இன்னுமே அவனுக்கும் அவளுக்குமிடையில் பிணக்குகளை உண்டாக்கப் போகிறது என்று தெரிந்தது. அதற்கென்று சொல்லாமல் விடவும் முடியாதே. சில வினாடிகளை அமைதியிலேயே கழித்துவிட்டு, “ஒரு காலத்தில எனக்கு அவளில விருப்பம் இருந்தது. அவளுக்கும்.” என்று, உள்ளதைச் சொன்னான்.
வேகமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள், ஆதினி. அவள் விழிகளில் பெரும் திகைப்பிருந்தது. நம்ப முடியாத அதிர்வு இருந்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ளச் சிரமப்பட்டான், எல்லாளன்.
“அதெல்லாம் அப்ப.”
வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள், ஆதினி. உள்ளே பெரும் சீற்றம் ஒன்று எரிந்து, புகைந்துகொண்டு வந்தது. கோபத்தில் முகம் சிவந்தது. வார்த்தைகள் சீற முயன்றன. விழிகளை அழுத்தி மூடித் தன்னை அடக்க முயன்றாள்.
அவளின் அந்த மனப் போராட்டத்தைப் பார்க்க முடியாமல், அவளருகிலேயே இருந்த நாற்காலியைத் திருப்பிப் போட்டு, அவள் முகம் பார்ப்பதுபோல் அமர்ந்துகொண்டு, “அதெல்லாம் சின்ன வயசில நடந்தது. நாங்க மூண்டு பேரும் ஒரே ஊர்..” என்று ஆரம்பித்து, அனைத்தையும் சொன்னான்.
அவன் சொன்னவற்றைக் கேட்டு அவள் மனம் அமைதியடையவில்லை. மாறாக, இன்னுமே எரிமலைக் குழம்பென வீறுகொண்டு கொதித்தது.
என்ன தான் காண்டீபனை அன்னையின் இடத்தில் வைத்துப் பார்த்தாலும், அவனோடு பழகுவதற்குப் பிரியப்பட்டாலும், அவனைக் குறித்த ஏதோ ஒன்று, அன்றிலிருந்து நேற்று வரையிலும் அவளுக்குள் உறுத்திக் கொண்டே தானே இருந்தது. அவனும் பூடகமாக நிறையச் சொன்னானே. அதற்கான காரணம் இப்போது புரிந்ததில் அவளின் உதட்டோரம் வளைந்தது.
‘கனவுல கூட இந்தக் குட்டிப் பிள்ளைக்கு ஒரு பாவமும் செய்யமாட்டன். உனக்குத் தெரியாது, நீ எனக்கு எத்தினையோ வருசமாத் தணியாம இருந்த தாகத்தைத் தணிய வச்சுக்கொண்டு இருக்கிறாய்.’ என்று, அன்று அவன் சொன்னதற்காக அர்த்தம் அருகில் இருக்கிறவன்.
“ஆக மொத்தத்தில உங்களுக்கு மிதிலாக்காக்குப் பதிலா நான் தேவைப் பட்டிருக்கிறன். உங்கட நண்பர் உங்களுக்குப் பதிலா என்னோட பழகி இருக்கிறார். ஆக, ஆளாளுக்கு என்ன உங்கட தேவைக்குப் பயன்படுத்தி இருக்கிறீங்க. இது தெரியாம…” கசப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டவளுக்கு விழிகளின் ஓரம் கண்ணீர் பளபளத்தது. நம்பிய அனைவரிடமிருந்தும் ஏதோ ஒரு வகையில் ஏமாந்திருக்கிறாளே.
எல்லாளன் திகைத்தான். இப்படி ஒரு கோணத்தை எதிர்பார்க்கவில்லை. “உனக்கு என்ன விசரா? அவனுக்கு நீ எண்டா எவ்வளவு விருப்பம் எண்டு தெரியுமா?” என்றவனை இடைவெட்டியது, “அந்த விருப்பம் ஏன் வந்தது?” எனும் கேள்வி!
இவள் சட்டம் படிக்காமலேயே இருந்திருக்கலாம். அவளின் குறுக்கு விசாரணைகளை எதிர்கொள்ள, ‘ஏசிபி’ திணறினான்.
“நீங்களும் அவா இல்லை எண்டதும் இந்தப் பக்கம் திரும்பிட்டீங்க போல!” ஏளனமாக உதடு வளையச் சொன்னவளை நன்றாகவே முறைத்தான், எல்லாளன்.
“இப்ப என்ன சொல்ல வாறாய்?”
“தனியா நான் என்ன சொல்லக் கிடக்கு?” என்றாள், முகத்தைத் திருப்பிக் கொண்டு.
அவளின் அந்தச் செய்கை அவனைச் சீண்டியது. முகம் கடுத்தது.
“இந்த முகத்தத் திருப்பிற வேல என்னட்டக் காட்டாத எண்டு உனக்கு எத்தினையோ தரம் சொல்லியிருக்கிறன்!” பல்லைக் கடித்தபடி சொன்னவன், அவளின் தாடையைப் பற்றித் திருப்பப் போனான். வேகமாக முகத்தைப் பின்னுக்கு இழுத்தாள், ஆதினி.
அவன் கை ஒருமுறை அப்படியே நின்றது. பார்வை அவளை எரித்தது. அடுத்த நொடியே வலுக்கட்டாயமாக, அவளின் தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினான்.
“அது சின்ன வயசில வந்த ஈர்ப்பு. காதலே இல்ல. அத முதல் விளங்கிக் கொள்ளு! எனக்கு அவள் தான் வேணும் எண்டு நினைச்சிருந்தா தேடிப் போயிருப்பன். ஆனா, நான் தேடிப் போகேல்ல. அந்தளவு தான் அந்த ஈர்ப்பின்ர ஆதிக்கம். விளங்குதா உனக்கு?”
“அதுக்குக் காரணம் அந்த ஊர்ல நடந்த கசப்பான சம்பவங்கள், உங்கட அம்மா அப்பான்ர இறப்பு, காண்டீபன் அண்ணாவில இருந்த கோபம்.”
“உண்மைதான். ஆனா, அதையும் தாண்டிக்கொண்டு அவள் வேணும் எண்டு நான் ஏன் போகேல்ல எண்டு யோசி.” என்றான், அவன்.
“உங்கட தங்கச்சிக்காகப் பிடிக்காத என்னைக் கட்ட ஓம் எண்டு சொன்ன மாதிரி, பிடிச்ச அவாவை உங்கட தங்கச்சிக்காக விட்டீங்களோ ஆருக்குத் தெரியும்.”
சுர் என்று ஏறியது அவனுக்கு. போகிற போக்கில் அவனை முழுக் கயவனாகவே மாற்றி விடுவாள் போலவே!
“எரிச்சலைக் கிளப்பாத ஆதினி! உன்னைப் பிடிக்காது எண்டு நான் எண்டைக்கும் சொன்னது இல்ல. இதுக்கான விளக்கத்தையும் உனக்கு எப்பவோ தந்திட்டன். அகரன் சியாமளாவை விரும்பினது இப்ப கொஞ்ச வருசத்துக்கு முதல் தான். மாமா உன்னைக் கட்டச் சொல்லிக் கேப்பார் எண்டும் எனக்குத் தெரியாது. ஆனா, ஊர் மாறி வந்த நாள்ல இருந்து நான் அங்க போகவே இல்ல. பிறகு எப்பிடி சியாமளாக்காக அவளை விட்டிருப்பன் எண்டு சொல்லுறாய்? இது எல்லாத்தையும் விட, அவளுக்குக் கலியாணம் நடந்திட்டுது. பிள்ளையை வேற சுமக்கிறாள். காண்டீபனுக்காக என்ன பாடு படுறாள் எண்டு கண்ணால நீயும் தானே பாத்தனி. எனக்கும் நீ இருக்கிறாய். அதால தயவு செய்து இப்பிடி எல்லாம் கதைக்காத.” அந்தப் பேச்சையே ரசிக்காத குரலில் சொன்னான்.


