செக்கப் முடிந்து, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர் சொன்னதைக் கேட்டுப் பெண்கள் இருவரும் நிம்மதியாக உணர்ந்தனர்.
கணவனே மகனாக வந்து பிறப்பான் எனும் நம்பிக்கையை மிக இறுக்கமாகப் பற்றிக் கொண்டதாலோ என்னவோ, பிறக்கப் போகும் பிள்ளையின் மீது மிதிலாவுக்கு மெல்லிய பற்றுதல் உண்டாயிற்று.
அதே வைத்தியசாலைக்குத்தான் தமயந்தியும் வந்திருந்தாள். அவளோடு துணைக்கு வந்தவன், “அங்க பாருங்க அண்ணி, ரெண்டு பொம்பிளைகள் வருகினம்(வருகிறார்கள்). அதுல பிரெக்னென்ட்டா இருக்கிறதுதான் அந்தக் காண்டீபன்ர வைஃப். மற்றது அவன்ர கூடப் பிறக்காத தங்கச்சியாம்.” என்று, ஆதினி, மிதிலா இருவரையும் காட்டிச் சொன்னான்.
அவர்களைப் பார்த்த தமயந்திக்கு நெஞ்சு கொதித்தது. அதுவும் குழந்தையைத் தாங்கும் மிதிலாவைக் கண்டபோது, வெறுமையாகிப் போன தன் கருவறையே தீப்பற்றிக்கொண்டது போன்ற உணர்வில், விறுவிறு என்று அவர்களை நோக்கி நடந்தாள்.
“அண்ணி, அண்ணாக்குத் தெரிஞ்சாப் பேசுவார்.” என்று தடுத்தான் அவன்.
“நீங்க சொல்லாம அவருக்குத் தெரிய வராதுதானே?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.
“என்னை மலடியாக்கிப்போட்டுத் தனக்கு மட்டும் ஒரு குழந்தைக்கு வழி செய்திருக்கிறான் உங்கட மனுசன். அதுதான் கடவுளாப் பாத்து நல்ல தண்டனையாக் குடுத்திருக்கிறான் அவனுக்கு.”
திடீரென்று கேட்ட கடுஞ்சொற்களால் இரண்டு பெண்களுமே துடித்துப் போயினர்.
அடுத்த நொடியே, “ஏய்! ஆர் நீ? ஆரிட்ட வந்து ஆரைப் பற்றி என்ன கதைக்கிறாய்?” என்று அதட்டினாள் ஆதினி. “என்ர காண்டீபன் அண்ணாவைப் பற்றி…” என்றவளை மேலே பேசவிடாமல், அவள் கரம் பற்றித் தடுத்துவிட்டு, “நான் நினைக்கிறன், நீங்கதான் தமயந்தி எண்டு.” என்று உடைந்து கரகரத்த குரலில் சொன்னாள் மிதிலா.
அவளைப் பார்த்த ஆதினிக்கு ஐயோ என்றிருந்தது. இன்றைக்குத்தானே கொஞ்சமே கொஞ்சம் தெளிந்து தெரிந்தாள். உடனேயே இப்படி ஒன்று நடக்க வேண்டுமா?
“ஓம்! நான்தான் தமயந்தி. இன்னும் வடிவாச் சொல்லப் போனா, உங்கட கேடு கெட்ட மனுசன் நம்ப வச்சுக் கழுத்தறுத்த அந்தத் தமயந்தி நானேதான்!” என்றாள் கண்களில் கண்ணீரும் சீற்றமுமாக.
“அந்த ஆளில எவ்வளவு மரியாதை வச்சிருந்தனான் தெரியுமா? ஆனா அவன்… எனக்கே தெரியாம போதையப் பழக்கி, என்ர வாழ்க்கையையே அழிச்சிட்டான். படுபாவி!” என்று குமுறினாள்.
கணவனைப் பற்றிய தமயந்தியின் வார்த்தைகள் சுரீர் என்று நெஞ்சைத் தாக்கினாலும் மிதிலாவுக்கு ஏனோ தமயந்தி மீது கோபம் வரமாட்டேன் என்றது. இவள் குழந்தையின் தகப்பனை இழந்துவிட்டு நிற்கிறாள். அவள் குழந்தைக்கு வழியற்று நிற்கிறாள். கிட்டத்தட்ட இருவர் நிலையும் ஒன்றுதான்.
அதில், “உங்கட வலி என்ன எண்டு எனக்கு விளங்குது. அதுவும் இண்டைய(இன்றைய) நிலமைல, உங்கட மனத என்னை விட இன்னொரு ஆளாளா முழுமையா விளங்கிக் கொள்ளவே ஏலாது. ஆனா, அவர் கெட்டவர் இல்ல. அவரைப் போல அருமையான மனுசன இந்த உலகத்தில தேடிப் பிடிக்கவே ஏலாது!” என்றாள் கரகரத்த கண்ணீர் குரலில்.
“அதுதான் என்ர வாழ்க்கையை அழிச்சவர் போல!” பட்டென்று சொன்னாள் தமயந்தி.
“என்ன பெரிய வாழ்க்கை அழிஞ்சது? பிள்ளை இல்ல. அவ்வளவுதானே? அவனை மாதிரி ஒருத்தனுக்கு வாரிசு இல்லாமப் போறதுதான் நல்லம்!” ஆதினியும் பட்டென்று திருப்பிக்கொடுத்தாள்.
“ஆதினி, இப்பிடியெல்லாம் கதைக்க வேண்டாமே.” என்று நலிந்து ஒலித்த மிதிலாவின் குரலை, இந்த முறை ஆதினி சட்டை செய்யவில்லை.
“சில விசயத்த உடைச்சுக் கதைச்சாத்தான் அக்கா உண்மை விளங்கும்.” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “உன் ஒருத்திக்குப் பிள்ளை இல்லாமப் போனதும் இந்தத் துள்ளுத் துள்ளுறியே, உன்ர மனுசன் எத்தின பிள்ளைகளின்ர வாழ்க்கைய நாசமாக்கினவன் எண்டு தெரியுமா உனக்கு? அப்பிடிப் பாதிக்கப்பட்ட ஆக்களில இவாவும் ஒருத்தி. இவான்ர அம்மா புத்தி சுவாதீனம் இல்லாம இருக்கிறதுக்கும் ஒரு வகைல அவன்தான் காரணம். அண்ணான்ர அப்பா நடக்கேலாம முடமாகி வாழுறதுக்குக் காரணமும் உன்ர மனுசன்தான். தைரியம் இருந்தா அவனிட்டையே போய்க் கேள், இந்த மொத்த யாழ்ப்பாணத்துக்கும் ட்ரக்ஸ் சப்லை பண்றது ஆர் எண்டு. ஏன், அவன்ர தம்பியக் கையும் களவுமாப் பிடிச்சு, சுட்டுக் கொன்றதைப் பாக்கேல்லையா நீ? அப்பிடி வாற அந்தப் பாவப்பட்ட காசுலதான் நீ உடம்பு வளக்கிறாய். இதுல அவனுக்கு ஒரு வாரிசு வேற வேணுமோ? ஏன், அவனும் வளந்து வந்து, மிச்சம் மீதியா இருக்கிற பிள்ளைகளையும் நாசமாக்கவோ? எத்தின பொம்பிளைப் பிள்ளைகளின்ர கேடு கெட்ட வீடியோ வச்சிருக்கிறான் தெரியுமா, அந்த நாய்? எத்தின குடும்பங்களை அழிச்சவன் எண்டு தெரியுமா உனக்கு? சாகித்தியன் அண்ணான்ர தங்கச்சி ஏன் செத்தவள் எண்டு விசாரி. உன்னோட படிச்ச அஞ்சலிக்கு என்ன நடந்தது, அவவின்ர அண்ணாக்கு என்ன நடந்தது எண்டு எல்லாம் விசாரி, போ! அதுக்குப் பிறகு வந்து இந்த வாயைக் காட்டு!” என்றவள், மிதிலாவை அழைத்துக்கொண்டு நடந்தாள்.
அவள் சொன்னவற்றை எல்லாம் ஜீரணிக்கக் கூட முடியாதவளாய் நின்றாள் தமயந்தி. என்னவோ உச்சி மண்டையிலேயே குண்டு மழையைப் பொழிந்ததுபோல் வெலவெலத்துப்போனாள்.
ஆதினி இரண்டு அடிகள்தான் எடுத்து வைத்திருப்பாள். மண்டைக்குள் மின்னலாக ஏதோ வெட்ட, வேகமாகத் திரும்பித் தமயந்தியோடு வந்தவனைப் பார்த்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டது அவனுக்குக் கேட்டிராதுதான். இருந்தாலும் கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான் அவன்.
தகவல் சொல்கிறான் என்று விளங்கிவிட, வேகமாகத் தமயந்தியிடம் திரும்பிவந்து, “எதையும் உங்கட மனுசனிட்ட வெளிப்படையாக் கேக்காதீங்க. முடிஞ்சா ரகசியமா விசாரிங்க. எப்பிடியும் இண்டைக்கு உங்கள விசாரிப்பான் அவன். எதைச் சொல்லோணும், எதைச் சொல்லக் கூடாது எண்டு யோசிச்சு, கவனமா வார்த்தைகளை விடுங்க. முடிஞ்சா அவனை விட்டுட்டு உங்கட அம்மா அப்பாட்ட ஓடிப் போயிடுங்க!” என்றுவிட்டுப் போகவும், தமயந்திக்கு சிலீர் என்று நெஞ்சுக்குள் ஒருவித அச்சம் பரவிற்று.
படிப்பு முடியாமல் இருந்ததாலும், திருமண வாழ்க்கையைக் கொஞ்ச நாள்களுக்கு அனுபவிக்கும் ஆசையிலும் அவர்களாகவே குழந்தையைத் தவிர்த்திருந்தார்கள். சொந்த பந்தம், சுற்றம், உறவு எல்லாம் குழந்தை இன்னும் இல்லையா என்று கேட்டபோது கூடக் கவலைப்பட்டதில்லை.
படிப்பு முடிந்த பிறகும் என்ன அவசரம் என்பதுதான் சத்தியநாதனின் எண்ணம். இவள்தான் இனியும் ஏன் தள்ளிப் போடுவான், வீட்டிலும் விடாமல் கேட்கிறார்கள் என்று அவனுக்குத் தொந்தரவு கொடுத்துச் சம்மதிக்க வைத்திருந்தாள். ஆறுமாதம் ஆகியும் ஒன்றையும் காணோமே என்றுதான் வைத்தியரிடம் போனார்கள்.
அவரோ தலையில் இடியையே இறக்கியிருந்தார்.
அவள் எடுத்துக்கொண்ட போதையினால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதனால், குழந்தை உண்டாவது நூற்றில் ஒரு வாய்ப்புத்தான் என்று அவர் சொன்னபோது, ‘இவருக்கு என்ன விசரா?’ என்றுதான் பார்த்தாள்.
ஆனால் அவர், அவளின் ரிப்போர்ட்டை காட்டி, விலாவாரியாக விளக்கியபோது அதிர்ந்தே போனாள். இது எப்படிச் சாத்தியம்? அருகில் இருந்த கணவனின் உக்கிரப் பார்வையில் நடுங்கியது அவளுக்கு.
அதுவும் வீட்டுக்கு வந்ததும், ‘நானே இண்டைக்கு வேண்டாம் எண்டு சொன்னாலும் மேல மேல வந்து விழுவியே, இதாலையா?’ என்று அவன் கேட்ட போது, மண்ணுக்குள் புதைந்து விடலாம் போலிருந்தது. எவ்வளவு கேவலம்? எவ்வளவு அவமானம்? அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வலுத்துப் போனதில், கை நீட்டி அடித்தே இருந்தான்.
அவளறியாமல், அவளுக்குத் தெரியாமல், அவளே எப்படிப் போதையை எடுத்துக்கொண்டிருக்க முடியும்? திருப்பி திருப்பி யோசித்துப் பார்த்தபோதுதான், பல்கலைக்கழகக் காலமும், அந்த நாள்களில் அவள் சாப்பிட்ட லொலியின் நினைவும் வந்தன.
பல்கலைக் காலம் முடிந்த பிறகு, அது இல்லாமல் இருக்க முடியாமல் தவித்திருக்கிறாள். கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து, அந்தச் சுவையை மனமும் உடலும் உணராமல் போனதில், அஞ்சலி வீட்டுக்கே சென்று கேட்டு வாங்கி இருக்கிறாள்.
அப்போதும் பழைய தித்திப்பும் கிறக்கமும் கிடைக்கவில்லை. அதன் பிறகுதான், காண்டீபன் தரும் லொலிகள் மாத்திரமே அந்த வகையானவை என்பதை யோசித்துக் கண்டு பிடித்திருந்தாள்.
ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவனைச் சென்று பார்த்ததும், அவனிடமும் லொலி இல்லாமல் போக, ‘முந்தி மாதிரி இப்ப நீங்க லொலி வச்சிருக்கிறேல்லையா சேர்?’ என்று விளையாட்டுப் போன்று வாய்விட்டுக் கேட்டதும், அவன் இல்லை என்றதும் நினைவில் வந்து போயின.
பெரும் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தவள் அதன் பிறகும் பல நாள்கள் அந்த லொலிக்காகக் கடை கடையாக அலைந்திருக்கிறாள். தலைவலி, உடற்சோர்வு, ஒருவித எரிச்சல் என்று நாள்களைக் கடத்தி இருக்கிறாள். கணவன் மனைவிக்குள் சண்டைகள் கூட வந்திருக்கிறது.
அவளிடம் தெரிந்த இந்த மாற்றத்தைக் கவனித்துவிட்டு, கொஞ்ச நாள்களுக்கு அம்மா வீட்டில் இருந்துவிட்டு வா என்று கொழும்புக்கு அவளை அனுப்பிவைத்திருந்தான் சத்தியநாதன். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளிலிருந்து வெளியே வந்திருந்தாள்.
அவள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது என்று தவித்துக்கொண்டு இருந்தவள், இதெல்லாம் நினைவில் வந்த அடுத்தக் கணமே அனைத்தையும் அவனிடம் சொல்லி இருந்தாள்.
அவள் சொல்ல சொல்ல அவன் முகம் பயங்கரமாக மாறிப்போனது. எப்போதுமே அவளறியாத ஒரு முகம் அவனிடம் இருப்பதாக அவள் உள்ளுணர்வு உணர்த்தியிருக்கிறது. அந்த முகத்தை அன்றைக்கு நேரில் பார்த்தாள்.
அன்றுதான், இத்தனை நாள்களாகத் தான் எப்படியான ஒருவனோடு வாழ்ந்திருக்கிறோம் என்பது புரிந்து, திகில் கொண்டாள். அப்படி, வார்த்தைகளாலும் உடல் மொழியாலும் அவளை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்திருந்தான் அவன்.
அதன் பிறகு அவளுக்குச் சிறை வாழ்க்கைதான். கைப்பேசி கூட வழங்கப்படவில்லை. அன்னை தந்தையர் கூட அவன் கைப்பேசி ஊடாகத்தான் பேசினர்.
காரணம் கேட்டதற்கு மனதளவில் உடைந்திருக்கிறாள், அவளை யாரும் தேவை இல்லாமல் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றிருந்தான் அவள் கணவன். அதிகாரத்தில் இருப்பவன், அவர்களை விடவும் பலமடங்கு அனைத்திலும் மேலாக இருப்பவனின் ஆதிக்கத்துக்கு அடங்கிப் போவதைக் காட்டிலும் வேறு வழியிருக்கவில்லை அவள் வீட்டினருக்கு.
இத்தனையும் சேர்ந்ததில்தான் இன்றைக்கு வெடித்திருந்தாள். அவர்களானால் அவள் தலையில் இடியையே இறக்கிவிட்டுப் போய்விட்டார்கள்.
அஞ்சலி கூடத் துரோகம் செய்துவிட்டாளே என்று எண்ணியிருந்தது மாறி, அவளும் தன் கணவனால் பாதிக்கப்பட்டவள் என்பது பெரும் அதிர்ச்சியாயிற்று.