நொடி நேரத்தைக் கூட வீணாக்க விரும்பாதவளாக உள்ளே விரைந்தாள். விழிகள், எல்லாளனையும் காண்டீபனையும் தேடியது. ஒரு இடத்தில், தன் எதிரில் நின்று கொண்டிருந்த மூவர் கொண்ட குழுவிடம், மிகத் தீவிரமாக வாதிட்டுக்கொண்டு நின்றான் எல்லாளன். அவன் காக்கி உடையில் இருக்க, மற்ற மூவரும் சாதாரண உடையில் இருந்தனர். ஆனாலும், அவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என்று பார்க்கவே தெரிந்தது.
அவள் அவர்களை நெருங்கியபோது, “அவர் உங்கட பிரெண்டாம் எண்டு கேள்விப் பாட்டனாங்க, எல்லாளன். பெத்த அம்மாவா இருந்தாக் கூட சட்டம் வளையக் கூடாது! அத நினைவில் வச்சிருங்க! எங்களைத் தடுக்கிற அதிகாரமோ, கேள்வி கேக்கிற உரிமையோ உங்களுக்கு இல்ல. எங்களை எங்கட வேலையப் பாக்க விடுங்க!” என்று சொல்லிக் கொண்டிருந்தார், அந்த மூவரில் நடுவில் நின்ற ஒருவர். அவர் தான் அந்தக் குழுவுக்குத் தலைமை அதிகாரி என்று புரிந்தது.
அவர்களை நெருங்காது சற்றுத் தூரத்திலேயே நின்றுவிட்டவளின் விழிகள், காண்டீபனைத் தேடித் தவித்தது. ‘அண்ணா..’ அந்த வார்த்தையே நாசியைச் சிவக்க வைத்து, கண்ணீரை உகுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அவள் தனிமையை உணர்ந்தபோது தோள் தாங்கியவன். இரத்த பந்தமே இல்லாமல் அண்ணனாகத் தன்னை உணர்த்தியவன். அவனுக்குத் துணை வேண்டுகிற இந்த நிமிடத்தில், அவனருகில் போய்விட முடியாத அந்த நிலை, அவள் மனதை அறுத்தது.
அங்கு வந்த கதிரவனைக் கண்டதும் அவனிடம் விரைந்தாள். “ப்ளீஸ், கொஞ்சம் என்னோட வாங்க!” அவனை, ஒரு ஒதுக்கமான இடத்துக்கு அழைத்துச் சென்று, “எங்க காண்டீபன் அண்ணா? ஏன் இப்பிடித் திடீர் எண்டு கேஸே வேற மாதிரித் திரும்பி இருக்கு?” என்று, படபடத்தாள்.
“எங்களுக்கும் இன்னும் ஒண்டும் டீடெயிலா தெரியேல்ல, மேம். விடிய, டி.ஜி.பிட்ட இருந்து சேருக்கு ஓடர் வந்திருக்கு. சேர் சொல்லித்தான் எனக்கும் தெரியும். அதுதான், சீ.ஐ.டி ஒபீஸரிட்ட சேர் கதைச்சுக்கொண்டு இருக்கிறார். ஆனா, கேஸ் சி.ஐ.டி ட்ட போயிட்டுது. அதவிட, கேஸ் பெருசா இருக்கு மேம்.” என்றான், இறுகிய முகத்தோடு.
காண்டீபனின் மீது நல்லெண்ணம் கொண்டுவிட்ட இன்றைய நிலையில், நடப்பவை எதுவும் சரியாகப் படவில்லை கதிரவனுக்கு. ஆனால், எல்லாளனினாலேயே இதைத் தடுக்க முடியாது எனும்போது, அவனால் என்ன செய்துவிட முடியும்?
அவளுக்கும் புரிந்தது. குற்றவியல் விசாரணைப் பிரிவின் கீழ் சென்ற வழக்கை இனி, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எதுவானாலும் நீதிமன்றின் மூலமாகத்தான் அணுக முடியும். அதுவரைக்கும் காண்டீபன் அண்ணாவின் நிலை?
“அண்ணா எங்க?”
“பின்னால இருக்கிறார்.” காவல் நிலையத்தின் பின் பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றான், கதிரவன்.
சுவரோரமாக இருந்த மரக்குற்றி ஒன்றில் அமர்ந்து, சுவரில் தலையைச் சாய்த்து, விழிகளை மூடி இருந்தான், காண்டீபன். கைகளில் விலங்கு. ஆதினியின் விழிகள், மீண்டும் மளுக்கென்று நிறைந்து வழிந்தன. அழக்கூடாது; அவன் முன்னே உடைந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறாள். முடிந்தால் தானே? அவனருகில் செல்வதற்குக் கால்கள் கூட வரமாட்டேன் என்றது.
எந்த எண்ண அலைகள் உந்தியதோ, விழிகளைத் திறந்து இவள் புறம் பார்த்தான், காண்டீபன். விம்மி வெடிக்க முயன்ற கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றாள், ஆதினி. அவனும் சில நொடிகள் இமைக்காது அவளையே பார்த்தான். பின், வா என்று தலையை மட்டும் அசைத்தான்.
தாயைக் கண்ட சேயாக அவனிடம் ஓடினாள், ஆதினி. இருவரின் பார்வையும் மற்றவரில் தான். பேச்சுத் தான் வரமாட்டேன் என்றது.
“கங்கிராட்ஸ் மா!” கனிவுடன் நோக்கிக் கூறினான்.
இந்த நேரத்தில் கூட அவளை மறக்கவில்லையே, அவன். உடைந்து போனாள், ஆதினி. “என்னண்ணா இதெல்லாம்?” என்றாள், கண்ணீரினூடு.
சிறிதாகச் சிரித்தான், அவன். உயிரற்ற சிரிப்பு! “உனக்குத்தான் இந்த அண்ணா நல்லவன். மற்ற ஆட்களுக்கு இல்ல!” மெல்லிய குரலில் சொன்னான்.
அவளின் தலை இல்லை என்று அசைந்தது. “எனக்குத் தெரிஞ்ச காண்டீபன் அண்ணாவால ஆருக்கும் கெட்டது செய்யேலாது.”
அவள் சொன்னதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தான், அவன். இக்கட்டு நிறைந்த அந்தச் சோகத்திலும் சிரிக்க முடிந்தவனைக் கண்ணீரோடு பார்த்தாள், அவள்.
“என்ன நம்பாதடா. அந்தளவுக்கு நான் நல்லவனும் இல்ல. தமயந்திக்கு நான் போதையைப் பழக்கினது உண்மை.”
“நீங்க டீச்சர், அண்ணா. யாருக்கோ எதையோ படிப்பிக்க நினைச்சிருக்கிறீங்க. மற்றும்படி, என்ர காண்டீபன் அண்ணா நல்லவர் தான்!” அப்போதும் அவளின் குரலில் அசைக்க முடியாத நம்பிக்கை.
இமைக்க மறந்தவனாக அவளையே பார்த்தான், காண்டீபன். மீண்டும், தன்னை நோக்கித் தலையை அசைத்தான். அவன் முகத்தருகில் குனிந்தாள், ஆதினி
“என்ன அண்ணா?”
“என்னை நம்புறியா?” அவள் விழிகளுக்குள் பார்த்துக் கேட்டான்.
ஆம் என்று தலையசைத்தாள், ஆதினி. அவன் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம். விலங்கினுள் சிக்கியிருந்த கைகள் இரண்டையும் உயர்த்தி, அவளின் தலையைக் கலைத்துவிட்டான். ஆதினியின் விழிகள் மீண்டும் கண்ணீரைக் கொட்டின.
“அழக்கூடாது! எங்கட ஆதினி ஸ்ட்ரோங் கேர்ள். முதல் கேஸ் நல்ல ஸ்ட்ரோங்கான கேஸா எடுத்து நடத்து. நீதிபதி இளந்திரையன் சேரின்ர மகள் எண்டுற நிலை மாறி, ஆதினின்ர அப்பா நீதிபதி இளந்திரையன் எண்டுற பெயர் வரோணும். செய்வியா?” என்று கேட்டான்.
அவளும் தலையை அசைத்தாள். “உங்களுக்கும் நான் இருக்கிறன், அண்ணா. ஒன்றுக்கும் கவலைப் படாதீங்க!” அவசரமாகச் சொன்னாள்.
அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை. கனிந்த சிரிப்புடன் புரிகிறது என்பதுபோல் சிறிதாகத் தலையை அசைத்தான்.
அப்போது, மிதிலாவோடு அங்கே வந்தான், எல்லாளன். அவன் முகம் கல்லைப் போன்று இறுகிக் கிடந்தது. காண்டீபனை நெருங்கவில்லை. பார்வை மட்டும் அவனிடமேதான்.
காண்டீபனை அந்தக் கோலத்தில் கண்ட மிதிலா அழுகையை அடக்க முடியாமல் உடைந்தாள். ஓடிப்போய் அவளைத் தாங்கிக் கொண்டாள், ஆதினி. “அழாதீங்க அக்கா. நேற்றுச் சொன்னதுதான். இந்தக் கேஸ் நான் வெண்டு(வென்று) தருவன்!” என்றாள், உறுதியான குரலில்.
“ஏன் மிது அழுறாய்?” தானும் எழுந்து வந்த காண்டீபன், கரகரத்த குரலில் அதட்டினான்.
வேகமாக ஓடிவந்து விலங்கிடப்பட்டிருந்த அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள், மிதிலா. “என்ன நடக்குது தீபன்? எனக்கு ஒண்டுமே விளங்குதே இல்லையேப்பா.” தவித்த குழந்தையாக முகம் பார்த்து வினவியவளைத் தன் மார்போடு சேர்த்தான், காண்டீபன்.
அவன் மனமும் துடித்தது. அவளுக்கு என்ன ஆறுதலைச் சொல்வான்? எது சொன்னாலும் அவளின் மனம் ஆறுமா, என்ன? அவளை, அப்பாவை, மாமியை எல்லாம் இனி யார் கவனிப்பது? உடைந்து நொருங்கிப் போயிருந்தவர்களை எல்லாம் இப்போது தானே கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டினான். அவனில்லாமல் மீண்டும் நொறுங்கிவிட மாட்டார்களா? நெஞ்சு அழுதது. பெரும் வலி ஒன்று தாக்கியது. எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு மறைத்துக்கொண்டான். கருவைத் தாங்கும் அவளின் மனத்தைத் திடப் படுத்துவது முக்கியமாகப் பட, “ஒண்டும் நடக்கேல்ல. நீ அழுது உடம்பைக் கெடுக்காத, என்ன? நான் கெதியா வந்திடுவன். அதுவரைக்கும் அப்பாவையும் மாமியையும் கவனமாப் பாத்துக்கொள்.” என்றவனை, என்னால் அது முடியுமா என்பதுபோல் சிவந்து, கலங்கியிருந்த விழிகளால் நோக்கினாள், அவள்.
“உன்னால ஏலும். எனக்குத் தெரியும், என்ர மனுசி கெட்டிக்காரி. தைரியமா இருக்கோணும். முந்தியாவது நாங்க தனிய. இப்ப எல்லாளன் இருக்கிறான், ஆதினி இருக்கிறாள். பயப்பிடாத, என்ன?” தன் மனம் படும் பாடுகளை எல்லாம் மறைத்துக்கொண்டு சொன்னான்.
“ஆர் இருந்தாலும் எனக்கு நீங்க இருக்கிற மாதிரி வராதே, தீபன்?” கண்ணீரோடு தழுதழுத்தாள், அவள்.
உள்ளுக்குள் நொருங்கிப் போனான், காண்டீபன். விழிகளில் நீர் சேர ஆரம்பிக்கவும் வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டான். தன்னை நிலைப்படுத்த முயன்றான். பின் அவள் முகம் பார்த்து, “நான் எங்க போகப் போறன்? கொஞ்ச நாள் பக்கத்தில இல்லாம இருக்கப் போறன். பிறகு வருவன் தானே. அதுவரைக்கும் எல்லாரையும் பாத்துக்கொண்டு நீயும் கவனமா இரு!”
அந்த மூவர் குழு இவனை நோக்கி வருவது தெரிந்தது. அவன் புறப்படும் நேரம் வந்து விட்டது. இனி எப்போது இவர்களை எல்லாம் பார்ப்பானோ? நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது அவனுக்கு. எல்லாளனைப் பார்த்தான். விரைத்த தேகமும் இரும்பைப்போன்று இறுகிய முகமுமாக நின்றிருந்தான், அவன்.
அவனிடம் வந்தான், காண்டீபன். இருவரின் பார்வைகளும் சந்தித்தன. அவன் நெற்றியில் தன் நெற்றியை வைத்த காண்டீபன் அப்படியே, விழிகளை இறுக்கி மூடிக்கொண்டான். வேறு எதுவும் பேசவே இல்லை.
அணிந்திருக்கும் உடைக்கு நியாயம் செய்கிறவனாக உடைந்துவிடாமல் விறைப்புடன் அப்படியே சிலையென நின்றிருந்தான், எல்லாளன். உள்ளே அவன் உள்ளம் சில்லுச் சில்லாக நொறுங்கிக் கொண்டிருந்தது. இது, அவனே எதிர்பார்க்காத ஒன்று. அவனால் எதுவும் செய்துவிட முடியாத நிலை. அதுதான் நெஞ்சை அறுத்தது. அன்று, தெரியாமலே கையை விட்டான். இன்று, தெரிந்தும் கைப்பற்றிக் கரையேற்றிவிட முடியாமல் நிற்கப் போகிறானா? பெரும் போராட்டம் ஒன்று அவனுக்குள் நிகழ்ந்துகொண்டு இருந்தது.
காண்டீபன் மூடியிருந்த இமைகளைத் திறந்தபோது அவன் விழிகள் பனித்திருந்தன. “நீ கவனமடா!” என்றான். “எப்பவும் இந்த யூனிபோர்மை கழட்டிப்போடாத!”
மனைவியைத் திரும்பிப் பார்த்தான். அழுதுகொண்டே இருந்தாள், அவள்.
“சும்மா சும்மா அழாத மிது! தண்டனை கிடைச்ச பிறகு எனக்கு மட்டும் தலைவர்களின்ர பிறந்தநாளும் சுதந்திர தினங்களும் வராமையா போகபோகுது. வரும்! வருவன்! அழாத!” என்றவன் ஆதினியின் தலையிலும் முட்டிவிட்டுப் புறப்பட்டான். வாசலில் நின்றிருந்த வாகனத்தினும் ஏறி அமர்ந்தான்.
அதன் பிறகு, அவன் யாரையும் திரும்பிப் பார்க்கவே இல்லை. வாகனம் புறப்பட்டது. அப்போதும், ஒருவிதப் பிடிவாதத்துடன் இவர்களின் புறம் திரும்பாமலே அமர்ந்து இருந்தவன், அவர்கள் மறையும் நொடியில் வேகமாகத் திரும்பி அவர்கள் மூவரையும் இல்லையில்லை நால்வரையும் தன் விழிகளுக்குள் நிரப்பிக்கொண்டு, தலையை மெதுவாக அசைத்து விடைபெற்றுக்கொண்டான்.


