“என்ன யோசிக்கிறீங்க?”
“வேற என்னத்த யோசிக்க? இவனை எப்படி வெளில கொண்டு வாறது எண்டுதான்.”
“அது கஷ்டம் எண்டு நினைக்கிறீங்களா?”
“ஈஸியும் இல்ல.”
அவனே அப்படிச் சொன்னது அவளின் துக்கத்தைப் பெருகச் செய்தது. “நீங்க அண்ணாவை கைது செய்திருக்காட்டி இதெல்லாம் நடந்திருக்காது.” மனத்தாங்கலுடன் சொன்னாள்.
“அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல, ஆதினி. அதைவிட, இண்டைக்கு அவனுக்கு நடக்கிற எல்லாத்துக்கும் அவன் மட்டும் காரணமும் இல்ல.” என்றவன், அதை உடைத்துப் பேச விரும்பாமல் அமைதியானான்.
அவனின் கணக்குச் சரி என்றால் தமயந்திக்குக் குழந்தைப் பிறப்பில் பிரச்சனை வந்திருக்க வேண்டும். சத்தியசீலன் அதைச் சும்மா விட்டிருக்க மாட்டான். ஆராய்ந்து, காரணம் காண்டீபன் என்று கண்டு பிடித்திருப்பான். அந்தக் கண்டுபிடிப்புக் காண்டீபனைப் பற்றிய முழுத் தகவலையும் திரட்ட வைத்திருக்கும். அதில், எல்லாளன் அவனின் நண்பன் என்பதில் தொடங்கி, அவனுடைய தம்பிக்கு இரட்டை மரணத் தண்டனை வழங்கிய நீதிபதி இளந்திரையனின் மகள் ஆதினி அவனுக்கு உடன் பிறவாத தங்கை என்பது வரைக்கும் அறிந்திருப்பான். அதுதான், அவனை இத்தனை ஆவேசம் கொள்ள வைத்திருக்க வேண்டும்.
ஆக, காண்டீபனின் கைது நிகழ்ந்தே இருக்கும். என்ன, எல்லாளன் அவனைக் கைது செய்த அதே நேரம் இதெல்லாம் அவன் காதுக்கு எட்டியதுதான் யாரும் எதிர்பாராதது.
அவனின் எண்ணமெல்லாம், சத்தியசீலனின் இந்த ஆவேசம் இதோடு நின்றுவிட்டாலே போதும் என்பது தான். அதற்கு மேல் யாருக்கு என்ன நடக்குமோ என்று யோசிக்கக் கூட முடியாதவனாக உறக்கத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறான்.
இதையெல்லாம் அவளிடம் சொல்ல முடியாது. தாங்கிக்கொள்ள மாட்டாள். ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக அவனின் அச்சங்களுக்கு அர்த்தமே இல்லாமல் கூடப் போகலாம். கூடவே, சத்தியசீலனைப் பொறியில் சிக்க வைப்பது எப்படி என்கிற யோசனையும் ஓடிக்கொண்டு இருந்தது.
யாராலும் என்னை எட்ட முடியாது என்கிற அந்த இறுமாப்புத் தானே இதையெல்லாம் செய்ய வைப்பது? அரசியல் பலம், ஆட்பலம், பணபலம், செல்வாக்கு என்பவற்றை வைத்துக்கொண்டு எளிய குடும்பங்களைச் சிதைக்கிறவனுக்குப் பாடம் படிப்பிக்க வேண்டாமா?
மனதின் கொந்தளிப்புக்குத் தீனி போட முடியாத நிலை வேறு அவனைத் தகிக்கச் செய்தது.
“நீங்க சொல்லுறதைக் கேக்க எனக்குப் பயமா இருக்கு, எல்லாளன். நேற்று வரைக்கும் அண்ணா ஜெயிலுக்க எண்டு தெரிய வந்தாலும் உங்களிட்ட இருக்கிறார் எண்டுற நினைப்புத் தான் இருந்தது. ஆனா இப்ப..” என்றவளுக்கு மேலே பேச முடியாமல் குரல் தழுதழுத்தது.
“ப்ச்! அழாத எண்டு உனக்கு எத்தின தரம் சொல்லுறது? இதுக்குத்தான் கொழும்புக்குப் போய்ப் படிச்சியா?” என்றவனின் கரம், அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது.
ஆதினியும் விலகவில்லை. அவன் தோளில் முகம் புதைத்தவளுக்கு அதுவரை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் மேலெழும்பியதில் கண்ணீர் பெருகியது.
“அழாத ஆதினி. நீ அழுதா எனக்கு யோசிக்கேலாம இருக்கு.”
“இல்ல. என்னைக் கொஞ்சம் அழ விடுங்க. இண்டைக்கு முழுக்க நெஞ்சு அடச்சுக்கொண்டு வந்தாலும் மிதிலாக்காக்காக அடக்கி இருந்தது எனக்கு ஏலாம இருக்கு.” என்றவளை அதன் பிறகு அவன் தடுக்கவில்லை. அவளின் தலையைத் தன் மார்பில் அழுத்தியபடி வருடிக்கொடுத்தான்.
இந்த வீடு, இங்கே வந்து சென்ற நினைவுகள், அப்போதெல்லாம் தன்னைத் தாங்கிய காண்டீபன் என்று அவளை வதைத்த நினைவுகளை எல்லாம் கண்ணீராக அவன் கைகளில் கரைத்து முடித்தாள்.
“போதுமடி! நாளைக்கு பிறகு கண் திறக்கேலாத அளவுக்கு தலை இடிக்கப் போகுது!” என்று அவள் முகம் நிமிர்த்தித் துடைத்துவிட்டான், எல்லாளன்.
நிமிர்ந்து அமர்ந்தவளே விலகி இருக்க விடவில்லை அவன். தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான். அப்படி அவள் இருப்பது அவன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அதில், அவளின் நெற்றியில் தன் முதல் முத்தத்தை ஆழமாகப் பதித்து எடுத்தான். ஆதிநிக்குமே அது மனத்துக்குப் பெரும் சுகம் சேர்த்ததில் அவன் முகம் பார்த்தாள்.
“அவனுக்குத் தண்டனை கிடைக்காம இருக்கச் சான்ஸ் குறைவு. அது எத்தின வருசம் எண்டுதான் தெரியேல்ல. வேற வழி இல்ல. இதையெல்லாம் அவன் தாண்டித்தான் வரவேணும். அதால, இது எல்லாத்தையும் தனகிறதுக்கு கொஞ்சம் தைரியமா இரு.” என்றான் அவன் மென் குரலில்.
“என்ன நீங்க? நீங்களே இப்பிடி சொன்னா எப்பிடி? ஏதாவது செய்து அண்ணாவை வெளில கொண்டு வரமாட்டீங்களா?”
அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு அரும்பிற்று. “நான் என்ன செய்யேலும்? நீதான் லோயர். நீதான் ஏதாவது செய்து அவனை வெளில கொண்டு வரோணும். இல்ல வேற யாரையும் பாப்பமா?”
இதனால் தான் அவன் கேஸ் பைலை கொண்டு வரவில்லையோ என்கிற கேள்வி முதலே இருந்ததில், “உங்களுக்கு என்னில நம்பிக்கை இல்லையா?” என்று வினவினாள், ஆதினி.
தன் முகம் பார்த்து வினவியவளின் நெற்றியில் மீண்டும் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் எல்லாளன்.
“நம்பாம இல்ல. ஆனா, ரிஸ்க் எடுக்கப் பயமா இருக்கு. இது அவன்ர வாழ்க்கை. அதுக்கு மிதிலான்ர வாழ்க்கை, பிறக்கப் போற பிள்ளையின்ர எதிர்காலம் எல்லாம் இருக்கு. நாங்க என்ன செய்றது எண்டாலும் யோசிச்சுச் செய்யோணும். நீ புதுசு. என்ன இருந்தாலும் அனுபவம் இல்ல. அதைத்தான் யோசிச்சனான்.”
“ஆனா, அண்ணாக்கு நான் வாக்கு குடுத்து இருக்கிறன்.” அவன் சொல்வது சரி என்று தெரிந்தாலும் சொன்னாள் அவள்.
“சரி பாப்பம், விடு! அங்கிளோடயும் கதைச்சா என்ன செய்யலாம் எண்டு சொல்லுவார்.” குணசேகரனும் இருக்கிறார் என்கிற நம்பிக்கையில் சொன்னான்.
அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், மனம் விட்டுப் பேசியதும், மனத்தால் நெருங்கியதும், ஒருவர் மற்றவரின் அருகில் சிறிது நேரமாயினும் செலவு செய்ததுமாகச் சேர்ந்து பெரும் பலத்தைத் தந்திருந்தது. விடியலைத் தைரியமாக எதிர்நோக்கும் திடத்துடன் உறக்கத்தை வரவேற்றனர்.
அடுத்த நாளும் விடிந்தது. அந்த விடியல், ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கிடையில் நடந்த பயங்கர மோதலில் ஒரு விசாரணைக் கைதி சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் காண்டீபன் சம்மந்தன் என்று சிறைக்காவல் அதிகாரியினால் இனம் காணப்பட்டார்.’ என்கிற செய்தியை அவர்கள் எல்லோரினதும் தலையில் இடியாக இறங்கியிருந்தது.
அதைக்கேட்டு மயங்கிச் சரிந்தாள், மிதிலா.



