நீ தந்த கனவு 40 – 1

எல்லாளனுக்கு வந்த அவசர அழைப்பில்தான் அடுத்த நாள் விடிந்தது. இடி விழுந்தாற்போல் காதில் விழுந்த செய்தியில் ஓடிப்போய்த் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

அதில், அவசரச் செய்தியாக, ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கிடையில் நடந்த பயங்கர மோதலில், விசாரணைக் கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் காண்டீபன் சம்மந்தன் என்று, சிறைக்காவல் அதிகாரியினால் இனம் காணப்பட்டார்.’ என்று போய்க்கொண்டிருந்ததைக் கேட்டு, மயங்கிச் சரிந்தாள் மிதிலா.

சம்மந்தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்தார்.

அதிர்ச்சி, திகைப்பு என்பதெல்லாம் சாதாரண வார்த்தைகள். அதையும் தாண்டிய சிந்திக்கவியலா நிலையில் இடிந்து நின்றாள் ஆதினி. இல்லை! இருக்காது! அப்படி இருக்கக் கூடாது என்று சொல்லிச் சொல்லியே அதிர்ந்தது அவள் நெஞ்சு.

ஆனால், நீ பார்த்ததும் கேட்டதும் உண்மைதான் என்றது தொலைகாட்சி. கலவரம் நிகழ்ந்த சிறைச்சாலை அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்க, அதற்கு நடுவில் கால்களும் கைகளும் திசைக்கொன்றாக விசிறப்பட்டு, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட உடலாகத் தரையில் கிடந்தான் காண்டீபன்.

என்னவோ சுவரைத் துளைத்து ஓட்டையைப் போட்டது போன்று, அவன் நெற்றியைத் துளைத்திருந்தது குண்டு. அவனையே திரும்ப திரும்பக் காட்டிக்கொண்டிருந்தனர்.

நேற்றுத்தானே பார்த்தாள். கனிவுடன் சிரித்தானே. கண்ணீரை அடக்கியபடி பார்த்தானே! கடைசியாக வாகனம் மறையும் முன் திரும்பி அவன் பார்த்த பார்வை கண்ணுக்குள்ளேயே நின்றது. அதுதானோ அவனுடைய இறுதி விடைபெறல்?

“ஆதினி! இங்க பார்! ஆதினி! நான் கதைக்கிறது விளங்கேல்லையா?” அவளைப் பிடித்து உலுக்கினான் எல்லாளன்.

அப்போதும் தொலைக்காட்சியையே வெறித்துக்கொண்டிருந்தவளிடம் எந்த அசைவும் இல்லை.

எல்லாளனுக்கு நெஞ்சுக்குள் ஒருமுறை திக் என்றது. ஏற்கனவே மயங்கி விழுந்த இருவரும் எழுந்துகொள்ளும் வழியைக் காணோம். அவர்களுக்குத் தண்ணீர் தெளித்து, தட்டிப் பார்த்து எதுவும் சரி வராமல் ஆம்புலன்சுக்கும் அகரனுக்கும் அழைத்துச் சொல்லியிருந்தான்.

மிதிலாவின் அன்னை நடப்பது எதுவும் தெரியாமல் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். இப்போது இவளும் திக்பிரம்மை பிடித்தவள் போலிருக்கிறாளே!

“ஆதிம்மா, கொஞ்சம் நிதானத்துக்கு வாடி. நான் அவசரமாப் போகோணும்.” திரும்பவும் அவன் போட்டு உலுக்கிய உலுக்கில் திடுக்கிட்டு விழித்தது போன்று அவனைப் பார்த்தாள் ஆதினி.

“இது பொய்… பொய்தானே?” ஆம் என்று சொல்லிவிடு என்று அழுதன அவள் விழிகள்.

அவனும் அப்படிச் சொல்லத்தான் ஆசைப்பட்டான். உண்மை வேறாயிற்றே.

“ஆதினி!” என்றவனும் மேலே பேச முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
ஆனால், இரத்தமெனச் சிவந்திருந்த அவன் கண்களும், அந்தக் கண்கள் சுமந்திருந்த மரண வலியும், கருமை படிந்திருந்த முகமும் உன் காதுகளுக்கு வந்த செய்தி உண்மைதான் என்று அவளுக்கு உறுதிபடுத்த, அந்த நொடியில் வெடித்துச் சிதறினாள் ஆதினி.

“அண்ணா!” என்ற கதறல், அந்த வீடெங்கும் ஓங்கி ஒலித்தது.

அவன் நெஞ்சிலும் பெரும் ஓலம். அவள் தலையை இழுத்துத் தன் மார்பில் அழுத்தினான். இறுக்கி மூடிய விழிகளிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள், மீசையை நனைத்துக்கொண்டு ஓடின. உடலெல்லாம் நடுங்கியது.

ஒரு நாளுக்கு முன்னர்தானே ஒன்றாக உண்டார்கள். இவன் மடியில் தலை வைத்துப் படுத்தானே! ‘ஓடி ஓடிக் களச்சிட்டன் மச்சான்.’ என்றவன் இன்று நிரந்தர ஓய்வுக்கே போய்விட்டான்!

‘காண்டீபா!’ அவன் உயிர் கதறியது. ‘என்னடா நடந்தது உனக்கு? ஏன் இப்பிடி ஒரு அவலச் சாவு வந்தது? ஏனடா ஏனடா என்ன விட்டுட்டுப் போய்ட்டாய்?’ என்று கத்தியது. ஆனால், அழவோ அரற்றவோ நேரமில்லை. அடுத்ததைப் பார்த்தாக வேண்டும். கதிரவன் வேறு அழைப்புவிடுத்துக்கொண்டே இருந்தான்.

இதற்குள் ஆம்புலன்ஸ் கூவிக்கொண்டு வந்து நின்றது. பின்னோடே சியாமளா, சாந்தி இருவரையும் அழைத்துக்கொண்டு ஓடி வந்தான் அகரன்.

அவனிடம் மூவரையும் ஒப்படைத்துவிட்டு, சிறைச்சாலைக்குப் பறந்தான் எல்லாளன்.

*****

எல்லாளன் பார்க்காத கொலைகளும் இல்லை; கொலை வழக்குகளும் இல்லை. கோரமாகக் கொல்லப்பட்டு, சிதைக்கப்பட்ட பல உடல்களை உள்ளத்தில் சிறு சலனம் கூட இல்லாது ஆராய்ந்திருக்கிறான்; அந்த வழக்குகளைப் புலன்விசாரணை செய்திருக்கிறான்; வெற்றியும் கண்டிருக்கிறான்.

ஆனால் இன்று, வெட்டிச் சாய்க்கப்பட்ட மரமாக வீழ்ந்து கிடக்கும் நண்பனைக் கண்டபோது நெஞ்சை அடைத்தது. தேகமே நடுங்கிற்று. கண்கள் சிவந்து கண்ணீர் சேர்ந்தது. முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

அவன் உயிர் பிரிந்த இடம் சோக் பீஸினால் அடையாளம் இடப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டவனுக்குப் பெரும் ஆக்ரோசம் ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்ப, சிறைக்காவலதிகாரியை நோக்கி விரைந்தான்.

என்னாகப் போகிறதோ என்கிற கலவரத்துடன் அவன் பின்னே ஓடினான் கதிரவன்.

“எப்பிடி நடந்தது இது? அவன்ர உயிர் போற வரைக்கும் நீங்க எல்லாரும் எங்க இருந்தனீங்க?” முகத்துக்கு நேராகவே வந்து நின்று உறுமியவனைக் கண்டு, அடித்து விடுவானோ என்று உள்ளுக்குள் நடுங்கினார் சிறைக்காவலதிகாரி.

“சேர் பிளீஸ், நாங்க கவனமாத்தான் இருந்தனாங்க. எப்பவும் போல விடியக்காலம திறந்து விட்டனாங்க. என்ன நடந்தது, எப்பிடி நடந்தது எண்டு தெரிய முதலே எல்லாமே முடிஞ்சுது.”

“என்ன எல்லாம் முடிஞ்சுது? போயிருக்கிறது ஒரு உயிர். இதுதான் நீங்க பாத்த காவலா?”

அவனுடைய உறுமலில் அவருக்கும் கோபம் வந்தது. “என்னவோ நாங்க வேடிக்கை பாத்த மாதிரிச் சொல்லுறீங்க சேர். தடுத்தனாங்க, எல்லாரையும் அடக்கினனாங்க. என்ன, அதுக்கிடையில இப்பிடி ஒரு சம்பவம் நடந்திட்டுது. இந்தக் கலவரத்தில் ரெண்டு கொன்ஸ்டபிள்ஸுக்கு பெரிய பெரிய காயம் சேர்.” என்றார்.

“ஓ! அவேக்குக் காயம். ஆனா, கைதிக்குச் சாவு. சரி சொல்லுங்க, சிறைக்க இருந்த ஒருத்தனுக்குத் துவக்கு எப்பிடிக் கிடச்சது?”

அதுவரையில் திடமாக நின்று பதில் சொன்னவர் இப்போது திணறினார்.

“தெ…ரியாது சேர். அதத்தான் நாங்களும் விசாரிச்சுக்கொண்டு இருக்கிறம்.”

“என்ன தெரியாது? நீங்கதானே இங்க இன்சார்ஜ். பிறகு எப்பிடி உங்களுக்குத் தெரியாம வந்தது? இல்ல, உங்கட அனுமதியோடதான் வந்ததா?” என்றதும் அவருக்கு உதற ஆரம்பித்தது.

“சேர் ப்ளீஸ், இப்பிடி ஒண்டு நடந்தா எனக்குத்தான் பிரச்சினை வரும் எண்டு எனக்குத் தெரியும். தெரிஞ்சும் அப்பிடிச் செய்வன் எண்டு நினைக்கிறீங்களா?”

அவர் என்ன சொன்னாலும் நம்ப அவன் தயாராயில்லை. “எல்லா இடமும் சீசீடிவி கமரா இருக்குத்தானே? போடுங்க பாப்பம்!” என்றான்.

அவரோ சொல்வதறியாது தடுமாறினார்.

“என்ன நிக்கிறீங்க? போடுங்க!”

“சேர்… அது அது வேல செய்யேல்ல.”

“வெக்கமா இல்ல இப்பிடிச் சொல்ல?” என்று அடுத்த நொடியே சீறினான் எல்லாளன். “துவக்கு வந்த விதம் தெரியாது, கமரா வேல செய்யேல்ல. கலவரத்தைத் தடுக்கத் துப்பில்லை எண்டா இங்க இருந்து என்ன ம… புடுங்குறீங்க?” என்றவனின் கேள்வியில், அவர் முகம் கறுத்துச் சிவந்து சிறுத்துப் போனது.

“சேர் மரியாதையாக் கதைங்க. நானும் நீங்க வேல செய்ற அதே டிப்பார்ட்மெண்ட்லதான் இருக்கிறன். எப்பிடியும் கதைக்கலாம் எண்டு நினைக்காதீங்க. திடீர் எண்டு நடந்த கலவரம் சேர். ஆனாலும், எவ்வளவோ முயற்சி எடுத்தும் தடுக்கேலாமப் போயிற்றுது. அதுக்கு என்ன செய்யச் சொல்லுறீங்க? தவறு எங்கயும் நடக்கிறதுதான்!”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock