அன்று போலவே இன்றும் சொல்லாமல் கொள்ளாமல் எல்லாளன் முன்னே வந்து நின்றான் சத்தியநாதன். அவன் முகத்தில் ஆர்ப்பாட்டமான சிரிப்பு. “என்ன எல்லாளன், எப்பிடி இருக்கிறீங்க?” என்றான் அட்டகாசமாக.
எல்லாளன் விழிகள் சிவந்தன. அந்த நொடியே அவனை அழிக்கும் அளவுக்கு வெறி கிளம்பிற்று. ஆனாலும் தன்னை அடக்கி அவனைப் பேசாவிட்டான்.
“என்ன, என்னையும் சுடோணும் மாதிரி இருக்கா? இருக்கும் இருக்கும்! இல்லாம எப்பிடி இருக்கும்? செத்தது உயிர் நண்பனாச்சே! அதுவும் சின்ன வயசில ஒண்டா இருந்து, ஒண்டாச் சாப்பிட்டு, ஒண்டா விளையாடின சிநேகிதன் எல்லா?” என்றவன் முகத்தில் அவ்வளவு நேரமாக இருந்த சிரிப்பு மறைய, கொலைவெறி தாண்டவமாடிற்று!
எல்லாளன் முகத்தருகில் குனிந்து, “அண்டைக்கே உனக்குச் சொன்னனான் எல்லாளன், என்ர தம்பிகள்ல நீ கை வச்சிருக்கக் கூடாது எண்டு. அதுக்குத்தான் இது. எப்பிடி, உன்ர விரலை வச்சே உன்ர கண்ணக் குத்தினன், பாத்தியா?” என்றான் கண்கள் இரண்டும் பளபளக்க.
“ஒரு நிமிசம் காணும், அவனோட சேத்து அஞ்சலியையும் தூக்கி உருத்தெரியாம அழிக்க. ஆனா, அத நான் செஞ்சா உனக்கு வெறும் துக்கம். அதையே உன் மூலமாவே செய்ய வச்சா, காலத்துக்கும் வலி. எப்பிடி இருக்கு என்ர கிஃப்ட்?” என்றான் சிரித்துக்கொண்டு.
எல்லாளனின் கழுத்து நரம்புகள் புடைத்தன. கைகளை முஷ்டியாக்கி ஆத்திரத்தை அடக்கியதில் விழிகள் சிவந்தன. நெஞ்சில் பெரும் தீ ஒன்று பற்றி எரிந்தது. ஆனாலும் அமைதி காத்தான்.
“முதல் ஆதினிக்குத்தான் வல விரிச்சனான். அவளைத்தான் தூக்க நினைச்சனான். ஆனா, அவளோட வந்து மாட்டினவன்தான் காண்டீபன். விசாரிச்சுக்கொண்டு போனா அவன் உன்ர உயிர் நண்பனாம். அவனைப் போடுறதுக்கு அந்த ஒரு தகுதியே காணும். இதில, எனக்கு ஒரு பிள்ளைக்கு வழியில்லாமச் செய்தது தெரிய வந்ததும் காரணம் ரெண்டாயிற்றுது.” என்றவன், விரிந்த சிரிப்போடு எல்லாளன் முகத்தருகே இன்னும் நெருங்கி, “அவனுக்கு என்ன மண்டைக்க சரக்கே இல்லையா? என்ர மனுசிக்குப் பிள்ளை தங்காட்டி எனக்குப் பிறக்காதா?” என்றுவிட்டுக் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தான்.
உள்ளுக்குள் எரிமலையே வெடித்துச் சிதறிக்கொண்டு இருந்தபோதிலும் வெளியில் எதற்கும் அசராமல், “இதைச் சொல்லத்தான் இஞ்ச வந்தியா?” என்றான் எல்லாளன் நிதானமாக.
ஒரு கணம் பேச்சு நிற்க, சத்தியநாதனின் விழிகள் வியப்பில் விரிந்தன. அடுத்த கணமே வாய்விட்டுச் சிரித்தான். “இதுதான்டா எனக்கு உன்னைப் பிடிக்கிறதுக்கான காரணமே! இவ்வளவு நடந்தும் அசையவே இல்ல பாத்தியா நீ? ஆனா, வெளில காட்டாட்டியும் உள்ளுக்குத் துடிச்சுக்கொண்டுதான் இருப்பாய் எண்டு தெரியும். எது எப்பிடி இருந்தாலும் இண்டைக்கு நான் சந்தோசமா இருக்கிறன். அதைக் கொண்டாடோணும்.” என்றுவிட்டுப் புறப்பட்டவன் மீண்டும் நின்று திரும்பி, “உனக்கே தெரியாத நிறைய விசயங்கள் என்னட்ட இருக்கு எல்லாளன். காலம் வரட்டும் சொல்லுறன். இப்ப வரட்டா?” என்றுவிட்டுப் போனான்.
அடுத்த கணமே சரக்கென்று எழுந்த எல்லாளன், சுவரில் ஓங்கிக் குத்தினான்.
அந்தச் சத்தத்தில், “சேர்!” என்றபடி பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தான் கதிரவன்.
வேட்டையாடத் துடிக்கும் வேங்கையாக அந்த அறைக்குள் நடை பயின்றவனைக் கண்டு அவனுக்கே நெஞ்சில் குளிர் பிறந்தது.
“ஆதினிக்கு வல விரிச்சானாம் கதிரவன்.”
“சேர்?” என்று அதிர்ந்தவனுக்கு, அப்போதுதான் அவனுடைய அதீத கோபத்தின் காரணம் புரிந்தது.
“எங்களிட்ட மாட்டாமப் போகமாட்டான் சேர்.”
அவன் மாட்டும் வரைக்கெல்லாம் இனி அவனுக்குப் பொறுமை இல்லை. மாட்டவைக்க வேண்டும்! முடிவு செய்துகொண்டான்.
*****
தன் அறையில் அமர்ந்திருந்தாள் ஆதினி. அவளின் காண்டீபன் அண்ணாவை ஒரு கோப்பில் அடக்கியிருந்தார்கள். அது அவள் கண் முன்னே!
அதைத் திறந்து பார்க்கும் தைரியம் இல்லை அவளுக்கு. காயங்களைக் கொடுத்துவிட்டாவது விட்டிருக்கக் கூடாதா? காலமெல்லாம் பக்கத்திலேயே இருந்து பார்த்திருப்பாளே!
அந்தக் கோப்பைத் திறக்க வேண்டும்; அதில் உள்ளவற்றை மிக நுணுக்கமாகக் கவனித்து வாசிக்க வேண்டும்; அதிலிருந்து குறிப்புகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவளால் அந்த வழக்கில் இருக்கும் ஓட்டை உடைசல்களைக் கண்டு பிடித்து, வாதாடி வெல்ல முடியும்.
ஆழ்ந்த மூச்சுகள் பலதை இழுத்திழுத்து விட்டாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடுங்கும் கைகளால் கோப்பினைத் திறந்தாள். முதல் பக்கத்தில் முத்திரை அளவிலான அவனுடைய புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டிருக்க, அவன் பற்றிய பொதுவான தகவல்கள் தரப்பட்டிருந்தன.
கண்களில் அரும்பிய கண்ணீரோடு அந்தப் புகைப்படத்தை வருடிக்கொடுத்தாள். இன்னும் இரண்டு மாதத்தில் அவன் பிறந்தநாள் வேறு வர இருக்கிறதாம். அவன்பற்றிக் கொடுக்கப்பட்டிருந்த ஆரம்ப கட்டத் தகவல் சொல்லிற்று.
கன்னத்தில் வழிந்த கண்ணீரை உள்ளங்கையினால் துடைத்துக்கொண்டு, அடுத்தடுத்த பக்கங்களைப் பிரட்டினாள்.
என்ன நடந்தது, கலவரம் எப்படி உண்டானது, நடந்த இடம், அதைப் பார்த்தவர்கள் என்று அனைத்தும் சொல்லப்பட்டு, அதன் பின்னே அவன் உடலில் காயம் பட்டிருந்த பாகங்களை எல்லாம் தனித்தனியாகப் புகைப்படமாக்கி, அது பற்றிய விபரங்களைத் தெளிவாகத் தந்திருந்தார்கள்.
கண்ணீர் வழிய வழிய ஒவ்வொன்றாக வாசித்துக்கொண்டு வந்தவள், நெஞ்சையே இரண்டாகப் பிளந்தது போன்று அவன் மார்பில் கிடந்த காயத்தைக் கண்டதும் துடித்துப்போனாள்.
அந்தக் காயம் பட்ட அந்த நிமிடத்தில் என்ன பாடு பட்டிருப்பான்? எப்படி அலறியிருப்பான்? நெஞ்சைப் பற்றிக்கொண்டு துடித்திருப்பானே! அதற்குமேல் அவளால் முடியவில்லை. கோப்பினை மூடி வைத்துவிட்டு அதன் மீதே கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டாள்.
*****
எல்லாளன், ஆதினி, அகரன், சியாமளா என்று நால்வருமே மாறி மாறிக் காண்டீபன் வீட்டினரைப் பார்த்துக்கொண்டாலும், அது நிரந்தரத் தீர்வு இல்லை என்று எல்லோருக்குமே தெரிந்தது.
அதில், சாந்தி மூலம் கிடைத்த ஒரு மகனுடன் இருக்கும் கணவன் மனைவியை அவர்களைப் பார்த்துக்கொள்வதற்கு ஏதுவாக, காண்டீபனின் வீட்டுக் காணியிலேயே தனியாகச் சின்ன வீடு ஒன்றினை அமைத்து, அங்கேயே தங்க வைத்தான் எல்லாளன்.
மிதிலாவுக்குக் குழந்தை பிறக்கும் வரையிலும் தினமும் வந்து பார்த்துவிட்டுப் போவது போல், அந்தத் தாதிப் பெண்ணையும் ஏற்பாடு செய்திருந்தான்.
என்ன செய்தும், எப்படிக் கவனித்தும் அங்கிருக்கும் யாரும் தேறுவதாக இல்லை. அதுவும் மிதிலாவின் நிலை, வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பெற்று எடுப்பாளா என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தது. அந்தளவில் ஆள் அடையாளமே தெரியாதளவுக்கு உருமாறியிருந்தாள்.
அன்று, மாதாந்த செக்கப்புக்கு அழைத்துச் செல்ல ஆதினி வந்திருந்தாள். மிதிலாவோ வரமாட்டேன் என்று நின்றாள். காரணம் கேட்டால் அழுகை. வாழப் பிடிக்கவில்லை, காண்டீபன் சென்ற இடத்துக்கே போகப் போகிறேன் என்று அரற்றிக்கொண்டிருந்தாள்.
சம்மந்தனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவள் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. கடைசியில் எல்லாளனுக்கு அழைத்துச் சொன்னாள் ஆதினி.
அடுத்த பத்தாவது நிமிடம் வந்து நின்றான் அவன். விறாந்தையில் இருந்த காண்டீபனின் படத்தின் முன்னே, தரையில் சுருண்டு கிடந்தாள் மிதிலா. பார்க்கவே பாவமாக இருந்தது.
அவள் அருகில் ஒரு காலை மடக்கி அமர்ந்து, “எழும்பு மிதிலா. வெளிக்கிடு. நீ வேற நாளுக்கு நாள் பாதியாகிக்கொண்டு போறாய். பிள்ளை எப்பிடி இருக்கு எண்டு பாக்க வேண்டாமா?” என்றான் தன்மையாக.
“இப்பிடியே அதையே நினச்சுக்கொண்டிருந்து என்ன காணப்போறாய்? எழும்பு!”
அவனுடைய எந்தப் பேச்சும் எடுபடவே இல்லை. கடைசியில், “இப்ப எழும்பப் போறியா இல்லையா நீ?” என்று அதட்டியதும் விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். விழிகளில் பெரும் அச்சம். கூடவே, கண்ணீரும் பெருகி வழிந்தது.
ஒரேயொரு கணம் என்றாலும் அவனுக்குப் பயந்து நடுங்கும் சின்ன வயது மிதிலா மின்னி மறைய அவனுக்கே ஒரு மாதிரி ஆகிப்போயிற்று.
“எனக்கு விளங்குது உன்ர நிலைமை. அதுக்காக இப்பிடியே இருந்தாச் சரி வருமா சொல்லு? இது அவன்ர பிள்ளை. இனி அவனுக்கும் சேத்து நீதானே அந்தப் பிள்ளையப் பாக்கோணும்?” என்றவனிடம், “எனக்குத் தீபன் வேணும்.” என்று, விக்கி விக்கி அழுதாள் அவள்.
பார்க்கப் பரிதாபமாயிருந்தது. அதற்கென்று இப்படியே விட முடியாதே! “அவன் எங்கயும் போகேல்ல. உன்னோடயேதான் இருக்கிறான். உனக்கு மகனா வந்து பிறப்பான்.” என்று சொன்னதும், உண்மையா என்று நம்ப முடியாமல் விழி விரித்துப் பார்த்தாள்.
மனம் கசிய, “நான் சொல்லுறது பொய்க்காது. நீயே இருந்து பார், உனக்கு மகன்தான் பிறப்பான். அதுவும் காண்டீபன்தான் மகனா வந்து பிறப்பான். இப்ப எழும்பு!” என்று அழுத்திச் சொல்லி, அவள் எழுந்து கொள்வதற்காகக் கையை நீட்டினான்.
அவளோ அந்தக் கையிலேயே முகம் புதைத்து அழுதாள். கணவனை நினைத்து அழுதாளா, அவனோடு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து அழுதாளா, இனிக் காலம் முழுக்க அவன் இல்லாமலேயே வாழப்போகிறாளே அதை நினைத்து அழுதாளா தெரியாது. நெஞ்சைப் பிளந்துகொண்டு வந்தது அவளுக்கு அழுகை.
எல்லாளனாலேயே அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை என்கையில் ஆதினியின் நிலை? ஆறாத காயமாக இன்னுமே காண்டீபனின் இழப்பு நெஞ்சில் பச்சைப் புண்ணாகக் கிடந்ததால் வெளியே ஓடி வந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
எல்லாளனுக்கு அவள் நிலை புரிந்தாலும் மிதிலாவை விட்டுவிட்டுப் போய் அவளைக் கவனிக்க முடியவில்லை.
“அழுதது போதும் மிதிலா. முதல் முகத்தைத் துடை!” என்று அதட்டி, அவளை எழுப்பி, வைத்தியசாலைக்குப் புறப்பட வைத்தான்.
இதற்குள் தன்னைச் சமாளித்துக்கொண்டு வந்த ஆதினி, அவர்கள் இருவரையும்தான் கவனித்தாள். அங்கிருந்த காண்டீபனைத் திரும்பிப் பார்த்தாள். நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் இடப்பட்டிருக்க, சற்று முன்னர் வைக்கப்பட்ட பூக்களுக்கு மத்தியில், சட்டம் ஒன்றுக்குள் இருந்து, அவளைப் பார்த்து இளம் முறுவல் பூத்துக்கொண்டிருந்தான் அவன்.
அழுகையில் துடித்த அவள் இதழ்களிலும் வலியோடு கூடிய மெல்லிய சிரிப்பு.
அதன் பிறகு மிதிலா அடம் பிடிக்கவில்லை. எல்லாளன்தான் இருவரையும் அழைத்து வந்து, வைத்தியசாலையில் இறக்கி விட்டான். “முடிஞ்சதும் கோல் பண்ணு. நானே வந்து கூட்டிக்கொண்டு போறன். தனியா வெளிக்கிட்டுடாத!” என்று ஆதினியிடம் அழுத்திச் சொல்லிவிட்டுப் போனான்.