மறைந்துபோன வாகனம் கிளப்பிவிட்டுச் சென்ற புழுதி அடங்கும் முன்னே, எல்லாளனைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும் கேள்விகளாகக் கேட்டு, மைக்கை அவன் வாய்க்குள்ளேயே புகுத்திவிட முனைந்தனர். பதிலாக மூச்சைக் கூட வெளியே விட மறுத்தான், எல்லாளன்.
அவனிடமிருந்து எதுவும் பெயராது என்றதும் பத்திரிகையாளர்களின் குறி மிதிலா, ஆதினி பக்கம் பாய்ந்தது. அதற்கும் அனுமதிக்காமல், அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்து, அங்கு வந்த ஆட்டோ ஒன்றை மறித்து ஏற்றிவிட்டான், எல்லாளன். முச்சக்கர வாகனம் புறப்படுவதற்கு முதல், மிதிலாவைக் கண்ணால் காட்டி, “தனியா விடாத!” என்றான், ஆதினிக்கு மட்டுமே கேட்கும் குரலில்.
அவளுக்கும் அவனிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தன. காண்டீபன் மீது போடப்பட்ட வழக்கின் விவரமும் தேவை. அதையெல்லாம் கேட்கும் நேரம் இதுவல்ல என்பது புரிந்தது. கூடவே, மனம் அவனது அருகண்மைக்காக ஏங்கிற்று. அது, அவள் விழிகளில் தெரிந்திருக்க வேண்டும். அவளின் கரம் பற்றி அழுத்தி, “தைரியமா இரு!” என்றான்.
“நீங்களும் கவனம்.” எனும்போதே, அவள் விழிகள் கரித்தது.
முதன் முதலாக, அவன் மீதான அக்கறையைக் காட்டுகிறாள். அதை, உணர்ந்து அனுபவிக்கும் சூழ்நிலையோ மனநிலையோ இல்லாமல் போனதில், பற்றியிருந்த கையையே மீண்டும் அழுத்திக் கொடுத்துவிட்டு, அவர்களை அனுப்பி வைத்தான்.
இதற்குள், ஒரு கல்லூரி விரிவுரையாளர் இப்படி நடக்கலாமா என்று கேள்விகளாகக் கேட்டு, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், நேரடிச் செய்தியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தொடங்கியிருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ‘உங்களை நம்பும் எங்களைக் கெடுக்காதீர்கள்!’ போன்ற பதாகைகளோடு விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு எதிரான, ஒரு நாள் கண்டனப் போராட்டத்தை ஆரம்பித்து இருப்பதாக வேறு செய்தி வந்திருந்தது.
நிதானிக்கக் கூட விடாமல் இவ்வளவு வேகமாக எல்லோரையும் தூண்டிவிட்டு, முழுமையான கெட்டவனாகக் காண்டீபனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலை எதற்காக? இதுவரையில், பெரும் தொகையான போதைப் பொருட்களோடு கைதானவர்களுக்கே இப்படி ஒன்று நடந்ததில்லை.
எல்லாவற்றையும் விட, காண்டீபனின் கைது யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல், எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், உள்ளதைச் சொல்லப்போனால் அவனே எதிர்பாராமல் நடந்தது. அப்படி இருக்கையில், அவனுடைய விசாரணையே முடிவடையாத நிலையில், அந்த வழக்கு எப்படி, அவன் கையை மீறிப் போனது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறிந்துகொள்ள அடுத்த நிமிடமே டி.ஐ.ஜியின் அலுவலகத்தில் நின்றான், எல்லாளன்.
“வாங்க எல்லாளன்!” பரந்த பெரிய மேசையின் பின்னே, கருப்பு நிற சுழல் நாற்காலியில், மார்பில் பதக்கங்களையும் தோள்கள் இரண்டிலும் நட்சத்திரங்களையும் சுமந்திருந்த, மற்ற காக்கி உடைகளைக் காட்டிலும் அடர்ந்த தன்மை அதிகம் கொண்ட காக்கி உடையில், கம்பீரமாக அமர்ந்திருந்த டி.ஐ.ஜி வரவேற்றார்.
“என்ன சேர் நடக்குது?” அவருக்கான சல்யூட்டை வழங்கிவிட்டு வினவினான், எல்லாளன்.
அதற்குப் பதில் சொல்லாது அவரின் முன்னால் இருந்த கோப்பினை எடுத்து, அவன் புறமாகத் திருப்பி வைத்தார், அவர்.
எடுத்துப் பார்த்தான்.
கிட்டத்தட்டப் பத்து மாணவர்கள் தாம் பாதிக்கப் பட்டதாகக் காண்டீபனின் பெயரில் புகார் அளித்திருந்தனர். அதுவும் ஒற்றை நாளில். அதில் தமயந்தியின் பெயர் மட்டும் இல்லை.
“இத நம்புறீங்களா சேர்?”
“சட்டத்துக்குத் தேவை சாட்சி, எல்லாளன். நம்பிக்கை இல்ல!” எழுதிக்கொண்டு இருந்த பேனையை மூடி, அருகில் இருந்த தாங்கியினுள் போட்டுவிட்டுச் சொன்னார், அவர்.
“பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் குடுத்திருக்கினம். அதன்படி விசாரிச்சதில நிறைய உண்மை வெளி வந்திருக்கு. முக்கியமானது காண்டீபன்ர ஸ்டூடன்ட் சாகித்தியன். அவனை நீங்க கைது செய்து இருக்கிறீங்க. ஒரு நாள் முழுக்க ரிமாண்ட்ல வச்சு விசாரிச்சும் இருக்கிறீங்க. அதே நேரம், சத்தமே இல்லாம வெளில விட்டு இருக்கிறீங்க. இன்னொரு ஸ்டூடெண்ட் அஞ்சலி, போதைப் பழக்கத்துக்கு அடிமையா இருந்து இருக்கிறா. அவரின்ர கம்பஸ் மேசை லாச்சிக்க இருந்து போதை பொருட்கள் எடுத்திருக்கினம். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?”
“தமயந்தி! தமயந்தி சத்தியசீலன். இந்தப் பெயர் இந்தக் கேஸ்ல எங்கேயுமே இல்லையே சேர். எங்க போனது?”
அவர் முகம் கடினப்பட்டது. “இப்ப இந்தக் கேஸ் எங்களிட்ட இல்ல, எல்லாளன். பிறகும் ஏன் இதைப்பற்றிக் கதைக்கிறீங்க?”
“ஏன் எங்கள விட்டுப் போனது? அதுதான் என்ர கேள்வி சேர்.”
“காரணம் நீங்க!” என்றார் அவர். “காரணமே இல்லாம ஒருத்தனக் கைது செய்ற ஆள் இல்ல நீங்க. ஆனாலும், சாகித்தியன வெளில விட்டு இருக்கிறீங்க. சோ, உங்கட நண்பருக்காக நீங்க எதையோ மறைக்கிறீங்க எண்டு உங்கள்ள நம்பிக்கை இல்லாமத்தான் கேஸ் மாறினது. இது எங்கட டிப்பார்ட்மெண்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம். இதுக்கே உங்களை நான் விசாரிச்சு இருக்க வேணும். ஆனாலும் செய்ய இல்ல. அதை நினைச்சுச் சந்தோசப் படுங்க!”
“என்ர நண்பனுக்காக நான் ஒண்ட மறைக்க நினைச்சிருந்தா அவனைக் கைது செய்ததையே மறச்சிருப்பன். ஏன், கைது செய்யாமையே விட்டிருப்பன். அவனைத் தூக்கி உள்ளுக்கு வச்சிட்டு அவனிட்ட படிச்சவனை வெளில விடவேண்டிய தேவை என்ன, சேர்?” அவரின் பதவிக்கான மரியாதை இருந்த போதிலும் அணல் தெறித்தது அவன் பேச்சில்.
“நான் அவனைக் கைது செய்ததுக்குக் காரணம் தமயந்தி. அது தமயந்திக்கே தெரியாது. ஆனா, ஒற்றை நாளில முழு யாழ்ப்பாணத்துக்கும் தெரிஞ்சிட்டுது. காரணம் பத்துப் பிள்ளைகளின்ர புகார். இந்தப் பத்துப் பிள்ளைகளும்
இவ்வளவு நாளும் எங்க இருந்தவையாம்? முக்கியமா அவனை நான் கைது செய்யேக்க அவன் எந்தப் பொருளோடயும் இருக்கேல்ல. நீங்க நினைக்கிறீங்களா கம்பஸ், அவன்ர வீடு எல்லாம் நான் செக் பண்ணேல்ல எண்டு. என்ர கண்ணுக்கு மாட்டாத போதைப்பொருள் சி.ஐ.டி ன்ர கண்ணுல எப்பிடி சேர் மாட்டினது?”
அவனுடைய கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், “எல்லாளன், அவன் ஒண்டும் நல்லவன் இல்ல. குற்றவாளி! படிக்கிற பிள்ளைகளின்ர வாழ்க்கையைப் பாழாக்கினவன். அவனை உள்ளுக்குப் போட்டதுக்கு நீங்க சந்தோசம் தான் படோணும்!” என்றார், அவர்.
“உண்மைதான். சட்டத்துக்கு முன்னால அவன் குற்றவாளி தான். அதுக்காக, வெளில இருக்கிற நாங்க எல்லாரும் நல்ல மனுசர் எண்டு அர்த்தமில்லை.” அடக்கப்பட்ட கோபம் தெறிக்கும் உடல் மொழியோடு அவருக்கு ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு வெளியே வந்தவனின் முகம், ரௌத்திரத்தில் சிவந்து போயிருந்தது.
*****
அறைக்குள் அடைந்து கிடந்தாள், தமயந்தி. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து அழுததில் முகம் சிவந்து, அதைத்துக் கிடந்தது. கண் மடல்கள் தடித்திருந்தன. தலை விண் விண் என்று வலித்தது. இப்படி மோசமாக ஏமாந்து போனாளே! போனால் போகட்டும் என்று விடத் தொலைத்தது என்ன சாதாரண ஒன்றையா? குழந்தைச் செல்வத்தை அல்லவா இழந்துவிட்டாள்! நினைக்க நினைக்க மனம் ஆறவே மாட்டேன் என்றது. தீராத வேதனை நெஞ்சைப் போட்டு நிரந்தமாக அரித்துக்கொண்டே இருந்தது. கண்களுக்குள் திரண்டு கன்னத்தில் உருண்ட கண்ணீரைத் துடைக்கக் கூட வலுவற்றவளாகக் கட்டிலில் கிடந்தாள்.
படிப்பு முடியாமல் இருந்ததாலும், திருமண வாழ்க்கையைக் கொஞ்ச நாட்களுக்கு அனுபவிக்கும் ஆசையிலும் அவர்களாகவே குழந்தையைத் தவிர்த்து இருந்தார்கள். வாழ்க்கையும் மிகுந்த சந்தோசமாகத் தான் போனது.
பல்கலை முடித்து, இனி பிள்ளை பெற்றுக்கொள்வோம் என்று தயாரானபோது குழந்தை தங்கவில்லை. பொறுத்துப் பார்த்துவிட்டு வைத்தியசாலைக்குச் சென்ற போது தான் தலையில் இடியையே இறக்கியிருந்தார் வைத்தியர்.
அவள் எடுத்துக்கொண்ட போதையினால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிக்கப் பட்டிருக்கிறதாம். அதனால், குழந்தை உண்டாவது நூற்றில் ஒரு வாய்ப்புத் தானாம் என்று அவர் சொன்னபோது, ‘இவருக்கு என்ன விசரா?’ என்று தான் அவரைப் பார்த்தாள், அவள்.
ஆனால் அவர், அவளின் ரிப்போர்ட்டை காட்டி விலாவாரியாக விளக்கியபோது அதிர்ந்தே போனாள். இது எப்படிச் சாத்தியம்? அருகில் இருந்த கணவனின் உக்கிரப் பார்வையில் நொறுங்கிப் போனாள். அதுவும், வீட்டுக்கு வந்ததும், ‘நானே இண்டைக்கு வேண்டாம் எண்டு சொன்னாலும் மேல மேல வந்து விழுவியே, இதாலையா?’ என்று கேட்டானே ஒரு கேள்வி! இப்போது நினைக்கையிலும் மண்ணுக்குள் புதைந்துவிடலாம் போலிருந்தது. எவ்வளவு கேவலம். எவ்வளவு அவமானம். தமயா என்பதைத் தாண்டி ஒரு சொல் கடிந்து சொல்லாதவன், அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வலுத்துப் போனதில் கை நீட்டி அடித்தே இருந்தான்.
அவளறியாமல், அவளுக்குத் தெரியாமல், அவளே எப்படிப் போதையை எடுத்துக்கொண்டிருக்க முடியும்? திருப்பித் திருப்பி யோசித்துப் பார்த்த போது தான் பல்கலைக்கழகக் காலமும் அப்போது, அவள் சாப்பிட்ட லொலியின் நினைவும் வந்தது. பல்கலைக் காலம் முடிந்த பிறகு, அது இல்லாமல் இருக்க முடியாமல் தவித்திருக்கிறாள். கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து, அந்தச் சுவையை மனமும் உடலும் உணராமல் போனதில், அஞ்சலி வீட்டுக்கே சென்று கேட்டு வாங்கி இருக்கிறாள். அப்போதும், பழைய தித்திப்பும் கிறக்கமும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான், காண்டீபனின் மேசையில் இருக்கும் லொலிகள் மாத்திரமே அந்த வகையானவை என்பதை யோசித்துக் கண்டு பிடித்திருந்தாள்.
ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவனைச் சென்று பார்த்ததும், அவனிடமும் லொலி இல்லாமல் போக, ‘முந்தி மாதிரி இப்ப நீங்க லொலி வச்சிருக்கிறேல்லையா சேர்?’ என்று விளையாட்டுப் போன்று கேட்டதும், அவன் இல்லை என்றதும் நினைவில் வந்து போனது.
பெரும் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தவள் அதன் பிறகும் பல நாட்கள் அந்த லொலிக்காகக் கடை கடையாக அலைந்திருக்கிறாள். கிடைக்காத ஏமாற்றத்தில் வேறு வழி தெரியாது அவளறியாமலேயே அதிலிருந்து வெளியே வந்திருந்தாள்.
அன்றைக்கு, அந்த லொலியின் பின்னே இவ்வளவு பெரிய சதி இருந்திருக்கும் என்று கணிக்காமலேயே விட்டுவிட்டாள். ஆனால் இன்றைக்கு?
அவள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது என்று தவித்துக்கொண்டு இருந்தவள் அடுத்தக் கணமே, கணவனிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்து இருந்தாள். அவள் சொல்ல சொல்ல அவன் முகம் பயங்கரமாக மாறிப்போனது. நடுங்கிப் போனாள் தமயந்தி. அவனிடம் இப்படியான ஒரு கடுமையான முகம் இருப்பதை இத்தனை வருட வாழ்க்கையில் அவள் அறியவே இல்லை. அந்தளவில் இரையைப் புசிக்கக் காத்திருந்த புலியின் சீற்றம், அவன் கண்களில் தெரிந்தது.
அதுசரி! ஆசை மனைவி மூலம் சந்ததி தழைக்கும் என்று நம்பியிருந்திருப்பான். இனி அதற்கு வழியே இல்லை என்றால் எப்படி இருக்கும்? அவள் என்ன சொல்லி என்ன பிரயோசனம்? எதுவும் மாறிவிடப் போகிறதா என்ன? அதுதான் அவள் மலடி ஆகிவிட்டாளே! ஆக்கிவிட்டானே பாவி படுபாவி! அவள் தேகம் அழுகையில் குலுங்கிற்று.
ஆனால் ஏன்? அந்தக் காண்டீபனுக்கு அவள் என்ன பாவம் செய்தாள்? ஏன் இப்படி ஒரு அநியாயத்தை அவளுக்கு இழைத்தான்?