நீ தந்த கனவு 39

அத்தியாயம் 39

சியாமளா கொண்டுவந்த இரவுணவை அவளின் துணையோடு மற்ற மூவருக்கும் கொடுத்து, அவர்களை உறங்கவிட்டுவிட்டு, சியாமளா கொண்டுவந்து தந்த மடிக்கணணியை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்

நேரம் பதினொன்றை நெருங்கும் வேளையில்தான் எல்லாளன் வந்தான். குளித்து, சாதாரண உடைக்கு மாற்றியிருந்தான். ஆனாலும் முகத்தில் அப்பட்டமான களைப்பு.

அவள் அவன் முகம் பார்க்க, “என்ன எண்டாலும் நாளைக்குக் கதைப்பம். இப்ப நேரமாச்சு, போய்ப்படு. நான் நாளைக்கு நேரத்துக்கே போகோணும்!” என்றுவிட்டு முதல் வேலையாகச் சம்மந்தனைக் கவனித்தான்.

மீண்டும் அவரைப் படுக்கையில் விட்டுவிட்டு, டோர்ச் லைட்டை எடுத்துக்கொண்டு காணி முழுவதையும் சுற்றி வந்தான். காவலுக்கு நின்றவரோடும் பேசிவிட்டு வந்து, சம்மந்தனின் அருகில், ஆதினி விரித்துவிட்டிருந்த பாயில் சரிந்துகொண்டான்.

அதுவரையில் என்ன செய்கிறான் என்று அவனையே கவனித்திருந்த ஆதினியும் சென்று படுத்துக்கொண்டாள். உறக்கம்தான் வரமாட்டேன் என்றது.

திடீரென்று மிக மிக மெதுவாக வாசற்கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. எல்லாளனாகத்தான் இருக்கும் என்பதில் சற்று நேரம் பொறுத்துப் பார்த்தாள். வெளியே போனவன் திரும்பி வந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றதும் தானும் எழுந்து சென்று பார்த்தாள்.

நிலவின் ஒளியில் அந்தக் கொட்டிலில் தனியாக அமர்ந்திருந்தான் அவன்.

“படுக்காம இஞ்ச என்ன செய்றீங்க?” அவனைத் தேடி வந்து வினவினாள்.

“உனக்கும் நித்திரை வரேல்லையா?”

“கண்ணெல்லாம் எரியுது. ஆனாலும் நித்திரை கொள்ளேலாம இருக்கு.” அவனருகில் தானும் அமர்ந்தபடி சொன்னாள்.

இருவர் மனத்திலும் ஓராயிரம் என்ன அச்சங்களும் அலைபாய்தல்களும். ஆனாலும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத ஒரு மௌனம். அவர்களுக்கிடையில் நிலவின் ஒளியும், தெருவோர விளக்கு ஒன்று மெலிதாக உமிழ்ந்த வெளிச்சமும் மட்டுமே வியாபித்திருந்தன.

அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆதினி. புருவங்கள் சுளித்திருக்க நெற்றியில் சிந்தனைக் கோடுகள் விரவியிருந்தன.

“என்ன யோசிக்கிறீங்க?” மெல்ல வினவினாள்.

“வேற என்னத்த யோசிக்க? இவனை எப்பிடி வெளில கொண்டுவாறது எண்டுதான்.”

“அது கஷ்டம் எண்டு நினைக்கிறீங்களா?”

“ஈஸியும் இல்ல.”

அவனே அப்படிச் சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை. “நீங்க அண்ணாவைக் கைது செய்திருக்காட்டி இதெல்லாம் நடந்திருக்காது.” அந்த நொடியில் காண்டீபனின் உடன் பிறவாத தங்கையாக மட்டுமே மாறி, மனத்தாங்கலுடன் சொன்னாள்.

“அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல ஆதினி. எப்பிடியும் அவன் பிடிபட்டுத்தான் இருப்பான். அதவிட, இண்டைக்கு அவனுக்கு நடக்கிற எல்லாத்துக்கும் அவன் மட்டுமே காரணமும் இல்ல.” என்றவனுக்குச் சாத்தியசீலனைக் குறித்து அவளிடம் சொல்ல முடியவில்லை.

எல்லாளனின் ஆழ்மனம் இத்தனைக்குப் பின்னாலும் இருப்பது சாத்தியசீலன்தான் என்று அடித்துச் சொன்னது.

என்னவோ ஒரு மனப்பயம் அவனைப் போட்டு ஆட்டியது. காக்கி உடை அணிந்த நாள்தொட்டு அவன் உணராத பயம் இது. நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு அச்சுறுத்திக்கொண்டேயிருந்தது.

“நேற்று, அண்ணா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறார் எண்டு தெரிய வந்த நேரம் கூட, நான் பெருசாக் கவலைப்படேல்ல. உங்களிட்டத்தானே இருக்கிறார் எண்டு நினைச்சன். ஆனா இப்ப… பயமா இருக்கு.” என்றவளுக்கு மேலே பேச முடியாமல் குரல் தழுதழுத்தது.

தன் யோசனையை நிறுத்திவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான் எல்லாளன்.

“அண்ணா திரும்பி வந்திடுவார்தானே?” தவிப்புடன் அவன் முகம் பார்த்து வினவியவளின் குரல் கமறியது.

வருவான்! வந்து விடுவான்! ஆனால் எப்போது? இரும்புக் குண்டைத் தூக்கி வைத்தது போன்று நெஞ்சில் கனமேற, அவள் கேள்விக்குப் பதில் சொல்லாது, ஒற்றைக் கரத்தினால் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் எல்லாளன்.

ஆதினியும் விலகவில்லை. அவன் கைக்குள் அடங்கி, மார்பில் முகம் சாய்த்தாள். அதுவரை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் மேலெழும்பிக் கண்ணீராகப் பெருகிற்று.

“அழாத ஆதினி. இந்த அழுகையால எந்தப் பிரயோசனமும் இல்ல.” கனத்த குரலில் சொன்னான்.

“இல்ல. என்னைக் கொஞ்சம் அழ விடுங்கோ. இண்டைக்கு முழுக்க நெஞ்சு அடச்சுக்கொண்டு வந்தாலும் மிதிலாக்காக்காக அடக்கி அடக்கி வச்சிருந்தது, இப்ப எனக்கு ஏலாம இருக்கு.” என்றவளை அதன் பிறகு அவன் தடுக்கவில்லை. அவள் தலையை வருடிக்கொடுத்தபடி அழவிட்டான்.

இந்த வீடு, இங்கே வந்து சென்ற நினைவுகள், அப்போதெல்லாம் அவளைத் தாங்கிய காண்டீபன் என்று, அவளை வதைத்த நினைவுகளை எல்லாம் கண்ணீராக அவன் கைகளில் கரைத்தாள் ஆதினி.

“போதும் ஆதினி! நாளைக்குப் பார், கண் திறக்கேலாத அளவுக்குத் தலை இடிக்கப் போகுது!” என்று, அவள் முகம் நிமிர்த்தித் துடைத்துவிட்டான் எல்லாளன்.

அதன் பிறகும் அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான். அப்படி அவள் இருப்பது அவன் மனத்துக்கும் ஆறுதலாக இருக்க, அவள் நெற்றியில் தன் உதடுகளை ஆழமாகப் பதித்து எடுத்தான். ஆதினிக்குமே அது பெருமருந்தாக இருந்தது.

தனித்தனியாக இந்தத் துயரைக் கடப்பதைக் காட்டிலும் சேர்ந்து கடக்கையில் பாரம் குறைந்து தெரிந்தது.

“அவனுக்குத் தண்டனை கிடைக்காம இருக்க சான்ஸ் குறைவு ஆதினி. அது எத்தின வருசம் எண்டுதான் தெரியேல்ல. வேற வழி இல்ல. இதையெல்லாம் அவன் தாண்டித்தான் வரோணும். அதால நீயும் கொஞ்சம் தைரியமா இரு!” என்றான் மென் குரலில்.

“என்ன நீங்க? நீங்களே இப்பிடிச் சொன்னா எப்பிடி? ஏதாவது செய்து அண்ணாவை வெளில கொண்டுவர மாட்டீங்களா?” என்னவோ எல்லாமே அவன் கையில் இருப்பது போன்று அவள் சொன்ன அழகில், அன்றைய நாளில் முதன் முதலாக அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு அரும்பிற்று.

“நான் என்ன செய்யேலும்? நீதான் லோயர். நீதான் ஏதாவது செய்து, அவனை வெளில கொண்டுவரோணும். இல்ல, வேற ஆரையும் பாப்பமா?” வேண்டுமென்றே சீண்டினான்.

அவள் முகம் சுருங்கிப் போயிற்று. “ஏன் இப்பிடிக் கேக்கிறீங்க? உங்களுக்கு என்னில நம்பிக்கை இல்லையா? வேணுமெண்டா அங்கிளிட்டக் கேட்டுப் பாருங்க, அவர் சொல்லுவார் நான் எவ்வளவு கெட்டிக்காரி எண்டு.” என்றாள் ரோசத்தோடு.

அது அவனை ஈர்த்தது. அணைப்பு இறுக, “நம்பாம இல்ல. ஆனா, ரிஸ்க் எடுக்கப் பயமா இருக்கு. இது அவன்ர வாழ்க்கை. அதோட மிதிலான்ர, பிறக்கப் போற பிள்ளையின்ர எதிர்காலம் எல்லாம் இருக்கு. நாங்க என்ன செய்றது எண்டாலும் யோசிச்சுச் செய்யோணும். நீ புதுசு. என்ன இருந்தாலும் அனுபவம் இல்ல. அதைத்தான் யோசிச்சனான்.” என்றான்.

“ஆனா, அண்ணாக்கு நான் வாக்குக் குடுத்து இருக்கிறன்.”

“சரி விடு, பாப்பம்!” குணசேகரனும் இருக்கிறார் என்கிற நம்பிக்கையில் சொன்னான்.

அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சற்று நேரத்துக்கு அந்த நேரத்துக் குளிர் காற்று மட்டுமே அவர்களுக்குள் வீசியது. தேகம் சிலிர்க்க, மெல்ல அவனுடன் ஒன்றினாள் ஆதினி. குனிந்து அவள் முகம் பார்த்தான் எல்லாளன். அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

“என்னில இருந்த கோபம் போயிட்டுதா?” மெல்ல வினவினான்.

அந்தக் கேள்விக்கு என்ன சொல்வது என்று உண்மையில் அவளுக்குத் தெரியவில்லை. நேற்று அவன் சொன்னவற்றைக் கேட்டபிறகு, கோபம் என்பதை விட ஒரு வித மனத்தாங்கலும் ஏமாற்றமும்தான் அவளைப் பந்தாடிக்கொண்டிருந்தன.

அவன் சொன்னவற்றை நம்பவோ, நம்பி ஜீரணிக்கவோ முடியாமல் மனம் முரண்டிக்கொண்டு இருந்ததும் உண்மை. ஆனால், இன்றைக்கு நடந்த பிரளயங்களால் அதன் நினைவே இல்லை.

இதோ இப்போது கூட, எந்த முணுமுணுப்பும் இல்லாமல், இந்த நேரத்தில் இவ்வளவு நெருக்கத்தில் அவன் கைக்குள் இருந்துகொண்டு, கோபம்தான் என்று எப்படிச் சொல்வாள்? இப்போது அவனாகக் கேட்டு நினைவு படுத்தியபோது கூட, மனதில் எதுவும் நிரடவும் இல்லை.

“என்ன?” என்றான் அவளின் பதிலற்ற நிலை கண்டு.

“தெரியேல்ல. கோவம் இருந்திருந்தா இப்பிடி உங்கட கைக்க இருந்திருக்க மாட்டன் எண்டு நினைக்கிறன்.”

அவள் தந்த பதிலில் அவன் உதட்டோரம் மீண்டும் மெல்லிய முறுவல் அரும்ப, அவள் இதழ்கள் நோக்கிக் குனிந்தான். நடக்கப்போவது தெரிந்தாலும் ஆதினி விலகவில்லை. விழிகளை மூடி இசைந்து கொடுத்தாள்.

அடுத்த சில நொடிகளுக்கு இதழ்களின் உறவாடல் மட்டுமே!

நெஞ்சுக்குள் நிறையப் பாரம் கிடந்து அழுத்திக்கொண்டு இருந்ததாலோ என்னவோ, எல்லாளனுக்கு இந்த முத்தம் அவசியமாக இருந்தது. அவள் இதழ்களைத் தனக்கே தனக்கென்று சற்று அதிகமாகவே எடுத்துக்கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock