உண்மை தான்! அவளுக்கும் இப்படி எல்லாம் கதைக்கப் பிடிக்கவில்லை தான். இது அவளின் குணமும் அல்ல. ஆனால், மனம் கண்டதையும் நினைத்துத் துடிக்கிறதே. ஏமாற்றத்தில் துவள்கிறதே. மெல்லிய வலி ஒன்று போட்டு வதைக்கிறதே. அவனுக்குப் பிடிக்காது என்று தெரிந்துமே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
இந்த முறை அவன் கோபப்படவில்லை. மென்மையாக அவளின் தாடையைப் பற்றி, மீண்டும் தன் புறம் பார்க்க வைத்தான். அவளின் கன்னத்தில் தன் கரத்தை வைத்து, அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “உனக்கு இது அதிர்ச்சியா, ஏற்றுக்கொள்ள ஏலாம இருக்கும் எண்டு எனக்குத் தெரியும், ஆதினி. ஆனாலும், உன்னட்ட இத மறைக்க எனக்கு விருப்பம் இல்ல. அதுதான் சொன்னனான். மற்றும்படி, இதையெல்லாம் யோசிச்சு நீ கவலைப்படுறதுக்கு இதுல ஒண்டுமே இல்ல!” என்றான், இதமான குரலில்.
கவலைப்பட ஒன்றுமே இல்லையா? சினமுண்டாயிற்று அவளுக்கு.
“இதே மாதிரி என்ர ஆழ் மனதில எவனாவது ஒருத்தனை ஒளிச்சு வச்சுக்கொண்டு நான் உங்களிட்ட வரலாமா?” என்றதுமே, அவன் விழிகளில் பெரும் சீற்றம் ஒன்று வந்து அமர்ந்துகொண்டது. படக்கென்று அவளிடமிருந்து தன் கையை எடுத்துக் கொண்டான்.
முடிந்தவரையில் தன்னை நிதானப் படுத்திக்கொண்டு, “எதையுமே நான் வேணும் எண்டு செய்ய இல்ல, ஆதினி. எல்லாமே இயல்பா நடந்த ஒண்டு. அப்ப வாழ்க்கை இப்பிடி எல்லாம் திசை மாறும் எண்டு தெரியாது. அங்கேயே இருப்பம், அங்கேயே படிச்சு முடிப்பம், அடுத்ததா வாழ்க்கைத் துணை எண்டு இயல்பா நகர்ந்த கற்பனையும் கனவும் தான் அது. ஒருநாள், அது எல்லாமே கலைஞ்சு போச்சு. வாழ்க்கை அப்பிடியே மாறிப் போச்சு. புது ஊர், புது மனுசர்கள் எண்டு நகர்ந்த வாழ்க்கைல நீ வந்தாய். அந்த நேரம், உன்னைக் காதலிக்க இல்லத் தான். அதுக்கான காரணத்தை நான் எப்பவோ சொல்லிட்டேன். ஆனா, அவளுக்குப் பதிலா நீ எண்டு நினைக்கேல்ல. என்ர வாழ்க்கைத் துணையா நீ வேணும் எண்டு தான் உனக்கு ஓம் எண்டு சொன்னனான்.”
உண்மை தான் என்று அறிவுக்குப் புரிகிற பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் கிடந்து அடித்துக்கொள்ளும்; முரண்டும். அந்த நிலையில் இருந்தாள், ஆதினி. அவர்கள் ஒன்றும் காதலர்கள் கிடையாது; கணவன் மனைவியும் கிடையாது. ஆனால், அவனுக்கு அவள் என்பது அவள் மனதிலும் அச்சாகிப்போன ஒன்று. அப்படி இருக்கையில் தான் இப்படி ஒன்றை அறிந்திருக்கிறாள். அது ஒன்றுமே இல்லை என்று அவன் சொன்னதுபோல எடுத்துக்கொள்ள முடியாமல் பெரும் போராட்டம் ஒன்று அவளுக்குள் நிகழ ஆரம்பித்திருந்தது.
அவன் முகம் பாராமல் கைபேசியை எடுத்து, “அண்ணா, என்னைக் கூட்டிக்கொண்டு போக இவரின்ர வீட்டுக்கு வாறீங்களா?” என்று, அனுப்பிவிட்டாள்.
அவள் கைபேசியில் யாருக்கோ தகவல் அனுப்புகிறாள் என்று புரிந்தாலும் யாருக்கு என்பதைக் கவனிக்கவில்லை, எல்லாளன். அவனது மனநிலையும் சரியில்லாமல் இருந்தது.
நமக்கானவன் என்று எண்ணியிருந்த ஒருவனுக்கு, ஒரு இறந்தகாலம் இருக்கிறது என்பதை அறிந்தால், துணையின் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர முடிந்தது தான். ஆனால் இப்படி, அவர்களுக்குள் ஒன்று மாற்றி ஒன்று என்று ஏதோ ஒரு பிணக்கு வந்துகொண்டே இருப்பதை எண்ணி, மனம் சலித்தது அவனுக்கு.
அதில் உழன்றுகொண்டு இருந்தவன், “என்னடா? அவளைக் கூட்டிக்கொண்டு போக வாறதா?” என்று, அகரனிடம் இருந்து வந்து விழுந்த குறுந்தகவலில் தான், அவள் யாருக்கு என்ன அனுப்பி இருக்கிறாள் என்று புரிந்தது.
“வந்தியோ கொல்லுவன் உன்ன!” இருந்த கோபத்தை எல்லாம் அவனிடம் காட்டினான்.
“கூட்டிக்கொண்டு வந்த எனக்கு உன்னக் கொண்டுபோய் விடத் தெரியாதா?” என்று, அவளிடமும் சீறினான்.
அது, காதில் விழுந்தது போல் காட்டிக்கொள்ளவே இல்லை, ஆதினி. கையைக் கட்டிக்கொண்டு தமையனின் வருகைக்காகக் காத்திருந்தாள். எல்லாளனுக்குத் தலை வலித்தது. கடந்த சில நாட்களாகவே ஒழுங்கான உறக்கமும் இல்லாமல், உணவும் இல்லாமல், மனதில் அமைதியும் இல்லாமல் இருந்தவனுக்கு ஆதனியின் இந்த முகத்திருப்பல் இன்னுமே மனத்தைக் களைப்படையச் செய்தது.
தன் பக்க விளக்கத்தைக் கடைசியாகச் சொல்ல எண்ணி, “இங்க பார்! அதெல்லாம் எப்பவோ நடந்து முடிஞ்சது. இப்ப எனக்கு நீ மட்டும் தான் வேணும். ‘உன்ன மாதிரி நானும் ஒருத்தன மனதில் வச்சிருந்தா என்ன செய்யவாய்’ எண்டு கேட்டியே, அந்தக் கேள்வியே பிழை. என்ர மனதில சின்ன வயசு நினைவுகள் இருக்கே தவிர, அவள் இல்ல. ஆனா, ஈர்ப்போ காதலோ எனக்கு முதல் உனக்கு ஒண்டு இருந்து, அது எனக்குத் தெரிய வந்தா, இப்ப உனக்கு இருக்கிற மாதிரி எனக்கும் ஏற்கேலாமாத்தான் இருக்கும். ஏதோ ஒரு வகையில அது என்னைப் பாதிக்கும் தான். ஆனா, கடந்து வருவன். அதே மாதிரி நீயும் கடந்து வா. நான் டைம் தாறன். அதுக்காகக் கண்டதையும் கதைச்சு எனக்குக் கோவத்த வர வைக்காத!” என்றான், வரவழைத்துக்கொண்டு நிதானக் குரலில்.
அதற்கும் ஆதினி ஒன்றும் சொல்லவில்லை. கைபேசியில் கவனம் போல் காட்டிக்கொண்டாள். அதை வாங்கி மேசையில் வைத்துவிட்டு அவளின் கரங்கள் இரண்டையும் பற்றினான், எல்லாளன். தானாகவே திரும்பி அவனைப் பார்த்தாள், ஆதினி.
“ப்ளீஸ் மா, திரும்பவும் சண்டை சச்சரவு எண்டு முகத்தைத் திருப்பாத. எனக்கும் ஒரு ஆறுதல் வேணுமா இருக்கு. நீயும் இப்பிடி இருந்தா நான் ஆரிட்ட(யாரிடம்)ப் போகச் சொல்லு?” என்றதும் அவளிடம் மெல்லிய அதிர்வு.
அவனையே பார்த்தாள், முழுமையான மனிதன் தான். என்றாலும், அவனுக்கும் சில நேரங்களில் சாயத் தோள் தேவை தானோ?
அவள் பதில் சொல்லும் முன்னே வந்து நின்றான், அகரன். அவளிடமிருந்து தன் கைகளை விலக்கிக்கொண்டு, பார்வையாலேயே அவனை எரித்தான், எல்லாளன். அதையெல்லாம் பொருட்டில் கொள்ளாமல் தங்கையின் முன்னே வந்து அமர்ந்தான், அவன்.
“போவமா?” தன் கைபேசியை எடுத்துக்கொண்டு எழுந்தாள், ஆதினி.
“என்ன போவமா? நீ என்னோடதான் வரோணும்! பெரிய நல்லவன் மாதிரி ஓடி வந்ததுக்கு வந்த மாதிரியே திரும்பிப் போ!” அண்ணன் தங்கை இருவரிடமும் சீறிவிட்டு, ஆதினியை இழுத்துக்கொண்டு வாசலுக்கு நடந்தான், எல்லாளன்.