புலனாய்வு: சட்டத்திற்கு உட்பட்டு, சாட்சியம் திரட்டுவதற்காக, ஒரு காவல் அலுவலர் அல்லது அதன் பொருட்டுக் குற்றவியல் நடுவரிடம் இருந்து அதிகாரம் பெற்றுள்ள வேறு யாராவது எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும், இது குறிக்கும். இது, ஒரு குற்றம் நடந்தபின், அதன் பின்னனி, குற்றமிழைத்தோர் யார் போன்றவைகளை ஆராயும்.
———————————–
அவளோடு வந்த கூட்டத்தினர் புறப்பட்ட பிறகுதான் ஜீப்பை எடுத்தான் எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த இறுக்கம். கண்களில் அனல் தெறிக்கும் கோபம். அதைக் கண்டாலும், ‘போடா டேய்!’ என்று எண்ணிக்கொண்டு, தன் தோழிகளுக்குக் கைபேசியில் குறுந்தகவல் அனுப்ப ஆரம்பித்தாள், ஆதினி.
எல்லாளனுக்கு அவளின் இந்தப் பொறுப்பற்ற தனத்தின் மீது மிகுந்த சினம். “படிக்கிற பிள்ளை தற்கொலை செய்திருக்கிறாள். அதுக்கு உன்னோட வந்தவனில எவனாவது கூடக் காரணமா இருக்கலாம். இதையெல்லாம் யோசிக்காம, சோகம் விசாரிக்கக் கூட்டம் சேர்த்துக்கொண்டு வந்து நிக்கிறாய். அறிவில்லையா உனக்கு?” என்று சீறினான்.
விசுக்கென்று நிமிர்ந்தாள் ஆதினி. யாரைப் பார்த்து அறிவில்லையா என்று கேட்கிறான்? அந்தளவுக்கு அவள் என்ன முட்டாளா? “என்ன கதைக்கிறீங்க நீங்க? சாகி அண்ணாக்கு ஏதும் ஹெல்ப் தேவைப்படலாம், அம்மா அப்பாவை தனியா விட்டுட்டு போக ஏலாம இருக்கலாம், நாங்க போனா ஏதாவது செய்யலாம் எண்டு நினைச்சுத்தான் வந்தனாங்க. அதைவிட, என்னோட வந்த எல்லாரும் ஆரோ இல்ல. சாகி அண்ணான்ர பிரண்ட்ஸ்.” கோபத்தில் முகம் சிவக்கச் சொன்னாள் அவள்.
“அதாலதான் சந்தேகமே!” என்றான் அவன் பட்டென்று. “நடக்கிற இப்பிடியான விசயங்களுக்குப் பின்னால எங்களுக்கு நெருக்கமான ஒருத்தன் தான் நிச்சயம் காரணமா இருப்பான். இல்லையோ, அவனை வச்சு எவனோ ஒருத்தன் செய்திருப்பான். நல்லா பழகின மனுசரத்தான் நம்புவோம். அந்த நம்பிக்கையை வச்சுத்தான் அவங்கள் தங்கட வேலைய காட்டுறது. சாதாரணமா ஒரு இறப்பு நடந்த வீட்டுக்குப்போய் விசாரிக்கிறதில அர்த்தம் இருக்கு. நடந்தது ஒரு தற்கொலை. அதுவும் ஒரு குமர் பிள்ளை. போதைப்பழக்கம் வேற இருந்திருக்கு போல. நாலு பக்கத்தாலயும் யோசிச்சு நடக்கிறத விட்டுட்டு நீயெல்லாம் என்ன சட்டம் படிக்கிறாய்?” என்று வறுத்து எடுத்தான் அவன்.
“போதைப் பழக்கமா?” அதிர்ந்துபோய் அவனைப்பார்த்தாள் ஆதினி. அவளுக்கு இது தெரியாது.
“அதுதான்! என்ன நடக்குது எண்டே தெரியாது. ஆனா, கும்பலை கூட்டிக்கொண்டு வந்திடுவா! முதல், சும்மா தெரிஞ்ச முகத்தையெல்லாம் என்ன நம்பிக்கையில கூட்டிக்கொண்டு திரியிறாய்? நாளைக்கு உனக்கு ஒண்டு நடந்தா என்ன செய்வாய்? இல்ல, உன்னோட வந்தவங்கள் எப்பிடியானவங்கள் எண்டு உனக்கு என்ன தெரியும்?”
அவனுடைய அர்ச்சனையில் அவளுக்குத் தலைவலி வரும்போல் இருந்தது. “அப்பிடியெல்லாம் இருக்காது!” என்றாள், நீ சொல்லும் எதையும் விளங்கிக்கொள்ள மாட்டேன் என்கிற பிடிவாத குரலில்.
“அப்ப நீயே சொல்லன், ஏன் அவள் தூக்குல தொங்கினவள் எண்டு. நீதான் பெரிய அறிவு வாளியாச்சே!”
“ஹல்லோ! என்ன நக்கலா? நான் லோயராகி நீங்க எடுக்கிற கேஸுக்கு எதிர் வக்கீலா நிண்டு உங்கள நாக்குத் தள்ள வைக்கேல்ல. நான் ஆதினி இளந்திரையன் இல்ல!” பொங்கி எழுந்து சூளுரைத்தாள் அவள்.
அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தான் அவன். “ஆரு? நீ? எனக்கெதிரா? கிழிப்பாய்! முதல் படிப்பை முடிக்கிறியா எண்டு பார். எப்ப பார், ஊர் சுத்துறதும் எவனோடயாவது சண்டைக்குப் போறதும். இதுல வக்கீல் ஆகப்போறாவாம் வக்கீல். வண்டுமுருகனா கூட ஆகமாட்டாய்!”
எவ்வளவு பெரிய அவமானம். அவனைப் பிடித்து ஜீப்பிலிருந்து தள்ளிவிடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது அவளுக்கு. அதைச் செய்ய முடியாத இயலாமையில், “டேய் எள்ளுவய! ஆகத்தான் கேவலமா கதைக்காத! பிறகு, என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
அந்த விரலிலேயே பட்டென்று ஒரு அடியைப் போட்டான் அவன். “உனக்கு எத்தின தரம் சொல்லுறது, மரியாதையா கதைச்சுப் பழகு எண்டு. நான் என்ன உன்னோட சுத்துற அரை லூசு எண்டு நினைச்சியா?”
“ஓ! துரைக்கு மரியாத வேணுமோ மரியாதை? தரமாட்டன்! என்னடா செய்வாய்?” அவன் தன்னை அளவுக்கதிகமாக மட்டம் தட்டிய கோபத்தில் சீறினாள்.
“இப்ப கைல போட்டத வாயிலையே போடுவன். பிறகு பல்லில்லாம திரிவாய். என்ன போடவா?”
“எங்க தைரியம் இருந்தா போடு பாப்பம். என்ர அண்ணாவும் அப்பாவும் உன்ன சும்மா விடுவினமா?” அவள் விழிகளில் அப்பட்டமான சவால்!
“அந்தத் திமிர் தான இவ்வளவு கதைக்க வைக்கிறது?” வாகனத்தைச் செலுத்திக்கொண்டே திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன், அவளின் கையில் இருந்த கைப்பேசியை எட்டிப் பறித்துப் பொக்கெட்டில் போட்டுக்கொண்டான். “ஃபோன காணேல்ல எண்டு உன்ர அண்ணாட்ட கேஸ் குடுத்து, உன்ர அப்பாட்ட தீர்ப்பை வாங்கிக்கொண்டு வா. தாறன்!” என்றான் எள்ளலாக.
இதை அவள் எதிர்பார்க்கவில்லை. கைபேசி இல்லாமல் இருப்பதா? அதைவிடக் கொடுமை வேறு எதுவுமில்லையே.


